“எங்கள் வேலை ஏற்கனவே நெருக்கடியில் உள்ளது,” என்கிறார் மேற்கு டெல்லி உத்தம் நகரைச் சேர்ந்த குயவர் ஜக்மோகன். ஓராண்டிற்கு முன் மரம் மற்றும் மரத்தூளில் இயங்கும் மட்பாண்ட உலைகளை அகற்ற மாநில அரசு உத்தரவிட்டதைக் குறிப்பிட்டு அவர் இப்படிச் சொல்கிறார். “இதனால் பல குயவர்களும் மட்பாண்டங்கள் செய்வதை குறைத்துக் கொண்டுள்ளனர், சிலர் வியாபாரிகளாக மாறிவிட்டனர், சிலர் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். இப்போது விற்பனையின் உச்ச காலத்தில் [மார்ச் முதல் ஜூலை வரை] இந்த தொற்று, பொதுமுடக்கம் காரணமாக தொழில் இன்னும் மோசமடைந்துள்ளது.”
48 வயதாகும் ஜக்மோகன் (மேலே உள்ள முகப்புப் படத்தில் இருப்பவர்; தனது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) முப்பதாண்டுகளுக்கும் மேலாக மட்பாண்டத் தொழில் செய்துவருகிறார். “மட்பாண்டங்களுக்கு இந்தாண்டு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டதை நாங்கள் உணர்ந்தோம், இது நல்ல விஷயம். [கோவிட்-19 குறித்த அச்சத்தால்] குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் குடிநீரை மக்கள் தவிர்த்து வருகின்றனர். பொதுமுடக்கத்தின்போது எங்களுக்கு களிமண் தட்டுப்பாடு ஏற்பட்டது, எங்களால் போதிய சரக்கு இருப்பு வைத்துகொள்ள முடியவில்லை.” பொதுவாக 2-3 நாட்களில் சுமார் 150-200 மட்பாண்டங்களை குடும்ப உறுப்பினர்கள் உதவியோடு ஒரு குயவர் செய்து விடுகிறார்.
காலனியின் தெருக்கள் எங்கும் உலர்ந்த களிமண் குவிக்கப்பட்டுள்ளது - பரபரப்பான காலங்களில் குயவர்கள் சக்கரம் சுற்றுவது, பானைகளை தட்டுவது என சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பலரது வீட்டின் முகப்பிலும் நூற்றுக்கணக்கான கைவினைப் பானைகள், விளக்குகள், சிலைகள் போன்றவை காய வைக்கப்பட்டுள்ளன. காய்ந்த பிறகு அவற்றுக்கு கெரு எனப்படும் சிவப்பு நிற திரவ களிமண் பூசப்பட்டு, அந்த டெரகோட்டாக்களுக்கு இயற்கை வண்ணம் கொடுக்கப்படுகிறது. வேக வைப்பதற்கு முன், வீட்டின் மேல்தளத்தில் பாரம்பரிய மண் உலையில் உள்ள பட்டியில் வைக்கப்படுகிறது. வெளிப்புறத்தில் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட பல மட்பாண்டங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அருகமைப் பகுதியான பிரஜாபதி காலனி என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் கும்ஹார் கிராமில் 400-500 குடும்பங்கள் வசிப்பதாக காலனியின் தலைவர் ஹர்கிஷன் பிரஜாபதி மதிப்பிடுகிறார் “உத்தரபிரதேசம், பீகாரிலிருந்து தான் பல குயவர்களும், உதவியாளர்களும் வந்தனர். அவர்களில் பலரும் வேலை இல்லாத காரணத்தால் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிவிட்டனர்,” என்கிறார் 1990ஆம் ஆண்டு தேசிய விருதும், 2012ஆம் ஆண்டு அரசின் ஷில்ப் குரு விருதும் வென்ற 63 வயதாகும் பிரஜாபதி.










