PHOTO • P. Sainath

“நான் தான் விவசாயி, அவர் விவசாயம் பார்க்கவில்லை. கால்நடைகளை மட்டுமே கவனித்து வந்தார். அவருக்கு மாடுகளை தான் மிகவும் பிடிக்கும் (அவை ஒரு லிட்டர் பால் மட்டுமே கறக்கும் என்றால் கூட). ஆண்கள் கிராமத்தில் சுற்றித் திரிவார்கள், பெண்கள் தான் வயல்களை கவனித்துக் கொள்வார்கள்.” யாவத்மாலின் மிகவும் பிரபலமான விவசாயிகளில் ஒருவரான ஆஷ்னா தோத்தாவாரைப் பற்றி லீலாபாய் பேசுகிறார். யாவத்மாலில் பெரிய அளவில் பயிர் விளையவில்லை என்றாலும் அந்த ஆண்டுகளில் கூட பருத்தி மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றில் சாதனையான விளைச்சலை பெற்றவர் என்று அவர் புராணத்தை  பாடுகிறார். ஆஷ்னா ஒரு நல்ல மனிதர், அனுபவம் வாய்ந்த மனிதர், விதர்பா பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயத்தை உன்னிப்பாக கவனித்து வந்தவர். அவர் தான் லீலாபாயின் கணவர். மகாராஷ்டிராவின் யாவத்மால் மாவட்டத்தில் இருக்கும் பெரிய பருத்தி சந்தையான பந்தேர்கௌடா நகரத்தை ஒட்டியுள்ள பிம்பிரி கிராமத்தில் தான் இந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

லீலாபாய் தனது கணவரை மிகுந்த மரியாதையுடனும் பாசத்துடனும்  பார்க்கிறார். அவருக்கு முறையான கல்வி குறைவாகவே இருக்கிறது என்றாலும் அவரது சொந்த அனுபவத்தால் மிகவும் திறமையானவர் மற்றும் நன்கு பயிற்சி பெற்றவர். விவசாயத்தைப் பற்றி அவர் இப்படி சொல்வதை தான் நம்புகிறார். குறிப்பாக, யார் விவசாயம் செய்கிறார்கள் என்று வரும் போது "பாய் (பெண்கள்)", என்று அவர் கூறுகிறார். "அவர்கள் தான் அதை சிறப்பாகச் செய்கின்றனர்", என்று கூறுகிறார்.

இத்தனை தசாப்தங்களாக ஒரு வெற்றிகரமான விவசாயியாக இருப்பதிலிருந்து அவருக்கு இருக்கும் ஞானம், ஆச்சரியப்பட வைக்கிறது.   தவிர வேளாண்மை மற்றும் நிதி ஆகிய இரண்டிலும் முடிவெடுக்கும் இடத்தில் இவர் தான் இருக்கிறார்.

லீலாபாயை லலிதா ஆனந்த் ராவ் காந்தேவரின் வீட்டில் தான் நாங்கள் சந்தித்தோம். லலிதாவின் கணவர் நம்தியோ இந்த ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார், (இது மகாராஷ்டிராவின் பயமுறுத்தும் விவசாய தற்கொலை எண்ணிக்கையில் மற்றும் ஒரு இலக்கம். (கடந்த ஆண்டு தற்கொலைகள் 3786 என்ற எண்ணிக்கையில் இருந்து குறையவில்லை என்று தேசிய குற்றப்பதிவு ஆவணம் தெரிவித்துள்ளது) காந்தேவர் வீட்டில் தான் ஆஷ்னாவும் இருந்தார்.

நம்தியோவை தற்கொலைக்கு தூண்டியது எது என்பது குறித்து லலிதாவுடன் பேசிய பிறகு, புகழ்பெற்ற விவசாயியான ஆஷ்னாவுடன் உரையாடினோம். கிட்டத்தட்ட இருட்டாக இருந்த அந்த வீட்டின் அடுத்த அறையில் லீலாபாய் தரையில் அமர்ந்து இருந்தார், அதனால் நாங்கள் அவரை பார்க்கக்கூட முடியவில்லை. ஆனால் அவர் எங்களது அறியாமையை போக்குவதற்கு சுதந்திரமாக உள்ளே நுழைந்தார்.

வயலில்

“நாம் மிகவும் விவேகமான விவசாயத்திற்கு விரைவாக மாற வேண்டும். சாகுபடி செலவுகள் மற்றும் உற்பத்திக்கு சரியான விலை இல்லாதது - அது தான் எங்களை கொல்கிறது”.

பின்னர் லீலாபாயின் வீட்டில் அவர் தனது கதையை எங்களிடம் கூறினார்.

"நாங்கள் துவங்கிய போது, சில இடங்களில் 40 ஏக்கர் நிலத்தை 10,000 ரூபாய்க்கு எங்களால் வாங்க முடிந்தது. இன்று, நீங்கள் ஒரு ஏக்கரை எங்கும் 40,000 ரூபாய்க்கு வாங்க முடியாது", என்று அவர் கூறினார்.

“நாங்கள் இப்போது பயன்படுத்தும் வகையான உள்ளீடுகள் கடுமையான சிக்கலைத் தான் ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, களைக்கொல்லி களையை கட்டுப்படுத்துவது இல்லை அது பயிரையும் மண்ணையும் தான் சேதப்படுத்துகிறது. அதுவும் மற்ற ரசாயனங்களும் மண்ணின் வளத்தை சேதப்படுத்துகிறது. நாம் மண்ணை கொன்று கொண்டிருக்கிறோம்", என்று கூறினார்.

"பத்தாண்டுகளுக்கு முன்பு நாங்கள் மிகக் குறைந்த அளவிலேயே பூச்சிக்கொல்லியை பயன்படுத்தினோம். இப்போது, மகசூல் அதிகமாக இருக்கும் போது கூட லாபம் குறைவாகத் தான் இருக்கிறது", என்று கூறினார்.

"ஒன்று, நாம் செய்கின்ற பல விஷயங்களை மாற்ற வேண்டி இருக்கும் இல்லையேல் விவசாயத்தையே அழித்துவிடுவோம்", என்று கூறினார்.

PHOTO • P. Sainath

அவர்கள் 1965 இல் திருமணம் செய்து கொண்ட போது, அவர்கள் குழந்தைகளாகவே இருந்தனர். அவர் ஒரு வீடற்ற அனாதை ஆனால் லீலாவின் குடும்பத்திற்கு உறவுக்காரர் மேலும் லீலாவின் தாத்தா-பாட்டி அவர் தான் லீலாபாய்க்கு கணவராக வரவேண்டும் என்று தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். அவரை திருமணம் செய்வதற்கு முன்பு நான்காம் வகுப்பிலிருந்து இடைநின்று இருக்கிறார் லீலாபாய். இன்று லீலாபாய்க்கு வயது 63, அவருக்கு 67 வயது இருக்கும் என்று அவர் நினைக்கிறார், ஆனால் இருவருமே அதை விட வயதானவர்களாக இருக்கக் கூடும். யாருமே உறுதியாக சொல்ல முடியாது ஏனெனில் அந்தக் காலத்தில் யாரும் இதையெல்லாம் குறித்து வைத்துக் கொள்ளவில்லை. அப்போது ஒரு அங்குல நிலம் கூட அவர்களுக்கு சொந்தமாக இல்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு அதை மாற்றுவது என்று லீலாபாய் முடிவு எடுத்திருக்கிறார் வருமானம் மற்றும் ஒரு உயர்தர பண்ணை இரண்டையும் கட்டியெழுப்ப வயல்களில் அவர் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்.

குறைந்த அளவிலான அங்கீகாரம்

ஆண் தான் எப்போதுமே விவசாயாகவும், வீட்டுத் தலைவனாகவும் இருக்க வேண்டும் என்று கருதப்படும் ஒரு சமூகத்தில் இந்த பெருமை எல்லாம் ஆஷ்னாவுக்கே சென்றது (இன்றும் சென்று கொண்டிருக்கிறது). இந்தியாவின் பெரும் பகுதி முழுவதும் பெண் விவசாயிகளை பார்ப்பது போலவே லீலாபாயும் ஒரு "விவசாயியின் மனைவி" ஆகவே பார்க்கப்படுகிறார், ஒரு விவசாயியாக அல்ல. வேறு எல்லா இடங்களிலும் இருப்பதைப் போலவே இங்குள்ள பெண்களும் விவசாய பணிகளில் பெரும்பகுதியை செய்கிறார்கள் ஆனால் அவர்களுடைய பங்களிப்பிற்கான அங்கீகாரம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆஷ்னா இப்பகுதியில் விவசாயத்தின் வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறார். ஆனால் அந்த வெற்றியை உருவாக்கியவர் லீலாபாய். அதை அவரது கணவரும் அங்கீகரிக்கிறார். லீலாபாயைப் பொருத்தவரை அவரும் தெளிவாகத்தான் இருக்கிறார்.

"நான் தான் எப்போதுமே விவசாயியாக இருந்தேன். ஆஷ்னா நெடுங்காலம் ஒரு பெட்ரோல் பங்கில் உதவியாளராக பணியாற்றி மாதம் ஒன்றுக்கு 70 ரூபாய் சம்பாதித்து வந்தார்". (கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தான் அந்த வேலையை விட்டுவிட்டேன் என்று ஆஷ்னாவே ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதற்குள் அவரது மனைவி செழிப்பான இந்த பண்ணையை கட்டமைத்து இருந்தார்.)

"முதன் முதலில் நான் செய்த வேலையிலிருந்து சேமித்த பணத்திலிருந்து 1,000 ரூபாய்க்கு நான்கு ஏக்கர் நிலம் வாங்கினேன். அது 1969 ஆம் ஆண்டு".

ஏதோ ஒரு நிலம் அல்ல - சிறந்த கரிசல் நிலம். அவர் தான் அந்த நிலத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

"இப்போது அந்த நான்கு ஏக்கர் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் (நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே இந்த நிலம் இருப்பதால் இதன் விலை அதிகமாகிவிட்டது). 1971 இல் 20 ஏக்கர் நிலத்தை தேர்ந்தெடுத்து 9,000 ரூபாய்க்கு நான் வாங்கினேன்".

1973 ஆம் ஆண்டில் 15 ஏக்கர் நிலத்தை 25,000 ரூபாய்க்கு வாங்கினோம் மேலும் 1985 இல் 35,000 ரூபாய்க்கு நான்கு ஏக்கர் நிலம் வாங்கினோம். பின்னர் கடைசியாக 1991 இல் 70,000 ரூபாய்க்கு 10 ஏக்கர் நிலம் வாங்கினோம்.

"இதற்கிடையில் பல ஏக்கர் நிலத்தை நானும் விற்றுள்ளேன். எனவே இப்போது எங்களுக்கு 40 ஏக்கர் நிலம் தான் இருக்கிறது".

"எங்கள் வீட்டுக்கு தேவையான உணவு அனைத்தும் எங்களது வயலில் இருந்து வருகின்றது. ஒரு ஏக்கர் நிலத்தில் நெல், 2 ஏக்கர் நிலத்தில் கோதுமை, 10 ஏக்கர் நிலத்தில் சோளம் (சோளத்துக்கு 10 ஏக்கர் கொடுப்பது இங்கே மிகவும் அரிதான விஷயம்) ஆகியவற்றை விளைவிக்கிறேன். மீதமுள்ள நிலம் சரிபாதியாக பருத்திக்கும், சோயா பீனுக்கும் பிரிக்கப்பட்டுள்ளது". பண்ணையில் எங்கு எப்போது என்ன வளர வேண்டும் என்பதை லீலாபாய் தான் தீர்மானிக்கிறார். மேலும் அவர் தான் வயல்களில் அதிக நேரம், பெரும்பாலான நாட்களில், வேலை செய்கிறார். அதனால் தான் ஏக்கருக்கு 10 குவிண்டால் பருத்தி மற்றும் சோயா பீன் ஆகியவற்றை எங்களால் பெறமுடிகிறது.  இப்பகுதியில் இருக்கும் சராசரியைவிட இது மிக அதிகம்.

அவர் ஒரு அழகான வீட்டைக் கட்டியுள்ளார், அதைச் சுற்றி கவனமாக நிறைய சேமிப்பு இடங்களையும் கட்டியுள்ளார். இது அவர் பருத்தியை பாதுகாப்பாகவும் மற்றவர்களை விட அதிக நேரம் சேமித்து வைக்கவும் உதவுகிறது எனவே வர்த்தகர்களிடம் இருந்து சிறந்த விலையை பெறவும் முடிகிறது. 2012 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பருத்தியை ஒரு குவிண்டால், 3,800 ரூபாய்க்கு விற்றனர். ஆனால் லீலாபாயின் குடும்பத்தினர் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை அவர்களது பருத்தியை சேமித்து வைத்திருந்து இருக்கின்றனர். இறுதியாக ஒரு குவிண்டால் பருத்தியை 4,200 ரூபாய்க்கு விற்றனர்.

"எங்களிடம் 14 கால்நடைகளும் இருக்கின்றன. அதில் 6 காளைகள், 5 மாடுகள் மற்றும் 3 எருமை மாடுகள் அடங்கும்.

"அவர் தான் அவற்றை கவனித்துக் கொள்கிறார்", என்று அவர் கணவர் இருக்கும் திசையை நோக்கி சிரித்தபடியே அவர் கூறுகிறார்." அவருக்கு அந்த விலங்குகள் என்றால் மிகவும் உயிர் (அவை அதிக உற்பத்தி தராவிட்டாலும் கூட). நாங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியமே இல்லை ஏனெனில் நாங்கள் இதன் பாலை மட்டுமே பருகுகிறோம் மேலும் எங்களது நிலத்தில் நாங்களே பயிரிட்ட உணவையே உண்கிறோம்", என்று கூறினார் லீலாபாய்.

ஆனால் விவசாயத்தை பொருத்தமட்டில்: "ஏதாவது ஒன்று நடந்தே ஆக வேண்டும். இல்லையெனில் விவசாயத்தை தொடர முடியாது. சாகுபடி செலவுகளை யாராலும் தாங்க முடியாது. எங்களிடம் மலிவான உள்ளீடுகள் இருக்க வேண்டும். எங்களது பருத்தி மற்றும் சோயா பீனுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றால் நம்தியோ காந்தேவருக்கு பின்னால் நாங்கள் அனைவரும் வரிசையில் நிற்க வேண்டியதுதான்", என்று கூறி முடித்தார்.

இந்தக் கட்டுரை முதன்முதலில் தி ஹிந்துவில் வெளிவந்தது http://www.thehindu.com/opinion/columns/sainath/when-leelabai-runs-the-farm/article4921390.ece

தமிழில்: சோனியா போஸ்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose