மதிய வேலையில் பழைய அலுமினிய பாத்திரத்தின் கடைசி அரிசி தானியங்களை துடைத்து எடுக்கிறார் மாயா. அதுவே அவரது ஒருநாள் உணவு. அவருக்கும், ஷிவாவிற்கும் பாத்திரத்தில் வேறு மசூர் பருப்பு கிடையாது.

“நாங்கள் ஒருமுறை தான் உண்கிறோம். எங்கள் குழந்தைகளுக்காக இரண்டு வேளை சமைக்கிறோம். அவர்களுக்கு உணவு போதுமா என்று தான் முதலில் கவனிப்போம்,” என்கிறார் 23 வயது மாயா. “பெருந்தொற்று தொடங்கியது முதலே எங்களுக்கு ரேஷன் குறைவாக கிடைக்கிறது,” என்கிறார் தனது பழைய புடவைகளும் போர்வைகளும் கூரையாக போர்த்தப்பட்ட மூங்கில் குடிசைக்கு வெளியே நின்றபடி 25 வயது ஷிவா.

2020 மார்ச் மாதம் பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு தொடங்கியது முதல் மாயாவும், ஷிவா கண்டடியும் 2 முதல் 7 வயது வரையுள்ள அவர்களின் நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு உணவளிக்கப் போராடி வருகின்றனர்.

பீட் மாவட்டம் பீட் தாலுக்கா பந்தர்யாச்சிவாடி கிராமத்திலிருந்து 6 முதல் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திறந்த திடலில் அமைந்துள்ளது அவர்களின் தற்காலிக குடிசை. மழை பெய்தால் அவர்களின் வண்ணமயமான சுவரும், மேற்கூரையும் நீர் ஒழுகத் தொடங்கும்.

மசன்ஜோகி எனும் நாடோடி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் (மகாராஷ்டிராவில் ஓபிசி பிரிவினராக பட்டியலிடப்பட்டவர்கள்) 14 குடிசைகள் அங்கு அமைந்துள்ளன. அவர்கள் பாரம்பரியமாக யாசகத்தை நம்பி வாழுபவர்கள். கூலி வேலை தேடி குடும்பத்துடன் ஆண்டிற்கு ஒருமுறை மாநிலத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்கின்றனர்.

Since the lockdowns began, Maya and Shiva Gandade, who live in a cluster of huts of the Masanjogi community in Beed district, have been struggling to feed themselves and their four little children
PHOTO • Jyoti
Since the lockdowns began, Maya and Shiva Gandade, who live in a cluster of huts of the Masanjogi community in Beed district, have been struggling to feed themselves and their four little children
PHOTO • Jyoti

பீட் மாவட்டத்தின் மசன்ஜோகி சமூகத்தின் குடிசை தொகுப்புகளில் வசிக்கும்  மாயாவும், ஷிவா கண்டடியும் ஊரடங்கு தொடங்கியது முதலே தங்களின் நான்கு சிறு குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்திற்கு உணவளிக்க போராடி வருகின்றனர்

குப்பைகளை பொறுக்கும் வேலையை அவர்களில் பெரும்பாலானோர் செய்கின்றனர். பெண்கள் பொதுவாக பல்வேறு கிராமங்களில் இருந்து மறு சுழற்சிக்காக பழைய துணிகள், முடிகளை சேகரிக்கின்றனர். ஆண்கள் குப்பைத்தொட்டிகள், வீடுகளில் இருந்து நெகிழி, அலுமினிய துண்டுகள், பழைய இரும்புகளை சேகரிக்கின்றனர். “ஒரு நாளுக்கு நாங்கள் எவ்வளவு சேகரிக்கிறோமோ அதற்கு ஏற்ப பழைய இரும்புக் கடைக்காரர் எங்களுக்கு பணம் தருகிறார்,” என்கிறார் கூந்தல், துணிகளை பரிமாற்றம் செய்து நெகிழி தொட்டிகள், வாளிகளை வாங்கும் மாயா.

“ஒரு இடத்தில் வருவாய் நின்றுவிட்டால் வேறு தாலுக்காவிற்கு செல்கிறோம்,” என்கிறார் அவர். “ஓராண்டிற்கு மேல் ஓரிடத்தில் நாங்கள் வசிப்பதில்லை.”

சில போக்குவரத்து வாய்ப்புகள் இருந்தாலும், கோவிட்-19 தொடர்புடைய பயண கட்டுப்பாடுகள் அவர்களின் புலம்பெயர்வை தடுத்துவிட்டது. “2019 நவம்பர் முதல் நாங்கள் பீடில் இருக்கிறோம். எங்களிடம் போதிய பணமில்லை என்பதால் டெம்போவை வாடகைக்கு பிடிப்பது கடினம். எங்கள் பொருட்களுடன் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிப்பது சாத்தியமற்றது,” என்று போலியோவினால் கால்கள் பாதித்த ஷிவா தடியை பிடித்து நடந்தபடி சொல்கிறார்.

“எங்கள் வருமானம் என்பது எவ்வளவு பழைய பொருட்கள், துணிகள், கூந்தலை சேகரிக்கிறோம் என்பதைச் சார்ந்தே இருக்கிறது,” என்கிறார் அவர். பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில்கூட அவரும் மாயாவும் பெரிதாக சம்பாதித்தது கிடையாது. ஆனால் அவர்களின் கூட்டு வருமானம் ரூ.7000-8000க்கு குறைந்ததில்லை.

இப்போது ஓராண்டாக மாதத்திற்கு 4000 ரூபாய்க்கு மேல் பெற முடிவதில்லை.

தட்டுப்பாடு வந்தால் ரேஷன் பொருட்கள், உணவை குறைத்துக் கொள்கின்றனர். முன்பெல்லாம் ஆறு பேர் கொண்ட தங்களின் குடும்பத்திற்கு ரூ.4000 முதல் ரூ.5000 வரை மாயாவும், ஷிவாவும் செலவிட்டுள்ளனர்.

Their weekly purchase of foodgrains has dropped to just one kilo of masoor dal and two kilos of rice for a family of six
PHOTO • Jyoti
Their weekly purchase of foodgrains has dropped to just one kilo of masoor dal and two kilos of rice for a family of six
PHOTO • Jyoti

ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு வாரந்தோறும வாங்கும் உணவு தானியங்களின் அளவும் ஒரு கிலோ மசூர் பருப்பு, 2 கிலோ அரிசி என குறைந்துவிட்டது

பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் வாரத்திற்கு இரண்டு கிலோ பருப்புகள், 8 முதல் 10 கிலோ வரையிலான அரிசி என வாங்கி வந்தவர்கள்  இப்போது வாரந்தோறும் ஒரு கிலோ மலிவான மசூர் பருப்பு, இரண்டு கிலோ அரிசி என வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர். “கூடுதலாக நாங்கள் கோழி அல்லது ஆட்டிறைச்சி, முட்டைகள், காய்கறிகள், குழந்தைகளுக்கு பழங்கள் போன்றவற்றை மாதத்தில் மூன்று முறை வாங்குவோம்,” என்று விரல்களை விட்டு எண்ணியபடி சொல்கிறார் மாயா. ஊரடங்கு முதலே அவர்களின் உணவுத் தரமும், அளவும் குறைந்துவிட்டது. “முன்பு நாங்கள் விருந்து சாப்பிட்டோம் என்று சொல்லவில்லை, குறைந்தபட்சம் வயிற்றை நிரப்பிக் கொள்வோம்,” என்கிறார் மாயா.

“இப்போது எண்ணெய் முதல் பருப்பு வரை விலை அதிகமாகிவிட்டது. எங்களால் இவற்றை எப்படி வாங்க முடியும்? முன்பு போல் நாங்கள் இப்போது சம்பாதிப்பதுகூட இல்லை,” என்கிறார் ஷிவா.

பெருந்தொற்றுக்கு முந்தைய பத்தாண்டுகளாகவே இந்தியாவில் உணவுச் செலவு குறைந்து வருகிறது - 1993ஆம் ஆண்டு 63.2 சதவீதமாக இருந்தது 48.6 சதவீதமாகக் குறைந்துள்ளது என்கிறது தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் 2011-12 வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு. (அடுத்தடுத்த ஐந்தாண்டு கால கணக்கெடுப்பின் முடிவுகளை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிடவில்லை.)

பெருந்தொற்று தொடங்கியது முதல் நாட்டில் சமூக, பொருளாதார ரீதியாக விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அதிகரித்துள்ளனர் என்கிறது டெல்லியை தளமாகக் கொண்டு கோவிட் -19 குறித்து ஆய்வு செய்துள்ள  தில்லியைச் சேர்ந்த அமைப்பான கோவிட்-19க்கான விரைவான எதிர்வினைக்கான அமைப்பின் ஆய்வுக் குறிப்பு . 2020 டிசம்பர் 12 முதல்  2021 ஜனவரி 5ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் “உணவின் அளவை 40% மக்கள்தொகை [11 மாநிலங்களில் சுமார் 11,800 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரி அளவு]  குறைத்து கொண்டுள்ளது என்கிறது.” முட்டை, இறைச்சி, காய்கறி, எண்ணெய் போன்றவற்றின் பயன்பாட்டை 25 சதவீதம் குறைத்துக் கொண்டுள்ளது.

Many Masanjogis now work as waste-collectors, at times exchanging plastic tubs and buckets for the items they pick up from households
PHOTO • Jyoti
Many Masanjogis now work as waste-collectors, at times exchanging plastic tubs and buckets for the items they pick up from households
PHOTO • Jyoti

மசன்ஜோகிக்கள் பலரும் இப்போது குப்பை சேகரிக்கும் பணிகளை செய்கின்றனர். சில சமயங்களில் தாங்கள் வீடுகளில் இருந்து சேகரிக்கும் பழைய பொருட்களுக்கு மாற்றாக நெகிழி தொட்டிகள், வாளிகளை வாங்கிக் கொள்கின்றனர்

ரேஷன் அட்டை வைத்திருந்தால் மாயா, ஷிவாவிற்கு சிறிதேனும் உதவி கிடைத்திருக்கும். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், 2013 ன் கீழ்  ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தனி நபரும் ஐந்து கிலோ தானியங்களை மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம் - அரிசி கிலோ ரூ.3, கோதுமை கிலோ ரூ.2, தானியங்கள் கிலோ ரூ.1 என்று அளிக்கப்படுகிறது.

“எங்களிடம் ரேஷன் அட்டை கிடையாது,” என்கிறார் மாயா, “நாங்கள் நீண்ட காலத்திற்கு ஓரே இடத்தில் இருப்பதில்லை.” எனவே அவரைப் போன்ற பிற 14 குடும்பங்களும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பெருந்தொற்று காலத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட 5 கிலோ இலவச உணவு தானியங்கள் போன்ற அரசின் திட்டங்களைப் பெற முடியவில்லை.

“எங்கும் பசி பரவியிருப்பதை காண முடிகிறது. இம்முறை இரண்டாவது அலையில் பசி சூழல் இன்னும் மோசமடைந்துவிட்டது,” என்கிறார் டெல்லியை மையமாகக் கொண்ட உணவு உரிமை பிரச்சாரத்தின் உறுப்பினர் திபா சின்ஹா. “பெருமளவு மக்களிடம் ரேஷன் அட்டைகள் இல்லை, உச்ச நீதிமன்றத்தின் தொடர் உத்தரவுகளையும் தாண்டி அரசு இதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை.”

“எங்கள் சமூகத்தில் [மசன்ஜோகி] 50 சதவீதத்திற்கும் அதிகமானோரிடம் ரேஷன் அட்டையோ வேறு எந்த அடையாள அட்டையோ கிடையாது,” என்கிறார் மசன்ஜோகி மஹாசங்கத்தை நடத்தி வரும் நான்டடைச் சேர்ந்த சமூகப் பணியாளரான 48 வயது லக்ஷமன் கன்சர்வாத். இந்த அமைப்பு பல்வேறு வகையான ஆவணப்படுத்தல், கல்வி, பிற விஷயங்களில் பணியாற்றி வருகிறது. மகாராஷ்டிராவில் கிட்டதட்ட 1 லட்சம் மசன்ஜோகிக்கள் இருப்பார்கள் என்றும் அவர்களில் 80 சதவீதம் பேர் குப்பைகளை சேகரிப்பது, புலம்பெயர்ந்து செல்வது என வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர் கணக்கிட்டுள்ளார்.

For Naresh and Suvarna Pawar, and their kids in Yavatmal (they belongs to the Phanse Pardhi community), bajri bhakris have become a rare meal item
PHOTO • Jyoti
For Naresh and Suvarna Pawar, and their kids in Yavatmal (they belongs to the Phanse Pardhi community), bajri bhakris have become a rare meal item
PHOTO • Jyoti

யவத்மாலில் உள்ள (ஃபன்சே பர்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) நரேஷ், சுவர்ணா பவார் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கம்பு ரொட்டி கிடைப்பதே அரிதாகிவிட்டது

பிற நாடோடி சமூகங்களும் இதுபோன்ற இக்கட்டான சூழலில்தான் உள்ளன. யவத்மால் மாவட்டம், நெர் தாலுக்காவில் தங்களின் ஐந்து வயது மகன் மற்றும் நான்கு வயது மகளுடன் வசிக்கும் சுவர்ணா, நரேஷ் பவாரை 2019ஆம் ஆண்டு மே மாதம் (தொலைப்பேசி வழியாக இக்கட்டுரைக்காக பேசினேன்) நான் சந்தித்தேன். அவர்கள் ஃபான்சி பார்தி (பட்டியல் பழங்குடியினத்தவர்) நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ரேஷன் அட்டைகள் இல்லாமல் 70 குடிசைகளில் வசிக்கும் 35 குடும்பங்களில் இவர்களும் அடங்குவர்.

26 வயது சுவர்ணா தினமும் காலையில் தனது சிறிய மகளுடன் சேர்ந்து அருகமை கிராமங்களுக்குச் சென்று யாசகம் பெறுகிறார். “நான் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சென்று அழைப்பேன். இப்போதெல்லாம் யாசகம் பெறுவது எளிதல்ல,” என்கிறார் அவர், “காரணம் கிராமத்தினர் கரோனா தொற்றுக்கு அஞ்சுகின்றனர். பலரும் கிராமத்திற்குள் எங்களை விடுவதில்லை. சிலர் மட்டுமே இரக்கப்பட்டு அரிசி தானியங்கள், மீதமுள்ள ரொட்டி போன்றவற்றைத் தருகின்றனர்.” (பார்க்க: பொதுமுடக்க காலத்தில் பார்திஸ்கள் – எழுப்பும் கேள்விகள் )

சுவர்ணா உணவிற்காக திரியும்போது, அவரது 28 வயது கணவர் நரேஷ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பிற ஆண்களும் சேர்ந்து அருகில் உள்ள வனப்பகுதிகளில் கவுதாரி வேட்டைக்குச் செல்வார்கள். இப்பறவைகளை இக்குடும்பங்கள் உண்கின்றன அல்லது விற்பனை செய்கின்றன. “வேட்டையாடுவதற்கு அனுமதி கிடையாது. பல சமயங்களில் வனத்துறையினர் எங்களை எச்சரிப்பார்கள். சில நேரங்களில் நாங்கள் வெறுங்கையுடன் திரும்புவோம்,” என்கிறார் நரேஷ்.

ஒரு நீண்ட நாளின் முடிவில் அவர்களின் உணவு என்பது வெவ்வேறு வீடுகளில் இருந்து பெற்ற சிறிதளவு அரிசி, மிளகாய் தூள் அல்லது கருப்பு எள் காரத் துவையல். மிக அரிதாக அவர்களுக்கு கொஞ்சம் காய்கறிகள் கிடைக்கும். “சில விவசாயிகளிடம் கேட்டால் கத்திரிக்காய் அல்லது உருளைக்கிழங்கு கிடைக்கும்,” என்கிறார் சுவர்ணா.

Suvarna begs for food now, and says: 'A few who take pity on us give some rice grains, and sometimes leftover bhakri'
PHOTO • Jyoti

சுவர்ணா இப்போது உணவு கேட்டுவிட்டுச் சொல்கிறார்: 'சிலர் இரக்கப்பட்டு எங்களுக்கு கொஞ்சம் அரிசியையும், சில சமயம் மீதமுள்ள ரொட்டியையும் தருகின்றனர் '

பெருந்தொற்று தொடங்குவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் பல பகுதிகளில் 1993ஆம் ஆண்டில் 63.2 சதவீதமாக இருந்த உணவுச் செலவு என்பது 48.6 சதவீதமாக சரிந்துவிட்டது என்கிறது தேசிய மாதிரி ஆய்வின் வீட்டு நுகர்வுச் செலவு கணக்கெடுப்பு 2011-12

அவரது குடும்பத்தினரும், மற்றவர்களும் அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு உதவும் அடையாள ஆவணங்களைப் பெறுவதில் உள்ள சிக்கல்களை நாடோடி மற்றும் அரை நாடோடி பழங்குடியினர்களிடம் பெறப்பட்ட பல மனுக்களில் இருந்து தேசிய சீர்மரபினர் ஆணையம் கோடிட்டுக் காட்டுகிறது. இந்த ஆணையத்தின் 2017ஆம் ஆண்டு அறிக்கை சொல்வது: “அடையாளப்படுத்துதல் மற்றும் ஆவணப்படுத்துதல் தொடர்பாக பெறப்பட்ட 454 மனுக்களில் 304 மனுக்கள் இறப்புச் சான்றிதழ், வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கான [ரேஷன்] அட்டைகள், ஆதார் அட்டைகள் போன்ற ஆவணங்களைப் பெறுவதில் உள்ள பிரச்னைகள் தொடர்புடையவை.”

பெருந்தொற்று அவர்களின் நிலையை இன்னும் ஆபத்தானதாக ஆக்கியுள்ளது.

2021 ஜூன் 2ஆம் தேதி மாநில அரசுகளின் கவனத்தைப் பெறுவதற்கு மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், “சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய, பலவீனமான பிரிவினரான தெருவோரம் வசிப்பவர்கள், குப்பை சேகரிப்போர், சாலையோரம் கடை வைத்திருப்போர், ரிக்ஷா இழுப்பவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றோருக்கு ரேஷன் அட்டைகள் மூலம் உணவு தானியங்கள் கிடைக்கப் பெறுவதில்லை.”

மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் எவ்வித ஆவண தேவையுமின்றி ரூ.10க்கு சமைத்த உணவு கிடைக்கச் செய்யும் ஷிவ் போஜன் யோஜனா திட்டத்தை 2020 ஜனவரி 26ஆம் தேதி அரசுகள் அறிமுகம் செய்துள்ளன. பெருந்தொற்று காலத்தில் ஒரு தட்டு உணவின் விலை ரூ.5 என மேலும் குறைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பொருளாதார கணக்கெடுப்பு 2020-21 ,  “2020 டிசம்பர் வரை 906 சிவபோஜன் மையங்கள் மூலம் 2.81 கோடி ஷிவ்போஜன் உணவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன,” என்கிறது.

ஆனால் இதுபோன்ற உணவுகள் சிவா, நரேஷ் குடும்பத்தினரை சென்றடையவில்லை. “எங்களுக்கு இதுபற்றி தெரியாது,” என்கிறார் சிவா. “இதுபற்றி தெரிந்திருந்தால் நாங்கள் அரை பட்டினியில் இருக்க மாட்டோம்,” என்கிறார் நரேஷ்.

Naresh and other men from the settlement go hunting for teetar (partridge) in nearby forest areas. The birds are eaten or sold by the families
PHOTO • Jyoti
Naresh and other men from the settlement go hunting for teetar (partridge) in nearby forest areas. The birds are eaten or sold by the families
PHOTO • Jyoti

நரேஷ் மற்றும் அப்பகுதி ஆண்கள் சேர்ந்து அருகமை வனப்பகுதிகளில் கவுதாரி வேட்டைக்கு செல்கின்றனர். அப்பறவைகளை அவர்கள் உண்கின்றனர் அல்லது விற்கின்றனர்

“இது மாநிலத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையேயான பிரச்னையாகிவிட்டது. இப்பிளவுகளில் மக்கள் சிக்கிக் கொள்கின்றனர். சில மாநிலங்கள் வெவ்வேறு விஷயங்களை முயற்சிக்கின்றன, ஆனால் மத்திய தேசிய திட்டம் எதையும் நாங்கள் காணவில்லை,” என்கிறார் உணவு உரிமை பிரச்சாரத்தின் திபா சின்ஹா.

எந்த சமூகப் பாதுகாப்பு வலைகளிலும் இல்லாத, நரேஷ் எப்போதும் வேட்டையை நாடவில்லை, ஸ்வர்ணா எப்போதும் பிச்சை எடுப்பதில்லை.  அவர்களின் வயிறு எப்போதும் காலியாக இருப்பதில்லை. அவர்கள் ஓரளவு சிறந்த நாட்களைக் கண்டுள்ளனர்.

“நாங்கள் குழி தோண்டுதல், சாலை கட்டமைப்பு, வாய்கால்களை சுத்தம் செய்தல், பூ விற்றல் போன்ற எந்த வேலையையும் செய்கிறோம்,” என்று டிசம்பர் முதல் மே வரை ஆறு மாதங்களுக்கு மும்பை, நாக்பூர், புனே நகரங்களில் வேலை செய்ததை நரேஷ் நினைவுகூர்கிறார். அவர்கள் பாலத்தின் கீழ் அல்லது தற்காலிக குடில்கள் அமைத்து உறங்கிக் கொண்டு,  ஆறு மாதங்கள் கடினமாக வேலைசெய்து ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை  சேமித்துள்ளனர்.

அப்பணத்தை ஆண்டின் எஞ்சிய பாதி காலங்களுக்கு தானியங்கள், எண்ணெய், காய்கறிகள் வாங்குவதற்கு பயன்படுத்தினர். “அது எங்களுக்கு பெரிய வருவாய். நாங்கள் மாதந்தோறும் 15-20 கிலோ அரிசி, 15 கிலோ கம்பு, 2-3 கிலோ பாசிப்பருப்பு போன்றவற்றை [வெளிச்சந்தையிலிருந்து] வாங்க முடியும்,” என்கிறார் நரேஷ்.

இந்த பெருந்தொற்று காலம் அவர்களின் ஆண்டு வருமான சமநிலைப்படுத்தலை முற்றிலுமாக புரட்டிவிட்டது. ஊரடங்குகள் அவர்களின் இரண்டாவது புலம்பெயர்வை தடுத்து யாசகம் பெறுதல், வேட்டையாடுதல் போன்ற நிலைக்கு தள்ளிவிட்டது. “அரசு எந்நேரத்திலும் பொதுமுடக்கத்தை அறிவிக்கும் என்பதால் நாங்கள் எந்த நகரிலும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை, பட்டினி கிடந்தாலும் வீட்டில் இருப்பதே சிறந்தது,” என்கிறார் நரேஷ். “அருகமை கிராமங்களில் வேலை தேடுவது மிகவும் கடினமானது. நகரங்களில் வேலை செய்வதால் எங்கள் வாழ்க்கை முன்னேறியது, ஆனால் இப்போது… ஒன்றுமில்லாமல் போய்விட்டது.”

தமிழில்: சவிதா

Jyoti is a Senior Reporter at the People’s Archive of Rural India; she has previously worked with news channels like ‘Mi Marathi’ and ‘Maharashtra1’.

Other stories by Jyoti
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha