விவசாயக் கூலியான சி.சுப்புலட்சுமி அவர்களுக்கு தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு என்பது அவர்களின் மனதில் கடைசி விஷயம். அவர் தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் வாங்கிய ஆறு குடங்களை வைக்கக்கூடிய பிரத்யேக தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு சாலையைக் கடந்து சென்றார். அவரே அத்தனை குடம் தண்ணீரையும் சுமந்து செல்ல வேண்டியதால் அந்தப் பிரத்யேக தள்ளுவண்டியின் அவசியத்தை அது நமக்கு உணர்த்துகிறது. நாங்கள் பெரும் சிக்கலில் இருக்கிறோம் என்று குமாரரெட்டியாபுரம் கிராமத்தில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
சுப்புலட்சுமிக்கு, வாக்களிப்பதை தவிர வேறு விஷயங்களில் கவனம் செலுத்த நிறையக் காரணங்கள் உள்ளது. ஆனால் அவரது கிராமம் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இது தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு தொகுதியாகும். திமுகவின் முன்னாள் தலைவரான மறைந்த, மு. கருணாநிதியின் மகள் கனிமொழியும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான தமிழிசை சவுந்திரராஜனும் போட்டியிடுகின்றனர். 2014 இல் நடந்த தேர்தலில் அஇஅதிமுகவைச் சேர்ந்த ஜெயசிங் தியாகராஜ் திமுகவின் ஜெகனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
13 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதி கவனத்தை ஈர்ப்பதற்கு இன்னொரு காரணம் கடந்த ஆண்டு தூத்துக்குடி நகரை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஆகும். இதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த குமாரரெட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்களும் தான்.
பிப்ரவரி 12 2018 இந்த கிராமத்தில் இருந்து சுமார் 300 பேர் ஸ்டெர்லைட் ஆலையின் (வேதாந்தா நிறுவனம்) விரிவாக்கத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி நகர மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகும் போராட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற மறுத்ததால் கைது செய்யப்பட்டனர். இதுவே மார்ச் 24 2018 அன்று தூத்துக்குடி நகரில் 2 லட்சம் மக்களைஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஊக்கம் கொடுத்தது. வியப்பூட்டும் பன்முகத்தன்மையான பின்புலம் கொண்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் புதிய தாமிர உருக்கு ஆலை விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போதுள்ள ஸ்டெர்லைட் ஆலையே அவர்களது தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலை நச்சாக மாற்றிவிட்டதாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தையே அது அழித்து விட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.![Sterlite protest within the Kumareddiahpuram village which started in February 2018. The first photo has a black board which says 35th day of the protest on March 18, 2018](/media/images/02-kumareddiyapuram-protest1-KM-When_Kumar.max-1400x1120.jpg)
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் குமாரரெட்டியாபுரத்தில் பிப்ரவரி 2018 அன்று தொடங்கி தூத்துக்குடி நகரில் நீண்ட நெடிய போராட்டமாக நடந்தது
மே 22 2018 ஆர்ப்பாட்டத்தின் நூறாவது நாள் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர், இதில் 14 பேர் மரணம் அடைந்தனர், 100 பேர் காயமடைந்தனர். மே 28-ஆம் தேதி மாநில அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி விட்டது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அந்நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
"இந்த ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால் எங்கள் வாழ்க்கை தொடர்ந்து சிக்கலிலேயே நீடிக்கும், தேர்தல் என்பது எங்களுக்கு ஒன்றுக்கும் பெறாத ஒரு விசயம்" என்று சுப்புலட்சுமி எங்களிடம் கூறினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ளது குமாரரெட்டியாபுரம். மே 21-ஆம் தேதி போலீஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவரும் காயமடையவில்லை எனினும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட மூன்று பேரில் ஒருவர் அங்கு நடந்ததைக் கண்டு மிரட்சி அடைந்துள்ளார்.
தமிழகம் ஒரு சிறு மாநில தேர்தலையும் இச்சமயம் சந்திக்கிறது. ஏப்ரல் 18-ஆம் தேதி(பாராளுமன்ற தேர்தலுடன்) மற்றும் மே 19 ஆகிய தேதியில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. குமாரரெட்டியாபுரம் உள்ள ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் மே 19 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக எம்எல்ஏ சுந்தரராஜ் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளின் முடிவுகள் ஆளும் அதிமுகவின் பெரும்பான்மையை நிரூபிப்பதில் பெரும் பங்கு வகிக்கும்.
குமாரரெட்டியாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சுப்புலட்சுமி போன்ற பெண்கள் தங்களது நாளின் பெரும்பகுதியை தண்ணீர் எடுப்பதிலேயே செலவழிக்கின்றனர். இந்தப் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஸ்டெர்லைட் நிறுவனம் மிக மலிவான விலையில் தண்ணீரை வாங்கிக் கொண்டிருந்தது தெரியவருகிறது, இப்பெண்கள் 25 லிட்டர் பெரும் பிளாஸ்டிக் கூடம் ஒன்றிற்கு ரூபாய் 10 கொடுத்து சாதாரண குடிதண்ணீரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். முறையாக இல்லாவிட்டாலும் ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்ட பிறகே குமாரரெட்டியாபுரம் பெண்களுக்கு இந்த தண்ணீரும் கிடைக்கிறது என்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளருமான பிரபு. மேலும் அவர் ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்படும் வரை ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெறும் ரூபாய் 10 க்கு அந்த ஆலைக்கு வழங்கப்பட்டது என்கிறார்.
![Details of water procured by Sterlite](/media/images/03a-sterlite-KM-When_Kumareddiahpuram_goes.max-1400x1120.jpg)
![Details of water procured by Sterlite](/media/images/03b-sterlite1-KM-When_Kumareddiahpuram_goe.max-1400x1120.jpg)
ஸ்டெர்லைட் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நீரின் விவரம்: கிராமவாசிகள் 25 லிட்டர் தண்ணீர் குடத்திற்கு ரூபாய் பத்து கொடுத்து வாங்குகின்றனர் , ஸ்டெர்லைட் நிறுவனம் ஆயிரம் லிட்டர் தண்ணீரை ரூபாய் 10 கொடுத்து வாங்கியது.
தொழில்துறை நகரமான தூத்துக்குடி பனைஓலை பொருட்கள், கடலை மிட்டாய் செய்தல் போன்ற குடிசைத் தொழிலுக்கும் மையமாக விளங்குகிறது. குமாரெட்டியாபுரத்தில் 300 க்கும் குறைவான வீடுகளே உள்ளன, இவ்வூர் சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு அருகில் உள்ளது. இவ்வூரே ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பதற்கு மிக முக்கிய இடமாக அமைந்தது. 1998 முதல் இந்நிறுவனம் இங்கு இயங்கி வருகிறது, சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதாலும், பரவலான சுகாதார பிரச்சனைகளை தூண்டி விடுவதாலும், ஆலையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். சமூக ஆர்வலர்கள் பலர் ஸ்டெர்லைட் நிறுவனம் விதிக்கப்பட்ட விதி முறைகளை மீறி செயல்பட்டதாகவும், உரிமத்தை புதுப்பிக்காமல் பல முறை கால நீட்டிப்பு செய்து 2011 வரை செயல்பட்டு வந்ததாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனமும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியமும் நடத்திய ஆய்வில் ஸ்டெர்லைட் நிறுவனம் நிலத்தையும்,நிலத்தடி நீரையும், காற்றையும் மாசுபடுத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
குமாரரெட்டியாபுரம் மக்கள், ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் விரிவாக்கத் திட்டத்தை அறிந்து கொண்ட பிறகே 2018-இல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிறுவனம் அவர்களது கிராமத்தை மாசுபடுத்தி பல நோய்களுக்கு வழிவகுத்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். "எங்கள் வாழ்க்கையின் தரம் கடந்த சில ஆண்டுகளாக மோசமடைவதை நாங்களே கண்கூட கண்டோம். கிராமப்புறங்களில் வசிப்பதையே நல்லது என்கிறார்கள். அது எப்படி இருக்கும் என்பதை எங்களது குமாரரெட்டியாபுரம் கிராமத்தில் வாழ்ந்து தான் உணர வேண்டும்" என்கிறார் 55 வயதான குடும்பத்தலைவி வெள்ளத்தாயி.
ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் வசிப்பதால் புற்றுநோய் மற்றும் கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகள் அதிகமாக உருவாக வழிவகுத்ததாக அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். "நீங்கள் நோயாளிகள் இல்லாத வீடுகளையே இங்கு கண்டுபிடிக்க முடியாது. எனது பெற்றோர், அவர்களின் வயதிற்கும் அதிகமாக மூப்படைவதை நானே கண்டேன் என்கிறார் 17 வயதான மகாலட்சுமி.
தண்ணீர் பற்றாக்குறை இங்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. தண்ணீர் குடங்களுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தள்ளுவண்டியை வைத்துக் கொண்டு பெண்கள் சாலையின் இருபுறமும் குறுக்கும் நெடுக்குமாக கடந்து செல்வதை நீங்கள் காணமுடியும். "சாதாரண தண்ணீருக்காக நாங்கள் பத்துப் பதினைந்து நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்படி கிடைக்கும் தண்ணீருக்குக் கூட நாங்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று எடுத்து வர வேண்டியுள்ளது. எங்களால் ஆறு முறை சென்று தண்ணீர் எடுத்து வர முடியாத காரணத்தால் பிரத்தியேக தள்ளுவண்டியை பயன்படுத்துகிறோம் என்கிறார் 50 வயதான விவசாயக் கூலித்தொழிலாளி கிருஷ்ண லீலாவதி.
இந்தப் பகுதிக்கே உரித்தான இந்த பிரத்யேக தள்ளுவண்டிகள் தூத்துக்குடி நகரில் செய்யப்பட்டு கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒரு தள்ளு வண்டியின் விலை ரூபாய் 2500, அதுபோக குமாரரெட்டியாபுரத்தில் கொண்டுவந்து கொடுப்பதற்கு மேலும் 300 ரூபாய் வாங்குகின்றனர் என்று குறைபடுகிறார் லீலாவதி.![Krishna Leelavathi, resident of Kumareddiahpuram](/media/images/04a-krishnaleelavathi-KM-When_Kumareddiahp.max-1400x1120.jpg)
![Akila, a villager with the trolley](/media/images/04b-kumareddyapuram2-KM-When_Kumareddiahpu.max-1400x1120.jpg)
விவசாயக் கூலித் தொழிலாளியான கிருஷ்ண லீலாவதி (இடது)அகிலா (வலது) நாங்கள் 6 முறை சென்று தண்ணீர் கொண்டு வர முடியாத காரணத்தால் இந்த பிரத்யேக தள்ளுவண்டியை பயன்படுத்துகிறோம்
சற்று பின்நோக்கி சென்றால், யோகீஸ்வர் காலனியில் உள்ள பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காகவே சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொண்டனர். இங்கு சுமார் 100 குடும்பங்கள் உள்ளது கடந்த 50 வருடங்களாக நாங்கள் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனையை சந்தித்து வருகிறோம். இங்குள்ள பெண்களில் சைக்கிள் ஓட்ட தெரியாதவர்களை நீங்கள் கண்டுகொள்ள முடியாது. நாங்கள் இரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்து தண்ணீரை கொண்டு வர வேண்டும் அதுவும் நகரத்தின் வாகன நெரிசலுக்கு இடையில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு தண்ணீர்க் குடங்களை சுமந்தே எங்களுக்கு பல உடல் உபாதைகள் உண்டாயிற்று என்று கூறுகிறார் தூத்துக்குடியில் வசிக்கும் 40 வயதான கூலித்தொழிலாளி சரஸ்வதி.
இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடி ஒரு வருடத்திற்குப் பின்பும் குமாரரெட்டியாபுரம் மக்கள் பதட்டத்துடனும், பயத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். "போதுமான அளவுக்கு அனுபவித்து விட்டோம், எக்காரணம் கொண்டும் இந்த ஆலையை திறக்க விட மாட்டோம்" என்கிறார் வெள்ளத்தாயி. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு நிர்வாகம் நீதிமன்றத்தில் முயற்சி செய்வதை கிராம மக்கள் அறிந்துள்ளனர்.
தேர்தல் பரபரப்பை காட்டிலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து விடுவார்களோ என்ற பயம் இங்கு பெரிதாக இருக்கிறது. "தேர்தலோ இல்லையோ, எங்களது ஒரே கோரிக்கை- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது" என்கிறார் வெள்ளத்தாயி.
புல்வாமா தாக்குதல், பாலக்கோட் தாக்குதல் அல்லது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் அல்லது ரஃபேல் விவகாரம் ஆகியவற்றைக் காட்டிலும் ஸ்டெர்லைட் விவகாரமே குமாரரெட்டியாபுரம் மக்களுக்கு பெரிய விஷயமாக உள்ளது. "எங்களது வாக்குகளை சேகரிக்க எங்களைத் தேடி யாரும் இங்கு வரவில்லை, ஆனால் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடப் போகிறார்கள் என்பதை நாங்கள் அறியாத வரை நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை என்கிறார் லீலாவதி.
தேர்தலைப் புறக்கணிப்பது முதல் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடச் செய்யும் வேட்பாளருக்கு வாக்களிப்பது வரை பல வழிகளை சிந்தித்துக் கொண்டு இருக்கின்றனர் இவ்வூர் மக்கள். ஆனால் வெள்ளத்தாயி "எங்களுக்கு மீண்டும் மோடி வேண்டாம்" என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.
"ஸ்டெர்லைட்டாவது எங்களை மெதுவாகத்தான் கொன்றது ஆனால் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்ட போதும் மோடி எங்களைப் பற்றி வாய் திறக்கவில்லை" என்கிறார் 55 வயதான விவசாய கூலித்தொழிலாளி பொன்ராஜ்.
இந்தப் பிரச்சனை சுமார் 25 ஆண்டுகளாக எங்களையும், எங்களது வாழ்வாதாரத்தையும் பாதித்து வந்த போதிலும், "இவை எல்லாம் நடந்த பிறகும்" நாங்கள் அவர்களுக்கு வாக்களிப்போம் என்று நம்புகின்றனர் அரசியல்வாதிகள், ஆனால் இப்போராட்டத்தை எங்களுக்காக இல்லை என்றாலும் எங்களுக்கு பின்னால் வரும் சந்ததியினருக்காக நாங்கள் தொடர்வோம் என்கிறார் சுப்புலட்சுமி.
"அவர்கள் இங்கு வாக்கு சேகரிக்க எப்படி வருவார்கள்? அவர்களுக்கு எங்களையும் எங்களது வாழ்வாதாரத்தையும் விட ஸ்டெர்லைட் ஆலையே முக்கியம் என்றால், எங்களை மனிதர்களாக மதித்து இங்கு எதற்காக தேர்தல் நடத்த வேண்டும்"? என்று வினவுகிறார் 46 வயதான விவசாயக் கூலித் தொழிலாளி வேலுத்தாயி.
தமிழில் சோனியா போஸ்