அவர் ராம்குண்டாவின் விளிம்பில் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கிறார். புனித நதிகளில் நீராடும் பொழுது பிரார்த்திப்பவரை அவர் நினைவுபடுத்துகிறார். அவர் கோதாவரியின் புனிதம் மிகுந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார். பின்னர்த் தவழ்ந்தபடி அவர் கீழிறங்கி சென்று டேங்கரின் புனித நீரில் நீராடுகிறார்.

மாட்சிமைமிக்கக் கோதாவரி நதியின் மூலத்திலேயே மகாராஷ்டிராவின் தண்ணீர் பஞ்சம் உங்களை வரவேற்கிறது.

139 வருடங்களில் முதன்முறையாகக் கடந்த ஏப்ரல் மாதத்தில் வரலாற்று சிறப்புமிக்க ராம்குண்டா வறண்டு போனது. அதற்குப் பிறகு இரண்டு மாதங்கள் 60-90 டேங்கர்கள் அத்தனை நிரப்பின. சுருக்கமாக மகாராஷ்டிராவின் கோதாவரி நதியை டேங்கர் தண்ணீர் வாழவைக்கிறது. நினைவுக்கு எட்டிய காலம்வரை வற்றாத கோதாவரியின் நீர்ப்படுகைகள் கூட வற்றிக்கிடக்கின்றன. நாசிக்கின் திரிம்பக் நகரில் (இங்கே இருக்கும் ஆலயத்தின் பெயரால் திரிம்பகேஸ்வர் எனவும் பெயர் பெற்றுள்ளது) இருக்கும் பிரம்மகிரி மலையில் தான் கோதாவரியின் மூலம் உள்ளது. அங்கே தண்ணீர் கீற்று போல மே மாதத்தில் தோன்றியது. தற்போது பெய்ய ஆரம்பித்து இருக்கும் பருவ மழை கொஞ்சம் நிம்மதியை கொண்டுவரும் என மக்கள் நம்புகிறார்கள்.


02-Untitled-1-PS-the sacred waters of the tanker.jpg

நதியில் நீர் பொழியும்  டேங்கர். வலது: ஒரு  யாத்திரிகர் டேங்கர்  தண்ணீரில் குளிக்கிறார். நதிநீரில் இல்லை!


“கோதாவரி நதியின் மூலமானஇந்த நகருக்கு மழையில்லாத காலத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் கிடைக்கும்." என்று சிரிக்கிறார் கம்லாகர் அகோல்கர். இவர் திரிம்பக்கில் பத்திரிக்கை புகைப்படக்கலைஞர். வருமானம் தரும் சுற்றுலாத்தலமான இங்கே அவர் புரோகிதராகவும் பணியாற்றுகிறார். "இருபது வருடங்களாகக் காடழிப்புத் தொடர்கிறது. பசுமை போர்த்திய ஊர் பாலைவனமாக மாறிவிட்டது. எண்ணற்ற சாலைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வளர்ச்சி, கட்டிடங்கள். இப்பொழுதே இங்கே பத்தாயிரம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அதுபோக யாத்திரிகர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், சுற்றுலா பொருளாதரத்தில் பங்கெடுப்பவர்கள் ஆகியோரை சேர்த்தால் 50000 பேர் இந்த ஊரில் இருந்தபடி உள்ளார்கள். இவை தண்ணீர்ப் பஞ்சத்தை அதிகப்படுதிவிட்டன. இருபது வருடங்களுக்கு முன்னால் நான்கு மாதங்களுக்கு மழை பொழியும், தற்போது ஒன்றரை மாதம் தான் மழையே பெய்கிறது." என்கிறார் அகோல்கர்.

சில கிலோ மீட்டர்கள் தள்ளிப்பயணிக்கையில் பாஜகவின் முன்னாள் நகரசபை உறுப்பினரும், தற்போது கோதாவரி பஞ்சகோடி புரோகிதர் சங்கத்தலைவருமான சதீஷ் சுக்லாவை சந்தித்தோம். இந்தச் சங்கம் கோதாவரி நதியோடு பிணைப்புக் கொண்ட அர்ச்சகர்களை உள்ளடக்கிய 70 வருட பாரம்பரியமுள்ள சங்கம். "நகராட்சி அனைத்தையும் நாசம் செய்துவிட்டது. கற்களால் அமைந்திருந்த தடுப்பை உடைத்து விட்டுக் கான்கிரீட் தடுப்பை கட்டினார்கள். அதைச் செய்யாமல் இருந்திருக்கலாம். பல வருடங்களாக ஏற்படாத சேதம் இரண்டே வருடங்களில் ஏற்பட்டு விட்டது. " என்று கவலைப்படுகிறார் சுக்லா. "சகலமும் கான்கிரீட் மயமாகி நதியை கொல்கிறார்கள். பழைய நீர்த்தேக்கங்கள் மடிந்து விட்டன. வற்றாத சுனைகள் வறண்டு விட்டன. புரோகிதர்களான எங்களை எதிலும் கலந்தாலோசிக்கவில்லை. நதியின் இயற்கையான ஓட்டம் காணாமல் போய் விட்டது. மழைவேண்டி நாங்கள் செய்யும் பூஜைகளுக்கு வருணதேவன் செவிமடுப்பார். இப்போது அதுவும் நடப்பதில்லை." என ஆதங்கப்படுகிறார் சுக்லா.


03-Untitled-2-PS-the sacred waters of the tanker.jpg

ராம்குண்டாவின்  கரையில்  கூடும்  யாத்திரிகர்கள். . வலது : சதீஷ் சுக்லா, கோதாவரி அர்ச்சகர்கள் சங்கத்தலைவர்


வருணதேவன் புரோகிதர்களின் வேண்டுதலுக்குச் செவிசாய்க்க மறந்திருக்கலாம். அரசு நாசிக் கும்பமேளாவிற்குத் தாரளமாகத் தண்ணீர் ஓடுவதை உறுதி செய்தது. நீர்ப்பாசன துறை அதிகாரிகள் 1.3 மில்லியன் டி.எம்.சி தண்ணீர் கோதாவரியின் மைய அணையான கங்காபூரில் இருந்தும், சிறு அணைகளான கவுதமி, காஷ்யபி ஆகியவையும் நீரை தாரை வார்த்தன என்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நிகழ்ந்த சனி நீராடலுக்குச் செலவானது இந்த நீரில் ஒரு பகுதிதான். ஜனவரியில் கும்பமேளா முடிவின் பொழுது நடந்த புனித நீராடல் சமயத்தில் மக்கள் உண்டு செய்த அசுத்தத்தைச் சீர்செய்ய மேலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மொத்தமாக 1.3 டி.எம்.சி. தண்ணீர் ஓரிரு மாத கும்பமேளா நிகழ்வுக்காகத் திறந்து விடப்பட்டது. இது நாசிக்கின் 2015-16 வருட தண்ணீர் ஒதுக்கீடான 3.7 டி.எம்.சியில் கிட்டத்தட்ட பாதியாகும். இதுசார்ந்த புகார்கள் நீதிமன்ற வாசலை அடைந்தன. இவையெல்லாம் கும்பமேளாவிற்குக் கூடிய பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றின என்றாலும் நதியின் கீழ்ப்படுகையில் இருக்கும் மக்களின் பிரார்த்தனைகள் யார் காதிலும் விழவில்லை. அன்றாடத் தேவைகளுக்குக் கங்காபூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை சார்ந்தே இவர்கள் உள்ளார்கள்.


04-EV SAI_1061-PS-the sacred waters of the tanker.jpg

பிரஷாந்த் நிம்சே கும்பமேளாவிற்கு திருப்பப்பட்ட தண்ணீர் தன்னுடைய பயிர்களை எப்படி நாசம் செய்தது என விளக்குகிறார்.


“மூன்று போகத்துக்கான தண்ணீர் தேவைப்பட்ட பொழுது ஒரு போகத்துக்குத் தான் திறந்துவிட்டார்கள். ஒன்றரை போகத்துக்கான தண்ணீர் என்று அளவை வைத்துச் சொல்லலாம், ஆனால், முதல் முறை திடுக்கென்று தண்ணீரை அறிவிப்பின்றித் திறந்துவிட்டு விட்டார்கள்." என்கிறார் பிரஷாந்த் நிம்சே. இவர் கங்காபூர் அணையின் இடது கால்வாயை நம்பியுள்ள நந்தூர்கான் எனும் கிராமத்தில் வசிக்கிற விவசாயி. நிம்சே திராட்சை, அத்திப்பழம், தோட்டப்பயிர்கள் ஆகியவற்றை வளர்த்தாலும் தான் நடத்தும் கல்யாண மண்டபத்தில் இருந்து கிடைக்கும் வருமானமே தன்னைக் காப்பாற்றுகிறது என்கிறார். அவரின் கிராமம் நாசிக்கின் எல்லைகளின் விரிப்பில் விழுங்கப்படுவதால் அவரின் மண்டபத்துக்கு வாடிக்கையாளர்கள் பெருகியுள்ளார்கள். "நான் தப்பித்துக்கொண்டேன், ஆனால், முழுக்க விவசாயத்தை நம்பியுள்ளவர்கள் நிலைமை பரிதாபமானதாக உள்ளது." என்கிறார் நிம்சே.

“போதுமான தண்ணீர் இல்லாமல் திராட்சை சாகுபடி முடங்கிப் போய்விட்டது. திராட்சையை அப்படியே சாகுபடி செய்தாலும், அது போதுமான தரத்தோடு இருப்பதில்லை. ஒவ்வொரு ஏக்கருக்கும் நூறு மனித வேலை நாட்கள் கவனிப்புத் தேவைப்படுகிறது. 40,000 ஏக்கர் திராட்சை பயிர் வாழ்வா, சாவா நிலையில் வதங்கிக் கொண்டிருப்பதால் கிட்டத்தட்ட முப்பது லட்சம் மனித வேலை நாட்களை இழந்திருக்கிறோம். இங்கே வேலை செய்ய மாரத்வாடாவின் லத்தூர், பீட், அவுரங்காபாத், உஸ்மானாபாத் ஆகியவற்றில் இருந்து பலர் பணியாற்ற வருவார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் எங்களின் துயரம் மாரத்வாடா பகுதிக்கும் ஏற்றுமதி ஆகியுள்ளது." என்கிறார் இதே ஊரை சேர்ந்த இன்னுமொரு விவசாயியான வாசுதேவ் கதே.

மழை மாநிலமெங்கும் பரவலாகப் பொழிய ஆரம்பித்து விட்டது என்றாலும் நல்ல பருவகால மழை தங்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்காது என உணர்ந்துள்ளார்கள். "இப்போதைக்கு அது நிம்மதி தரலாம். ஆனால், நீடித்து நிற்கும் பேரிடர் வளர்ந்துகொண்டே உள்ளது. அது எங்களை விட்டுவிடாது." என்று எச்சரிக்கிறார் புகைப்படக்காரர்-புரோகிதரான அகோல்கர்.

பி.பி.மிசல் எனும் நாசிக் மாவட்ட கண்காணிப்பு பொறியியாளர் வேறொரு பார்வையை முன்வைக்கிறார். "எப்பொழுதும் ஜீவநதிகள் மகாராஷ்டிராவின் வழியாக ஓடியதில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் நிலத்தடி நீர் இழப்பு மிக வேகமாக நிகழ்ந்துள்ளது. விவசாயத்துக்குத் தண்ணீரை மிகுதியாக இறைக்கிறார்கள். நாசிக்கின் மக்கள் தொகை இருபது லட்சமாகப் பெருகி உள்ளது. மூன்று லட்சம் மக்கள் வந்துகொண்டும், சென்றுகொண்டும் உள்ளார்கள். நிலப்பயன்பாட்டு முறைகள் பெருமளவில் மாறிவிட்டன. நகரைச் சுற்றியிருந்த விவசாய நிலங்கள் கட்டிடங்களாக மாறிவிட்டன."என்கிறார் மிசல்.  "மழை காலந்தப்பிப் பெய்வது அதிகரித்துள்ளது என்றாலும் மழை அளவு கணிசமாகக் குறைந்திருப்பதை உறுதிப்படுத்த தரவுகள் இல்லை என்கிறார். மகாராஷ்டிராவில் ஜீவநதிகள் ஓடின. அவை பருவகால நதிகளாக மாற்றப்பட்டு விட்டன என்பது பேராசிரியர் மாதவ் காட்கில் போன்றவர்களின் கருத்து.

கிருஷ்ணா நதியின் மூலமான மேற்கு மகாராஷ்ட்ராவில் உள்ள சத்தாரா மாவட்ட பழைய மகாபலேஸ்வரில் நாங்கள் கண்டவற்றையே இவை நினைவுபடுத்துகின்றன. மனிதர்களின் எதிர்காலம் பற்றிய கவலையற்ற செயல்பாடுகளே மகாராஷ்டிராவின் மாபெரும் தண்ணீர் பஞ்ச பேரிடருக்கும், திரிம்பகேஸ்வரின் தண்ணீர் தாகத்துக்கும் மையக்காரணம். (நானும் என் சகாக்களும் கிருஷ்ணா நதியின் கீழ்ப்படுகை நோக்கி மே மாதம் பயணித்தோம் காண்க: Source of the rivers, scams of the rulers .)

“நாசிக் பெரிய தொழிற்பகுதியாக மாறிவிட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.. நீர்ப்பகிர்வு முறைமைகள் முழுக்க இந்தப் பகுதியில் மாறிவிட்டன. முறைப்படுத்தப்படாத, பகாசுர தண்ணீர் சந்தை இங்கே ஒவ்வொரு பகுதியிலும், தெருவிலும் உள்ளது. நல்ல மழை இவற்றை மாற்றிவிடாது. சுற்றுலாத்தலமாக உள்ளதால் ஒவ்வொரு அடியும் கான்கிரீட் காடாக மாறிவிட்டது. தண்ணீர் பாயவோ, மூச்சுவிடவோ கூட இடமில்லை." என்கிறார் அகோல்கர்.


05-EV SAI_1043-PS-the sacred waters of the tanker.jpg

திரிகம்பேஸ்வரர்  ஆலயத்தில் உள்ள கங்காசாகர்  குளம் கோதாவரி நதியின் முதல் நீர்பிடிப்பு பகுதியாக இருந்தாலும் தண்ணீரின் அளவு சராசரிக்கும் கீழே உள்ளது.


பிரம்மகிரியில் இருந்து கங்காசாகர் குளம் நோக்கி வரும் பல்வேறு சிற்றோடைகள் பொட்டலாக உள்ளன. மலைகளின் பசுமை காணாமல் போய் வெம்பிப்போய்க் காட்சி தருகின்றன. மழை இப்பொழுது பெய்திருப்பதால் மீண்டும் இந்த ஓடைகளில் தண்ணீர் பாயலாம்.

கண்மூடித்தனமான காடழிப்பு, பரவலான அணை உருவாக்கம், தொழிற்சாலைகள், மக்களின் ஆடம்பர வாழ்க்கைமுறைகளான சொகுசு ரிசார்ட்களுக்காகத் திருப்பிவிடப்படும் தண்ணீர் ஆகிய அனைத்தையும் இந்த மாநிலம் முழுக்கக் காணலாம். நதிகளின் மூலத்தையே சுரண்டி எடுக்கிறார்கள், கணக்கு வழக்கில்லாமல், முறைப்படுத்த ஆளில்லாமல் நிலத்தடி தண்ணீரை உறிஞ்சி எடுப்பது, செல்வச்சீமான்களுக்கும், கடைக்கோடி ஏழைகளுக்கும் இடையே உள்ள பாரபட்சமான தண்ணீர்ப் பகிர்வு ஆகியவையும் கண்முன்னே நிகழ்கின்றன. மழை பெய்ய ஆரம்பித்ததும் ஊடகத்தின் கவனம் தண்ணீர் பஞ்சத்தை விட்டு அகன்று இருக்கலாம். ஆனால், மேற்சொன்ன எந்தப் பேரச்சம் தரும் பிரச்சனைகளும் மழையால அடித்துச் செல்லப்படப் போவதில்லை.


(தமிழில்: பூ.கொ.சரவணன்)


P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

Other stories by P. K. Saravanan