2022ம் ஆண்டின் ஏப்ரல் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை எப்போதும் போல்தான் ரமாவுக்கு புலர்ந்தது. அதிகாலை 4.30 மணிக்கு தூக்கம் கலைந்தார். நீரிறைக்கவும் துணி துவைக்கவும் அருகே இருந்த கிராமத்துக் கிணறுக்குச் சென்றார். வீட்டைச் சுத்தப்படுத்தினார். தாயுடன் கஞ்சி குடித்தார். பிறகு வேலைக்காக அவரின் கிராமத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர் தாலுகாவில் இருக்கும் நாச்சி அப்பாரல் ஆலைக்குக் கிளம்பினார். 27 வயது நிறைந்த அவரும் சக பெண் ஊழியர்களும் அன்றைய பிற்பகலில் வரலாறு படைத்தனர். ஜவுளி ஆலையில் நிலவிய பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக ஒரு வருடகாலத்துக்கும் மேலாக அவர்கள் நடத்தியப் போராட்டம் வெற்றி அடைந்திருந்தது.
“உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சாத்தியமற்றதை செய்து விட்டதைப் போல் நாங்கள் உணர்ந்தோம்,” என திண்டுக்கல் ஒப்பந்தத்தைக் குறித்து சொல்கிறார் ரமா. ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் திண்டுக்கல்லில் நடத்தும் ஆலைகளில் பாலியல் ரீதியிலான வன்முறை மற்றும் அத்துமீறல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வரும் திண்டுக்கல் ஒப்பந்தம் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் க்ளோத்திங்குக்கும் (திருப்பூரில் இருக்கும் நாச்சி அப்பாரலின் தாய் நிறுவனம்) தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்துக்கும் (TTCU) இடையே கையெழுத்தாகி இருந்தது.
வரலாற்றுச்சிறப்பு மிக்க ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பன்னாட்டு ஆடை நிறுவனம் ஹெச் அண்ட் எம் ’நடைமுறைப்படத்தப்படக் கூடிய பிராண்ட் ஒப்பந்தம்’ ஒன்றை, ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ்க்கும் TTCU-க்கும் இடையிலான ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த ஏதுவாக கையெழுத்திட்டிருக்கிறது. ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸின் நாச்சி அப்பாரல் ஆலை, ஸ்வீடன் நாட்டைத் தலைமையிடமாக கொண்ட ஆடை நிறுவனத்துக்கு ஆடைகள் தயாரிக்கிறது. ஹெச் அண்ட் எம் கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஃபேஷன் நிறுவன உலகில் பாலின ரீதியிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அளவில் போடப்பட்ட இரண்டாவது ஒப்பந்தம் ஆகும்.
தலித் பெண்கள் தலைமை தாங்கும் TTCU-வில் உறுப்பினராக இருக்கும் ரமா நாச்சி அப்பாரலில் நான்கு வருடங்களாக பணிபுரிகிறார். “நிர்வாகமும் பிராண்டும் (ஹெச் அண்ட் எம்) தலித் பெண்களின் தொழிற்சங்கத்துடன் ஒப்பந்தம் போடுவார்கள் என நான் நினைத்துக் கூடப் பார்த்திருக்கவில்லை,” என்கிறார் அவர். “பல தவறான செயல்பாடுகள் செய்த பிறகு இப்போது அவர்கள் சரியான நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.” சங்கத்துடனான ஹெச் அண்ட் எம்மின் ஒப்பந்தம்தான் இந்தியாவில் கையெழுத்தான முதல் ‘நடைமுறைப்படுத்தப்படக் கூடிய பிராண்ட் ஒப்பந்தம்’ (EBA) ஆகும். ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் சங்கத்துக்கு அளித்த உறுதிகளில் எதையேனும் மீறினால், அதற்கு விதிக்க சட்டப்பூர்வமாக ஹெச் அண்ட் எம் நிறுவனத்தை நிர்ப்பந்திக்கும் ஒப்பந்தம் அது.
நாச்சி அப்பாரலில் பணிபுரிந்த 20 வயது தலித்தான ஜெயஸ்ரீ கதிரவேல் வன்புணரப்பட்டுக் கொல்லப்பட்ட ஒரு வருடத்துக்கு பின்தான் ஈஸ்ட்மேன் நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வர சம்மதித்தது. ஜனவரி 2021-ல் ஜெயஸ்ரீ கொல்லப்படுவதற்கு முன், ஆதிக்க சாதியைச் சேர்ந்த மேற்பார்வையாளரால் மாதக்கணக்கில் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். மேற்பார்வையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஆலை நிறுவனம் மற்றும் ஹெச் அண்ட் எம், கேப், பிவிஹெச் போன்ற பன்னாட்டு ஆடை நிறுவனங்களுக்கு துணிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான தாய் நிறுவனம் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றுக்கு எதிராக பெருஞ்சீற்றத்தை ஜெயஸ்ரீயின் மரணம் உருவாக்கியது. ஜெயஸ்ரீக்கு நியாயம் கோரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் சங்கங்களும் தொழிலாளர் குழுக்களும் பெண்கள் அமைப்புகளும் ஒருங்கிணைந்து, கதரிவேல் குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அடுக்கி “ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் மீது நடவடிக்கை” எடுக்க ஃபேஷன் பிராண்டு நிறுவனங்களைக் கோரின.







