மென்மையான வெள்ளைத் தோலுடன் கூடிய இனிப்பு பழத்தை கிருஷ்ணன் கண்டு பிடிக்கும் போது அதிக உற்சாகத்துடன் இருக்கிறார். அவர் அதைத் திறந்து அதன் பிரகாசமான இளஞ்சிவப்பு நிற உள் பகுதிகளை காண்பிக்கிறார். 12 வயதாகும் ராஜ்குமார் ஆவலுடன் அதைத் தின்ற போது அவரது உதடுகளும் பிரகாசமான சிவப்பு நிறமாக மாறியது – அதனால்தான் அவரும் மற்ற குழந்தைகளும் தப்பாட்டிகள்ளிக்கு 'லிப்ஸ்டிக் பழம்' என்று பெயரிட்டுள்ளனர். மற்ற குழந்தைகள் அவரைப் பின்பற்றி பழத்தைத் தின்ற போது அவர்கள் வாய் முழுவதுமே சிவப்பாக மாறியது. இதைப் போல காடுகளுக்குச் செல்வது அவர்களுக்கு மிகவும் உற்சாகமான ஒன்றாக இருக்கிறது.
டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் ஒரு காலை வேளையில் 35 வயதாகும் மணிகண்டன் மற்றும் 50 வயதாகும் கிருஷ்ணன் ஆகியோர் அவர்களை காட்டுக்குள் வழி நடத்திச் செல்கின்றனர். அவர்கள் செருக்கானூர் கிராமத்திற்கு அருகிலுள்ள புதர் காடுகளுக்குள் தூரமாக நடந்து செல்கின்றனர், செல்கையிலேயே செடிகொடிகளை விலக்கிக் கொண்டு செல்கின்றனர். ஒரு கடப்பாரையை கொண்டு கொடி கிழங்குகளை அகழ்கின்றனர். ஒன்றரை வயது சிறு குழந்தை முதல் 12 வயது வரை உள்ள ஐந்து குழந்தைகளை அவர்கள் வழி நடத்திச் செல்கின்றனர், அவர்கள் அனைவருமே இருளர்கள்.
அந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவர்கள் படரக்கூடிய காட்டு வள்ளிக்கிழங்கை தேடிக் கொண்டிருந்தனர். "நீங்கள் அதனை குறிப்பிட்ட மாதங்களில் (டிசம்பர் - ஜனவரியில்) மட்டுமே உண்ண முடியும். அது மிருதுவாக இருக்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் சாப்பிடும் போது உங்களுக்கு அரிப்பை ஏற்படுத்தும்", என்று மணிகண்டன் விளக்குகிறார். முதலில் நீங்கள் மற்ற புதர்களில் இருந்து அதன் தண்டினை அடையாளம் காண வேண்டும். தண்டின் பருமன் நமக்கு எத்தகைய கிழங்கு கிடைக்கப்போகிறது என்பதையும் மற்றும் அக்கிழங்கை முழுவதுமாக அகழ்வதற்கு எவ்வளவு ஆழமாக குழி தோண்ட வேண்டும் என்பதையும் கூறிவிடும்", என்று கூறுகிறார். இந்தக் கிழங்கை தேடிக்கொண்டிருக்கும் பொழுது தான் அவர்கள் லிப்ஸ்டிக் பழத்தை (உள்ளூரில் இதனை நாதெல்லிப்பழம் என்று அழைக்கின்றனர்) கண்டிருக்கிறார்கள்.
பின்னர் சில நிமிடங்களுக்கு சுற்றி விட்டு அவர்கள் சரியான காட்டு வள்ளிக்கிழங்கு கொடியை கண்டுபிடித்து மென்மையான அதன் கிழங்கை அகழ்ந்து எடுத்தனர். அவர்களை கூர்ந்து கவனித்து பின்தொடர்ந்து வந்த குழந்தைகள் ஆர்வத்துடன் அதன் தோலை உரித்து அதனை சாப்பிடத் துவங்கினர்.
காலை 9 மணிக்கு கிளம்பிய குழு மதியத்திற்கு உள்ளாகவே பங்களாமேட்டிற்கு திரும்பியது. தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள செருக்கானூர் கிராமத்தின் இருளர் குடியிருப்பு பகுதி தான் பங்களாமேடு.








