“எனது மகன் 4 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டான். அதற்குப்பின் ஓராண்டில் எனது கணவரும் இறந்துவிட்டார்“ என்று 70 வயதான பீமா தண்டாலே கூறுகிறார். தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்தில் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்திற்கு கீழ் அமர்ந்துகொண்டு, ஓராண்டுக்குள் அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பேரிழப்புகள் ஏற்படுத்திய சோகம் குறித்து பேசுகிறார். அவரது கணவர் மற்றும் மகன் இருவரும் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மயங்கிவிழுந்து இறந்தனர்.

பீமாவின் மகன் தத்து தனது முப்பது வயதில் இறந்தார். அவரது கணவர் உத்தம் 60 வயதுகளின் மத்தியில் இருந்தபோது இறந்தார். “அப்போது முதல் எனது மருமகள் சங்கீதாவுடன் குடும்பத்தை நான் தான் கவனித்துக்கொள்கிறேன்“ என்று பீமா கூறுகிறார். அவர் விவசாயக்கூலித்தொழிலாளியாக உள்ளார். “எனது பேரன் 14 வயதான சுமித்தை பார்த்துக்கொள்ள வேண்டும்“ என்று அவர் மேலும் கூறினார்.

ஆனாலும் பீமா, புதிய வேளாண் திருத்தச்சட்டங்களை எதிர்த்து ஜனவரி 25 மற்றும் 26ம் தேதி மும்பையில் நடந்த பேராட்டத்தில் கலந்துகொள்வதை சாத்தியமாக்கிறனார்.  டெல்லியின் எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மும்பையில் இந்த போராட்டத்தை சம்யுக்தா ஷேக்காரி கம்கார் மோர்ச்சா என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. மஹாராஷ்ட்ராவின் 21 மாவட்டங்களில் இருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தால் அழைத்து வரப்பட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.

பீமா, அவரது கிராமமான நாசிக் மாவட்டம் டிண்டூரி தாலுகாவில் உள்ள அம்பேவாணியில் இருந்து வந்திருந்த 12 முதல் 15 வரை உள்ள பெண்களில் ஒருவர். அவர்கள் ஜனவரி 23ம் தேதி காலை கிளம்பி அடுத்த நாள் மும்பை வந்து சேர்ந்தனர். அவர்கள் மூன்று பேரும் விவசாயம் செய்யும் கைம்பெண்கள் ஆவார்கள்.

சுமன் பம்பாலேவின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். “அவர் மன அழுத்தத்தால் இறந்துவிட்டார்“ என்று சுமன் கூறுகிறார். அப்போது அவரது கணவர் மோடிராமுக்கு வயது 50. “நாங்கள் 5 ஏக்கர் வன நிலத்தில் பல ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகிறோம். ஆனால், அது இப்போது வரை எங்கள் பெயரில் இல்லை. வனத்துறை அதிகாரிகள் எங்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்கள். அதுகுறித்து எனது கணவர் எப்போதும் மன உளைச்சலில் இருந்தார்“ என்று அவர் மேலும் தெரிவித்தார். உத்தமைப்போல், மோடிராமும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.

Left: Bhima Tandale at Azad Maidan. Right: Lakshmi Gaikwad (front) and Suman Bombale (behind, right) and Bhima came together from Ambevani village
PHOTO • Riya Behl
Left: Bhima Tandale at Azad Maidan. Right: Lakshmi Gaikwad (front) and Suman Bombale (behind, right) and Bhima came together from Ambevani village
PHOTO • Riya Behl

இடது: ஆசாத் மைதானத்தில் பீமா தண்டாலே, வலது: லட்சுமி கெய்க்வாட் (முன்னால்) மற்றும் சுமன் பம்பாலே, (பின்னால் வலது) இவர்கள் அம்பேவாணி கிராமத்தில் இருந்து வந்திருந்தனர்

“அந்த நிலத்தில் நான் சோயா பீன்ஸ், கம்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவை பயிரிடுவேன்“ என்று 60 வயதான சுமன் கூறுகிறார். “அதுவும் பருவமழைக்காலங்களில்தான், ஆண்டின் மற்ற நாட்களில் தண்ணீர் இருக்காது. மின்சாரமும் இருக்காது“ என்று அவர் மேலும் கூறுகிறார். விவசாய கூலித் தொழிலாளராக உள்ள அவர் ரூ.150-ரூ.200ஐ தினக்கூலியாக பெறுகிறார். “மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நிறைய வேலைகள் எடுக்க வேண்டும். அதன் மூலம் எங்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும். எனவே அதுவும் எங்களின் கோரிக்கைகளுள் ஒன்று“ என்று அவர் கூறுகிறார்.

மும்பை போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக இங்கு வந்துவிட்டதால், சுமனுக்கு ரூ.600 முதல் ரூ.800 வரை கூலி இழப்பு ஏற்பட்டுவிட்டது. “எங்களுக்கு வேறு வழி என்ன உள்ளது“ என்று அவர் கேட்கிறார். “நாங்கள் எங்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். எங்கள் கிராம கணக்கர் எங்கள் நிலத்தை சொந்தமாக்கிக்கொடுக்கிறேன் என்று கூறிக்கொண்டே இருக்கிறார். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் கூட கிடையாது. எனக்கு குழந்தைகள் கிடையாது. நான் மட்டுமே என்னை பார்த்துக்கொள்ள வேண்டும். நான் தனியாக உள்ளேன்“ என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால், லட்சுமி கெய்க்வாட்(65)டிற்கு, உரிமையாக மேலும் கொஞ்சம் நிலம் இருந்தாலும் சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது என்று அவர் கூறுகிறார். “நாங்கள் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துகொண்டிருந்தோம். ஆனால், வனத்துறை நாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தில் தடுப்பணை கட்டியது. இதனால் 2 ஏக்கர் நிலத்தை இழந்தோம். அவர்கள் நிலத்தை எனக்கு சொந்தமாக வழங்கியபோது ஒரு ஏக்கர் மட்டுமே கிடைத்தது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

லட்சுமியின் கணவர் ஹிராமேன் 12 ஆண்டுகளுக்கு முன் அவரது 55 வயதில் இறந்துவிட்டார். அவரது வயலில் கற்களை அகற்றும்போது மயங்கி விழுந்தார். “அதன் பின் அவர் எழுந்திருக்கவில்லை“ என்று அவர் கூறுகிறார். அவருக்கு 32 மற்றும் 27 ஆகிய வயதுகளில் 2 மகன்கள் உள்ளதால், குடும்பத்தின் நில உரிமையை பெறுவதற்கு அதிகாரிகள் பின் அலைவதற்கு ஆள் இருந்தது.

லட்சுமி, சுமன் மற்றும் பீமா மூவரும் கோலி மஹாதேவ் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களின் நில உரிமையை இந்திய வனச்சட்டம் 2006ல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து கேட்கிறார்கள். இந்த சட்டங்களை மோசமாக செயல்படுத்தியதுதான் தங்கள் கணவர்களின் இழப்புக்கு காரணம் என்று கருதுகிறார்கள்.

உழுதவனுக்கு நிலம் சொந்தம் என்பதே அவர்களின் முக்கியமான கோரிக்கை, ஆனால் டெல்லியன் எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தே அவர்கள் மூவரும் மும்பைக்கு வந்திருந்தனர். இந்த சட்டங்கள் இந்திய விவசாயிகள் அனைவரையும் பாதிக்கும் என்பது அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தது.

Lakshmi Gaikwad (left) and the other protestors carried blankets to Mumbai to get through the nights under the open sky in Azad Maidan
PHOTO • Riya Behl
Lakshmi Gaikwad (left) and the other protestors carried blankets to Mumbai to get through the nights under the open sky in Azad Maidan
PHOTO • Riya Behl

லட்சுமி கெய்க்வாட் (இடது) மற்றும் மற்ற விவசாயிகள் ஆசாத் மைதானத்தில் இரவு தங்கியிருந்து போராட்டம் நடத்துவதற்காக போர்வைகளை எடுத்து வருகின்றனர்

அவர்கள் ரொட்டியம், சட்னியும் சாப்பிடுவதற்கு எடுத்து வந்திருந்தனர். ஆசாத் மைதானத்தில் திறந்த வானத்தின் கீழ் தங்குவதற்காக போர்வைகளையும் எடுத்து வந்திருந்தனர். “இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள், இந்த சட்டங்களை எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை அரசு தெரிந்துகொள்ள வேண்டும்“ என்று வெறும் காலுடனே மைதானத்தின் வெப்பத்தை தாங்கிக்கொண்டிருக்கும் பீமா கூறுகிறார்.

விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு  எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக  அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.

இந்த மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயத்தில் பெரும் சக்தியாக பெருவணிக நிறுவனங்கள் மாறுவதற்கு வழிவகுத்து தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்று விவசாயிகள் பார்க்கிறார்கள்.  இந்த சட்டம் மேலும், விவசாயிகளுக்கு ஆதரவான குறைந்தளவு ஆதார விலை, வேளாண் விலைபொருள் சந்தை குழு மற்றும் மாநில கொள்முதல் உள்ளிட்ட அம்சங்களை பலவீனமாக்குகிறது. இந்த சட்டங்கள் அனைத்து இந்தியரையும் பாதிக்கிறது என்று விமர்சிக்கப்படுகிறது. மேலும்  இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 32 ஆன சட்ட உதவிபெறும் உரிமையை முடக்கி முட்டுக்கட்டை போடுவதாக கூறுகிறது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் டெல்லி போராட்டத்தில் அதிகளவில் கலந்துகொண்டுள்ளனர். ஏனெனில், அவர்களே அதிகளவில் நெல் மற்றும் கோதுமை உற்பத்தியாளர்களாக உள்ளார்கள். மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் அவர்களிடம் இருந்தே மாநில அரசு அதிகளவில் கொள்முதல் செய்கிறது.

ஆனால், போராட்டம் பெரும்பாலான விவசாய சமூகத்தைச் சேர்ந்தவர்களை பற்றியது என்பதை குறிப்பிட்டு காட்டுவதற்காக மஹாராஷ்ட்ரா விவசாயிகள் ஆசாத் மைதானத்தில் ஒன்றுகூடினர். “அந்த சட்டங்கள் எங்களை உடனடியாக பாதிக்காமல் இருக்கலாம். அது நாட்டில் உள்ள விவசாயிகளை பாதிக்கும் என்றால், உடனடியாகவோ அல்லது பின்னரோ எங்களையும் பாதிக்கலாம். நாங்கள் அனைவரும் விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளோம். விவசாயிகள் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லையெனில், நாங்கள் எப்படி சம்பாதிக்க முடியம்? எனவே மோடி அரசு அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப்பெறவேண்டும். நாங்கள் பெருநிறுவனங்கள் எங்களை நன்றாக நடத்தும் என்பதை நம்பவில்லை“ என்று அவர் கூறுகிறார்.

“உண்மையிலேயே அரசு விவசாயிகளின் நிலையை உயர்த்த வேண்டும், தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக நடக்கக்கூடாது என்று எண்ணினால், ஆதிவாசிகளுக்கு நில உரிமை கிடைப்பது கடினமல்ல“ என்று சுமன் கூறுகிறார். நாங்கள் 2018ம் ஆண்டு நாசிக்கில் இருந்து மும்பைக்கு ஒரு வாரம் நடந்து பேரணி வந்தோம். எங்களில் சிலர் டெல்லி சென்றனர்“ என்று அவர் மேலும் கூறுகிறார். “எங்கள் மக்கள் நிலத்தில் உழைக்கிறார்கள். அதிலே இறக்கிறார்கள். ஆனாலும் எங்களுக்கு நாங்கள் சாகுபடி செய்யும் நிலமும் சொந்தமில்லை“ என்று வருந்துகிறார்கள்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Photographer : Riya Behl

Riya Behl is a multimedia journalist writing on gender and education. A former Senior Assistant Editor at People’s Archive of Rural India (PARI), Riya also worked closely with students and educators to bring PARI into the classroom.

Other stories by Riya Behl
Reporter : Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.