2020-ம் ஆண்டில், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, ​​​​கிராமத்திலிருந்து எனக்குச் செய்தி வந்தது. என் தாத்தா கீழே விழுந்ததில் அவரது கால் உடைந்துவிட்டது. அங்குள்ள சமூக சுகாதார மையத்துக்கு அரிதாகவே மருத்துவர் வருவார். மேலும் கொரோனா காரணமாக அருகிலுள்ள தனியார் மருத்துவ மையங்களும் மூடப்பட்டுவிட்டன. என் குடும்பத்தினர் உடைந்த காலில் பிளாஸ்திரி போட்டு, அவரை வீட்டில் கவனித்துக் கொண்டனர். ஆனால் கடுமையான காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டார். வலி தாங்க முடியாமல் கதறினார். அவர் மேலும் பலவீனமடைந்தார். அந்த ஆண்டின் மே மாத இறுதியில் அவர் தனது கடைசி மூச்சை விட்டார்.

அச்சம்பவம் நேர்ந்தபோது நான் மும்பையில் இருந்தேன். திடீரென வாழ்க்கை ஸ்தம்பித்ததால், புயல் தாக்கியது போல் இருந்தது. தொற்றுநோய் பற்றிய பயம் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் தெருக்களில் போலீஸாரின் தடியடி மழை பெய்தது. வாழ்வாதாரம் நிறுத்தப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். நான் மும்பையில் தங்கினேன். ஏனென்றால் நான் பிழைப்புக்காக காய்கறிகளை விற்றுக் கொண்டிருந்தேன். நாங்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டோம். ஆனால் என் தாத்தா இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும், உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள எனது கிராமத்திற்கு உடனடியாக செல்ல விரும்பினேன். எனக்கு அவருடன் உணர்வுப்பூர்வமான உறவு இருந்தது. தவிர, என் அம்மாவைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.

அவை கடினமான காலங்கள். நாடு முழுவதிலுமிருந்துவந்தச் செய்திகள் உலுக்கியது. வீடு நோக்கி நடந்து கொண்டிருந்த சில தொழிலாளர்கள் களைப்பினால் ரயில் தண்டவாளத்தில் தூங்கினர். ரயில் வந்து அவர்கள் மீது ஏறி, ​​அவர்களை நசுக்கியது. ஒரு தாய், உணவும் தண்ணீரும் இன்றி தன் பாலூட்டும் குழந்தையைக் கைகளில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். தாத்தா இறந்த பிறகு, வீட்டிற்குச் செல்வதற்கான ரயில்களைப் பற்றி விசாரிக்க, எனது பைகளை எடுத்துக்கொண்டு அந்தேரிக்கு (மேற்கு) அருகிலுள்ள ரயில் நிலையத்திற்குச் சென்றேன். அலகாபாத் செல்லும் ரயில் ஓடவில்லை என்று அங்கு தெரிந்து கொண்டேன். வாரணாசியில் ரயிலில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. உத்தரப்பிரதேசத்துக்கு செல்ல வேண்டிய ரயில் அதற்கு பதிலாக ஒடிசாவிற்கு புறப்பட்டது. எனது கிராமத்தை அடைய நான் அலகாபாத்தை [இப்போது பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படுகிறது] தாண்டி 70 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருந்தது. இந்தச் சம்பவங்கள் ஏற்கனவே பலவீனமாக இருந்த என் மன உறுதியைக் குலைத்துவிட்டது. டாக்ஸியில் பயணம் செய்யலாம். ஆனால் அதற்கு 40,000 முதல் 50,000 ரூபாய் வரை செலவாகும். என்னிடம் அவ்வளவுப் பணம் இல்லை. அதனால் வீட்டிற்கு செல்லும் எண்ணத்தை முழுவதுமாக கைவிட்டேன். வேறு வழியில்லை.

Mithun Kumar (facing the camera) in a BEST bus, on his way to the vegetable market
PHOTO • Sumer Singh Rathore
Inspecting lemons at the mandi in Dadar, Mumbai
PHOTO • Sumer Singh Rathore

இடது: மிதுன் குமார் (கேமராவை எதிர்கொள்பவர்) ஒரு பேருந்தில், காய்கறி சந்தைக்குச் செல்லும் வழியில். வலது: மும்பை தாதரில் உள்ள மண்டியில் எலுமிச்சைப் பழங்களை ஆய்வு செய்தல்

இறுதிச் சடங்குகளுக்காக, தாத்தா அலகாபாத்தின் ஜுன்சி நகருக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அப்போது வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று அம்மா கூறுகிறார். போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டனர். உண்மையில், தகனம் செய்யும் இடங்களில் பலவற்றில் இறுதிச் சடங்குகள் தடை செய்யப்பட்டிருந்தன. தாத்தாவின் இறுதிச் சடங்குகள் எப்படியோ, அச்சத்தின் நிழலில் செய்து முடிக்கப்பட்டன.

மும்பையில் பிறந்தவன் நான். ஆனால் எனது குழந்தைப் பருவம் ஜான்பூரில் கழிந்தது. நான் அங்கு பள்ளிக்குச் சென்றேன். என் அப்பா, 1975-ல் மும்பைக்கு இடம்பெயர்ந்தார். அதாவது அவரின் 15-வது வயதில். மும்பைக்கு மாறுவது அவருக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. பிறந்த உடனே தாயை இழந்தவர் அவர். வேலை என்ற பெயரில், அவரது தந்தையான என் தாத்தா, மற்றவர்களின் வயல்களில் உழைத்தார். மண் பானைகள், கூரை ஓடுகள் போன்றவற்றையும் செய்தார். வேறு வேலை எதுவும் இருக்கவில்லை. மற்றவர்களின் வயல்களில் அவர் செய்த உழவு மற்றும் நிலம் திருத்தும் வேலைகளில் முழுக் குடும்பத்திற்கும் உணவளிக்க போதுமான வருமானம் அவருக்குக் கிட்டவில்லை. ஆடை என்ற பெயரில், குடும்பத்தில் உள்ள ஆண்கள், பிறப்புறுப்புகளை மட்டும் மறைக்கும் பாகை எனப்படும் வேட்டி போன்ற குட்டைத் துணியை உடுத்தினர். உணவுக்கு கோதுமையோ அரிசியோ இல்லை. அருகிலுள்ள வயல்களில் கம்பு, சோளம், உருளைக்கிழங்கு மற்றும் இலுப்பை ஆகியவை முக்கிய உணவு ஆதாரங்களாக இருந்தன.

*****

தாத்தா யாருடைய வீட்டில் பணிபுரிந்தார் என்பதை தெளிவுபடுத்தத் தேவையில்லை

தாத்தாவின் கடின உழைப்புக்குப் பல சமயங்களில் ஊதியம் வழங்கப்படவில்லை. அவருடைய முன்னோர்களின் கடன்கள் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும், அதை அவர் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவரிடம் கூறப்பட்டது. "உங்கள் தாத்தா இவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், உங்கள் பெரியப்பாவின் கடன்கள் நிலுவையில் உள்ளது..." என்பார்கள். என் தாத்தா யாருடைய வீட்டில் வேலை செய்தார் என்பதையோ யார் நிலம் வைத்திருந்தார் என்பதையோ யார் உழைத்தார்கள் என்பதையோ தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. என் அப்பா, கொஞ்சம் பெரியவனானதும், ​​என் தாத்தா வேலை செய்த குடும்பத்துடன் வாழச் சென்றார். தாத்தாவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததால், தாயில்லாத குழந்தையாக இருந்த, என் அப்பாவையும் அவரது மூத்த சகோதரனையும் கவனிக்க யாரும் இல்லை. அப்பா அந்த மக்களுடன் அவர்கள் வீட்டில் வசித்தார். அவர்களின் வீட்டிலும் வயல்களிலும் செய்யச் சொன்ன எல்லா வேலைகளையும் செய்து வந்தார். மேலும் வேலை இல்லாத போது, ​​அவர்களின் மாடு, எருமை மாடுகளை மேய்க்கக் கிளம்பி விடுவார். இதற்கெல்லாம் பரிகாரமாக உண்ண உணவு கிடைத்தது. இதுவே அவருக்கு ஊதியமாக இருந்தது. வெளியேறுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை என்று அப்பா கூறுகிறார்.

PHOTO • Courtesy: Mithun Kumar
PHOTO • Courtesy: Mithun Kumar

உத்தரபிரதேச ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது கிராமத்தில் மிதுனின் தாய் வயலில் வேலை செய்கிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, கணவர் நகரத்தில் காய்கறி விற்றுக்கொண்டிருந்தபோது, கிராமத்திற்கும் மும்பைக்கும் இடையே அவர் சென்று வந்து கொண்டிருந்தார்

எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் 1970-ல் மும்பைக்கு வந்து வாழைப்பழம் விற்க ஆரம்பித்தார். அவரது உதவியால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எனது பெரியப்பாவும் மும்பை வந்து அவருடன் வியாபாரத்தில் சேர்ந்தார். விரைவிலேயே வாழைப்பழங்கள் விற்கும் சொந்தத் தொழிலை தொடங்கினார். அவர் கொஞ்சம் பணத்துடன் திரும்பி வந்தபோது, ​​​​எங்கள் வீடு முதல் முறையாக கலகலப்பானது. அவர் மும்பை திரும்பியதும் என் தந்தையை உடன் அழைத்துச் சென்றார். ஆனால் என் தந்தை வேலை பார்த்த குடும்பத்தினர் இதை அறிந்து எங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டையிட்டனர். 'தங்கள் ஆளைத்' தூண்டி கெடுத்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். பிரச்சினை வளர்ந்து கைகலப்பை எட்டியது. இரு குடும்பங்களுக்கும் அச்சுறுத்தல்கள் வந்தன. ஆனால் இங்கு அனைவரும் உறுதியாக இருந்தனர். எனவே அவர்கள் மும்பைக்கு புறப்பட்டனர். கொத்தடிமைச் சங்கிலிகளை அவிழ்ப்பதற்கான முதல் படி அது. இவை அனைத்தும் 40-50 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சுதந்திர தேசத்தில் நடந்தது என்பதை சில சமயங்களில் நம்பக்கூட முடிவதில்லை.

கொஞ்ச காலத்துக்கு மூத்த சகோதரனிடம் வேலை பார்த்துவிட்டு பிறகு சொந்தமாக பழக்கடை தொடங்கினார் அப்பா. சூழ்நிலைகள் மேம்பட்டதால், அவரது திருமணம் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. சிறிது காலம் கிராமத்தில் தங்கியிருந்த அம்மா, அங்கிருந்து மும்பைக்கு அடிக்கடி பயணித்துக் கொண்டிருந்தார். வருடத்தில் சில மாதங்கள் அப்பாவுடன் மும்பையில் செலவழித்துவிட்டு திரும்புவார். நான் அப்போது, ​​1990ல், மும்பை ஜூஹு பகுதியில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் பிறந்தேன்.

அம்மா சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா கொஞ்சம் நிலம் வைத்திருந்தார், என் மாமாக்கள் இருவரும் [அம்மாவின் சகோதரர்கள்] படித்தவர்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் 12-ம் வகுப்பு வரை படித்தது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. இதைத் தவிர, அவர்களின் அரசியல் நாட்டம், கருத்துகள் மற்றும் சமூகத்தின் கண்ணோட்டங்கள் ஆகியவை நவீனமானவை. ஆனால் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில், ஆண்களுக்கு எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும், பெண்களின் போராட்டங்கள் முடிவதில்லை. என் அம்மா, அவரது சகோதரிகள் மற்றும் மைத்துனிகளின் வாழ்க்கைகள் வயல் வேலைகளில் கழிந்தது.

என் அம்மா முன்பு ஒருமுறை, இதே போன்ற பொருளாதார நிலை கொண்ட குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சிறிது காலம் கழித்து அவர் தன் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். ஏன் என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் நான் கேள்விப்பட்டவரை அவருடைய தோல் நோய் காரணமாக இருக்கலாம். நான் கண்டுபிடிக்க முயன்றதில்லை. அவர் தனது தந்தை மற்றும் சகோதரர்களுடன் சில ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் என் அப்பாவைத் திருமணம் செய்து கொண்டார். அப்பாவின் குடும்பத்தின் நிதி நிலைமை நன்றாக இருக்கவில்லை. எனவே சிறந்த ஒரு மணச் சம்பந்தத்தை மறுக்க எந்த காரணமும் இருக்கவில்லை.

PHOTO • Devesh
PHOTO • Sumer Singh Rathore

மிதுன் தினமும் காலை 4:30 மணிக்கு தாதர் காய்கறிச் சந்தைக்குச் சென்று, டெம்போவில் (வலது) பொருட்களை ஏற்றி தனது கடைக்கு அனுப்புகிறார்

நான் பிறக்கும் வரை அப்பாவின் கடை நன்றாகவே இருந்தது. ஆனால் சிலப் பிரச்சனைகள் காரணமாக அவர் தனது கடையை இழந்தார். வாடகைக் கடையில் இருந்து வியாபாரத்தை மீண்டும் தொடங்க வேண்டியிருந்தது. இறுதியில், நாங்கள் ஐந்து குழந்தைகளும் பிறந்த பிறகு, அம்மாவின் மும்பை வருகை கிட்டத்தட்ட நின்று போனது. கிராமத்தில் என் தாத்தா குத்தகைக்கு எடுத்த வயல்களில் சேர்ந்து பயிரிடத் தொடங்கினார். மண் பானைகள் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் களிமண்ணைத் தயாரிக்கவும் அவர் உதவினார். ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக, குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகமாகிவிட்டதால், ஐந்து சகோதர சகோதரிகளையும் என் அம்மா அழைத்துச் சென்று தனியாக வாழ ஆரம்பித்தார். அவரிடம் ஒரு குடிசை வீடு, சில பாத்திரங்கள் மற்றும் தானியங்கள் தவிர வேறு எதுவும் இல்லை. அவருடைய சகோதரர்கள் எங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து, ஆரம்பத்தில் எங்களுக்கு உணவுப் பொருட்களுக்கும் உதவினர். பின்னர் எனது அம்மா கிராமத்தின்  சாதி இந்துக்களுடைய நிலத்தில் பங்குதாரராக பயிரிடத் தொடங்கினார். என் அம்மாவின் உழைப்பின் விளைவாக, ஓரிரு வருடங்களில் வீட்டில் போதுமான உணவு கிடைக்கத் தொடங்கியது. மற்றவர்களின் வீடுகளிலும் வேலை செய்ய ஆரம்பித்தார். அவரின் கடின உழைப்பால் தான் எங்கள் உணவும் உடையும் மேம்பட்டது.

அடுத்த முறை அப்பா வீட்டுக்கு வந்தவுடன், என்னையும் அவருடன் மும்பைக்கு அனுப்பி வைத்தார் அம்மா. 1998-99ம் வருடமாக இருக்க வேண்டும். எனக்கு 8 அல்லது 9 வயது இருக்கும். நான் ஊர்சுற்றுவதை விட்டுவிட்டு  மும்பையில் என் தந்தைக்கு உதவுவேன் என்று அம்மா நம்பினார். இதற்கிடையில், அப்பா தனது கடையை இடம் விட்டு இடம் மாற்றிக் கொண்டிருந்தார். ஒன்று, வியாபாரம் சரியாக நடக்காமல் இருக்கும். அல்லது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கும். அவருக்கு நிலையான பணியிடம் இல்லை. ஆனால் அவர் சிலரின் அழுத்தத்திற்கு அடிபணிந்து என்னை நகராட்சிப் பள்ளியில் சேர்த்தார். எனது வயதின் அடிப்படையில், நான் 3-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். நான் அங்கு புதிய குழந்தைகளைச் சந்தித்தேன். மீண்டும் பள்ளியில் ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியது.

*****

3-4 வருடங்கள் விடுமுறை எடுத்து படிக்க சூழ்நிலை என்னை அனுமதிக்கவில்லை.
அந்தக் கனவை கைவிட முடிவு செய்தேன்

அப்பா காலையில் காய்கறிச் சந்தைக்கு செல்வார். கொஞ்சம் பாலும் பிஸ்கட்டும் சாப்பிட்டுவிட்டு, கையில் கொஞ்சம் காசு எடுத்துக்கொண்டு காலை 7 மணிக்கு பள்ளிக்குக் கிளம்பி விடுவேன். மதிய உணவு நேரமாகும்போது, ​​சுமார் 10 மணிக்கு, பள்ளிக் கேண்டீனில் சமோசா அல்லது வடை என என்னக் கிடைத்தாலும் சாப்பிட்டுவிடுவேன். நண்பகலில் வீடு திரும்பும்போது, ​​அப்பாவின் அறிவுரைகளைப் பின்பற்றி மண்ணெண்ணெய் அடுப்பில் உணவு சமைப்பேன். வீட்டை விட்டு வெளியேறும் முன், அவர் பொதுவாக பருப்பு சாதம் அல்லது கிச்சடி செய்யும் முறையை என்னிடம் சொல்வார். என் ஒன்பது வயது மூளைக்கு என்ன புரியுமோ அதை வைத்து நான் சமைத்தேன். சில நேரங்களில் சோறு குழைந்து விடும் அல்லது அடிப் பிடித்துவிடும் அல்லது அரைகுறையாக வெந்திருக்கும். நான் சமையலை முடித்துவிட்டு டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது கடைக்கு பேருந்தில் செல்வேன். சாப்பிடும் போது அடிக்கடி என்னைக் கத்துவார். “என்ன செய்திருக்கிறாய்? இதையா உன்னை செய்யச் சொன்னேன்? நீ இதை நாசம் செய்துவிட்டாய்,” என்றெல்லாம்  திட்டு விழும்.

PHOTO • Sumer Singh Rathore
PHOTO • Devesh

இடது: மிதுன் தனது சாலையோரக் காய்கறிக் கடையை காலை 6:30 மணியளவில் திறக்கிறார். வலது: பின்னர் கடையின் முன் பகுதியை அவர் சுத்தம் செய்கிறார்

மதியம், அப்பா நடைபாதை தரையில் தூங்குவார். நான் கடையைப் பார்த்துக் கொள்வேன். அது மட்டும் இல்லை. அவர் மாலையில் எழுந்தவுடன், நான் அருகிலுள்ள தெருக்களில் பச்சைக் கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை விற்கச் செல்வேன். எனது இடது மணிக்கட்டில் கொத்தமல்லி கொத்துகளை இறுக்கிக் கொண்டு, இரண்டு உள்ளங்கைகளிலும் எலுமிச்சைகளை வைத்துக்கொண்டு, வழிப்போக்கர்களுக்கு விற்கும் கலையை நான் கற்றுக்கொண்டேன். கொத்தமல்லி, எலுமிச்சை விற்று தினமும் 50 முதல் 80 ரூபாய் வரை சம்பாதித்தேன். இது சுமார் இரண்டரை வருடங்கள் தொடர்ந்தது. பிறகு அப்பா திடீரென வீட்டுக்குப் போக நேரிட்டதால், நானும் அவருடன் சென்றேன். எனது பள்ளிப்படிப்பு 5-ம் வகுப்பின் இடையிலேயே நின்று போனது.

இந்த முறை அம்மா என்னை கிராமத்திலேயே இருத்திக் கொண்டார். கல்வி அவசியம் என்று அவர் உணர்ந்தார். அதனால்தான் அவருடைய குழந்தைகளில் ஒருவராவது படிக்க முடிந்தது. அவர் என்னைத் திரும்பிப் போகவிடாமல் தடுத்ததற்குக் காரணம் மும்பையில் நான் செய்தப் பிரச்சினைகளும் காரணமாக இருக்கலாம். நான் ஒருபோதும் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை, நான் எங்கு வாழ விரும்புகிறேன் என்பதை அவரும் கேட்கவில்லை. எனக்கு நல்லது என அவர் நினைத்ததை எனக்குச் செய்தார்.

என் அம்மாவின் வீட்டில் உள்ள சூழ்நிலை, படிப்புக்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. அதனால் என் அம்மா அவரது சகோதரனுடன் பேசினார். நான் 11 வயதில் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். அங்குள்ள எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்றனர். நான் படிப்பதற்காக இப்படி ஒரு சூழலைக் கொண்டிருந்தது அதுவே முதல் முறை. எனது மாமாக்கள் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள். அதனால் என்னைச் சுற்றியுள்ள மனநிலை பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாகவே இருந்தது. அங்குதான் அரசியல் கட்சிகளின் பெயர்களைக் கேட்டறிந்தேன். முதல்முறையாக பிராந்தியத் தலைவர்களின் பெயர்களைக் கற்றுக்கொண்டேன். ஒரு நாள் மதியம், எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் - எங்களுக்கு ‘மாமா’, மற்றவர்களுக்கு ‘தோழர்’- சிவப்புக் கொடிகளுடன் வீட்டு வாசலில் இருந்தார். கேட்டதன் பேரில், இது கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி என்றும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கொடி என்றும் என்னிடம் கூறப்பட்டது. அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தை எதிர்ப்பது கூட சாத்தியம் என்பதை நான் முதன்முறையாக அப்போது புரிந்துகொண்டேன்.

நான் 2008-ம் ஆண்டு 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராக என் மாமா யோசனை தெரிவித்தார். அம்மாவிடம் இதுபற்றி விவாதித்தபோது, ​​வீட்டில் நிலைமை முன்பு போல் இல்லை என்றார். அவர் யோசனையை நிராகரித்த போதிலும், என் மாமா விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். முதல் முயற்சியில் நான் நல்ல ரேங்க் பெறவில்லை. அடுத்த ஆண்டு மீண்டும் முயற்சித்தேன். ஒரு வருட கால முயற்சியின் முடிவில், நல்ல ரேங்க் எனக்குக் கிடைத்தது. அரசுக் கல்லூரியில் சேர்ந்தேன். [சேர்வதற்கான] கவுன்சிலிங் கடிதம் வந்தது. முழு ஆண்டு கட்டணம் ரூ. 6,000. நான் என் அம்மாவிடம் மீண்டும் ஒரு முறை கேட்டேன். ஆனால் அவர் மீண்டும்  மறுத்துவிட்டார். "பார்ப்போம்" என்றார். என் சகோதரிகள் வளர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி அப்பாவால் முன்பு போல் சம்பாதிக்க முடியவில்லை என்று அம்மா மீண்டும் கூறினார். நாங்கள் எப்படி நிர்வகிப்போம்? அவர் சொன்னது சரிதான். 3-4 வருடங்கள் விடுமுறை எடுத்து படிக்க சூழ்நிலை என்னை அனுமதிக்கவில்லை. அந்த கனவை கைவிட முடிவு செய்தேன்.

PHOTO • Sumer Singh Rathore
PHOTO • Sumer Singh Rathore

இடது: வாடிக்கையாளர்கள் வருவதற்கு முன்பு காய்கறிகளை அடுக்கி வைக்கிறார். வலது: விற்பனைக்கு வைப்பதற்கு முன் ஒரு மூட்டைக் கீரையின் முனைகளை நறுக்குகிறார்

அதன் பிறகு சைக்கிளில் ஏறி கிராமத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சந்தைப் பகுதிகளுக்கு பலமுறை வேலை தேடிச் சென்றேன். என்னை யாருக்கும் தெரியாத இடங்களில் வேலை தேட முயற்சித்தேன். தெரிந்தவர்களிடம் கேட்கத் தயங்கினேன். எனக்கு ஒரு பயிற்றுவிக்கும் வேலை கிடைத்தது. ஆனால் 2-3 மாதங்களில் எனக்கு முழு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பதைக் கவனித்தேன். நான் வருத்தப்பட்டேன். மும்பை செல்ல நினைத்தேன். அப்பாவும் அங்கே இருந்ததால் எனக்கு ஏதாவது வேலை கிடைக்கலாம். அம்மாவும் ஒப்புக்கொண்டார். பிறகு ஒரு நாள், அப்பாவின் தம்பி முதன்முதலில் வந்த அதே பக்கத்துக்காரரின் மகனுடன் மும்பைக்கு வந்தேன்.

*****

வேலைக்கான வேட்டை மீண்டும் தொடங்கியது. தங்குவதற்கு நிலையான இடம் இல்லாமல்,
வேலை தேடி நாட்களைக் கழித்தேன்

மும்பையின் அந்தேரி (மேற்கு) பகுதியில், அப்பா தனது காய்கறிக் கடையை நடத்தி வந்தார். நடைபாதையின் ஒரு மூலையில் தனது உணவை சமைத்து சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கினார். இப்படி அவருடன் இருப்பது கடினமாக இருந்தது. பால் கடையில் வேலை கிடைத்தது. கடையின் உரிமையாளர் நான் கடையை மேற்பார்வையிட வேண்டும் என்றும் சில சமயங்களில் ஒரு சில இடங்களுக்கு பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்றும் கூறினார். அங்கேயே வசித்து வேலை செய்யவும் வேண்டும் என்று கூறினார். மாதத்தின் எல்லா நாட்களிலும் விடுமுறை இல்லாமல் வேலை செய்ய வேண்டியிருந்தது. மாதச் சம்பளம் 1,800 ரூபாய். நான் அந்த வேலையை ஏற்றுக்கொண்டேன். ஆனால், ஒரு வாரத்தில் எனது இரண்டு கால்களும் திடீரென வீங்கின. வலி தாங்க முடியாததாக இருந்தது. உட்காரும்போதுதான் நிம்மதியாக இருக்கும். சுமார் 20 நாட்களுக்குப் பிறகு, அந்த மாத இறுதிக்கு மேல் என்னால் வேலை செய்ய முடியாது என்று எனது முதலாளியிடம் கூறினேன்.

வேலைக்கான வேட்டை மீண்டும் தொடங்கியது. தங்குவதற்கு நிலையான இடம் இல்லாததால், நான் வேலை தேடி நாட்களைக் கழித்தேன். பேருந்து நிறுத்தத்திலோ அல்லது கடையின் வெளியிலோ தூங்கினேன். கடைசியாக, ஒரு லாட்டரி கடையில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கு மக்கள் பந்தயம் கட்ட வந்தனர். நான் பலகையில் லாட்டரி எண்களை எழுத வேண்டும். அதற்கு எனக்கு ஒரு நாளைக்கு 80 ரூபாய் சம்பளம். ஒருமுறை, என் முதலாளியே பந்தயம் கட்ட ஆரம்பித்து கிட்டத்தட்ட 7 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை இழந்தார். பாதிப்பினால் இரண்டு நாட்கள் கடை திறக்கப்படவில்லை. மூன்றாவது நாளில், எனது முதலாளியை அவரது முதலாளி அடித்தார் என்றும், வேறு ஒருவர் பொறுப்பேற்கும் வரை கடை மூடப்படும் என்றும் என்னிடம் கூறப்பட்டது. ஆனால் புதிய முதலாளி வரவே இல்லை. எனக்கு வரவேண்டிய சுமார் 1,000 ரூபாய் கிடைக்கவில்லை. நான் மீண்டும் ஒருமுறை தெருவில் வேலை தேடிக்கொண்டிருந்தேன்.

PHOTO • Devesh
PHOTO • Devesh

மிதுனின் வாடிக்கையாளர்களில் பலர் வழக்கமானவர்கள். சிலர் நண்பர்களாகவும் மாறியுள்ளனர். 2008-ம் ஆண்டு முதல் மும்பையில் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்

இதற்கிடையில், அப்பாவின் கால்கள் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தன. அவர் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் இங்குள்ளக் கடையை நான் நடத்துகிறேன் என்றும் சொன்னேன். என்னால் சமாளிக்க முடியாது என்றும் தெருவாழ்க்கை பிரச்சினைகள் நிரம்பியது என்றும் முதலில் அப்பா சொன்னார். ஆனால் அவர் செல்ல விரும்பினார். எனவே நான் வியாபாரத்தை நடத்த அனுமதிக்கும்படி அவரை சமாதானப்படுத்தினேன்.

பொறுப்பேற்ற ஒரு வாரத்தில், சுமார் 1,500 ரூபாயைச் சேமித்தேன். இது எனக்கு ஒரு பெரிய தொகை. வேலையில் அர்ப்பணிப்பு உணர்வைத் தூண்டியது. ஒரு மாதம் உறுதியாக இருந்து 5,000 ரூபாய் சேமித்தேன். நான் ஒரு போஸ்டல் மணி ஆர்டரை வீட்டிற்கு அனுப்பியபோது என் அம்மா மகிழ்ச்சியடைந்தார். நான் இவ்வளவு சேமித்து வைத்தது குறித்து என் தந்தை ஆச்சரியப்பட்டார்.

நான் விற்கும் இடத்திலிருந்து சாலையின் குறுக்கே, என் வயதுடைய ஒரு இளைஞர் நடத்தும் மற்றொரு காய்கறிக் கடை இருந்தது. மெல்ல மெல்ல நல்ல நண்பர்களானோம். முதன்முறையாக அவர் எனக்கு ஒரு தட்டு உணவை வழங்கியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் பெயர் அமீர். அவருடன் நட்பாக பழகிய பிறகு, உணவு விஷயத்தில் எனக்கு பிரச்சினை இல்லை. இப்போது அமீர் தினமும் என்ன சமைக்க வேண்டும் என்று கேட்கத் தொடங்கினார். எனக்கு சமைக்கத் தெரியாது. அதனால் நாங்கள் சாப்பிட்ட பிறகு பாத்திரங்களை சுத்தம் செய்வேன். தெருவில் நாங்கள் தூங்கும் இடத்தில், திறந்த வெளியில், பணம் திருட்டுப் போகத் தொடங்கியது. ஒருமுறை பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போன் பறிபோனது. அதனால் சில நாட்களுக்குப் பிறகு நானும் அமீரும் ஒரு அறையை வாடகைக்கு எடுக்க முடிவு செய்தோம். தெரிந்த ஒருவர் எங்களுக்கு அருகிலுள்ள ஒரு குப்பத்தில் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தார். நாங்கள் இருப்புத் தொகை செலுத்த வேண்டியிருந்தது. வாடகை மாதம் ரூ.3,000. அமீரும் நானும் பகிர்ந்து கொண்டோம்.

கிராமத்தில் எங்கள் வீடு குடிசை வீடாக இருந்தது. கொஞ்ச காலத்துக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு சேதமடைந்த நிலையில், பழுது நீக்கப்பட்ட போதிலும் பலவீனமான நிலையில் இருந்தது. அதனால் அந்த இடத்தில், புதிய வீடு கட்டிக் கொண்டிருந்தோம். 2013-ல், என் இரண்டு கால்களிலும் ஒரு விசித்திரமான வலியை உணர ஆரம்பித்தேன். கிராமச் சமூக நல மையத்தில் மருத்துவரைச் சந்தித்தேன். கால்சியம் குறைபாடுதான் இதற்குக் காரணம் என்று சொன்னார். எனது உடல்நிலை மேம்படாததால், அவர் பல சோதனைகளை பரிந்துரைத்தார். அது போலியோ என்றன மருத்துவ அறிக்கைகள். சிகிச்சை அளித்தும் எனது உடல்நிலை மோசமடைந்தது. நிவாரணம் கிடைக்காததால், எனது குடும்பத்தினர் மந்திரவாதிகள் மற்றும் பில்லி சூனிய மருத்துவர்களை சந்தித்து வந்தனர். மருந்துகள் மற்றும் பிரார்த்தனைகள் இரண்டிற்கும் பணம் செலவிடப்பட்டது. ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனது சேமிப்புகள் எல்லாமும் செலவழிக்கப்பட்டன. என் நிலையைப் பார்த்து, சில உறவினர்கள் உதவினார்கள். நான் மும்பைக்குத் திரும்பினேன்.

PHOTO • Sumer Singh Rathore
PHOTO • Sumer Singh Rathore

இடது: அவர் ஜிம்மில் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறார். இது பலரை ஆச்சரியப்படுத்துகிறது என அவர் கூறுகிறார். 'காய்கறி வியாபாரிகளுக்கு ஆரோக்கியமாக இருக்க உரிமை இல்லையா?' என்கிறார். வலது: வீட்டில் சமையல்

என் மனம் பலவிதமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டது. சில நேரங்களில் நான் எனது கிராமத்தில் இருப்பது போலவும், சில சமயம் மும்பையில் இருப்பது போலவும் உணர்ந்தேன். நண்பராக மாறிய வாடிக்கையாளரான கவிதா மல்ஹோத்ரா இதை அறிந்து கவலைப்பட்டார். அவர் ஆசிரியராக பணிபுரிந்தார். அவருக்குத் தெரிந்த மருத்துவர்களைச் சந்திக்க என்னை அழைத்துச் சென்றார். கட்டணத்தையும் அவரே செலுத்தினார். அமீர் என்னை ஒரு தர்காவுக்கு அழைத்துச் சென்றார். சில சமயங்களில் நான் என் ஆடைகளையெல்லாம் களைந்துவிட்டு தலைமறைவாக ஓடத் தொடங்குவேன் என்று மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். பிறகு ஒரு நாள், தெரிந்தவரின் உதவியுடன் அப்பா என்னை ரயிலில் கிராமத்திற்கு அழைத்து வந்தார். அங்கு, மீண்டும் ஒருமுறை மருத்துவர்களையும் ஹீலர்களையும் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன். அலகாபாத்தில் உள்ள மருத்துவர்களை மக்கள் பரிந்துரைப்பார்கள். ஒரு பொலேரோ வாகனம் முன்பதிவு செய்யப்படும். அம்மா என்னுடன் புறப்படுவார். அவரிடம் பணம் எதுவும் இல்லை. சில உறவினர்கள் பண உதவி செய்தனர். எனது எடை 40 கிலோவாக குறைந்தது. கட்டிலில் படுத்திருந்த நான் எலும்பு மூட்டை போலக் கிடந்தேன். நான் உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லை என்று மக்கள் கூறினர். என் அம்மா மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. என் சிகிச்சைக்கு பணம் கொடுக்க தன் நகைகளை ஒவ்வொன்றாக விற்றார்.

இதற்கிடையில், ஒருவரின் பரிந்துரையின் பேரில், அலகாபாத்தில் உள்ள மனநல மருத்துவர் டாண்டனிடம் சிகிச்சையைத் தொடங்கினேன். அவர் ஆகஸ்ட் 15, 2013 அன்று எங்களைச் சந்திக்க நேரம் கொடுத்தார். ஆனால் நாங்கள் சென்ற பேருந்து நடுவழியில் பழுதடைந்தது. அலகாபாத் செல்லும் பேருந்துகளைப் பிடிக்கும் இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இது நடந்தது. நான் என் உறுதியை வலுப்படுத்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். ஆனால் சிறிது தூரம் கழித்து முடியவில்லை. சாலையோரத்தில் அமர்ந்தேன். என் அம்மா, “போகலாம். நான் உன்னை என் முதுகில் சுமந்து செல்கிறேன்," என்றார். அவர் இதைச் சொன்னதும் நான் அழ ஆரம்பித்தேன். அவ்வழியாகச் சென்ற ஒரு டெம்போ என் அம்மாவின் கூப்பியக் கைகளைப் பார்த்து நின்றது. டிரைவர் எங்களை பஸ்சில் ஏற்றிவிட்டார். பணம் கூட வாங்கிக் கொள்ளவில்லை அவர். எனது நோயைப் பற்றி எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்தச் சம்பவம் எனக்குத் தெளிவாக நினைவில் உள்ளது. அன்றிலிருந்து என் உடல்நிலை சீரடையத் தொடங்கியது. நான் மெதுவாக எடை அதிகரிக்க ஆரம்பித்தேன். ஆனால் பலவீனம் இன்னும் இருந்தது. என்னால் அதிக எடையை தூக்க முடியவில்லை. ஆனால் நானே என்னைத் தேற்றிக் கொண்டு மும்பைக்குத் திரும்பி மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்தேன். வேலையில் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலைமை சீரானது. பிறகு 2016-ல் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. வணிகம் சரிந்தது.

*****

பகத்சிங்கைப் படித்துவிட்டு, பகத் சிங் இன்றைய இந்தியாவையா கனவு கண்டாரென என்னை நானே கேட்டுக்கொண்டேன்

நான் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்டேன். வாட்ஸ்அப்பை படிக்கையில், என் மனம் முழுவதுமாக வலதுசாரிப் போக்குகளை நோக்கிச் சென்றது. ஒரு வருடத்திலிருந்து ஒன்றரை வருடங்களில், சமூக ஊடகங்கள் என்னை மிகவும் ஆக்கிரமித்துக் கொண்டது. ஒரு முஸ்லிம் குடும்பத்துடன் வாழ்ந்தாலும் நான் முஸ்லிம்களை வெறுக்க ஆரம்பித்தேன். அமீர் என் வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மற்ற முஸ்லிம்களுடன் எனக்கு ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. பாகிஸ்தான், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு [இந்தியா] ஆகியவற்றுடன் எனக்குப் பெரிய பிரச்சனைகள் இருந்தன. நான் பிறந்த மதத்தைப் பின்பற்றாதவர்களுடன் எனக்குப் பிரச்சனைகள் இருந்தன. ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்திருப்பதைப் பார்த்ததும், அவள் சமுதாயத்தைக் கெடுக்கிறாள் என்று உணர்ந்தேன். பிரதமர் மீதான எந்த விமர்சனத்தையும் நான் கேட்கும்போது, ​​யாரோ எனது மீட்பரைத் தவறாகப் பேசுவதைப் போல உணர்ந்தேன்.

நான் எனது கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்று உணர ஆரம்பித்தேன். சொந்த அனுபவங்களை சமூக ஊடகங்களில் எழுத ஆரம்பித்தேன். வாசகர்கள் என்னை தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்

காணொளி: காய்கறிகளை விற்பதும் சமத்துவ சிந்தனையும்

ஒரு நாள், அமீர் ஒரு பத்திரிகையாளரைக் குறிப்பிட்டார். அவர் பெயர் மயங்க் சக்சேனா. முகநூலில் அவருடைய சில பதிவுகளையும் எனக்குக் காட்டினார். அவர் முட்டாள்தனமாக பேசுகிறார் என்று நினைத்தேன். பிரதமரை விமர்சிக்கும் ஒருவரை அமீர் பாராட்டி இருந்தார். என்னால் தாங்க முடியவில்லை. ஆனால் நான் அமீரிடம் எதுவும் சொல்லவில்லை. பிறகு, ஒரு நாள் மயங்கை சந்திக்க நேர்ந்தது. குட்டையான உயரம். நீண்ட தலைமுடி கொண்டிருந்தார். புன்னகையுடன் என்னை சந்தித்தார். ஆனாலும் நான் அவரை வெறுத்தேன்.

மயங்கின் மற்ற நண்பர்களும் அவரைப் போலவே சிந்தித்தார்கள். அவர்கள் வாதிடுவதை நான் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் கேள்விப்படாத புத்தகங்கள், நபர்கள் மற்றும் இடங்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் பெயர்களை அவர்கள் குறிப்பிடுவார்கள். மயங்க் எனக்கு சத்திய சோதனை புத்தகத்தை பரிசளித்தார். காந்தி எழுதிய புத்தகம் அது. காந்திக்கும் நேருவுக்கும் எதிராக என் மனம் இன்னும் விஷம் கொண்டிருந்தது. இருவர் மீதும் எனக்கு ஆழ்ந்த வெறுப்பு இருந்தது. புத்தகம் சலிப்பாக இருந்தாலும் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். மேலும் காந்தியைப் பற்றி முதன்முறையாக நிறைய கற்றுக்கொண்டேன். படிக்கவும் கற்றுக்கொள்ளவும் இன்னும் நிறைய இருந்தது. என் மனதில் நிறைந்திருந்த குப்பை மெல்ல மெல்ல வெளியேறத் தொடங்கியது.

தாதரில் ஒருமுறை போராட்டம் நடந்தது. மயங்க் அங்கு சென்று கொண்டிருந்தார். நான் வருகிறேனா என்று கேட்டார். அதனால் நானும் சென்றேன். தாதர் ரயில் நிலையத்தை ஒரு பெரிய கூட்டம் சூழ்ந்து கொண்டது. அவர்கள் அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொள்கைகளை எதிர்த்து, கோஷம் எழுப்பி, எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். பல வருடங்களுக்குப் பிறகு செங்கொடியைப் பார்க்க நேர்ந்தது. மயங்க் ஒரு மேளத்தை எடுத்துக்கொண்டு மக்கள் ஆதரவுப் பாடல்கள், எதிர்ப்புப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். ஒரு போராட்டத்தில் பங்குபெற்றது இதுவே எனக்கு முதல் முறை. அனுபவம் ஆச்சரியத்தை அளித்தது. மயங்கிற்கு கொஞ்சம் நேரம் கிடைத்ததும், இவர்களுக்கு யார் பணம் கொடுத்தது என்று கேட்டேன். அவர் திரும்பி என்னை வரச் சொன்னது யார் என்று கேட்டார். அந்தக் கேள்வியில், என் பதிலைக் கண்டேன்.

PHOTO • Devesh
PHOTO • Devesh

மிதுன் தனது வாடிக்கையாளர்கள் வந்து போகும் இடைவெளிகளில் படிக்கிறார். 'நிறைய படித்ததன் நன்மை என்னவென்றால், நான் எழுத விரும்பியதுதான்.'
அவர் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சமூக ஊடகங்களில் எழுதி வருகிறார். தொடர் வாசகர்களைக் கொண்டிருக்கிறார்

அதேப் போராட்டத்தில் அன்வர் உசேனை சந்தித்தேன். காய்கறி வாங்க கடைக்கு வர ஆரம்பித்தார். நான் படிக்க விரும்புவதை உணர்ந்த அவர் எனக்காக சில புத்தகங்களை கொடுத்துச் சென்றார். பெரும்பாலான புத்தகங்கள் மண்டோ, பகத் சிங் மற்றும் முன்ஷி பிரேம்சந்த் எழுதியவை. பெண்களைப் பற்றிய எனது அணுகுமுறையை நான் மாற்றத் தொடங்கும் விதத்தில் மண்டோ என்னை உலுக்கினார். பகத்சிங்கைப் படித்த பிறகு, இன்றைய இந்தியா பகத்சிங்கின் கனவுகளின் அதே இந்தியாவா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். முன்ஷி பிரேம்சந்தைப் படித்ததும் என் சொந்த வாழ்க்கையையும், என் மக்களையும், என் சமூகத்தையும் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பிறகு ஹரிசங்கர் பர்சாய் படிக்க ஆரம்பித்தேன். சமூகத்தையும் என்னையும் மாற்றும் வகையில் அவருடைய எழுத்து என்னைத் தூண்டியது. இந்த நபர் இப்போது இங்கே இருக்க வேண்டும் என்று நான் அடிக்கடி விரும்புகிறேன் - அவர் அனைவரையும் அம்பலப்படுத்தியிருப்பார்.

ஒரு சமூகம், ஒரு பாலினம், ஒரு பிராந்தியம் அல்லது ஓர் இனத்தின் மீது நான் கொண்டிருந்த வெறுப்பு குறையத் தொடங்கியது. நிறையப் படித்ததின் பலனாக எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. முகநூலில், சில பிரபல எழுத்தாளர்களின் பதிவுகளைப் படிக்கும் போது, ​​எழுத்து பாசாங்குத்தனமாக இருந்தது. நான் எனது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்று உணர ஆரம்பித்தேன். மேலும் எனது சொந்த அனுபவங்களை சமூக ஊடகங்களில் கதைகளாக எழுத ஆரம்பித்தேன். வாசகர்கள் என்னுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். நானும் சில நல்ல எழுத்தாளர்களைப் பின்தொடர்ந்தேன். கற்றல் தொடர்ந்தது.

*****

எங்கள் திருமணத்தில் தாலியோ, கன்னிகாதானமோ, வரதட்சணையோ எதுவும் இல்லை.
நான் டோலியின் நெற்றியில் பொட்டு வைத்தேன். அவரும் பதிலுக்கு அதையே செய்தார்

நான் தெருவில் வேலை செய்கிறேன். அதனால் காவலர்களின் அடக்குமுறையை எண்ணற்ற முறை நான் அனுபவித்திருக்கிறேன். மிரட்டி பணம் பறித்தல், துஷ்பிரயோகம் செய்தல், காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று மணிக்கணக்கில் அங்கேயே வைத்திருப்பது, 1250 ரூபாய் அபராதம் வசூலிப்பது என நிறைய நடந்திருக்கிறது. அவற்றைப் பற்றி நான் எழுத ஆரம்பித்தால், அது ஒரு பெரிய கொழுத்த புத்தகத்தின் பக்கங்களை நிரப்பிவிடும். எத்தனை போலீசார் என்னை அடித்து அல்லது மிரட்டியுள்ளனர்! நான் மாமூல் கொடுக்க மறுத்ததால், அவர்கள் என்னை போலீஸ் வேனில் ஏற்றி, நகரத்தை மணிக்கணக்கில் சுற்றிச் சென்றனர். இதெல்லாம் சகஜம். சமூக ஊடகங்களில் இந்த அனுபவங்களைப் பற்றி எழுத பயமாக இருந்தது. ஆனால் நான் போலீஸ்காரரின் பெயரையோ அல்லது நகரத்தையோ மாநிலத்தையோ குறிப்பிடாமல் எழுதினேன். பணமதிப்பிழப்புக்குப் பிறகு, மூத்த பத்திரிக்கையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ருக்மணி சென் எனது எழுத்தைக் கவனித்து, சப்ராங் இந்தியாவுக்கு எழுத என்னை அழைத்தார். அதை நான் தொடர்ந்து செய்து வருகிறேன்.

PHOTO • Courtesy: Mithun Kumar
PHOTO • Sumer Singh Rathore

2019-ல் நடந்த திருமணத்தின் போது மிதுனின் நெற்றியில் (இடது) பொட்டைப் பூசுகிற டோலி. தங்கள் திருமண உறுதிமொழியில், தம்பதியினர் தங்களுக்குள் சமத்துவம் இருக்குமென உறுதியளித்தனர்

2017 -ல், எனது இரண்டாவது சகோதரியும் திருமணம் செய்து கொண்டார். என்னையும் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்த ஆரம்பித்தனர். திருமணம் போன்ற முக்கியமான முடிவை சமூக அழுத்தத்தின் கீழ் எடுக்கக்கூடாது என்பதை நான் அப்போதே உணர்ந்திருந்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் டோலி என் வாழ்க்கையில் வந்தாள். நாங்கள் ஒன்றாக நேரத்தை செலவிட்டோம். இது பெரும்பாலான மக்களுக்குத் தொந்தரவு கொடுத்தது. அவர் யார், எந்தச் சாதியை சேர்ந்தவர் என்று பலவிதமான கேள்விகளைக் கேட்டார்கள்.  என் சாதியில் பிறந்தவர்கள் அவரது சாதியைக் கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். அவர் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் அவர்கள் மூக்கை நுழைப்பார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி நான் உயர்ந்திருந்தேன்.

டோலி என்னைப் பற்றி அவருடைய குடும்பத்தாரிடம் சொன்னார். நான் சில நாட்களுக்குப் பிறகு அவருடையப் பெற்றோரைச் சந்தித்தேன். எங்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று என் குடும்பத்தினர் விரும்பினர். டோலியும் நானும் திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருந்தோம். ஆனால் நாங்கள் கொஞ்சம் வாழ்வில் நிலையான பிறகு திருமணம் செய்ய விரும்பினோம். இப்படியே இரண்டு, இரண்டரை வருடங்கள் கடந்தன. டோலியின் பெற்றோர்கள் அவரை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் பெண்ணைப் பெற்றவர்கள். அவர்கள் மீதான சமூகச் சுமை வேறு வகையானது. அவர்கள் ஒரு பாரம்பரிய திருமணத்தை ஏற்பாடு செய்ய விரும்பினர். என் குடும்பத்தினரும் அதையே விரும்பினர். ஆனால் நான் நீதிமன்ற திருமணத்தை விரும்பினேன். டோலியும் அதை விரும்பினார். மகளை விட்டுவிட்டு நான் ஓடிவிடுவேனோ என்று அவருடைய பெற்றோர் பயந்தனர். என் பெற்றோர் தங்கள் மகனுக்கு திருமணம் ஆனதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். இந்த கவலைகளுக்கு மத்தியில் நாங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது. அவர் தரப்பு, திருமணத்தை ஒரு சிறிய அரங்கில் ஏற்பாடு செய்தது.

ஆனால் எங்கள் குடும்பங்கள் எங்கள் வற்புறுத்தலுக்கு அடிபணிய வேண்டியிருந்தது. எங்கள் திருமணத்தில் தாலியோ, கன்னிகாதானமோ, வரதட்சணையோ எதுவும் இல்லை. நான் டோலியின் நெற்றியில் பொட்டு வைத்தேன். அவரும் பதிலுக்கு அதையேச் செய்தார். நாங்கள் நெருப்பைச் சுற்றி ஏழு சுற்றுகள் நடந்தோம். பூசாரி தனது மந்திரத்தை உச்சரித்தார். ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும் மயங்க் எங்கள் சபதங்களைப் படிப்பார். நாங்கள் ஒருவருக்கொருவர் சமத்துவம் பேணுவோம் என்று உறுதியளித்தோம். மண்டபத்தில் கூடியிருந்த விருந்தினர்கள் மகிழ்ந்த போதிலும் தாங்கள் வித்தியாசமான ஒன்றைக் காண்கிறோம் என்பதையும் தளைகள் அறுபடுவதையும் உணர்ந்தனர். சிலர் கலக்கமடைந்தனர். ஆனால், சமத்துவமின்மை, பார்ப்பனீயம், பெண்களுக்கு எதிரான விதிகள் போன்ற நீண்ட கால மரபுகள் உடைக்கப்படுவது எங்களுக்கு மிகவும் முக்கியமானவை. நானும் டோலியும் திருமணம் முடிந்து புதிய வீட்டிற்கு மாறினோம். 2019-ல் நாங்கள் திருமணம் செய்தபோது எங்கள் வீடு வெறுமையாக இருந்தது. மெதுவாக, அடிப்படைத் தேவைகளை சேகரிக்க ஆரம்பித்தோம். ஒரு ஊசி முதல் அலமாரி வரை, நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கினோம்.

PHOTO • Sumer Singh Rathore
PHOTO • Sumer Singh Rathore
PHOTO • Devesh

இடது: கோவிட்-19 ஊரடங்கு முழுக்க மிதுனும் டோலியும் மும்பையிலேயே இருந்தனர். நடுவே: 'வாழ்க்கையோடு போராடுவோம்' என்கிறார் மிதுன். வலது: அவரது சகோதரர் ரவி

2020 மார்ச்சில், கொரோனா வைரஸ் தாக்கி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, ​​மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க விரைந்தனர். சில நிமிடங்களில் எனது கடையில் இருந்த காய்கறிகள் அனைத்தும் காலியாகிவிட்டன. சிலர் திருடினார்கள். சிலர் மட்டுமே பணம் கொடுத்தார்கள். எல்லா கடைகளிலும் இதே நிலைதான். சற்று நேரத்திலேயே போலீசார் எங்கள் கடைகளை மூடிவிட்டனர். அவை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மக்கள் தங்கள் கிராமங்களுக்கும் சொந்த ஊர்களுக்கும் ஓட ஆரம்பித்தனர். நாங்கள் இருந்த கட்டிடம் இரண்டே நாட்களில் காலியானது. வெளியேற்றத்துக்கான உண்மையானக் காரணம்  வருமானமின்றி என்ன சாப்பிடுவது எனத் தெரியாததே. மலையேற்ற ஜாக்கெட்டுகள் விற்கும் கடையில் டோலி வேலை செய்து வந்தார். அதுவும் மார்ச் 15, 2020 அன்று மூடப்பட்டது.

நிலைமை சீரானதும் முடிவு செய்யலாம் எனச் சொல்லி எங்களை வீட்டுக்கு வருமாறு எனது குடும்பத்தினர் வலியுறுத்தினர். ஆனால் எங்களிடம் எந்தச் சேமிப்பும் இல்லை. எனவே தொடர்ந்து இருப்பது நல்லது என்று தோன்றியது. எனது வேலை காய்கறி விற்பனை. நாங்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டோம். ஆனால் கொள்முதல் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. தாதரில் உள்ள முக்கியச் சந்தை பூட்டப்பட்டது. சுனா பகுதி  மற்றும் சோமையா மைதானம் போன்ற இடங்களில் அவற்றைப் பெறலாம். ஆனால் இந்த இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வைரஸ் தாக்கிவிடுமோ என்று பயந்தேன். அந்த பயத்தை நான் டோலிக்கும் கொடுக்க விரும்பவில்லை. கூட்டத்திற்குள் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் செலவுகளைச் சமாளிக்க பணமில்லை. மே மாதம் [2020], கடை திறக்கும் நேரம், நண்பகல் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை என நகராட்சி நிர்வாகம் குறைத்தது. கொஞ்சம்  நேரம் கடந்தாலும், போலீசார் தடியடி மழை பொழிய ஆரம்பித்து விடுவார்கள். காய்கறிகளை விற்கும் இணையச் செயலிகள் மற்றும் தளங்கள் காலை முதல் இரவு வரை திறந்திருந்தன. அவர்களிடம் ஆர்டர் செய்வது மக்களுக்குச் சுலபமாக இருந்தது. எனது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில்தான் தாத்தா கீழே விழுந்து கால் முறிந்த சம்பவமும் நடந்தது. ஊரடங்கின்போது அவர் எப்படி இறந்தார் என்பதை நான் ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளேன்.

சில மாதங்களுக்கு பிறகு கடை திறக்கும் நேரம் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டது. ஒரு நாள் மாலை, என் தம்பி ரவி, கை வண்டியில் இருந்து அழுகிய மாம்பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தான். ஒரு போலீஸ்காரர் வந்து வீடியோ எடுக்க ஆரம்பித்தார். ரவி பீதியடைந்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றான். ஆனால் அவர் பெரும் தொகை கேட்டு வழக்குப் போடுவதாக மிரட்டினார். ரவியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். நள்ளிரவு 1 அல்லது 1:30 மணியளவில், ஒரு போலீஸ்காரர் ரவியின் பாக்கெட்டில் இருந்த 6,000 ரூபாயை பறித்துக் கொண்டு, அவனை விடுவித்தார். அவனிடம் இருந்த பணம்தான், அவனது மொத்த சேமிப்பு. இரண்டு நாட்களுக்குப் பிறகு, எங்களுக்குத் தெரிந்த ஒருவர் மூலம் அச்சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரிக்கு தெரிவித்தோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதே போலீஸ்காரர் ரவியைத் தேடி வந்து முழுத் தொகையையும் திருப்பிக் கொடுத்தார்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இப்போது வரை, வணிகம் மேம்படவில்லை. உலகை எதிர்த்துப் போராடும் வேளையில் நம் வாழ்க்கையைத் திரும்பப் பெற இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். நான் இந்தப் பகுதியை எழுதும்போது, எனக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டோலிக்கும் தான். நாங்கள் வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டோம். எனதுக் கடைக்கு அருகிலுள்ள மற்ற விற்பனையாளர்கள் எனது கடையில் மிச்சமிருந்தவற்றை விற்க உதவினார்கள். எங்களிடம் இருந்த சிறிய பணம் மருந்துகளுக்கும், கொரோனா பரிசோதனைக்கும் செலவழிக்கப்பட்டுவிட்டது. பரவாயில்லை. தொற்று இல்லை என உறுதியானதும், நாங்கள் வீட்டிலிருந்து வெளியே வந்துவிடுவோம். மீண்டும் முயற்சிப்போம். வாழ்வோடு போராடுவோம். வேறு என்ன வழி இருக்கிறது?

தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக சில நபர்கள் மற்றும் இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

இந்தக் கட்டுரை முதலில் இந்தி மொழியில் ஆசிரியரால் எழுதப்பட்டது, தேவேஷ் திருத்தியுள்ளார்.

சுமர் சிங் ரத்தோரின் அட்டைப் படம்.

தமிழில் : ராஜசங்கீதன்

Mithun Kumar

Mithun Kumar runs a vegetable shop in Mumbai and writes about social issues on various online media platforms.

Other stories by Mithun Kumar
Photographs : Devesh

Devesh is a poet, journalist, filmmaker and translator. He is the Translations Editor, Hindi, at the People’s Archive of Rural India.

Other stories by Devesh
Photographs : Sumer Singh Rathore

Sumer is a visual storyteller, writer and journalist from Jaisalmer, Rajasthan.

Other stories by Sumer Singh Rathore
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan