"ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு மெய்ப்படும் கனவு - உண்மையான நீல வண்ணமான ராஜ வாழ்க்கையின் மணிமுடி." என்று அந்த விளம்பரம் கூறுகிறது. ஆம், அந்த நீல ரத்தம் எதையும் மிகப் பெரியதாகச் செய்கிறது. ஒவ்வொரு குடியிருப்பிலும் தனிப்பட்ட நீச்சல் குளம் இருக்கின்றது. ஏனென்றால் இதெல்லாம் மிக ஆடம்பரமான, மிகப்பெரிய டிசைனர் குடியிருப்புகள்". இந்த வகை குடியிருப்புகள் "ஆடம்பரமான வாழ்க்கை முறையுடன் ஒத்துப்போகும்". கட்டுமானக்காரர்கள் தங்களின் முதல் "கேடட் கம்யூனிட்டி திட்டம்" என்று பெருமையுடன் அறிவிக்கும் பங்களாக்களும் உள்ளன. ஒவ்வொன்றும் 9000 முதல் 22000 சதுரடி வரை தனி நீச்சல் குளத்துடன் இருக்கிறது. இனிவரும் மற்ற கட்டிடங்களிலும் இரட்டைப் பென்ட்ஹவுஸ்கள் இருக்கும், நீங்கள் சரியாகத்தான் யூகித்து இருக்கிறீர்கள்: தனியார் நீச்சல் குளங்கள்.

இது புனேவில் மட்டுமே. இவை அனைத்திற்கும் இன்னும் அதிகமான தண்ணீர் தேவைப்படும். ஒரு சிறிய ஆனால் பெருமைப்படக்கூடிய போக்கு – விரைவிலேயே இன்னும் அதிகமாக வரும். மாநிலத்தின் இப்பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய வறட்சியை பற்றி புலம்பிக் கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிராவின் முதல்வர் பிரித்விராஜ் சவானின் பார்வையில் மாநிலம் சந்தித்த மிக மோசமான வறட்சிகளில் இதுவும் ஒன்றாகும். இப்போது ஆயிரக்கணக்கான கிராமங்கள் தண்ணீர் வண்டியின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் தண்ணீர் வண்டி தினமும் வரும். அப்படி இல்லை என்றால் ஒரு வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரு முறை தான் வரும்.

ஆனாலும் நீச்சல் குளங்களுக்கும் வறண்டு வரும் ஏரிகளுக்கும் எதுவும் தொடர்பு இல்லை என்பது போலவே இருக்கின்றனர். இதைப் பற்றிய விவாதங்கள் மிகக் குறைவே என்பது நிச்சயமாக தெரிகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக மாநில அரசு டஜன் கணக்கான நீர் விளையாட்டுகள் மற்றும் நீர் கேளிக்கை மையங்களை கண்டு மகிழ்ச்சியடைந்தது. ஒரு காலகட்டத்தில் கிரேட்டர் மும்பையில் மட்டுமே அவற்றின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது.

மகாராஷ்டிராவில் வறட்சி பாதித்த பகுதிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது, அதிகாரப்பூர்வமாக 7000 திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வறட்சி அல்லது நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பிற கிராமங்களும் மோசமான நிலையில்தான் இருக்கிறது, ஆனால் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்களை வகை படுத்தவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களில் சிலருக்கு கொஞ்சமாவது உதவி கிடைக்கும். அரசாங்கமே அவர்களுக்கு தண்ணீர் லாரிகளை அனுப்பிவைக்கும். மற்ற ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாக தனியார் தண்ணீர் வண்டிகாரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். 5 லட்சத்திற்கும் அதிகமான விலங்குகள் கால்நடை முகாம்களை நம்பியே இருக்கின்றன. இக்கட்டான சூழ்நிலையில் கால்நடைகளை விற்பதும் மிக ஜோராக நடந்து வருகிறது. பல்வேறு நீர் தேக்கங்களில் நீர் 15 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. சிலவற்றில் அது தரை தொடும் அளவிற்கு உள்ளது. ஆனால் இது 1972 இல் வந்த வறட்சியை போலல்லாமல் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு வறட்சி.

PHOTO • P. Sainath

உருவாக்கப்பட்ட வறட்சி: கிராமப்புற மஹாராஷ்டிராவில் நீங்கள் தண்ணீரை எங்கு பார்த்தாலும் எப்போது பார்த்தாலும் பிடித்துக் கொள்ள வேண்டும்.

தொழில்துறை நிறுவனங்களுக்காக கடந்த 15 ஆண்டுகளில் பெரிய அளவில் தண்ணீர் திசை திருப்பப்பட்டு உள்ளது. மற்றும் வாழ்க்கை முறை வணிகத்திற்காக தனியார் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்படி திசை திருப்பப்படும் போது ரத்தமும் சிந்தப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் மாவலில் நடைபெற்றதைப் போல, அங்கு காவல்துறையினர் கோபமாய் இருந்த விவசாயிகளை சுட்டதில் 3 பேர் இறந்துவிட்டனர் மற்றும் 19 பேர் காயமடைந்தனர். பாவனா அணையிலிருந்து பிம்ப்ரி-சிஞ்ச்வாத் வரை தண்ணீர் குழாய் அமைப்பதற்காக அரசாங்கம் அவர்கள் நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நீர் அதிகமாக வீணானதால் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இணைந்தனர். அந்த நேரத்தில் அரசின் நடவடிக்கை என்னவாக இருந்ததென்றால், சுமார் 1,200 பேர் மீது "கொலை முயற்சி" என்று வழக்கு பதிவு செய்தது மற்றும்  கலவரம் செய்ததற்காகவும் வழக்குப்பதிவு செய்தது.

துணை முதலமைச்சர் அஜித் பவார் நீர்ப்பாசனத்தில் தொழில்துறையின் கட்டுப்பாட்டை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்தார். ஏற்கனவே பிற்போக்காக இருந்த மகாராஷ்டிரா நீர் ஒழுங்குமுறை ஆணைய சட்டம் (2005) யை திருத்துவதற்கும் அவர் முயன்றார். அவரது நிரலில் ஒரு புதிய விதி கூட நீர் விநியோக கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு சவாலையும் தடுத்திருக்கும்.

வாழ்க்கை முறையிலும், பொழுதுபோக்கும் முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் புதியவை அல்ல. 2005 ஆம் ஆண்டு கேளிக்கை மற்றும் உணவு கிராம தண்ணீர் கேளிக்கை பூங்கா ஒன்று நாக்பூர் (ஊரக) மாவட்டத்தில் தோன்றியது. அது நிச்சயமாக ஒரு நீர் பற்றாக்குறையான காலகட்டம். கேளிக்கை கிராமத்தில் பதினெட்டு விதமான நீர்ச்சறுக்கு விளையாட்டுகள் இருந்தது. இங்கு தான் இந்தியாவின் முதல் செயற்கை பனிப் பொழிவு மற்றும் பனி வளையம் கொண்டு வரப்பட்டது. 47 டிகிரி வெப்பத்தில் பனி மற்றும் குளிரை தக்கவைப்பது எளிதல்ல. அது மிகப்பெரிய அளவில் மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. இப்பகுதி 15 மணி நேர மின்வெட்டை காணும் பகுதி. இங்கு மிகப் பெரிய அளவில் தண்ணீரும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளில் சில கோல்ஃப் விளையாட்டு மைதானங்களை இம்மாநிலம் உருவாக்கியிருந்தது. இப்போது 22 கோல்ஃப் மைதானங்கள் இருக்கின்றன, மேலும் பல வரவிருக்கின்றன. கோல்ஃப் மைதானம் அதிக அளவில் நீரை எடுத்துக் கொள்ளும். இது கடந்த காலத்தில் விவசாயிகளுடன் பெரும்பாலும் மோதலை தூண்டியிருக்கிறது. உலகெங்கிலுமுள்ள கோல்ப் மைதானங்கள் ஏராளமான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துகின்றன மற்றவர்களின் நீரையும் அது பாதிக்கும்.

இது தவிர, சுதந்திர இந்தியாவின் முதல் மலை நகரம் என்ற லவாசா போன்ற நீரை உறிஞ்சும் தனியார் திட்டங்களால் மக்கள் கொந்தளித்துப் போராட்டம் நடத்தியுள்ளனர். வறட்சி காலத்தில் ஒரு குடும்ப திருமணத்திற்காக நீரை வீணாக செலவழித்தற்காக தனது சொந்த கட்சியின் மந்திரியான பாஸ்கர் ஜாதவை தட்டிக் கொடுத்துப் பாராட்டினார் சரத் பவார். ஆனால் மத்திய விவசாயத்துறை அமைச்சர் எப்போதும் லவாசா வைப்பற்றி ஆர்வத்துடனே இருந்து வருகிறார். இத்திட்டத்தின் வலைதளம் சிறிது காலத்திற்கு முன்புவரை 0.87 டிஎம்சி நீரை சேமிக்க அனுமதி இருப்பதாகக் கூறியது. அதாவது 24.6 பில்லியன் லிட்டர் தண்ணீர்.

குறைந்த நீர்ப்பாசன திட்டத்தை உருவாக்க எந்த மாநிலமும் அதிக பணம் செலவிடவில்லை. இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2011 - 12 கடந்த ஒரு தசாப்தத்தில் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள நிலம் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது என்று கண்டறிந்துள்ளது. அப்படி என்றால் 18 சதவீதத்திற்கும் குறைவான விவசாய நிலங்கள் மட்டுமே நீர்ப்பாசன வசதியுடன் இருக்கின்றது. அதுவும் பல பில்லியன் ரூபாய் செலவழித்து, பல பணக்காரர்களை உருவாக்கி, ஆனால் மிகக்குறைந்த நீர்ப்பாசன வசதியை உருவாக்கியிருக்கிறது. விவசாயம் வீழ்ச்சியடைந்து வரும் வேளையில் தான் விவசாயத்திற்கான தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு திசைதிருப்பப்பட்டு இருக்கிறது. (பொருளாதார ஆய்வறிக்கையின் படி 2011 - 12 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தியில் 23 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.)

உணவுப் பயிர் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தாலும், மகாராஷ்டிராவின் மூன்றில் இரண்டு பங்கு கரும்பு வறட்சி பாதிப்பு அல்லது நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தான் வளர்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியின் போது தனது மாவட்டத்தில் உள்ள கரும்பு நசுக்குவதை நிறுத்தி வைக்கும்படி குறைந்தபட்சம் ஒரு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்திருந்தார். அங்கு உள்ள சர்க்கரை ஆலைகள் ஒரு நாளுக்கு 90 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை பயன்படுத்துகின்றன. சர்க்கரை ஆலை உரிமையாளர்களின் சக்தியைக் கருத்தில் கொண்டால் கரும்பு நசுக்குவது நிறுத்தபபடுகிறதோ இல்லையோ மாவட்ட ஆட்சியர் இடை நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

ஒரு ஏக்கர் கரும்புக்கு தேவையான நீர், சோளம் போன்ற உணவுப் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்தால் 10 முதல் 12 ஏக்கர் பரப்பளவு வரை பயன்படுத்த முடியும். மகாராஷ்டிராவின் பாசன நீரில் பாதிக்கும் மேற்பட்டவை கரும்புக்கு தான் செல்கின்றன இது சாகுபடி செய்யப்படும் பகுதியில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. "180 ஏக்கர் அங்குல நீர்" கரும்புக்கு தேவைப்படுகிறது. அதாவது ஒரு ஏக்கருக்கு 18 மில்லியன் லிட்டர். 18 மில்லியன் லிட்டர் என்பது ஒரு மாதத்திற்கு 3000 கிராமப்புற வீடுகளின் நீர் தேவையை பூர்த்தி செய்ய உதவும் (ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 40 லிட்டர் அளவு என்று எடுத்துக்கொண்டால்). இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

இது மகராஷ்டிர அரசு   ரோஜா சாகுபடியை ஊக்குவிப்பதை தடுக்கவில்லை, சிறிய அளவிலான மாற்றம் தான் என்றாலும் எதிர்காலத்தில் இன்னும் அதிக அளவில் ரோஜா தோட்டங்கள் அமையவிருக்கும் என்று தெரிகிறது. ரோஜாக்களுக்கு இன்னும் அதிகமான தண்ணீர் தேவை. அவற்றுக்கு "212 ஏக்கர் அங்குல" தண்ணீர் தேவை. அதாவது 21.2 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும். சிறிய அளவில் நடைபெறும் ரோஜா சாகுபடி தான் என்றாலும் மாநிலத்தில் சில கொண்டாட்டங்களுக்கும் இது காரணமாக அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஏற்றுமதி 15 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ரூபாயின் வீழ்ச்சி, நீட்டிக்கப்பட்ட குளிர்காலம் மற்றும் காதலர் தினம் ஆகியவை ரோஜா விவசாயிகளுக்கு இந்த மகிழ்ச்சியான சூழலை பரிசளித்து உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் அரசு வகுத்துள்ள ஒரே ஒழுங்கு முறை கட்டமைப்பு தண்ணீரை அதிக அளவில் தனியார்மயமாக்கல் செய்வதற்கு வழிவகுத்தள்ளது. இந்த இயற்கை வளத்தின் மீதான சமூக கட்டுப்பாட்டை விரைவாக இழக்க நேரிட்டது. மேலும் அது வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் நிலத்தடி நீரை தடையின்றி எடுத்துக் கொண்டே இருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கி உள்ளது.

இப்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு வர மகாராஷ்டிரா கடுமையாக உழைத்து தான் இருக்கிறது. வறண்ட விரக்தியின் பெருங்கடலுக்கு மத்தியில் தனியார் நீச்சல் குளங்கள். பணக்காரர்களுக்கு பற்றாக்குறை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. மீதமுள்ள பலருக்கு அவர்களின் நம்பிக்கை தான் நாளுக்கு நாள் ஆவியாகிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டுரை முதலில் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அன்று தி ஹிந்து வில் வெளியிடப்பட்டது.

மேலும் வாசிக்க: பணம் தண்ணீர் போல ஓடியபோது

இந்தக் கட்டுரை, 2014 ஆம் ஆண்டில் P.  சாய்நாத் அவர்கள் உலக ஊடக உச்சி மாநாட்டிற்கான உலகளவிய விருதைப் பெறுவதற்கு காரணமான இருந்த தொடரின் ஒரு பகுதியாகும்.

தமிழில்: சோனியா போஸ்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose