“கீறுவது, பின்பு அதை மூடுவது மற்றும் லேப்ராஸ்கோப்பி கருவி கொண்டு கருமுட்டை குழாய்களை அடைப்பது என கருத்தடை நடைமுறையின் மூன்று கட்டங்களிலும் முறையான வெளிச்சம் மிகவும் அவசியமானது” என்கிறார் கோஸ்வாமி. நண்பகலின் பளீர் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மாலை நேரத்து சூரியன் வெளிவருகிறது. அறையில் வெளிச்சம் போதுமானதாக இல்லை என தெரிந்தும் அங்கிருக்கின்ற அவசரகால விளக்குகளை யாரும் போடவில்லை.
ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே ஒருவருக்கு கருத்தடை செய்துவிட்டு, அடுத்த மேஜைக்கு நகர்ந்தார் மருத்துவர். உதவியாளரும் ஆஷா பணியாளரும் மேஜையிலிருந்து பெண்களை கீழிறங்க உதவுவதற்கும் அடுத்த நபரை தயார்படுத்துவதற்காகவும் “முடிந்துவிட்டது” என சைகை செய்கிறார் மருத்துவர்.
இதற்கு அடுத்த அறையில், கீழே போர்வைகள் விரிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மஞ்சள் நிற சுவரில் ஈரமும் பாசியும் படிந்திருக்கின்றன. அருகிலிருக்கும் கழிவறையிலிருந்து மோசமான நாற்றம் பரவுகிறது. சிகிச்சை முடிந்ததும், இந்த அறையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார் நேகா. பின்னர் அவரையும் மற்றவர்களையும் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருகிறது. அரைமணி நேரம் கழித்து ஆம்புலன்ஸில் ஏறும்போது கூட நேகா தடுமாறுகிறார். ஒருவேளை விரைவாக சிகிச்சை முடிந்த காரணமாக இருக்கலாம் அல்லது அவருக்கு முழுதாக மயக்க மருந்து கொடுக்கப்படாமல் இருந்திருக்கலாம்.
தனது அத்தையின் பக்கவாட்டில் சாய்ந்தபடியே நேகா வீட்டை அடைந்ததும், அவர்களுக்காக காத்திருக்கிறார் ஆகாஷ். “தனது தாய், மனைவி, குழந்தை, நாய் என எல்லாரும் தன்னை எதிர்பார்த்து வீட்டில் காத்துக் கொண்டிருப்பார்கள் என ஒரு ஆண் எதிர்பார்ப்பான். ஆனால் இங்கு அப்படியே எதிராக உள்ளது” என குறிப்பிடுகிறார் நேகாவின் அத்தை. நேரே வீட்டினுள் உள்ள சிறிய சமயலைறைக்குள் செல்லும் அவர், நேகாவிற்காக தேநீர் தயார் செய்கிறார்.
தனது வயிற்றில் உள்ள கீறலை மறைக்க போடப்பட்ட பேண்டேஜை பிடித்துக் கொண்டே, “ஊசி போட்ட பிறகும் வலிக்கிறது” என்கிறார் நேகா.
இரண்டு நாள் கழித்து, மறுபடியும் சமயலறையின் கீழ் அமர்ந்து சமைத்துக் கொண்டிருக்கிறார் நேகா. இன்னும் அவரது வயிற்றில் பேண்டேஜ் இருந்தது. சிரமப்படுவது அவரது முகத்தில் தெளிவாக தெரிகிறது. காயம் இன்னும் முழுதாக குணமாகவில்லை. “இத்தோடு பிரச்சனை முடிந்தது” என்கிறார் நேகா.
முகப்பு ஓவியம்: ப்ரியங்கா போரர், தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.
பாப்புலேஷன் ஃபுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் ஆதரவுடன் பாரி மற்றும் கவுண்டர் மீடியா டிரஸ்ட்டின் இந்த தேசிய அளவிலான செய்தி சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பதின் வயது மற்றும் இளம் பெண்களின் வாழ்வியலை அவர்களது குரல்கள் மற்றும் அனுபவங்களின் வாயிலாக பதிவு செய்வதே இதன் நோக்கம்.
இந்த கட்டுரையை மறுபதிப்பு செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் [email protected] , [email protected] என்ற இணைய முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள்.
தமிழில்: வி. கோபி மாவடிராஜா