நம் உலகம் மிகக் கொந்தளிப்பான கடுமையான காலத்தை சந்தித்துக் கொண்டிருப்பதால் இப்பாடலை நான் எழுதினேன். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் வீடுகளுக்குள் அமர்ந்துகொண்டு தாழ்ப்பாள்களை போட்டுக் கொண்ட நேரத்தில், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் மக்கள் தங்களின் தொலைதூர வீடுகளுக்கு நடந்து செல்லத் தொடங்குவார்கள் என்பதை நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. இது என்னை துயரத்திலும் வேதனையிலும் ஆழ்த்தியது. மிகவும் வளர்ந்த நம் நாட்டில், மிகச் சிறந்த நாட்டில், பல துறைகளில் முன்னோடிகளாக நம்மை அறிவித்துக் கொள்ளும் நாட்டில், கோடிக்கணக்கான மக்கள் தங்க இடமின்றி, வீடுகளிலும் குடும்பங்களுடனும் இருப்பதற்காக நெடுந்தூரம் நடக்கிறார்கள். இது என்னை துயரமுறச் செய்தது.

’வீட்டிலிருக்க வேண்டியதுதானே?’ எத்தனை பேருக்கு வீடு இருக்க்கிறது? பல கிலோமீட்டர்கள் நடந்ததில் சிலர் வழியிலேயே இறந்தும் போனார்கள். அந்த கால்களும் அந்த குழந்தைகளும், அப்படங்களை நான் பார்த்தபோது இந்த வேதனையை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. இது நம் நாட்டில் மட்டும் நடப்பதாக நான் நினைக்கவில்லை. மொத்த உலகமுமே இத்துன்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. பலர் கொரோனா வைரஸ்ஸை பற்றி மட்டுமே யோசித்து  பிற மனிதர்களை பொருட்படுத்தாமலிருக்கும் சூழலில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துக்கத்தை பற்றி நான் பேச விரும்பினேன். அந்த சோகமே இப்பாடலை நான் உருவாக்க காரணம்.

உலகத்தையும் அதன் பயணங்களையும் பார்க்க விரும்பும் பயணி நான். மனிதர்களிடம் இருக்கும் நேயத்தை போற்றுகிறவன். அவர்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்த முயலுபவன். இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டே இப்பாடல் பிறந்தது.

காணொளி: ஊரடங்கில் புலம்பெயர்பவர்களின் நெடும்பயணம்

PHOTO • Nityanand Jayaraman

பாடல்வரிகள்:

சிறு குழந்தைகள் வீடுகளில் எப்படி இருக்கின்றன?
என் வயோதிக தாய் என்ன கொடுத்து பசியாற்றுவார் என யோசிக்கிறேன்.

பிழைத்திருக்கவே நாங்கள் தினமும் உழைக்கிறோம்
வாழ்க்கையை ஓட்டுவதற்கே புலம்பெயரும் கட்டாயம் கொள்கிறோம்.

இந்த தேசம் சிறந்ததாக இருக்கலாம்
ஆனால் எங்கள் வாழ்க்கைகள் கொடுமையாக இருக்கிறது.

இந்த கொடுநோய் எங்களை தாக்கிவிட்டது
எங்கள் வாழ்க்கைகளை சிதைத்துவிட்டது.

என்ன வாழ்க்கை இது? என்ன வாழ்க்கை இது?
மோசமான வாழ்க்கை, பரிதாபகர வாழ்க்கை
இழிவான வாழ்க்கை, உடைந்துபோன வாழ்க்கை

வறுமையை விட கொடிய நோய் உண்டா?
குடும்பத்துடன் இருப்பதை விட ஆறுதலேதும் உண்டா?

சிரமமான காலத்தில் வீட்டிலிருப்பதே போதும்
ஏதோ குழம்பையும் கஞ்சியையும் கொண்டு ஒன்றாகவேனும் பிழைத்திருப்போம்.

குழந்தைகளின் பேச்சு என் கண்களிலேயே நிற்கிறது
என் மனைவியின் புலம்பல்கள் ஓயாமல் என்னை விரட்டுகிறத

என்ன நான் செய்திருக்க வேண்டும்? என்ன நான் செய்திருக்க முடியும்?

என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்?

பேருந்துகளும் ரயில்களும் வேண்டாம் சார்

போக மட்டும் விடுங்கள் ஐயா, நான் நடந்தே வீடு சென்று விடுவேன்

பேருந்துகளும் ரயில்களும் வேண்டாம் சார்
போக மட்டும் விடுங்கள் ஐயா, நான் நடந்தே வீடு சென்று விடுவேன்


சிறு குழந்தைகள் வீடுகளில் எப்படி இருக்கின்றன?
என் வயோதிக தாய் என்ன கொடுத்து பசியாற்றுவார் என யோசிக்கிறேன்.

சிறு குழந்தைகள் வீடுகளில் எப்படி இருக்கின்றன?
என் வயோதிக தாய் என்ன கொடுத்து பசியாற்றுவார் என யோசிக்கிறேன்.

என்னை விடுங்கள் சார். நான் வீட்டுக்கு நடந்து சென்றுவிடுவேன்!
என்னை போக விடுங்கள் ஐயா! நான் நடந்தே போய் விடுகிறேன்!

இசை, பாடல் மற்றும் பாடியவர்: ஆதேஷ் ரவி

தெலுங்கிலிருந்து பாடல் வரிகளை மொழிபெயர்த்தவர்கள்: குமார் நரசிம்மா மற்றும் கின்னர மூர்த்தி

ஆதேஷ் ரவியின் கட்டுரையை தெலுங்கிலிருந்து மொழிபெயர்த்தவர்: ராகுல் எம்.

தமிழில்: ராஜசங்கீதன்.

Aadesh Ravi

Aadesh Ravi is a Hyderabad-based composer, lyric writer, singer in the Telugu film industry

Other stories by Aadesh Ravi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan