தறி ஆட்டத்தின் சத்தத்துக்கு இடையில் பேச முயன்று தன் பொக்கை வாயில் புன்னகைக்கிறார் அழகிரிசாமி. “500 வருடங்களுக்கு முன் இந்து வந்து ஆற்றங்கரையில் தங்கி இத்தொழிலை நாங்கள் செய்யத் தொடங்கியதாக சொல்வார்கள்,” என்கிறார் அவர். “மீன் பிடிக்க இங்கு வந்தோமென நினைக்கிறேன்.”

85 வயது அழகிரிசாமி வேலை பார்க்கும் கொட்டாரத்துக்குள் 12 தறிகள் 3 வரிசைகளில் வைக்கப்பட்டிருந்தன. கொட்டாரத்துக்கு பக்கவாட்டில் மலப்புரம் மற்றும் கோவை பகுதிகளின் நூற்பாலைகளிலிருந்து வந்த பருத்தி நூல் கண்டுகளும் காயப்போட்டிருந்த நூல்களும் கஞ்சித்தண்ணீரில் ஊற வைத்திருந்த ஜரிகையும் இருந்தன.

கொட்டாரமும் அருகே இருந்த கைத்தறி கடையும் அழகிரிசாமிக்கு சொந்தமானவை. தேவாங்க செட்டியார் சமூகத்தை (தெய்வாங்க பிராமணன் என்ற பெயர் கொண்ட பிற்படுத்தப்பட்ட சமூகம்) சேர்ந்த நெசவாளர் அவர். 1962ம் ஆண்டில் பாகீரதி அம்மாவை திருமணம் செய்து கொண்ட பின் தமிழ்நாட்டிலிருந்து குத்தம்பள்ளி கிராமத்துக்கு வந்தவர். சில தகவல்கள் அச்சமூகத்தின் உறுப்பினர்கள் 500 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு குடி வந்தவர்கள் என்கின்றன. வடக்கே பாரதப்புழா ஆறும் மேற்கே காயத்ரிபுழா (பொன்னானி என்றும் அழைக்கப்படும்) ஆறும் கொண்ட நிலத்தில் அவர்கள் குடியேறினார்கள்.

85 year-old Alagir Sami works on a manual weaving machine
PHOTO • Remya Padmadas

அழகிரிசாமி:  ’500 வருடங்களுக்கு முன் இந்து வந்து ஆற்றங்கரையில் தங்கி இத்தொழிலை நாங்கள் செய்யத் தொடங்கியதாக சொல்வார்கள்’

அவர்களின் திறன் மற்றும் தொழிலால் கேரளாவின் பாரம்பரிய உடைகளான முண்டு (வேட்டி), செட்டு சேலை (தங்க ஜரிகை போட்டது) மற்றும் செட்டு முண்டு (இரு துண்டுகளாக வரும் சேலை) முதலியவற்றுக்கு புதிய உயிர்ப்பை கொடுத்தனர். நாளடைவில் திரிசூர் மாவட்டத்தில் அவர்கள் இருக்கும் குத்தாம்பள்ளி கிராமம் கைத்தறி சேலைகளுக்கும் வேட்டிகளுக்கும் பெயர் பெற்ற இடமாக கேரளாவில் மாறியது.

குத்தாம்பள்ளி சேலைகளும் வேட்டிகளும் செட்டு முண்டுகளும் புவியியல் குறியீடு சான்றிதழ்கள் பெற்றவை. புவியியல் குறியீடு என்பது ஒரு சமூகத்தின் பாரம்பரிய அறிவை காப்பாற்றவென அரசால் கொடுக்கப்படும் சான்றிதழ். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது தொழில் ஒரு குறிப்பிட்ட மூலத்தில் உருவானது என்பதையும் குறிப்பிட்ட தரத்தையும் பெயரையும் பெற்றிருக்கிறது என்பதையும் குறிக்க வழங்கப்படும் சான்றிதழ் ஆகும்.

2400 பேர் கொண்ட கிராமத்தில் 140 பேர் குத்தம்பள்ளி கைத்தறி கூட்டுறவு சங்கத்துடன் தொடர்பில் இருக்கின்றனர். அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு மூலப்பொருட்களை விநியோகித்து முழுமையடைந்த பொருட்களுக்கான ஊதியத்தை தருகிறது. கிராமத்தின் பிற நெசவாளர்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வேலைகளை எடுத்து கொடுக்கும் எஜமான நெசவாளர்களுக்கு வேலை பார்க்கின்றனர். வேலைகள் முடிந்ததும் கமிஷன் பெற்றுக் கொள்கின்றனர். சிலர் நேரடியாக வாடிக்கையாளர்களிடமிருந்து வேலை எடுத்து துணிகளை நெய்து கொடுக்கிறார்கள். பெரும்பாலான நெசவாளர்கள் 1 அல்லது 2 தறிகளை வீடுகளில் வைத்திருக்கின்றனர். 2 அல்லது 3 குடும்பங்கள்தான் பல தறிகளை கொண்ட கொட்டாரங்களை கொண்டிருக்கின்றன.

எல்லா இடங்களிலும் வருமானம் ஓரளவுக்கே கிடைக்கிறது. “இங்கு வேலை பார்க்கும் ஆட்களில் பெரும்பாலானோர் 70 வயதுக்கும் அதிகமானவர்கள்,” என்கிறார் அழகிரிசாமியின் 24 வயது பேரனான சுர்ஜீத் சரவணன். “எந்த வேலைப்பாடும் இல்லாத ஒரு சாதாரண முண்டை (நான்கு மீட்டர் நீளம் கொண்டது) தயாரிக்க ஒரு முழு நாள் எடுத்துக் கொள்கிறார்கள். உங்களின் வேகத்தை பொறுத்தும் ஒரு நாளில் எத்தனை முடிக்கிறீர்கள் என்பதை பொறுத்தும்தான் உங்களின் வருமானம் இருக்கும்.”

Tools used for weaving
PHOTO • Remya Padmadas
Mani K. who has been in this profession for over 30 years, works on the handloom
PHOTO • Remya Padmadas

சேலைக்கான நூல் சுற்றப்பட்ட உருளை (இடது), மணி கே.வின் வீட்டிலுள்ள கைத்தறியில் (வலது) நெய்யப்பட காத்திருக்கிறது

ஒவ்வொரு முண்டுக்கும் ஒரு குத்தாம்பள்ளி நெசவாளர் 200லிருந்து 400 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். வேலைப்பாடு இல்லாத சேலையில் 500 ரூபாய் கிடைக்கும். வேலைப்பாடுகள் இருந்தால் 750லிருந்து 2000 ரூபாய் வரை கிடைக்கும்.  நுணுக்கமான நிறப்படிமங்களை கொண்ட சேலை 4000 ரூபாய் வரை கொடுக்கும். ஆனால் ஒரு முதியவருக்கு அத்தகைய வேலை ஒரு நாளில் 9-10 மணி நேரங்கள் எடுத்தால் கூட முடிப்பதற்கு பல நாட்களாகும். “போன வாரத்தில் ஓர் இளைய நெசவாளர் எங்களுக்கு உதவ வந்தார். வேலைப்பாடு கொண்ட சேலையை அவர் இரண்டு நாட்களில் முடித்து 4000 ரூபாய் பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார்,” என்கிறார் சுர்ஜீத். “அதே சேலையை என் தாத்தா முடிக்க எட்டு நாட்களானது.”

30 வருடங்களாக தொழிலில் இருக்கும் மணி கே, நெசவு பாரம்பரியமாக குடும்பத் தொழில் என்கிறார். நெசவு வேலை தொடங்குவதற்கு முன் பல வேலைகள் செய்ய வேண்டியிருக்கும். “நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது தாத்தா பாட்டி தொடங்கி குழந்தைகள் வரை மொத்த குடும்பமும் நெசவு வேலையில் ஈடுபடும்.”

நூற்பாலைகளிலிருந்து பருத்தி நூற்கண்டுகள் வந்துவிடும். குடும்பத்தில் இருக்கும் முதியவர்கள் பிரித்து நூலை நேராக்கி தறியில் இடும் வகையில் உருளையில் சுற்றுவார்கள். இந்த நூல்கள் 44 மீட்டர் நீளம் கொண்டவை என்பதால், நேராக்கி சுற்றும் வேலை சாலைகளில் வைத்து செய்யப்படும். குறைந்தபட்சம் 7 ஜோடி கைகள் தேவைப்படும். குடும்பத்திலிருக்கும் பெண்களும் குழந்தைகளும் நூலை சுற்ற உதவுவார்கள். கண்டுகளை சிறிய உருளைகளில் சுற்றுவார்கள். இந்த வேலைகளே ஒரு நாளாக்கிவிடும்.

இவையாவும் இப்போது மாறி விட்டன. சிறிய குடும்பங்கள் வந்துவிட்டன. குழந்தைகள் இத்தொழிலை விரும்புவதில்லை. திறன் கொண்டவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் முதிய நெசவாளர்கள் தமிழ்நாட்டில் தொழிலாளர்களை பிடித்து தறி ஓடுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை செய்ய வைக்கின்றனர். “தறி வேலைக்கு ஆட்களை அழைப்போம். காலையில் வந்து மாலை 5 மணிக்கு கிளம்பிவிடுவார்கள்,” என்கிறார் மணி. “4000 ரூபாய் மதிப்புமிக்க சேலையில் நெசவாளருக்கு 3000 ரூபாய் மட்டுமே கிடைக்கும். மிச்சம் தொழிலாளர் கூலிக்கு போய்விடும். இறுதியில் எங்கள் கையில் என்ன மிஞ்சும்?” எனவே 1990களில் நான்கு தறிகளை கொண்டிருந்த  அவருடைய குடும்பம் தற்போது இரண்டாக தறிகளை குறைத்துவிட்டது.

Stacks of punched cards to be used in the jacquard machine, kept in a corner. Shot inside Mani's house.
PHOTO • Remya Padmadas
The charkha in Mani's home used to spin the kasavu (zari) into smaller rolls
PHOTO • Remya Padmadas
The charkha in Mani's house used to spin the kasavu into smaller rolls
PHOTO • Remya Padmadas

மணி கே.வின் வீட்டில்: சித்திர நெசவு இயந்திரத்துக்கான துளை அட்டைகள் (இடது) தங்க ஜரிகையை சிறிய உருளைகளுக்கு சுற்ற நூற்பாலை சக்கரம் (நடுவே மற்றும் வலது)

குத்தாம்பள்ளியின் இளையோர்கள் பலரும் பட்டதாரிகளாக இருப்பதால் நெசவில் ஆர்வமில்லை என்கிறார் மணி. அவரின் மகன் இயந்திர பொறியாளராக இருக்கிறார். திரிசூரிலிருக்கும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகிறார். “ஒரு மாதத்துக்கு வெறும் 6000 ரூபாய் ( நெசவிலிருந்து) மட்டும் சம்பாதித்தால், அதை வைத்து என்ன செய்வது?” எனக் கேட்கிறார். “அதனால்தான் இளைஞர்கள் இத்தொழிலில் இல்லை. வெளியூர் வேலைகளுக்கு சென்றுவிட்டனர்.”

சுர்ஜித்தும் ஒரு பொறியாளர்தான். நெசவுத்தொழிலை அவர் கற்றுக் கொள்ளவில்லை. குடும்பத்தின் துணிக்கடையை நிர்வகிக்கிறார். அவரின் தந்தை குத்தம்பள்ளி கைத்தறி தொழில் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். தாய் குத்தாம்பள்ளியிலிருந்து நெசவு வேலை செய்கிறார். “இந்த தொழிலில் வேலை பார்க்க இளைஞர்களுக்கு விருப்பமே இல்லை. பிற துறைகளின் நீங்கள் சுதந்திரமாக வேலை பார்த்து சம்பாதிக்க முடியும். ஒரு வாடிக்கையாளர் ஒரு நிறத்துக்கு கேட்டால், நீங்கள் நூலுக்கு நிறம் சேர்க்க வேண்டும். அதற்கு உதவி தேவைப்படும். நெசவு வேலைக்கு நடுவே நூல் உருளை தீர்ந்து போனால், ஒவ்வொரு நூலையும் புதிய் உருளையுடன் சேர்த்திருக்க வேண்டும். இதை செய்யவே ஒரு நாள் பிடிக்கும். நீங்கள் தனியாகவும் செய்துவிட முடியாது. துளை அட்டை உங்களின் வேலைப்பாடுக்கு ஏற்ப ஒருவரால் வடிவமைக்கப்பட வேண்டும். சித்திர நெசவு இயந்திரம் பழுதானால், ஒரு வல்லுநர் வந்து சரி செய்ய வேண்டும். இத்தகைய வேலைகளை நீங்கள் தனியாக செய்ய முடியாது. எல்லாமும் கூட்டுவேலைதான். அதிகமாக இன்னொருவரை சார்ந்திருப்பது மிகவும் கடினமான விஷயம்,” என்கிறார அவர்.

கணவருடன் சேர்ந்து இரு தறிகள் ஓட்டும் ஜெயமணியும் ஒப்புக் கொள்கிறார். “நெசவு வேலையின் பலர் ஈடுபட வேண்டியிருக்கும்,” என்கிறார் அவர். “எங்களின் அண்டை வீட்டுக்காரர்கள் பாவு நூலை பிரித்து சுற்ற உதவுவார்கள். நாங்களும் அவர்களுக்கு உதவுவோம். அத்தகைய கூட்டுழைப்பு இல்லாமல் எங்களால் வேலை செய்ய முடியாது.” ஜெயாவும் அவரின் கணவரும் கைத்தறி சங்கத்துடன் இணைந்தவர்கள். மாதத்துக்கு 18000லிருந்து 25000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.

இன்னும் நெசவு வேலையில் ஈடுபடும் சில பெண்களுள் ஜெயாவும் ஒருவர். “பல பெண்கள் இப்போதெல்லாம் துணிக்கடைகளில் வேலை பார்க்கின்றனர். ஏனெனில் அது சுலபமானது. தனியாகவே செய்ய முடியும்.” என்கிறார் அவர். “என்னுடைய குழந்தைகளுக்கு இத்தொழிலில் ஆர்வமில்லை. என்னுடைய மகளுக்கு நெய்ய தெரியும். ஆனால் அவள் நெய்யத் தொடங்கினால் பிற வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. என்னுடைய மகனுக்கு முற்றிலும் ஆர்வமில்லை. ஒரு கடையில் வேலை பார்க்கிறான். அவனை யார் குற்றம் சொல்ல முடியும்? இது லாபம் தரும் தொழில் இல்லை.”

Jaya Mani works on a loom in her home. In the dying light of the setting sun, the threads on her loom glow faintly.
PHOTO • Remya Padmadas
The roller of a handloom in Kuthampully, over which 4,000 to 4,500 threads of yarn are strung.
PHOTO • Remya Padmadas

இடது: இன்னும் நெசவு வேலையில் ஈடுபடும் சில பெண்களுள் ஜெயாவும் ஒருவர். வலது: 4000லிருந்து 4500 நூல்கள் சுற்றி வைக்கப்படும் கைத்தறி உருளை

குத்தாம்பள்ளியில் கைத்தறி நசிந்ததற்கு மற்றுமோர் முக்கிய காரணம், நுட்பமான வடிவமைப்பு கொண்ட சேலைகளை வேகமாகவும் மலிவாகவும் நெய்யக் கூடிய நவீன மின்சாரத் தறிகள் பரவலானதுதான். கைத்தறி சங்கத்தில் இருக்கும் ஊழியர்கள், பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் சேலைகளில் 80 சதவிகிதம் தமிழ்நாட்டின் மின்சாரத் தறிகளில் செய்யப்பட்டதாக சொல்கின்றனர்.

“மின்சாரத் தறியில் ஒரே நாளில் 5 அல்லது 6 சேலைகள் நெய்துவிட முடியும். இரவு முழுக்க ஓட்டினால் பத்து கூட நெய்ய முடியும். நான்கு மின்சாரத் தறிகளை ஒருவர் மேற்பார்வையிட முடியும். மொத்த முறையுமே கணிணிமயமாக்கப்பட்டுவிட்டது,” என்கிறார் சுர்ஜீத். “கைத்தறிகளில் ஒரே ஒருவர்தான் ஒரு நேரத்தில் ஒரு சேலையை நெய்ய முடியும். விலையிலும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு கைத்தறி செய்யப்பட்டு 2000 ரூபாய்க்கு விற்கப்படும் சேலை மின்சாரத் தறியில் செய்தால் வெறும் 400 ரூபாய்க்கு விலை வைக்க முடிகிறது.

ஏன் மக்கள் கைத்தறி சேலைகளையும் முண்டுகளையும் வாங்குகிறார்கள்? ‘தரம்’ என பதில் சொல்கிறார். “கைத்தறி சேலை மிகவும் மென்மையாக இருக்கும். உடுத்தும்போது எடையின்றி இருக்கும். இயந்திரங்கள் வேறு வகையான நூல்களை பயன்படுத்துகின்றன. பாரிய வித்தியாசம் தரத்தில் ஏற்படுகிறது. மேலும் கைத்தறி சேலைகள் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.”

The entrance to a shed in Kuthampully, where weaving takes place.
PHOTO • Remya Padmadas
Settu sarees in a handloom shop in Kuthampully
PHOTO • Remya Padmadas

வலது: நெசவு கொட்டகையின் நுழைவாயில். இடது: குத்தம்பள்ளி கைத்தறிக் கடையில் விற்பனைக்கு தயாராக இருக்கும் செட்டு சேலைகள்

கைத்தறி சேலைகளுக்கான தேவை நிலவுவதால் இங்கிருக்கும் நெசவாளர்களுக்கு வாழ்க்கை இருக்கிறதெனினும் ஆகஸ்ட் 2018ல் நேர்ந்த கேரள வெள்ளம் இத்துறையை கடுமையாக பாதித்தது. குத்தம்பள்ளி கைத்தறி தொழில் கூட்டுறவு சங்க நிர்வாக ஊழியரான ஐஸ்வர்யா சொல்கையில், வெள்ளத்துக்கு பிறகு கடனாக வணிகர்களுக்கு விற்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கான மூலப்பொருட்கள் வாடிக்கையாளர்கள் கிடைக்காத்தால் திருப்பியளிக்கப்பட்டதாக சொல்கிறார். விற்கப்படாத பொருட்கள் அதிகம் இருந்தததால் 140 நெசவாளர்களுக்கு கொடுக்கவென சங்கம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆகஸ்டு மாதம் ஓணம் பண்டிகைக்கான மாதமும் கூட. பாரம்பரிய உடைகளுக்கான விற்பனை அதிகமாக இருக்கும் மாதம். பிறகு சேலைகளை சங்கம் தள்ளுபடி விலையில் விற்றது. இன்னும் நிறைய விற்காமல் கிடப்பதாக ஐஸ்வர்யா சொல்கிறார்.

குத்தம்பள்ளியில் வெள்ளபாதிப்பு குறைவுதான். “வெள்ளம் எங்களை அதிகம் பாதிக்கவில்லை,” என்கிறார் அழகிரிசாமி. “டவுனின் இரு பக்கங்களிலும் இரு ஆறுகள் இருக்கின்றன. ஒரு பக்கத்தில் மட்டும் ஓரளவு பாதிப்பு இருந்தது. அதுவும் தீவிரமாக இருக்கவில்லை.”

கேரளாவின் பிற பகுதிகளில் நேர்ந்த வெள்ள பாதிப்புக்கு பிறகு மாநிலத்தின் பெயர் பெற்ற மென்வெள்ளை மற்றும் தங்க நிற சேலைகளை பல்லாண்டுகளாக நெய்து விற்ற கைத்தறி சங்கம் பல வண்ணங்களில் சேலைகளை நெய்ய முடிவெடுத்தது. காரணம், பல வண்ண சேலைகளுக்கு வருடம் முழுவதும் விற்பனை இருக்கும் என்பதே. கிராமத்திலிருக்கும் பல நெசவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். “இங்கிருக்கும் பல நெசவாளர்கள் வயதானவர்கள். பார்வை மங்கியவர்கள். வண்ண சேலைகளுக்கு அதிக உழைப்பும் நேரமும் கவனமும் தேவைப்படும்,” என்கிறார் ஐஸ்வர்யா. “இந்த துறை நீடிக்க வேண்டுமெனில் இந்த மாற்றத்தை செய்தாக வேண்டும். காலம்தான் இந்த மாற்றத்தின் விளைவை சொல்ல வேண்டும்.”

தமிழில்: ராஜசங்கீதன்
Remya Padmadas

Remya Padmadas is an independent journalist based in Benglauru and Kerala. She has previously worked with Reuters as a business correspondent. Her dream is to travel the world and become a teller of stories.

Other stories by Remya Padmadas
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan