ஜம்மு கஷ்மீரில் ஒரு தனி பகார்வாலை நீங்கள் பார்க்க முடியாது.
அந்த மேய்ச்சல் சமூகம் பெருங்குழுக்களாகதான் நகரும். இமயமலையில் தங்களில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் தேடி செல்வார்கள். “மூன்று நான்கு சகோதரர்கள் அவர்களின் குடும்பங்களுடன் சேர்ந்து பயணிப்பார்கள்,” என்கிறார் ஒவ்வொரு வருடமும் உயரப்பகுதிகளில் புல்வெளி தேடிச் செல்லும் முகமது லதீஃப். “ஆடுகளைம் செம்மறிகளையும் ஒன்றாக மேய்ப்பதால் மந்தையை கையாளுவது சுலபம்,” என்கிறார் அவர் வருடந்தோரும் அவர்களுடன் பயணிக்கும் கிட்டத்தட்ட 5000 செம்மறிகள், ஆடுகள், குதிரைகள் மற்றும் சில பகார்வாலி நாய்கள் குறித்து.
ஜம்மு சமவெளிகளிலிருந்து பிர் பஞ்சால் மற்றும் இமயமலையின் பிற மலைத்தொடர்கள் நோக்கி செல்லும் பகார்வால்களின் பயணம் 3000 மீட்டர் உயரத்துக்கான மெதுவான ஏற்றத்தைக் கொண்டது. மார்ச் மாத பிற்பகுதியில் கோடை தொடங்கும் காலத்தில் அவர்கள் ஏறத் துவங்குவார்கள், குளிர்காலம் தொடங்குவதற்கு முன் செப்டம்பர் மாதத்தில் இறங்கத் தொடங்குவார்கள்.
ஒவ்வொரு முறையும் போக வர தலா 6-8 வாரங்கள் பிடிக்கும். பெண்கள், குழந்தைகள் மற்றும் சில ஆண்கள் முன்னோக்கி செல்வார்கள். “அவர்கள் எங்களுக்கு முன்னால் சென்று முக்கியமான நிலங்களில் முகாமிட்டு மந்தை வருவதற்குக் காத்திருப்பார்கள்,” என்கிறார் முகமது லதீஃப். அவரின் குழு ராஜவுரி அருகே இருக்கும் சமவெளிகளிலிருந்து கிளம்பி, லடாக்கின் சொஜிலா கணவாய் அருகே இருக்கும் மீனாமார்குக்கு செல்லும்.


























