மாட்டுத் தொழுவத்தின் மண் தரையில் இரு கைகளாலும் மஞ்சித் கவுர் வழித்தெடுக்கிறார். குத்த வைத்து அமர்ந்திருக்கும் 48 வயதான அவர், இன்னும் கொழகொழப்பாக இருக்கும் சாணத்தை வழித்து கையில் வைத்திருக்கும் சட்டியில் போடுகிறார். பிறகு அதை தலையில் தூக்கி வைக்கிறார். விழுந்து விடாதபடிக்கு நேர்த்தியாக தலையில் வைத்துக் கொண்டு வீட்டின் மரக் கதவுகளை தாண்டி 50 மீட்டர் தொலைவில் இருக்கும் சாணக்குவியலை நோக்கிச் செல்கிறார். நெஞ்சுயரத்துக்கு இருக்கும் குவியல், பல மாதங்களாக அவர் செலுத்திய உழைப்புக்கு சான்று.
ஏப்ரல் மாதத்தின் சுட்டெரிக்கும் மதிய வேளை அது. 30 நிமிடங்களில் எட்டுமுறை இந்த நடையை மஞ்சித் நடந்துவிட்டார். இறுதியில் சட்டியை வெறுங்கைகள் கொண்டு கழுவுகிறார். வேலை முடித்துக் கிளம்புவதற்கு முன், சிறு ஸ்டீல் தூக்கில் மாட்டுப்பாலை அரை லிட்டர், பேரக் குழந்தைக்காக நிரப்பிக் கொள்கிறார்.
காலை 7 மணி தொடங்கி அவர் வேலை பார்த்ததில் இது ஆறாவது வீடு. எல்லா வீடுகளுமே பஞ்சாபின் தம் தாரன் மாவட்டத்திலுள்ள ஹவேலியன் கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியான ஜாட் சீக்கியரின் வீடுகள்.
“மஜ்பூரி ஹை,” என்கிறார் அவர். கையறுநிலைதான் மாட்டுத் தொழுவத்தை சுத்தப்படுத்தும் வேலையை அவர் செய்ய வைத்திருக்கிறது. ஒருநாளில் எவ்வளவு சாணத்தை தலையில் சுமக்கிறார் என அவருக்கு தெரியவில்லை. ஆனால், “சுமையை தூக்கி என் தலை அதிகமாக வலிக்கிறது,” என்கிறார்.
வீடு திரும்பும் வழியில் தங்க நிற கோதுமை வயல்கள் அடிவானம் வரை நீண்டிருக்கிறது. அவை யாவும், ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் அறுவடைத் திருவிழா காலத்தில் அறுவடை செய்யப்படும். ஹவெலியனின் ஜாட் சீக்கியர்தான் கண்டிவிண்ட் ஒன்றியத்தின் பெருமளவு விவசாய நிலங்களின் உரிமையை கொண்டிருக்கின்றனர். பிரதானமாக அரிசியும் கோதுமையும் விளைவிக்கப்படுகிறது.















