”மறுமுறையும் பள்ளி சாப்பாடு போட்டால் நன்றாக இருக்கும்.”

தெலெங்கானாவின் செரிலிங்கம்பள்ளி மண்டலத்தில் இருக்கும் மண்டல் பரிஷத் ஆரம்பப் பள்ளியில் ஏழு வயது பசவராஜு படிக்கிறார். ரங்காரெட்டி மாவட்டத்தில் இருக்கும் இப்பள்ளி, மதிய உணவு குழந்தைகளுக்கு அளிக்கும் நாட்டின் 11.2 லட்ச பள்ளிகளில் ஒன்றாகும். பசவராஜின் பள்ளியில் படிக்கும் 10 வயது அம்பிகா, ஒரு தம்ளர் கஞ்சி மட்டும் அருந்திவிட்டு பள்ளிக்கு வருவார். அவரைப் போன்றோருக்கு மதிய உணவுதான் அந்த நாளின் முதல் உணவு.

இந்தியாவின் மதிய உணவுத் திட்டம், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சர்வ ஷிக்‌ஷ அபியானின் ஆதரவில் அரசு நடத்தும் கல்வி மையங்களிலும் படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக எல்லா வேலை நாட்களிலும் உணவளிக்கிறது. நிரம்பிய வயிறு கணக்குகளை சரியாகப் போடச் செய்யும் என்பதிலும் எழுத்துப் பிழைகளை சரி செய்ய வைக்கும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மதிய உணவின் பிரதான நோக்கம், குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு வருவதுதான். (இந்தியாவில் 15 கோடி குழந்தைகளும் இளையோரும் முறையான படிப்பிலிருந்து வெளியேறியிருப்பதாக  ஒன்றியக் கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் கூறுகிறார்.)

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்திலுள்ள ஜோத்கத் கிராமத்தின் ராஜ்கியா பிரத்மிக் வித்யாலயா பள்ளிக்குச் சென்றோம். நாங்கள் சென்றபோது பத்து வயது தக்‌ஷ் பட்ட சில பிஸ்கட்டுகளை மட்டும் உண்டு பள்ளிக்கு வந்திருந்தார். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால், அசாம் மாநிலத்திலுள்ள  நல்பாரி மாவட்டத்தில் எண்.858, நிஸ் ககாடா பள்ளிக்கு செல்வதற்கு முன் ஒரு ரொட்டியும் கட்டஞ்சாயாவும் மட்டும் சாப்பிட்டதாக சொல்கிறார் அலிஷா பேகம். அவரின் தந்தை தெருவோரம் கடை வைத்திருப்பவர். அம்மா வீட்டில் இருக்கிறார்.

Basavaraju
PHOTO • Amrutha Kosuru
Ambica
PHOTO • Amrutha Kosuru
Daksh Bhatt

பசவராஜு (இடது) மற்றும் அம்பிகா (நடுவே) மதிய உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள் குறிப்பாக முட்டை வழங்கப்படும்போது. தக்‌ஷ் பட் (வலது) நாளின் முதல் உணவை சாப்பிடுகிறார். காலை வெறும் சில பிஸ்கட்டுகளை மட்டும் சாப்பிட்டிருந்தார்

ஆரம்பப் பள்ளி (வகுப்பு 1-5)  மாணவர்களுக்கு 480 கலோரிகள் மற்றும் 12 கிராம் புரதச்சத்தும் நடுநிலைப் பள்ளி (6 முதல் 8ம் வகுப்பு) மாணவர்களுக்கு 720 கலோரிகள் மற்றும் 20 கிராம் புரதச்சத்தும் பள்ளி உணவாக வழங்கப்படுகிறது. ஏழ்மையிலிருந்து விளிம்புநிலை சமூகங்களிலிருந்தும் வரும் குழந்தைகளுக்கு சத்துள்ள உணவு கிடைக்கும் வழி வேறு இல்லாததால் பள்ளி உணவு மிகவும் முக்கியமாக இருக்கிறது.

பெங்களூருவின் பட்டநகரே பகுதியிலுள்ள நம்முரா அரசு ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியரான என்.சுகுணா, “ஒன்றிரண்டு குழந்தைகளைத் தவிர, அனைவரும் பள்ளியின் இலவச மதிய உணவை உண்ணுகின்றனர்,” என்கிறார். பெங்களூரு நகரத்தின் கட்டுமான தளங்களில் பணிபுரிய வட கர்நாடகாவின் யாத்கிரி பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் இவை,

2021ம் ஆண்டில் பிரதான் மந்திரி போஷான் ஷக்தி நிர்மாண் அல்லது பிஎம் போஷான் என பெயர் மாற்றப்பட்ட மதிய உணவுத் திட்டம், ‘அதிக எண்ணிக்கையில் பள்ளி சேர்க்கை, இருக்க வைத்தல் மற்றும் வருகை ஆகியவற்றை உறுதிபடுத்தும் அதே நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தை அதிகரிப்பதை’ இலக்காகக் கொண்டிருக்கிறது. ஒன்றியத்தின் ஆதரவோடு 1995ம் ஆண்டிலிருந்து நடத்தப்படும் தேசிய அளவிலான திட்டம் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள மட்டியா கிராமத்தின் அரசு ஆரம்பப் பள்ள்யில், மதிய உணவு உண்ணும் 80 மாணவர்களைப் பார்த்து தலைமை ஆசிரியை பூனம் ஜாதவ் புன்னகைக்கிறார். “சில பெற்றோர் குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்க முடியும்,” என அவர் சுட்டிக் காட்டுகிறார். “மதிய உணவு திட்டத்தின் அழகான விஷயம் என்னவென்றால், குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து உண்ணுவார்கள் என்பதுதான். அதை அவர்கள் விரும்புவும் செய்கிறார்கள்.”

மதிய உணவு அடிப்படையாக தானியம், பருப்பு, காய்கறிகள் கொண்டு எண்ணெய் அல்லது கொழுப்பு, உப்பு மற்றும் மசாலா ஆகியவற்றைக் கொண்டு சமைக்கப்படுகிறது. பல மாநிலங்கள் தங்களுக்கே உரிய புது வகைகளையும் உணவில் சேர்த்திருக்கின்றன. துணை உணவுப் பொருட்கள் போன்றவையும் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சகத்தின் 2015ம் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

Children from Kamar community at the Government Primary School in Footahamuda village, Chhattisgarh.
PHOTO • Purusottam Thakur
Their mid-day meal of rice, dal and vegetable
PHOTO • Purusottam Thakur

இடது: சட்டீஸ்கரின் ஃபுடாஹமுடா கிராமத்திலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கமர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள். வலது: சோறு, பருப்பு மற்றும் காய்கறி கொண்ட மதிய உணவு

Kirti (in the foreground) is a student of Class 3 at the government school in Footahamuda.
PHOTO • Purusottam Thakur
The school's kitchen garden is a source of vegetables
PHOTO • Purusottam Thakur

இடது: ஃபுடாஹமுடா அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் கிர்தி (முன்னால் இருப்பவர்). வலது: பள்ளியின் சமையல் தோட்டத்தில் காய்கறிகள் கிடைக்கின்றன

சட்டீஸ்கரின் ஃபுடாஹமுடா கிராமத்தின் அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் 10 மாணவர்களும் மிகவும் பாதிக்கப்படத்தக்கக் கூடிய பழங்குடி குழுவாக பட்டியலிடப்பட்டிருக்கும் கமர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். “விறகு சேகரிக்கவும் காட்டுப் பொருட்கள் சேகரிக்கவும் கமர்கள் அன்றாடம் காட்டுக்கு செல்கின்றனர். அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளியில் உணவும் படிப்பும் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படுத்தப்பட்டிருக்கிறது,” என்கிறார் தம்தாரி மாவட்டத்திலுள்ள நக்ரி ஒன்றியத்தில் இருக்கும் சிறு பள்ளியில் பணிபுரியும் ஒரே ஆசிரியரான ருபினா அலி.

இன்னொரு காட்டுப் பகுதியான தமிழ்நாட்டின் சத்தியமங்கலத்தில் கோபிச்செட்டிப் பாளையத்தின் தலைமலை கிராமத்தைச் சேர்ந்த அரசு பழங்குடி விடுதிப் பள்ளியில் 160 குழந்தைகள் படிக்கின்றனர். பெரும்பாலும் சோளிகர் மற்றும் இருளர் சமூகங்களை (பட்டியல் பழங்குடிச் சமூகங்கள்) சேர்ந்த 160 குழந்தைகள் சாம்பார் சோற்றையும் வாரத்துக்கு சில முறை வழங்கப்படும் முட்டைப் பொறியலையும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

பிஎம் போஷான் திட்டத்தின் 2021-22லிருந்து 2025-26 வரையிலான செலவு 1,30,794 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது. மாநிலமும் ஒன்றியமும் அச்செலவை பகிர்ந்து கொள்கின்றன. நிதி விநியோகமும் ஆறு லட்ச மெட்ரிக் டன்னுக்கு மேலான உணவு தானிய விநியோகமும் சில நேரங்களில் தடைபடுவதுண்டு. அச்சமயங்களில் சமையலர்களும் ஆசிரியர்களும் உணவு தானியத்தை சந்தையிலிருந்து வாங்கும் நிலை ஏற்படுகிறது. ஹரியானாவின் இக்ரா கிராமத்திலுள்ள ஹாஹீத் ஹவால்தர் ராஜ்குமார் வித்யாலயா பள்ளியின் ஆசிரியர் கூறுகையில், “குழந்தைகள் பசியில் இருக்கக் கூடாது என்பதற்காக ஆசிரியர்களான நாங்கள் இம்மாதிரி சமயங்களில் பணம் கொடுக்கிறோம்,” என்கிறார். ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்திலுள்ள இப்பள்ளி, விறகுவெட்டிகள், தினக் கூலிகள், செங்கல் சூளை தொழிலாளர்கள் போன்றோரின் குழந்தைகளுக்கு புலாவ், பருப்பு, சோறு மற்றும் ராஜ்மா சோறு போன்றவற்றைக் கொடுக்கிறது.

இந்தியாவின் ஏழைக் குழந்தைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை விரைவில் முடியாது. ஐந்து வயதுக்கும் குறைந்த குழந்தைகளில் 32 சதவிகிதம் பேர் எடை குறைவாக இருக்கும் அதிர்ச்சி செய்தியை தேசிய குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு 2019-21 தருகிறது. 2019ம் ஆண்டின் யுனிசெஃப் அறிக்கை யின்படி ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளில் 69 சதவிகிதம் பேரின் மரணத்துக்கு சத்துகுறைபாடே காரணம்.

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

தீபாவளி விடுமுறையின்போது கூட அந்துள் போடா கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் (இடது) தோபாபெரியா சிஷு ஸ்கிகா கேந்திரா பள்ளிக்கு வந்து மதிய உணவு எடுத்துக் கொள்கின்றனர். ரானி சிங்கா (வலது) கிச்சடிக்காக காத்திருக்கிறார்

ஒரு விடுமுறை நாளில் கூட எட்டு வயது ரானி சிங்கா தாயுடன் மேற்கு வங்க அந்துள் போடா கிராமத்திலுள்ள தோபாபெரியா சிஷு ஸ்கிகா கேந்திரா பள்ளிக்கு கிச்சடிக்காக வருவதென்பதில் ஒளிந்திருக்கிறது நம் சமூகம் கொண்டிருக்கும் யதாரத்தத்தின் கடுமை. உள்ளூர் மக்கள் அப்பள்ளியை ‘கிச்சடிப் பள்ளி’ என அழைக்கின்றனர். கிட்டத்தட்ட 70 குழந்தைகள் அங்கு படிக்கின்றனர். மேற்கு வங்கத்தின் 24 பர்கனாஸ் மாவட்டத்திலுள்ள அப்பள்ளிக்கு பாரி குழு அக்டோபர் மாதப் பிற்பகுதியில் சென்றபோது பள்ளி தீபாவளி விடுமுறைகளுக்காக மூடப்பட்டிருந்தது. ஆனால் குழந்தைகள் உண்ணவும் மதிய உணவு எடுத்துக் கொள்ளவும் வந்து கொண்டிருந்தனர்.

பெரும்பாலான குழந்தைகள் விளிம்புநிலை பின்னணிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பெற்றோர்கள் மீன்பிடி பகுதிகளில் பணிபுரிகின்றனர். ரானியின் தாய் (பெயர் சொல்ல விரும்பவில்லை) சொல்கையில், “தொற்றுக்காலத்தில் பள்ளி பெரும் ஆதரவாக இருந்தது. தொடர்ந்து அவர்கள் சமைக்கப்பட்ட உணவு கொடுத்தார்கள்,” என்கிறார்.

மார்ச் 2020-ல் கோவிட் தொற்று வந்தபோது மதிய உணவுத் திட்டம் பல மாநிலங்களில் தடைப்பட்டது. லட்சக்கணக்கான குழந்தைகள், பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டனர். கர்நாடக உயர்நீதிமன்றம் மதிய உணவு, கல்வியுரிமையுடன் தொடர்பு கொண்டதென தீர்ப்பளித்தது.

தெலெங்கானாவின் வருமானம் குறைந்த வசிப்பிடமான பி.ஜனார்தன் ரெட்டி நகரிலுள்ள ஆரம்பப் பள்ளியில் ஐஷ்வர்யா படிக்கிறார். அவரின் தந்தை ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள கட்டுமான தளங்களில் தினக்கூலி வேலை பார்க்கிறார். அவரின் தாய் வீட்டு வேலை செய்கிறார். பசியிலிருக்கும் ஒன்பது வயது குழந்தை சொல்கையில், “தினமும் பள்ளியில் முட்டைகள் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஒருநாளில் ஒரு முட்டைக்கும் அதிகமாக கொடுத்தாலும் நன்றாக இருக்கும்,” என்கிறார்.

பெருமளவிலான குழந்தைகளுக்கு உணவளித்தாலும் மதிய உணவு திட்டத்தில் ஊழலும் கலப்படமும் தரக்குறைவான தன்மையும் சாதிய பாகுபாடும் பரவலாக இருக்கின்றன. குஜராத் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில், தலித் சமையலர்கள் சமைத்த உணவை உயர்சாதி மாணவர்கள் உட்கொள்ள கடந்து வருடம் மறுத்தனர். ஒரு சம்பவத்தில் அவர்கள் தலித் சமையலரை அடிக்குமளவுக்குக் கூடச் சென்றனர்.

PHOTO • Amrutha Kosuru
PHOTO • M. Palani Kumar

இடது: தெலெங்கானாவின் செரிலிங்கம்பல்லியின் மண்டல ஆரம்பப் பள்ளியில் அதிக முட்டைகள் போடப்பட விரும்புகிறார் அங்கு படிக்கும் ஐஷ்வர்யா. வலது: சத்தியமங்கலத்தின் தலைமலியில் இருக்கும் பழங்குடி விடுதிப் பள்ளியில் மதிய உணவு வழங்கப்படுகிறது

கர்நாடகாவில், ஐந்து வயதுக்குட்பட்ட வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2015-16லிருந்ததை விட ஒரு சதவிகிதம் மட்டுமே 2019-20ல் குறைந்திருக்கிறது. 36லிருந்து 35க்கு குறைந்திருக்கிறது ( NFHS-5 ). மேலும் 2020ம் ஆண்டு வெளியான அரசின் அறிக்கை ஒன்று, கொடகு மற்றும் மைசூர் மாவட்டக் குழந்தைகள் கொண்டிருக்கும் சத்து குறைபாடு குறித்து கவனம் செலுத்தப்பட வலியுறுத்தியிருந்தது. ஆனால் அரசியல் கட்சிகள், மதிய உணவில் வழங்கப்படும் முட்டைகள் சைவமா, அசைவமா என்றுதான் விவாதித்துக் கொண்டிருக்கின்றன.

நாட்டிலுள்ள சத்துக்குறைபாடு பிரச்சினையில் மகாராஷ்டிராவில் பள்ளிகள் மூடப்படுவது ஆச்சரியமளிக்கிறது. அம்மாநிலத்தில் 6.16 லட்சம் சத்துகுறைபாடு குழந்தைகள் இருக்கின்றன. அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குந்தேகோவான் கிராமத்திலுள்ள இத்தகைய பள்ளி ஒன்றின் பெரும்பாலான மாணவர்கள் பர்திகள் ஆவார்கள். சீர்மரபு பழங்குடியான பர்தி சமூகம், மாநிலத்திலேயே ஏழ்மையான நிலையிலும் வாய்ப்பற்ற நிலையிலும் இருக்கிறது.

”பள்ளிகள் மூடப்பட்டால் இக்குழந்தைகளின் கல்வி நின்று விடுவதோடு மட்டுமின்றி, சத்துணவு கிடைக்காமல் சிரமப்பட்டும் போய்விடுவார்கள். இதனால் பழங்குடி மற்றும் வாய்ப்பு குறைந்த சமூகங்களின் குழந்தைகளிடம் சத்துகுறைபாடும் கல்வியை நிறுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்,” என்கிறார் பவுட்காவஸ்தி குண்டேகவோன் ஆரம்பப் பள்ளியின் முதல்வரான குசால்கர் த்ன்யாந்தேவ் கங்காராம்.

இங்குள்ள 15 பர்தி மாணவர்களில் மஞ்சூர் போசலேவின் எட்டு வயது மகள் பக்தியும் ஒருவர். “பள்ளி இல்லையேல் உணவு இல்லை. கொரோனா வந்த மூன்று வருடங்கள் மோசமாக இருந்தது,” என்கிறார் மஞ்சூர். “மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டால், எங்களின் குழந்தைகள் எப்படி முன்னேறும்?”

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பவுத்கவஸ்தி குண்டேகவோனின் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் பக்தி போசலே (இடது). பள்ளி மூடப்பட்டுக் கொண்டிருக்கிறது. பக்தியும் மற்றவர்களைப் போல மதிய உணவை இழப்பார்


PHOTO • Jyoti

’பள்ளிகள் மூடப்பட்டால் இக்குழந்தைகளின் கல்வி நின்று விடுவதோடு மட்டுமின்றி, சத்துணவும் கிடைக்காமல் போய்விடும்’ என்கிறார் குண்டேகவோன் ஆரம்பப் பள்ளியின் முதல்வரான குசால்கர் த்ன்யாந்தேவ் கங்காராம்


PHOTO • Amir Malik

மதிய உணவுக்கான நிதி தாமதிக்கப்படும் ஹரியானாவின் ஜிண்ட் மாவட்டத்தில் இக்ரா கிராமத்தின் ஷாகீது ஹவால்தர் ராஜ்குமார் ஆர்விஎம் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் குழந்தைகள் பட்டினி கிடக்கக் கூடாது என சொந்தக் காசை செலவழிக்கின்றனர்


PHOTO • Amir Malik

இக்ராவிலுள்ள ஷாகீது ஹவால்தர் ராஜ்குமார் ஆர்விஎம் வித்யாலயா பள்ளி மாணவரான ஷிவானி நஃப்ரியா பள்ளியின் மதிய உணவைக் காட்டுகிறார்


PHOTO • Amir Malik

ஷாகீது ஹவால்தர் ராஜ்குமார் ஆர்விஎம் வித்யாலயா பள்ளிக் குழந்தைகள் ஒன்றாக மதிய உணவு உண்ணுகின்றனர்


PHOTO • Purusottam Thakur

சட்டீஸ்கரின் மடியா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில் மதிய உணவு உண்டு முடித்த யாஷ், குணால் மற்றும் ஜகேஷ் ஆகியோர்


PHOTO • Purusottam Thakur

ராய்பூர் மாவட்ட மடியா கிராமத்தின் அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மதிய உணவு உண்டு முடித்து வகுப்புக்கு திரும்பிச் செல்கின்றனர்


PHOTO • Purusottam Thakur

மடியாவின் மதிய உணவு சோறு, பருப்பு மற்றும் காய்கறியைக் கொண்டிருக்கிறது


PHOTO • Purusottam Thakur

பகி (கேமராவை பார்ப்பவர்) மற்றும் வகுப்புத் தோழர்கள் மதிய உணவு முடித்து மடியா அரசு ஆரம்பப் பள்ளியில் தட்டுகளை கழுவுகின்றனர்

PHOTO • Purusottam Thakur

சட்டீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஃபுடாஹமுடா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில் மதிய உணவுக்காக குழந்தைகள் காத்திருக்கின்றனர்


PHOTO • Purusottam Thakur

ஃபுடாஹமுடா அரசு ஆரம்பப் பள்ளியில் மதிய உணவு அளிக்கப்படுகிறது


PHOTO • Purusottam Thakur

ஃபுடாஹமுடா பள்ளியில் குழந்தைகள் ஒன்றாக உண்ணுகின்றனர்


PHOTO • Amrutha Kosuru
PHOTO • Haji Mohammed

தெலெங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்திலுள்ள செரிலிங்கம்பள்ளியின் மண்டல் பரிஷத் ஆரம்பப் பள்ளிச் சுவற்றிலும் (இடது) ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்திலுள்ள ராஜ்கியா பிரத்மிக் வித்யாலயா பள்ளிச் சுவற்றிலும் (வலது) மதிய உணவுப் பட்டியல் எழுதப்பட்டிருக்கிறது


PHOTO • Amrutha Kosuru

செரிலிங்கம்பள்ளி மண்டலப் பள்ளியின் சமையலறையில் மதிய உணவு சமைக்கப்படுகிறது


PHOTO • S. Senthalir

சஞ்சனா எஸ் பெங்களூருவின் நம்முரா அரசு ஆரம்பப் பள்ளிக்கு செல்கிறார். அவருக்கு சாம்பார் சோறு பிடிக்கும். எப்போதும் மறுமுறையும் வாங்கி சாப்பிடுவார்


PHOTO • S. Senthalir

பெங்களூருவின் பட்டனகரே பகுதியிலுள்ள நம்முரா அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் ஐஷ்வர்யா சென்னப்பாவும் அலிஜா எஸ்ஸும் அண்டை வீட்டார் மற்றும் வகுப்புத் தோழர்கள் ஆவர். அவர்கள் எப்போதும் பள்ளியில் ஒன்றாகவே மதிய உணவு உண்ணுவர்

PHOTO • Pinku Kumar Das

இடதிலிருந்து வலது: அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த எண் 858 நிஸ்ககாடா ஆரம்பப் பள்ளியின் அனிஷா, ருபி, ஆயிஷா மற்றும் சஹ்னஜ் ஆகியோர் மதிய உணவு உண்ணுகின்றனர்

PHOTO • Haji Mohammed

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்திலுள்ள கரேடா ஒன்றியத்தின் ஜோத்காத் கிராமத்திலுள்ள ராஜ்கியா பிராத்மிக் வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் ஒன்றாக உணவு உண்ணுகின்றனர்

PHOTO • M. Palani Kumar

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமலைப் பகுதியின் பழங்குடி விடுதிப் பள்ளியில் படிக்கும் 160 மாணவர்களில் பெரும்பான்மையானோர் சோளிகர் மற்றும் இருளர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்

இக்கட்டுரைக்கான தகவல்களை சட்டீஸ்கரிலிருந்து புருசோத்தம் தாகூரும் கர்நாடகாவிலிருந்து செந்தளிர் எஸ்ஸும் தெலெங்கானாவிலிருந்து அம்ருதா கொசுருவும் தமிழ்நாட்டிலிருந்து எம்.பழனி குமாரும் ஹரியானாவிலிருந்து அமிர் மாலிக்கும் அசாமிலிருந்து பிங்கு குமார் தாஸும் மேற்கு வங்கத்திலிருந்து ரிதாயன் முகர்ஜியும் மகாராஷ்டிராவிலிருந்து ஜோதி ஷினோலியும் ராஜஸ்தானிலிருந்து ஹாஜி முகமதுவும் சேகரித்துள்ளனர். ப்ரிதி டேவிடும், வினுதா மல்லியாவும் ஆசிரியர் குழுவின் சன்விதி ஐயரின் உதவியுடன் தொகுத்துள்ளனர். படத் தொகுப்பு பினாய்ஃபர் பருச்சா

முகப்புப் படம்: எம்.பழனிகுமார்

தமிழில் : ராஜசங்கீதன்

Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan