தமிழ்ச் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அறிமுகமாவது போல இருந்தது அந்தக் காட்சி. அதற்கு ஐந்து நிமிடம் முன்பு, காட்சியில் இருந்த ஆறு ஆண்களும், பலாப்பழ வணிகத்தின் சிரமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பலாப்பழத்தின் அதிக எடை, அதைத் தூக்கி வண்டியிலேற்றி அனுப்புவதில் உள்ள சிரமங்கள், வணிகத்தில் உள்ள ஆபத்துகள் இவற்றையெல்லாம் சொல்லி, இந்த வணிகத்தில் பெண்கள் வரவே முடியாது என அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.. அப்போதுதான் லக்ஷ்மி கடைக்குள் நுழைந்தார். மஞ்சள் நிறத்தில் சேலை கட்டியிருந்தார். காதிலும் மூக்கிலும் தங்கம் டாலடித்தது. நரைத்த கூந்தலை வாரியள்ளி பண் கொண்டை போட்டிருந்தார்
`இந்த வியாபாரத்தில இந்தம்மாதான் முக்கியப் புள்ளி`, என்றார் ஒரு விவசாயி மிக்க மரியாதையுடன்.’
` எங்க பலாப்பழத்துக்கு இவங்கதான் வெலை வைப்பாங்க`.
65 வயதான லக்ஷ்மி, பண்ருட்டி பலாப்பழ வணிகத்தின் ஒரே பெண் வியாபாரி. இந்திய வேளாண் வணிகத்தின் மிக மூத்த பெண் வணிகர்களுள் ஒருவர்.
தமிழகத்தின் பண்ருட்டி நகரம், பலாப்பழ வணிகத்துக்குப் பெயர் பெற்றது. பலாப்பழ சீசனில், நூற்றுக்கணக்கான டன்கள் பலாப்பழம் இங்கே வாங்கி விற்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 22 கடைகள் கொண்ட பண்ருட்டி சந்தையில், ஆயிரக்கணக்கான கிலோ பலாப்பழங்களுக்கான விலையை முடிவு செய்பவர் லக்ஷ்மி. இந்தச் சேவைக்கு, ரூபாய் 1000த்துக்கு 50 என லக்ஷ்மிக்கு வாங்குபரிடம் இருந்து தரகு கிடைக்கிறது. பலாப்பழ உற்பத்தியாளர்கள் அவர்கள் விருப்பப்படி ஒரு சிறு தொகை தருகிறார்கள். பலாப்பழ சீசனில், தினசரி 1000-2000 வரை சம்பாதிக்கிறார் லக்ஷ்மி.
இந்தப் பணத்தை ஈட்ட அவர் 12 மணிநேரம் உழைக்கிறார். அவரது நாள் அதிகாலை 1 மணிக்குத் தொடங்குகிறது. `சரக்கு நெறய வந்துருச்சின்னா, வியாபாரிங்க வீட்டுக்கே வந்து கூட்டிட்டு வந்துருவாங்க`, என விளக்குகிறார். இல்லையெனில், அதிகாலை 3 மணி வாக்கில் ஒரு ஆட்டோ பிடித்து சந்தையை அடைவார் லக்ஷ்மி. மதியம் 1 மணி வரை வேலை இருக்கும்.. அதன் பின் வீட்டுக்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, ஓய்வெடுப்பார். மீண்டும் அடுத்த நாள் அதிகாலை அவரது பயணம் தொடங்கும்..
`எனக்கு பலாப்பழ உற்பத்தி பத்தி பெரிசா எதுவும் தெரியாது` என்கிறார் லக்ஷ்மி தன் கரகரத்த குரலில். பல மணி நேரங்கள் சந்தையில் விலை நிர்ணயம், வணிகம் என உரத்துப் பேசிப்பேசி அவர் குரல் கரகரத்துப் போயிருக்கிறது. இந்த வணிகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இருக்கிறார். அதற்கு முன்பு 20 வருடங்கள், பயணிகள் ரயிலில் பலாச்சுளைகள் விற்றுவந்தார்.















