2019 ன் சுற்றுச்சூழல் பிரிவில் ராம்நாத் கோயங்கா விருது பெற்ற காலநிலை மாற்றம் பற்றிய கட்டுரை தொகுதியின் ஒரு பகுதி, இந்த கட்டுரை.
அவர்கள் தினசரி அதிகாலையில் 3 மணிக்கு எழுகின்றனர். அவர்கள் அதிகாலை 5 மணிக்கே தங்களது பணியைத் துவங்க வேண்டும் மேலும் அதற்கு முன்பே அவர்களின் வீட்டு வேலைகளை முடிக்க வேண்டும். அவர்களது பரந்த ஈரமான பணியிடத்திற்கான பயணம் ஒரு குறுகிய நடையே. அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து கடலை நோக்கி முன்னேறி - கடலில் முக்குளிக்கின்றனர்.
சில நேரங்களில் அவர்கள் அருகில் உள்ள தீவுகளுக்கு ஒரு படகினை எடுத்துச் செல்கின்றனர் - அங்கு அதைச் சுற்றி முக்குளிக்கின்றனர். அடுத்த 7 - 8 மணி நேரத்திற்கு மீண்டும் மீண்டும் அவர்கள் அதையே செய்கின்றனர், ஒவ்வொரு தடவை முக்குளிக்கும் போதும் அவர்களது வாழ்க்கையே அதைச் சார்ந்து இருப்பது போல ஒரு மூட்டைக் கடற்பாசி பிடித்துக் கொண்டு வருகின்றனர் - அதுவே நிதர்சனமான உண்மையும் கூட. தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் மீன்பிடி குக்கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு அந்தக் கடல் தாவரங்கள் மற்றும் பாசிகளை சேகரிக்க நீரில் மூழ்குவதே வருமானத்திற்கான முக்கிய ஆதாரமாகும்.
வேலை நாளில் அவர்கள் உடைகள் மற்றும் வலைப் பைகளுடன், 'பாதுகாப்பு கவசத்தையும்' எடுத்துக் கொள்கின்றனர். படகோட்டிகள் கடற்பாசிகள் நிறைந்த தீவுகளுக்கு அழைத்துச் செல்லும்போது, இப்பெண்கள் சேலையை வேட்டியின் பாணியில் கால்களுக்கு மத்தியில் விட்டுக் கட்டிக் கொள்கின்றனர், அப்படியே இடுப்பை சுற்றி அந்த வலைப் பைகளையும் சொருகிக் கொள்கின்றனர். சேலையின் மேலேயே டி ஷர்ட்டை அணிந்து கொள்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு கவசம் என்பது கண்களுக்கான கண்ணாடி, விரல்களை சுற்றி சுற்றி கொள்ள சிறு துண்டான துணிகள் அல்லது சிலருக்கு அறுவை சிகிச்சைக் கையுறைகள் மற்றும் கூர்மையான பாறைகளால் கால் வெட்டுப்படாமல் இருக்க ரப்பர் செருப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இவற்றை அவர்கள் கடலிலோ அல்லது தீவுகளை சுற்றியோ வேலை செய்யும் போது பயன்படுத்துகின்றனர்.
இப்பகுதியில் கடற்பாசி அறுவடை என்பது பாரம்பரியமான தொழிலாக தலைமுறை தலைமுறையாக தாயிடமிருந்து மகள்களுக்கு வந்திருக்கிறது. சில ஆதரவற்ற மற்றும் கைம்பெண்களுக்கு, இதுவே வருமானத்திற்கான ஒரே ஆதாரமாகவும் இருக்கிறது.
வெப்பமயமாதல், கடல்நீர் மட்டம் உயர்தல், மாறிவரும் வானிலை மற்றும் பருவநிலை மற்றும் இந்த வளத்தின் அதிகப்படியான சுரண்டல் ஆகியவற்றால் கடற்பாசிகள் குறைந்து கொண்டே வருகிறது, அதனால் வருமானமும் குறைந்து கொண்டே வருகிறது.
"கடற்பாசிகளின் வளர்ச்சி வெகுவாக குறைந்துவிட்டது", என்று 42 வயதாகும் P. ராக்கம்மா கூறுகிறார். இங்கு பணிபுரியும் மற்ற பெண் அறுவடையாளர்களைப் போலவே இவரும் திருப்புல்லாணி வட்டாரத்திலுள்ள மாயக்குளம் கிராமத்திற்கு அருகில் இருக்கும் பாரதிநகரைச் சேர்ந்தவரே. "எங்களுக்கு இதற்கு முன்பு கிடைத்த அளவிற்கு கடற்பாசிகள் இப்போது காணப்படுவதில்லை. இப்போது சில நேரங்களில் ஒரு மாதத்திற்கு 10 நாட்கள் மட்டுமே எங்களுக்கு வேலை இருக்கிறது", என்கிறார் அவர். மேலும் ஒரு வருடத்தில் ஐந்து மாதங்களுக்கு மட்டுமே முறையாக இப்பெண்கள் அறுவடை செய்கின்றனர் என்பதால், இது அவர்களுக்கு பெருத்த அடியாக இருக்கிறது. "2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாத சுனாமிக்குப் பிறகு, அலைகள் வலிமையானதாகவும் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்ந்துவிட்டது", என்றும் உணர்வதாக ராக்கம்மா கூறுகிறார்.
![](/media/images/02-PK-20150103-0119-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
இப்பகுதியில் கடற்பாசி அறுவடை என்பது பாரம்பரியமான தொழிலாக தலைமுறைகள் கடந்து தாயிடமிருந்து மகள்களுக்கு வந்திருக்கிறது. இங்கு U. பஞ்சவர்ணம் என்பவர் பாறைகளிலிருந்து கடற்பாசியை சேகரித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த மாற்றங்கள் A. மூக்குபொரியைப் போன்ற அறுவடையாளர்களை பாதிக்கிறது, அவர் தனது 8 வயது முதல் கடற்பாசியை சேகரிக்க முக்குளித்து வருகிறார். அவரது இள வயதிலேயே அவரது பெற்றோர்கள் இறந்துவிட்டனர், மேலும் அவர் அவரது உறவினர்களால் ஒரு குடிகாரருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இப்போது 35 வயதாகும் மூக்குபொரிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர் மேலும் இன்னனும் அவரது கணவருடனேயே வாழ்ந்து வருகிறார், ஆனால் அவரது கணவர் குடும்பத்தை ஆதரிக்க எதையும் சம்பாதித்துக் கொண்டு வரும் நிலையில் இல்லை.
அவர்களது வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் இவரே, மேலும் தனது குழந்தைகளை மேலும் படிக்க வைக்க உதவுவதற்கு, "கடற்பாசி அறுவடை செய்வதன் மூலம் வரும் வருமானம் போதுமானதாக இல்லை", என்று அவர் கூறுகிறார். அவரது மூத்த மகள் பி. காம் பட்டப் படிப்பு படித்து வருகிறார். அவரது இரண்டாவது மகள் கல்லூரி சேர்க்கைக்காக காத்திருக்கிறார். அவரது இளைய மகள் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் "இவையெல்லாம் மேம்படப் போவதில்லைை" என்று மூக்குபொரி அஞ்சுகிறார்.
இவரும் இவரது சக அறுவடையாளர்களும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசால் இச்சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் (MBC) என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தின் 940 கிலோ மீட்டர் கடற்கரையோரத்தில் சுமார் 600 க்கும் மேல் இல்லாத பெண்கள் கடற்பாசியை அறுவடை செய்து வருகின்றனர் என்று ராமநாதபுரம் மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் A. பால்சாமி குறிப்பிடுகிறார். ஆனால் அவர்கள் செய்யும் பணி, நமது மாநிலத்திற்குள் மட்டுமல்லாமல் பிற அதிகமான மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்து வருகிறது என்று கூறுகிறார்.
42 வயதாகும் ராணியம்மா, "நாங்கள் அறுவடை செய்யும் கடற்பாசி, அகார் உற்பத்தி செய்வதற்குச் செல்கிறது", என்று விளக்குகிறார். அது ஒரு வழவழப்பான பொருள், அது உணவினை கெட்டிப்படுத்த பயன்படுத்தப் படுகிறது.
இங்கு அறுவடை செய்யப்படும் கடல்பாசி உணவுத் தொழிலிலும், சில உரங்கள் தயாரிப்பதற்கான தனிமமாகவும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் மருந்து தயாரிப்பிலும் மற்றும் இதர நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பெண்கள் கடல் பாசியை அறுவடை செய்து மற்றும் உலர்த்தி பின்னர் பதனிடுவதற்காக மதுரை மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இப்பகுதியில் பெரும்பாலும் இரண்டு வகை கடற்பாசிகள் கிடைக்கின்றன அவை - மட்டக் கோரை (கிராசிலரிய) மற்றும் மரிக்கொழுந்து (ஜெலிடியம் அமான்சி). ஜெலிடியம் சில நேரங்களில் சாலடுகளில், புடிங்களில் மற்றும் ஜாம்களில் பயன்படுத்தப்படுகிறது. அது உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு உதவுவதாக நம்பப்படுகிறது மேலும் சில நேரங்களில் மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மட்டக் கோரை (கிராசிலரிய) மற்ற தொழில்துறை நோக்கங்களுடன், துணிகளில் சாயம் ஏற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இத்தகைய பரந்த அளவிலான தொழிற்சாலைகளில் கடற்பாசி பிரபலமடைந்து இருப்பதும் அதன் அதிகப்படியான சுரண்டலுக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது. ஒழுங்கற்ற அறுவடை கடற்பாசி கிடைப்பதில் கடும் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது என்று மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (மண்டபம் முகாம், இராமநாதபுரம்) சுட்டிக் காட்டியுள்ளது.
![](/media/images/03-PK-20150103-0203-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
P. ராணியம்மா அவரது மரிக்கொழுந்து அறுவடையுடன், அது உண்ணக்கூடிய சிறிய கடற்பாசி வகையாகும்.
விளைச்சலும் அந்த வீழ்ச்சியையே பிரதிபலிக்கின்றது. "ஐந்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஏழு மணி நேரத்தில் குறைந்தது 10 கிலோ கிராம் மரிக்கொழுந்தை அறுவடை செய்தோம்", என்று 45 வயதாகும் S. அமிர்தம் கூறுகிறார். "ஆனால் இப்போது ஒரு நாளைக்கு 3 முதல் 4 கிலோ வரை கூட கிடைப்பதில்லை. மேலும் கடந்த சில ஆண்டுகளில் கடற்பாசியின் அளவும் சுருங்கிவிட்டது", என்று கூறுகிறார்.
அதனைச் சார்ந்திருந்த தொழிற்சாலைகளும் குறைந்துவிட்டன. கடைசியாக 2014 ஆம் ஆண்டின் கணக்கின்படி மதுரையில் மொத்தம் 37 அகார் தொழிற்சாலைகள் இருந்தது, என்று அம்மாவட்டத்தில் கடல்பாசிகள் பதனிடும் தொழிற்சாலையை வைத்திருக்கும் A. போஸ் என்பவர் தெரிவிக்கிறார். ஆனால் இன்று வெறும் ஏழு தொழிற்சாலைகளை இருக்கின்றன - மேலும் அவை அவற்றின் முழுத்திறனில் 40 சதவிகிதம் அளவுக்கே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். அகில இந்திய அகார் மற்றும் ஆல்ஜினேட் உற்பத்தியாளர் நலச் சங்கம் என்ற அமைப்பின் தலைவராக போஸ் இருந்திருக்கிறார் - அந்த சங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுப்பினர்கள் பற்றாக்குறையால் செயல்படாமல் இருக்கிறது.
"எங்களுக்கு வேலை கிடைக்கும் நாட்களும் குறைந்துவிட்டது", என்று 55 வயதாகும் மாரியம்மா கூறுகிறார், இவர் கடந்த 40 ஆண்டுகளாக கடற்பாசி அறுவடை செய்ய முக்குளித்து வருகிறார். "ஓய்வு காலத்தில் எங்களுக்கு வேறு வேலை வாய்ப்புகளும் இல்லை", என்று கூறுகிறார்.
மாரியம்மாள் பிறந்த 1964 ஆம் ஆண்டில் மாயக்குளம் கிராமத்தில் ஒரு வருடத்திற்கு 179 நாட்களுக்கு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமானதாக இருந்தது. 2019 ஆம் ஆண்டில் இது போன்ற வெப்ப நாட்கள், 271 நாட்களாக மாறி இருக்கிறது - இது 50 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு. இந்த ஜூலை மாதம் நியூயார்க் டைம்ஸ் ஆன்லைனில் வெளியிட்ட பருவநிலை மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த ஊடாடும் கருவியின் கணக்கீட்டின் படி, அடுத்த 25 ஆண்டுகளில், இப்பகுதியில் 286 முதல் 324 நாட்கள் வரை வெப்பமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடல்களும் வெப்பம் அடைகின்றன என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
இவை அனைத்தும் பாரதிநகரின் மீனவப் பெண்களை மட்டுமல்லாமல் அவர்களையும் தாண்டி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பருவநிலை
மாற்றத்திற்கான இடைக்கால குழுவின் (IPCC) சமீபத்திய அறிக்கையில்
, ஒப்புதல் அளிக்கப் படவில்லை, கடற்பாசி பருவநிலை அழுத்தத்தைத் தணிப்பதில் முக்கியக் காரணியாக இருக்கக்கூடும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அந்த அறிக்கையே இதையும் ஒப்புக்கொள்கிறது: "கடற்பாசி வளர்ப்பில் மேலும் ஆராய்ச்சி கவனம் தேவை", என்று ஆணை பிறப்பித்திருக்கிறது.
கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் கடல்சார் ஆய்வுகள் பள்ளியின் பேராசிரியர் துகின் கோஷ் அந்த அறிக்கையின் முதன்மை ஆசிரியர்களில் ஒருவர். அவரது கருத்துக்கள் மீனவர்கள் தங்கள் மகசூல் குறைவதை பற்றிக் கூறுவதை மீண்டும் உறுதிப் படுத்துகின்றது. "இது கடல் பாசிகளை மட்டுமல்லாமல் குறைந்து வரும் அல்லது அதிகரித்து வரும் (இடப்பெயர்வு போன்றவை) பிற பல செயல்முறைகளின் தொகுப்பாகும்", என்று PARI க்கு தொலைபேசியில் தெரிவித்தார். "
மீன்
விளைச்சல், இறால் விதை மகசூல், மற்றும் நண்டுகள் சேகரிப்பு, தேன் சேகரிப்பு, இடப்பெயர்வு (
சுந்தரவனத்தில்
காணப்படுவதைப் போல) மற்றும் பல, ஆகியவற்றை உள்ளடக்கிய கடல் மற்றும் நிலம் தொடர்பான பல விஷயங்களில் இது உண்மையானதாக இருக்கும்", என்றும் கூறுகிறார்.
![](/media/images/04-PK-20150104-0477-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
சில சமயங்களில், பெண்கள் இங்கிருந்து அருகிலுள்ள தீவுகளுக்கு ஒரு படகில் சென்று அங்கு போய் முக்குளிப்பர்.
மீன்பிடி சமூகத்தினர் என்ன சொல்கின்றனர் என்பதில் ஒரு அர்த்தம் உள்ளது, என்று பேராசிரியர் கோஷ் கூறுகிறார். "இருப்பினும், மீன்களைப் பொறுத்தவரை இது பருவநிலை மாற்றம் என்னும் ஒரு விஷயம் மட்டுமல்ல - அதிக அளவில் இழுவை படகுகள் மற்றும் தொழில்துறை அளவிலான மீன் பிடித்தல் ஆகியவையும் அதிகச் சுரண்டலுக்கு ஒரு காரணமாகும். இது பாரம்பரிய மீனவர்களின் வழக்கமான கால்வாய்களில் மீன் பிடிப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது", என்று கூறுகிறார்.
இழுவைப் படகுகள் கடற்பாசியை பாதிக்காது என்றாலும், எள்ளளவும் சந்தேகமில்லாமல் அதிகப்படியான தொழில்துறை சுரண்டல் அவற்றை பாதிக்கிறது. பாரதிநகரில் இருக்கும் பெண்களும் மற்றும் அவர்களது சக அறுவடைக்காரர்களும், சிறியதாக இருந்தாலும், அந்த நடைமுறையில் தங்களது முக்கியமான பங்கினை பற்றி சிந்தித்து இருப்பதாகத் தெரிகிறது. அவர்களுடன் பணியாற்றிய ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், விளைச்சல் குறைந்து வருவதை பற்றி கவலைப்பட்டு, தங்களுக்குள் கூட்டங்களை நடத்தி, அதில் முறையான அறுவடையை ஜூலை முதல் ஐந்து மாதங்களுக்கு மட்டும் என்று கட்டுப்படுத்த முடிவு செய்திருக்கின்றனர். பின்னர் மூன்று மாதங்களுக்கு அவர்கள் கடலுக்கு செல்வதில்லை - கடற்பாசிகள் புத்துயிர் பெற அனுமதிக்கின்றனர். மார்ச் முதல் ஜூன் வரை, அவர்கள் அறுவடை செய்கிறார்கள், ஆனாலும் ஒரு மாதத்தில் மிகக் குறைவான நாட்கள் மட்டுமே கடலுக்குச் செல்கின்றனர். எளிதாகக் கூற வேண்டுமென்றால், இப்பெண்கள் தங்களுக்கு என்று ஒரு சுய- ஒழுங்குமுறை ஆட்சியை உருவாக்கியுள்ளனர்.
இது ஒரு சிந்தனைக்குரிய அணுகுமுறை, ஆனால் இதுவும் அவர்களுக்கு ஒரு செலவில் தான் வருகிறது. "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (MGNREGA) கீழ் மீனவர்களுக்கு வேலை வழங்கப் படுவதில்லை", என்று மாரியம்மா கூறுகிறார். "அறுவடை காலத்தில் கூட நாங்கள், ஒரு நாளைக்கு ரூபாய் 100 முதல் 150 வரை சம்பாதிப்பதே மிகவும் கடினம்", என்று அவர் கூறுகிறார். அறுவடை நேரத்தில், ஒவ்வொரு பெண்ணும் ஒரு நாளைக்கு 25 கிலோ கிராம் கடற்பாசி வரை சேகரிக்க முடியும், ஆனால் அதற்காக அவர்கள் பெரும் விலை (அதுவும் குறைந்து கொண்டே வருகிறது) அவர்கள் கொண்டு வரும் கடற்பாசியின் வகையினைப் பொறுத்து மாறுபடும், என்று கூறுகிறார்.
விதிகள் மற்றும் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களும் இந்த விஷயத்தை மிகவும் சிக்கலாகி இருக்கிறது. 1980 ஆம் ஆண்டு வரை, அவர்களால் நல்ல தீவு, சல்லி மற்றும் உப்புத்தண்ணி ஆகிய தொலை தூரத்தில் உள்ள தீவுகளுக்கும் செல்ல முடிந்தது - அவற்றில் சில இரண்டு நாள் படகுப் பயண தூரத்தில் கூட இருந்தன. அவர்கள் வீடு திரும்புவதற்கு முன் ஒரு வார காலம் அங்கேயே தங்கியிருந்து கடற்பாசியை சேகரித்தனர். ஆனால் அந்த வருடம், அவர்கள் சென்று வந்த 21 தீவுகளும் மன்னார் வளைகுடா தேசிய பூங்காவின் கீழ் கொண்டு வரப்பட்டது - மேலும் அதன் மூலம் அது வனத் துறையின் ஆளுகைக்கு உட்பட்டதாகிவிட்டது. வனத்துறையினர் அவர்களுக்கு தீவுகளில் தங்குவதற்கான அனுமதியை மறுத்துவிட்டனர் மற்றும் அவர்கள் இப்பகுதிக்கு செல்வதை தடுப்பதும் அதிகரித்து வருகிறது. இந்தத் தடையை எதிர்த்து செய்யப்படும் போராட்டங்கள் யாவும் அரசிடமிருந்து எந்த ஒரு அனுதாப பதிலையும் பெறவில்லை. 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை விதிக்கப்படும் அபராதத் தொகையை எண்ணி அஞ்சி, அவர்கள் இப்போது தீவுகளுக்கு அதிகம் செல்வதில்லை.
![](/media/images/05-PK-20190716-0202-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
கடல் பாசி சேகரிக்க இப்பெண்கள் பயன்படுத்தும் வலைகள்; இந்த செயல்முறையால், அவர்கள் அடிக்கடி சிராய்ப்புகள் மற்றும் இரத்தக்கசிவுகளுக்கு ஆளாகின்றனர், ஆனாலும் பை நிறைகிறது என்பது அவர்கள் குடும்பத்தை ஆதரிப்பதற்கான வருமானத்தை தருகிறது என்பதையே குறிக்கிறது.
எனவே வருமானம் மேலும் குறைந்து விட்டது. நாங்கள் தீவுகளில் ஒரு வாரம் தங்கியிருந்த காலத்தில் குறைந்தது 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை சம்பாதித்தோம், என்று தனது 12 வயது முதல் கடற்பாசி அறுவடை செய்து வரும் S. அமிர்தம் கூறுகிறார். அப்போது நாங்கள் மட்டக் கோரை மற்றும் மரிக்கொழுந்து ஆகிய இரண்டு வகை கடற்பாசிகளையும் பெற்றோம். ஆனால் இப்போது ஒரு வாரத்தில் 1,000 ரூபாய் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினம்", என்று கூறுகிறார்.
அறுவடை செய்பவர்களுக்கு பருவநிலை மாற்றத்தைச் சுற்றி நடக்கின்ற விவாதங்களைப் பற்றி தெரியாது, ஆனால் அவர்கள் அதை அனுபவித்து இருக்கின்றனர் மற்றும் அதன் சில தாக்கங்களையும் அறிந்து இருக்கின்றனர். அவர்களது வாழ்க்கையிலும் தொழிலிலும் பல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். கடலின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வெப்பநிலை, வானிலை மற்றும் பருவநிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவர்கள் கவனித்தும் மற்றும் அனுபவித்தும் இருக்கின்றனர். இப்படியே ஏற்படுகின்ற பல மாற்றங்களில் மனிதச் செயல்பாட்டின் (அவர்களது செயல்கள் உட்பட) பங்கைப் பற்றியும் அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். அதே நேரத்தில், அவர்களது ஒரே வருமானமும் சிக்கலான செயல்முறைகளால் முழுவதும் அடைக்கப்பட்டுவிட்டது. மேலும், MGNREGA வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கின்றது என்று மாரியம்மா கருத்துக் கூறியது போல, அவர்களுக்கு மாற்று வழிகள் எதுவும் ஏற்படுத்தித் தரவில்லை என்பதை பற்றியும் அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.
மதியத்தில் இருந்து நீர்மட்டம் உயர துவங்குகிறது எனவே அவர்கள் அந்த நாளுக்கான வேலையை முடித்துக் கொண்டு கிளம்பத் தயாராகின்றனர். ஒரு சில மணி நேரங்களில், அவர்கள் சென்ற படகில் அவர்கள் சேகரித்த கடற்பாசியை கரைக்கு கொண்டு வந்து வலைப் பையிலேயே கரையில் கிடத்தி வைத்து விடுகின்றனர்.
அவர்களின் செயல்பாடு எளிமையானது தான் ஆனால் அதிலும் ஆபத்துகள் இல்லாமல் இல்லை. கடலின் செயல்பாடு மிகவும் கடினமானதாகி வருகிறது, மேலும் சில வாரங்களுக்கு முன்பு கூட, இப்பகுதியில் ஏற்பட்ட புயலில் 4 மீனவர்கள் இறந்துவிட்டனர். அதில் மூன்று உடல்களைத் தான் மீட்க முடிந்தது, நான்காவது உடலும் கிடைத்த பிறகு தான் காற்றின் தீவிரம் குறையும் மற்றும் கடல் அமைதி கொள்ளும் என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
உள்ளூர் மக்கள் கூறுவது போல, காற்றின் துணையின்றி, கடல் சார்ந்து நடக்கும் அனைத்து வேலைகளும் சவாலானதாகத் தான் இருக்கும். பருவ நிலைகளில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்களால், பல நாட்கள் கணிக்க முடியாததாகி இருக்கிறது. அடையாளப் பூர்வமாகவும், சில சமயங்களில் உண்மையாகவும் கூட அவர்கள் அமைதியற்ற கடலில் நிலை தடுமாறி தவிக்கின்றனர் என்பதை அறிந்து வைத்திருந்தாலும் கூட - இப்பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தின் ஒரே ஆதாரத்தைத் தேடி அமைதியற்ற கடலுக்குள் செல்கின்றனர்.
![](/media/images/06-PK-20190716-0667-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
கடற்பாசி சேகரிக்க கடலில் முக்குளிப்பதற்கு படகை செலுத்துகிறார்: காற்றின் துணையின்றி, கடல் சார்ந்து நடக்கும் அனைத்து வேலைகளும் சவாலானதாகத் தான் இருக்கும். பருவ நிலைகளில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்களால், பல நாட்கள் கணிக்க முடியாததாகி இருக்கிறது
![](/media/images/07-PK-20190716-0417-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
ஒரு கடற்பாசி அறுவடைகாரர் கிழிந்த கையுறையுடன் - அதுவே பாறைகள் மற்றும் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் நீரின் போக்கு ஆகியவற்றுக்கு எதிரான மெல்லிய பாதுகாப்பு அரண்
![](/media/images/08-PK-20190716-0643-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
வலைகளை தயார்நிலையில் வைக்கின்றனர்: இப்பெண்களின் பாதுகாப்பு கவசம் என்பது கண்களுக்கான கண்ணாடி, விரல்களைச் சுற்றி சுற்றி கொள்ள சிறு துண்டான துணிகள் அல்லது கையுறைகள் மற்றும் கூர்மையான பாறைகளால் கால் வெட்டுப் படாமல் இருக்க ரப்பர் செருப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது
![](/media/images/09-PK-20150103-0297-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
S. அமிர்தம் வலுவான அலைகளுக்கு எதிராகப் போராடி, பாறைகளை அடைய முயற்சி செய்கிறார்
![](/media/images/10-PK-20150103-0176-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
M. மாரியம்மா கடற்பாசியினை சேகரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வலைப் பையின் கயிற்றை இறுக்குகிறார்
![](/media/images/11-PK-20150103-0318-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
முக்குளிப்பதற்கு தயாராக இருக்கிறார்
![](/media/images/12-PK-20150103-0223-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
மேலும் அதன் பின்னர் மூழ்கி தங்களை கடல் படுக்கையை நோக்கி உந்தித் தள்ளுகின்றனர்
![](/media/images/13-PK-20150103-0124-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
ஆழத்திற்குள் - இப்பெண்களின் பணியிடம், நீருக்கு அடியிலான மீன் மற்றும் கடல் உயிரினங்களின் ஒளிபுகா உலகம்
![](/media/images/14-PK-20150103-0135-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
இந்த நீண்ட இலைகளை கொண்ட, மட்டக் கோரை கடற்பாசி, சேகரிக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு மேலும் துணிகளில் சாயம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது
![](/media/images/15-PK-20150103-0215-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
கடல் படுகையில் மிதந்தபடியே பல நொடிகளுக்கு மூச்சை தம்மடக்கி மரிக்கொழுந்து கடற்பாசியை சேகரிக்கிறார் ராணியம்மா
![](/media/images/16-PK-20150103-0268-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
பின்னர், மாறிக் கொண்டே இருக்கும் கடல் அலைகளுக்கு மத்தியில், தங்களது கடின உழைப்பால் பெற்ற அறுவடையை எடுத்துக் கொண்டு கடலின் மேற்பரப்பிற்கு வருகின்றனர்
![](/media/images/17-PK-20150104-0480-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
ஓதம் உள்ளே வரத் துவங்குகிறது, ஆனாலும் பெண்கள் மதியம் வரை தொடர்ந்து வேலையில் ஈடுபடுகின்றனர்
![](/media/images/18-PK-20150104-0547-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
ஒரு முறை முக்குளித்த பிறகு தனது உபகரணங்களை சுத்தம் செய்கிறார் ஒரு கடற்பாசி அறுவடையாளர்
![](/media/images/19-PK-20190716-0161-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
கரைக்குத் திரும்பும் வழியில், முற்றிலும் சோர்வடைந்த பெண்கள்
![](/media/images/20-PK-20150104-0493-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
தாங்கள் சேகரித்த கடற்பாசியை, கரைக்கு இழுத்து வருகின்றனர்
![](/media/images/21-PK-20190716-0464-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
மற்றவர்கள் அந்த நாளுக்கான தங்கள் கரும்பச்சை நிற அறுவடை நிறைந்த வலைப் பைகளை இறக்குகின்றனர்
![](/media/images/22-PK-20150103-0389-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
கடற்பாசிகள் கொண்ட சிறிய படகு ஒன்று கரையை அடைந்து விட்டது; அதனை நங்கூரம் இடுவதற்கு அறுவடையாளர் ஒருவர் வழிகாட்டுகிறார்
![](/media/images/23-PK-20190716-0189-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
ஒரு குழு அறுவடை செய்யப்பட்ட கடற்பாசிகளை இறக்குகிறது
![](/media/images/24-PK-20190716-0242-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
அன்றைய தினத்துக்கான சேகரிப்பை எடை போடுகின்றனர்
![](/media/images/25-PK-20190716-0500-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
கடற்பாசியை உலர்த்துவதற்கு தயார் செய்கின்றனர்
![](/media/images/26-PK-20190716-0215-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
உலர்த்துவதற்கு பரப்பிக் கிடக்கும் கடற்பாசிகளுக்கு மத்தியில் சிலர் தங்களது சேகரிப்பை கொண்டு செல்கின்றனர்
![](/media/images/27-PK-20190716-0581-PK-Tamil_Nadus_seaweed_ha.width-1440.jpg)
மேலும் பல மணி நேரம் கடலிலும் மற்றும் நீருக்கு அடியிலும் இருந்த பின்னர் இப்போது நிலத்தில் இருக்கும் தங்களது வீடுகளுக்குத் திரும்புகின்றனர்
அட்டைப்படம்: A. மூக்குபொரி தனது வலையை இழுத்து கொண்டிருக்கிறார். இப்போது 35 வயதாகும் அவர், தனது 8 வயது முதல் கடற்பாசியை சேகரிக்க முக்குளித்து வருகிறார். (படம்: M. பழனி குமார் / பாரி)
இக்கட்டுரைக்கு தாராளமாக உதவிய செந்தளிர்.S அவர்களுக்கு நன்றிகள் பல.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த தகவல் அறிக்கை, சாதாரன மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.
இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? [email protected] என்ற முகவரிக்கு CCயுடன் [email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
தமிழில்: சோனியா போஸ்