எல்லைச் சாலைகள் அமைப்பின் திட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் இந்தப் பகுதியில், கூடுதல் உயரங்களுக்கான சாலைகள் நன்றாக இணைக்கப்பட்டிருப்பதால் லடாக் வழியாக பயணிப்பது சாத்தியமே. இந்த நீண்ட மலைவழிச்சாலைகளை அமைப்பதற்காக வந்த தொழிலாளர்கள் அனைவரும், பீஹார், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் பகுதிகளில் இருந்து வந்தவர்கள். ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் அக்டோபர் இரண்டாம் வாரம் வரை இங்கு தங்கும் இவர்கள், ராணுவப் பொருட்களின் போக்குவரத்துக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும், லடாக் மக்களுக்கும் போக்குவரத்து சுலபாமக இருப்பதற்கான சாலை இணைப்புகளை மீண்டும் சரிபார்ப்பார்கள்.
சில வாரங்களுக்கு முன்பாக, லே நகரில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சில்லிங் பகுதிக்குச் சென்றிருந்தேன். குளிர்காலத்தின்போது பனியால் மூடப்பட்டிருக்கும் பென்சி-லா-பாஸ் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும் நேரத்தில், ஸன்ஸ்கார் பள்ளத்தாக்குக்குச் செல்லும் வழியான லே – படும் நெடுஞ்சாலை கட்டுமானத்தில் இருந்தது. இந்த சாலை சில்லிங் வழியாக நீள்கிறது. சில இரவுகளுக்கு, இந்தத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் தங்குவதென முடிவெடுத்தேன்.
11-க்கு 8.5 அடியில் போடப்பட்ட டெண்ட் குடிலில், 6 – 7 நபர்கள் ஆறு மாதங்களுக்கு தங்கியிருக்கிறார்கள். குளிராக இருக்கும் தரையில், அவர்கள் படுத்து உறங்குகிறார்கள். அவர்களின் பைகள், பாத்திரங்கள், மற்றும் அவர்களது உடைமைகளும் அங்கேயே இருக்கின்றன. பணியிடங்களில் இருந்து 1-2 கிலோமீட்டர்கள் தள்ளி அமைந்திருக்கிறது. சாலை அமைக்கும் பணிக்கேற்ப இந்த குடில்கள் மாற்றப்படுகின்றன.
இந்த குடிலில் என்னால் ஒரு இரவுக்கு மேலாக தங்க முடியவில்லை. அந்தக் காற்று, குளிர், மாசுபாடு ஆகியவை மிகுந்த கடினமாக இருக்கிறது. இந்தக் கோடைக்காலத்தில், இரவில் ஜீரோ டிகிரி செல்சியஸ் இருக்கிறது. அது தாங்க முடியாததாக இருக்கிறது.
பகல் நேரத்தில், லடாக்கில் இருக்கும் பணியிடங்களில் (சாலைப் பணிகள் நடக்கும் இடம்) சென்று அவர்களைப் பார்த்தேன். பகல்நேரத்திலும் இது கடினமானது. 35 செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பமும், நேரடியான மலை வெயிலாகவும் இருப்பதால் அது சமாளிப்பதற்கு கடினமானதாக இருக்கிறது. 11,000 முதல் 18,000 அடி உயரம் இந்த லடாக் பகுதி முழுவதும் பரந்து விரிந்துள்ளது. இந்த காற்றும் மெலிதாக இருக்கிறது. சாதாரணமாக சமநிலத்தில் இருந்து பணிக்கு வரும் இவர்களுக்கு, இந்த குறைந்த ஆக்சிஜன் பகுதியில் வேலை செய்வது மிகவும் கடினமானதாக இருக்கிறது. மண்ணை தோண்டுவது, மண்ணையும் கல்லையும்,சில கட்டுமானத்திற்கான கனமான பொருட்களையும் தூக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஒரு நாளைக்கு 10 மணிநேரமும், ஒரு வாரத்துக்கு ஆறு நாட்களும் பணிபுரியும் இவர்களுக்கு ஒரு நாள் கூலியாக 300 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை கிடைக்கிறது. அவர்களது அனுபவத்துக்கு பணியின் தன்மைக்கும் ஏற்றவாறு இது மாறுபடுகிறது.
இந்துஸ் ஆற்றின் ஓரமாக இருந்த சுமதங் கிராமத்துக்கு அருகில் இருக்கும் பீஹார் மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த பணியாளர்கள், “எங்களிடம் சரியான பாதுகாப்பு கியர் இல்லை (ஹெல்மெட்டுகள், பூட்டுகள் மற்றும் காகில்கள்) இரவில் அணிந்துகொள்வதற்காக ராணுவத்தில் இருப்பவர்கள் சில வெப்பம் தரும் ஆடைகளைத் தருகிறார்கள். பணியிடங்களில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது” என்று கூறுகின்றனர்.
“இந்துஸ் ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்படும் பாலத்தின் கட்டுமானத்துக்காக சுஸுல் கிராமத்துக்கு அருகே வேலை செய்யும், 50 வயதான பகத் ராம் சுர்ஜியைச் சந்தித்தேன். ஜார்க்கண்டிலிருந்து வந்திருக்கும் அவர் ஐந்து மாதங்களாக லடாக்கில் தங்கி இருக்கிறார். நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக இந்த பணிகளுக்கு அவர் வந்துகொண்டிருக்கிறார். ஆனால், “இங்கு வேலை செய்ய எனக்கு பிடிக்கவில்லை. இங்கு கூலி குறைவானது. ஆனால் வேலைப்பளுவும் அதிகம். சில சாலைப் பணிகளின்தன்மை மிகவும் கடினமானது. அடுத்தநாள் சூரிய உதயத்தை நான் பார்ப்பேனா என்பது எனக்குத் தெரியாது. அடுத்த வருடம் இங்கு வரக்கூடாது என ஒவ்வொரு வருடமும் நினைப்பேன். ஆனால் வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏனெனில் எனது ஊரில் ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் வேலைகள் இருக்காது. அதனால் இங்கு வருகிறேன்’. என்கிறார்.
![](/media/images/01-_AMI2091-RM.width-1440.jpg)
மலைவழிச்சாலைகளில் பணிபுரியும் இந்தத் தொழிலாளர்கள் பலரும் பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து லடாக்கிற்கு வருகிறார்கள். மிகத் கடினமான இந்த உயரமான பகுதியில் இருக்கும் பணிகளை மே மாதம் முதல் அக்டோபர் இரண்டாம் வாரம் வரை செய்கிறார்கள்
![](/media/images/02-DSC_5502-RM.width-1440.jpg)
பீகாரைச் சேர்ந்த ஜித்தென் முர்மு (இடது), சக பணியாளர் ஒருவருடன் சில்லிங் கிராமத்துக்கு அருகில் இருக்கும் அவரது டெண்ட்டுக்கு வெளியில் நிற்கிறார். மற்றொரு கேம்ப்பில் இருந்து வரவிருக்கும் உணவுக்காக காத்திருக்கிறார். மிகவும் குளிரான இரவுகளில் பணிபுரியும் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கு வெறும் கேன்வாஸ் டெண்ட்டுகள் மட்டுமே உள்ளன. சாலை ஓரங்களில் டெண்ட் அமைத்து அங்கேயே தங்கள் சாலைப் பணிகளைச் செய்கிறார்கள்
![](/media/images/03-_AMI2096-RM.width-1440.jpg)
லடாக்கில் நடக்கும் சாலைப் பணிகள் பலவற்றை மனிதர்கள்தான் செய்கிறார்கள் - இயந்திரப் பணி மிகவும் குறைவு. பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. முகமூடிகளையும், துணியையும் கட்டிக்கொண்டு பணிபுரிகிறார்கள். குறைவான ஆக்சிஜன் கொண்ட பகுதியில் மிகக் கனமான உபகரணங்களை முதுகில் தூக்கி நடக்கிறார்கள். மூச்சு வாங்குவதற்காக அங்கங்கு அமர்ந்து, அதற்குப் பிறகு பணிபுரியத் தொடங்குகிறார்கள்
![](/media/images/04-DSC_5476-RM.width-1440.jpg)
பீகாரின் பிரகாஷ் சிங், லே-நிமோ-சில்லிங்-படும் நெடுஞ்சாலைக் கட்டுமானத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்
![](/media/images/05-DSC_5500-RM.width-1440.jpg)
தோண்டும் ரிக் இயந்திரத்தைப் பயன்படுத்தி, பிரபலமான லமயுரு மொனாஸ்ட்ரியில் இருந்து 50 கிலோமீட்டரைச் சுற்றி இருக்கும் மலையில், ஒரு பணியாளர் சாலையை அகலப்படுத்துகிறார். மாசுடன் காற்றைச் சுவாசிக்கும் கடினமான சூழலில் இதைச் செய்கிறார்
![](/media/images/06-DSC_0097-RM.width-1440.jpg)
பணியிடத்தில் பல பெண்களில் ஒருவரான ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த சந்தியா ராணி முர்மு, அவருடைய சகோதரரைக் காண வந்திருக்கிறார். சங்-லா-பாஸ் மற்றும் டக்டேவுக்கு இடையில் உள்ள துர்போக் கிராமத்தின் சாலை வழிக் கட்டிடத்தில் தங்குவதாகச் சொல்கிறார். சங்க்-லாவில் நிலச்சரிவு மிகச் சாதாரணமாக நடக்கும் நிகழ்வு என்பதால், பணியாளர்களுக்கான தொடர்ச்சியான தேவை இருந்துகொண்டே இருப்பதாகச் சொல்கிறார்
![](/media/images/07-_AMI2017-RM.width-1440.jpg)
பிர் பஹதூர் நேபாலில் இருந்து வந்தவர். ஒவ்வொரு கோடையிலும், சாலைப் பணிகளுக்காக ஆறு மாதங்களுக்கு லடாக்குக்கு வருகிறார். இந்த முறை சண்டிகரில் ஒரு ஒப்பந்ததாரர் மூலமாக இந்தப் பணி கிடைத்ததாகச் சொல்கிறார். நேபாலில் இருந்து வந்திருக்கும் மற்ற ஐந்து பணியாளர்களோடு தங்குவதாகச் சொல்கிறார்
![](/media/images/08-DSC_0045-RM.width-1440.jpg)
பேமா, தன் மூன்று வயது மகனுடன் வேலைக்கு வந்திருக்கிறார். கிழக்கு லடாக்கின் பேன்காங்-சோ ஏரிக்கு அருகில் உள்ள லுகுங் கிராமத்தில் வாழ்கிறார்கள். சாலைப் பணிகளைச் செய்வதற்காக இடம்பெயர்ந்து வந்திருக்கும் பலருடன் சில லடாக் குடும்பங்களும் அங்கு பணிபுரிகிறார்கள்
![](/media/images/09-_AMI2093-RM.width-1440.jpg)
ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த சந்தோஷ் டோப்னோ, சுமதங்குக்கு அருகில் இருக்கும் கட்டிடத்தில் பணிபுரிகிறார். பணிக்கு இடையில் கொஞ்சம் ஓய்வெடுக்கிறார்
![](/media/images/10-_AMI2027-RM.width-1440.jpg)
லேவில் இருந்து ஒரு மணிநேரப் பயணத்தில் இருக்கும் சுஷுல் கிராமத்தில் இருக்கும் டெண்ட்டுக்கு உள்ளே இடம்பெயர்ந்து வந்திருக்கும் பணியாளர்கள் மதிய உணவை உட்கொள்கிறார்கள். மதிய உணவுக்கான இடைவேளை ஒரு மணிநேரம் அளிக்கப்படுகிறது. தீவிரமான வானிலைக்கு ஏற்ப அரிசி, காய்கறிகள், பருப்பு ஆகியவை டெண்ட்டுக்கு உள்ளேயே சமைத்து உண்கின்றனர்
![](/media/images/11-DSC_6894-RM.width-1440.jpg)
வெவ்வேறு இடங்களில் இந்துஸ் ஆறு குறுக்கே வரும்பொழுது, சுமதங் வழியின் குறுக்கில் இருக்கும் கியாரி மற்றும் மஹே பாலம் சேதமடைகிறது. ராணுவ நடவடிக்கைகளுக்காக முக்கியமான பாதை என்பதால், சாலையைச் சரிசெய்வதற்கு பணியாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்
![](/media/images/12-_AMI2044-RM.width-1440.jpg)
ஜார்க்கண்டைச் சேர்ந்த 53 வயது பகத் ராம், அம்மாநிலத்தின் கொடெர்மா மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஒரு நாளைக்கு 400 ரூபாய் கூலியாகப் பெறுகிறார். நான்கு வருடங்களாக இங்கு சாலை வேலைகளுக்கு வந்து கொண்டிருக்கும் அவருக்கு இந்த பணிச்சூழல் பிடிக்கவில்லை. அடுத்த வருடம் இங்கு வரவேண்டாம் என நினைக்கிறார்
![](/media/images/13-_AMI2101-RM.width-1440.jpg)
ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஹமித் அன்சாரிக்கு 32 வயது. அக்டோபர் 10-ம் தேதி அவரது பணியை ஒப்பந்தத்தின்படி முடித்துவிட்டார். லேவுக்குச் செல்வதற்காக சோ-மொரிரி அருகில் பயணிக்கக் காத்திருக்கிறார்
![](/media/images/14-DSC_0146-RM.width-1440.jpg)
நாளின் முடிவில், மேக்னடிக் குன்றுக்கு அருகில் இருக்கும் டெண்ட்டை நோக்கி ஜார்க்கண்டைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் நடந்து செல்கிறார்கள்
தமிழில்: குணவதி