மார்ச் 12ம் தேதி  சட்டப் பேரவைக் கட்டிடமான விதான் சபாவை முற்றுகையிட தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்தில் குவிந்த 40000 விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். மார்ச் 6ம் தேதி நாசிக்கில் தொடங்கப்பட்டு ஒரு வாரகாலமாக  அந்த பெருமக்கள் மேற்கொண்டிருந்த நடை பயணம், சட்டமன்ற கட்டட முற்றுகையோடு முடிவு பெற வேண்டியிருந்தது. ஆனால் நடை பயணத்திற்கு எழுந்த ஆதரவையும், அதன் உணர்வாழத்தையும் அறிந்திருந்த மஹாராஷ்ட்ர அரசு மார்ச் 12ம் தேதி பிற்பகலில் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது.

கொளுத்திய வெயிலின் தாக்கத்தால் விவசாயிகள் முழு ஆற்றலையும் இழந்திருந்தார்கள். கேமராக்களால் எரிச்சலைந்தார்கள் சிலர். (பார்க்க: மும்பையை நோக்கிய பெரு நடை பயணம் மற்றும் உடைந்த பாதங்கள் உடையாத உணர்வுகள் ). அடுத்து என்ன நடக்கும் என்கிற கவலையிலும் இருந்தார்கள்.

நடை பயணத்தின் ஒருங்கிணைப்பாளர்களான அகில பாரதீய கிசான் சபா தலைவர்களும் மாநில அரசுப் பிரநிதிகளும் நடத்திய நான்கு மணி நேர பேச்சுவார்த்தையின் போது “என்ன நடக்கிறதென்று பார்ப்போம்” என்பதை பலரும் என்னிடம் சொன்னார்கள். மந்த்ராலயத்தில் இந்த கூட்டம் நடந்துகொண்டிருந்த 12.30 முதல் 4.30 வரையிலான நேரத்தில் விவசாயிகள் மிகப் பொறுமையோடு காத்திருந்தார்கள்.

கிசான் சபாவின் பொதுச் செயலாளர் அஜித் நவலே, கிசான் சபா தலைவர் அசோக் தாவ்லே, நாசிக் மாவட்டத்தின் சுர்குணா தாலுக்காவின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.பி. கவித் உட்பட 11 பேர், அரசுப் பிரதிநிதிகள் ஆறு பேரைத் தங்களது கோரிக்கைகளோடு சென்று சந்தித்தார்கள்.

PHOTO • Shrirang Swarge

தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் கேட்கப்பட வேண்டும், அவை மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக நாசிக்கிலிருந்து மும்பை வரை 180 கி.மீ நடந்தார்கள் மகராஷ்டிராவின் விவசாயிகள்

முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ், வருவாய், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, பொதுப்பணித்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், விவசாயம், தோட்டக்கலைத்துறை அமைச்சர் பாண்டுரங் ஃபண்ட்கர், நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மஹாஜன், பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் விஷ்ணு சவரா, கூட்டுறவு, சந்தை மற்றும் ஆடையகத் துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் ஆகியோர் மாநில அரசின் குழுவில் இருந்தனர். வன உரிமை பிரச்னைக்காக அமைக்கப்பட்டிருந்த குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் இடம் பெற்றிருந்தார்.

விவசாயத் தலைவர்கள் ஏழு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள். இரண்டு கோரிக்கைகளுக்கு உடனடியான, சரியான தீர்வுகளை முன்வைத்தது மாநில அரசு. சாத்தியமுள்ள கடன் தள்ளுபடியும், விவசாயிகளை அப்புறப்படுத்தாத ஆறுகள் இணைப்பு மற்றும் அணை கட்டுமான திட்டங்களைக் குறித்த உறுதியையும் அளித்தது மாநில அரசு.

கடன் தள்ளுபடிக்கான தகுதி நிபந்தனைகளில் இரண்டு மாற்றங்களைச்  செய்வதற்கு ஒப்புக்கொண்டது அரசு. ”2008ல் அறிவித்த கடன் தள்ளுபடியில் பல விவசாயிகள் பலன் அடையாத காரணத்தால், 2001 முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தை நிரப்பும் கடன் தள்ளுபடித் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முக்கிய முடிவை எடுத்திருக்கிறோம்” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார் தேவேந்திர ஃபட்நாவிஸ். 2009க்கு முந்தைய விண்ணப்பங்களை இதுவரை நிராகரித்திருக்கிறது அரசு. தள்ளுபடித் திட்டத்தில், சில அதிக வட்டிக் கடன்களின் திட்டமும் அடக்கம். வங்கிகளிலிருந்து வரும் அழுத்தம் காரணமாக, பயிர் கடனிலிருந்து அதிக வட்டிக் கடன்களாக மாற்றப்பட்டதன் பிரச்சனைகளைச் சந்தித்த விவசாயிகளுக்கு பலனளிப்பதாகவும், ஆறுதல் தருவதாகவும் இருந்தது.

கடன் தள்ளுபடிக்கான தனித்தனியான விண்ணப்பங்களை அனுமதிப்பதற்காக, ஒரு குடும்பத்தில் வெவ்வேறு கடனாளிகளை அனுமதிப்பது மற்றொரு மாற்றமாக இருந்தது. இதுவரை குடும்பத்திற்கொரு விண்ணப்பம் என்ற விதிமுறையோடு இருந்த வழிமுறை தளர்த்தப்பட்டது. மாநில அரசுக்கு இது எத்தகைய செலவீனமாக இருக்கும் என கண்டறிந்த பின்பு இந்த மாற்றத்தைக் குறித்து பரிசீலிப்பதாக அரசு தெரிவித்திருந்தது.

தெற்கு மும்பையின் ஆசாத் மைதான் சிவப்புக் கடலாக காட்சியளித்தது. விவசாயத் தலைவர்களின் உரைகளை கேட்க காத்திருந்தார்கள் விவசாயப் பெருமக்கள்

மேலும், மஹாராஷ்ட்ராவின் ஆற்றுநீர் குஜராத்துக்கு திருப்பிவிடப்படமாட்டாது என்றும், விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்பதாகவும் அரசு தெரிவித்தது. மேலும், ஆறுகள் இணைப்போ அல்லது அணைத் திட்டங்களோ விவசாயிகளை அப்புறப்படுத்தாது என்னும் உறுதியையும் அளித்தது. சுர்கணா தாலுக்காவின் எம்.எல்.ஏ ஜே.பி கவித் மற்றும் இந்த நிருபருடன் பேசிய கிசான் சபா தலைவர் அசோக் தாவ்லே அரசு எதிர்காலத்தில் பல நதிகளிலிருந்து நீர் எடுக்கும் திட்டம் வைத்திருந்ததாக சொன்னார்கள் (குஜராத்திலுள்ள நர்-பர் நதிகள், நாசிக வழியாக பாயும் குஜராத்தின் தமங்கங்கா நதியின் கிளையான வாக், நாசிக் மற்றும் பால்கர் வழியாக பாயும் வைதர்னாவின் பிஞ்சல் கிளை உள்ளிட்ட நதிகளிலிருந்து எடுக்கும் திட்டம்). அந்த நதிகளிலிருந்து தண்ணீர் எடுப்பது, நதிகளில் அணை கட்டிய பிறகே சாத்தியம். ஆனால் அணை கட்டினால் அந்த மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் மூழ்கும் அபாயமும் இருக்கிறது.

விவசாயிகளின் இடமாற்றம் என்பது மிகக் குறைவானதாகவோ, அல்லது இல்லாததாகவோ மட்டுமே இருக்கும் என்று முதலமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக அசோக் தாவ்லே தெரிவித்தார். இதற்கு நடுவே, மத்திய அரசிடமிருந்து இறுதி திட்டத்திற்காக மஹாராஷ்ட்ரா காத்துக்கொண்டிருக்கிறது.

மார்ச் 12ம் தேதி, விவசாயத் தலைவர்களும், மாநில அரசுப் பிரதிநிதிகளும் அடங்கிய ஆறு பேர் குழு, விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளைக் குறித்தும் பரிசீலிக்கும் என்று எழுத்துப்பூர்வமான அறிக்கை கொடுத்தார். ஆதிவாசி விவசாயிகளுக்கு நில உரிமைச் சட்டப்படி நில உரிமம் அளிப்பது, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை பின்பற்றுவது, மும்பை நாக்பூர் சம்ருதி சாலைக்கான விவசாயிகளின் ஒப்புதல் பெறுதல், ஓய்வூதியத்தை மேம்படுத்துவது மற்றும் பலன்களை கவனிப்பது, ரேஷன் அட்டைகளில் பழையவற்றை புதிதாக்கி, சரிசெய்வது, 2017-இன் செம்புழு அரிப்பு மற்றும் புழுதிப் புயல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிப்பது போன்ற கோரிக்கைகள்தான் அவை.

"விவசாயிகளும், பழங்குடிகளும் எழுப்பிய பல்வேறு கோரிக்கைகளுக்கு நாங்கள் ஏற்றுக்கொண்டோம். வன நிலங்களை அவர்களது பெயருக்கு மாற்றுவதுதான் அவர்களது முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. சிறப்பு குழு ஒன்றை அமைத்திருக்கிறோம். ஆறு மாதங்களுக்குள் அதற்கான வேலையை முடித்துவிடுவோம்" எனத் தெரிவித்திருக்கிறார் முதல்வர்.

PHOTO • Binaifer Bharucha

கடும் வெய்யிலில் ஒரு வாரம் நடை பயணம் மேற்கொண்ட பிறகு சோர்வடைந்திருந்த விவசாயிகள் அரசுடனான பேச்சுவார்த்தை நல்ல பலனை தரும் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்

இதில் கலந்துகொண்ட பல்வேறு விவசாயிகள், ஆதிவாசிகள் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மார்ச் 6-க்குப் பிறகு, அஹ்மெத்நகர், தானே மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் இணைந்துகொண்டார்கள். அவர்களுடைய முக்கிய கோரிக்கையானது: 2006 வன உரிமைச் சட்டப்படி அவர்கள் உழுதுகொண்டிருக்கும் நிலங்கள் அவர்களின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே. அந்த நிலங்கள் இப்போதும் மாநில அரசின் வரையறைக்குள் இருக்கிறது.

மற்றொரு கோரிக்கை, சுவாமிநாதன் கமிஷன் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதாகும். குறைந்தபட்ச ஆதரவுத்தொகை என்பது, தயாரிப்பு விலை 50 சதவிகிதமாகவாவது இருக்க வேண்டும். இது மாநில அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமில்லை. மத்திய அரசும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் கவித் தெரிவித்தார்.

சம்ருதி சாலைத் திட்டம் மக்களின் ஆதரவின்றி செயல்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார் அவர். மஹாராஷ்ட்ராவின் 10 மாவட்டங்களின் வழியாக, 30 தாலுகா வழியாக, 354 கிராமங்கள் வழியாகச் செல்கிறது அத்திட்டத்திற்கான வழி. விவசாயிகள் நிலங்களைத் தரவேண்டும் என வற்புறுத்தலுக்கு ஆளாக மாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

4 மணிநேர சந்திப்புக்குப் பிறகு, வருவாய்த்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், தானே பொதுப்பணித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, நாசிக்கின் நீர்பாசனத் துறை அமைச்சர் கிரிஷ் மஹாஜன், ஆசாத் மைதானத்தில் விவசாயிகளைச் சந்தித்தனர்.

பேரணி, போராட்டமும் முடிந்துவிட்டது என விவசாயத் தலைவர்கள் அறிவித்த உடன் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு அமைதியாக வீடு நோக்கிச் சென்றார்கள் விவசாயிகள்.

மேலும் பார்க்க: நான் ஒரு விவசாயி, நான் இந்த நெடுந்தூரத்தை நடந்து கடந்திருக்கிறேன் மற்றும் கைவிடப்பட்ட நிலங்களிலிருந்து நம்பிக்கையோடு ஒரு நடை பயணம்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.