“இத்தன வருஷமா என்னை போட்டோ பிடிச்சிக்கிட்டுருக்கே.. என்னப் பண்ணப் போறா?” என உடைந்தபடி கோவிந்தம்மா வேலு என்னைக் கேட்கிறார். இந்த வருடத்தின் மார்ச் மாதம் நேர்ந்த அவரின் மகன் செல்லய்யாவின் மரணம் அவரை நொறுக்கி விட்டிருக்கிறது. “என் பார்வை மொத்தமா போயிடுச்சு. உன்னை என்னால பார்க்க முடியல. என்னையும் வயசான என் அம்மாவையும் யாரு பார்த்துப்பா?”
அவரின் கைகளில் இருந்த வெட்டுக்காயங்களையும் சிராய்ப்புகளையும் என்னிடம் காட்டினார். “வீட்டுக்கு 200 ரூபாய் கொண்டு வர்றதுக்கு நான் ரொம்ப கஷ்டப்படுவேன். இறால் பிடிக்க வலை வீசுற வயசா எனக்கு? என்னால வலை வீச முடியாது. கைய மட்டும்தான் பயன்படுத்த முடியும்,” என்கிறார் கோவிந்தம்மா. பலவீனமாக சிறிய அளவில் இருக்கும் அவர் தனக்கு 77 வயது என நம்புகிறார். “எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க,” என்கிறார் அவர். “மண்ணைத் தோண்டி இறாலைப் பிடிக்கிறதால வெட்டுக்காயம் வருது. தண்ணில என் கை முங்கியிருக்கும்போது ரத்தம் வர்றது தெரியறதில்ல.”
2019ம் ஆண்டில் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு சென்று கொண்டிருக்கும்போது அவரை முதன்முறையாக நான் கவனித்தேன். வடசென்னையிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் வரை பரவியிருக்கும் எண்ணூர் பகுதியின் கொசஸ்தலையாறுக்கு இணையாக பக்கிங்ஹாம் கால்வாய் ஓடுகிறது. முக்குளிப்பான் பறவை போல கால்வாயில் குதித்து நீருக்கடியில் நீந்தும் அவரது திறனே என்னை கவனிக்க வைத்தது. கரடுமுரடான ஆற்றுப்படுகை மணலில் துழாவி அங்கிருக்கும் எவரையும் விட வேகமாக இறால்களை எடுத்தார். இடுப்பு வரையிலான நீரில் நின்று கொண்டு இடுப்பில் கட்டியிருக்கும் பனங்கூடையில் அவற்றை சேகரிக்கும்போது அவரின் தோலின் நிறம் கால்வாய் நீரின் நிறத்தைக் கொண்டிருந்தது.
19ம் நூற்றாண்டில் போக்குவரத்துக்காகக் கட்டப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூரின் கொசஸ்தலையாறு மற்றும் ஆரணி ஆறு ஆகியவற்றுடன் இணைந்து ஓடி, சென்னை நகரத்துக்கான உயிர்நாடியாக செயல்படும் நீரமைப்பாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

















