மணிராமின் உயிரை காப்பாற்றியது வத்சலாதான்.
“பாண்டவர் அருவிக்கு நாங்கள் சென்றிருந்தோம்,” எனத் தொடங்குகிறார் மணிராம். “வத்சலா மேய்வதற்கு சென்றிருந்தாள். அவளைப் பிடிக்க செல்லும்போது புலி வந்தது.”
உதவி கேட்டு மணிராம் அலறியதும், “அவள் ஓடி வந்து, முன்னங்காலை உயர்த்திக் காட்டில் தன் முதுகில் என்னை ஏற்றிக் கொள்ள வழி கொடுத்தாள். நான் ஏறி அமர்ந்ததும், அவள் தன் கால்களை ஓங்கி உதைத்து, மரங்களை உடைத்தெறிந்தாள். புலி ஓடி விட்டது,” என்கிறார் அந்த மாவுத்தன்.
பன்னா புலிகள் சரணாலயத்தின் பெருந்தாயான வத்சலாவுக்கு வயது நூறுக்கும் மேல் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அது உண்மை என்கிற பட்சத்தில் அவள்தான் உலகிலேயே முதிய யானையாக இருப்பாள். “சிலர் அவளுக்கு 100 வயது என்கின்றனர். சிலர் 115 என்கின்றனர். எனக்கும் அது உண்மையென்றே தோன்றுகிறது,” என்கிறார் கோண்ட் பழங்குடியான மணிராம். 1996ம் ஆண்டிலிருந்து அவர் வத்சலாவை பராமரித்து வருகிறார்.
வத்சலா ஓர் ஆசிய யானை ஆகும். கேரளா மற்றும் மத்தியப் பிரதேச பகுதிகளில் வசித்து வருகிறது. மென்மையானவள் என அதை குறிப்பிடும் மணிராம், சிறுவயதில் அதை யாராலும் எதிர்கொள்ள முடியாது என்றும் கூறினார். இப்போதும் கூட, பார்வையும் கேட்கும் திறனும் சரியாக இல்லையென்றாலும் ஆபத்தை உணர்ந்ததுமே மந்தையை அது எச்சரித்து விடும்.
அதன் மோப்ப சக்தி இன்றுமே வலிமையாக இருப்பதாக மணிராம் சொல்கிறார். அச்சுறுத்தும் விலங்கு இருப்பதை எளிதாக மோப்பம் பிடித்து விடும் என்கிறார். உடனே அது சத்தம் எழுப்பி, மந்தையைக் கூட்டி குட்டிகளை மந்தைக்கு நடுவே நிற்க வைத்து விடும். “விலங்குகள் தாக்குவதற்கு முயற்சித்தால், துதிக்கையில் கிளைகளையும் குச்சிகளையும் கற்களையும் தூக்கி எறிந்து அவை விரட்டும்,” என்னும் மணிராம், “கூர்மையாக அவள் இருந்தாள்,” என்கிறார்.










