யஸ்வந்த் கோவிந்த், தனது 10 வயது மகள் சாதிகா பள்ளிக்குச் செல்வதில் மகிழ்ச்சியடைகிறார். "அவள் படிக்கிறாள், அவளுடைய மதிய உணவும் கவனித்துக் கொள்ளப்படுகிறது", என்று அவர் நாற்காலிக்காக  கட்டைகளை செதுக்கிய படியே கூறுகிறார். சாதிகா அவளது நாளை ஒரே ஒரு குவளை தேநீருடன் துவங்குகிறாள். பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவிற்கு பிறகு அவள் இரவு உணவு மட்டுமே உண்கிறாள், அந்த இரவு உணவும் இக்குடும்பம் பெறும் ரேஷன் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இடையில் அவள் வேறு எதுவும் உண்பதில்லை என்று கூறுகிறார்.

"எங்களுக்கு 25 கிலோ அரிசி, 10 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ சர்க்கரை மட்டுமே ரேஷன் கடையில் இருந்து கிடைக்கிறது", என்று கோசாலி கிராமத்தில் வசிக்கும் 47 வயதாகும் கோவிந்த், தனது வேலையில் இருந்து கண்ணெடுக்காமல் கூறுகிறார்; அவர் எப்போதாவது தான் தச்சு வேலை செய்கிறார் இல்லையேல் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகிறார். மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் மொகதா தாலுகாவில் உள்ள அவரது கிராமத்தில் உள்ள கோவிந்த் மற்றும் பெரும்பாலான மக்கள் தக்கர் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். "எங்களுடையது ஏழு பேர் கொண்ட குடும்பம்", என்று அவர் கூறுகிறார். "தானியங்கள் அனைத்தும் 15 நாட்களில் தீர்ந்துவிடும்". விடுமுறை நாட்கள் அல்லது கோடை விடுமுறையில் பள்ளிக்குச் செல்லாமல் குழந்தைகள் வீட்டில் மதிய உணவு சாப்பிடும் போது ரேஷன் பொருட்கள் இன்னும் வேகமாக தீர்ந்துவிடும், என்று கூறுகிறார்.

கோவிந்தைப் போலவே பால்கர் மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள பல பெற்றோர்களுக்கு வாரத்தில் 6 நாட்களுக்கு தங்களது குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைப்பது தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு ஊக்கப்படுத்த கூடிய காரணியாகும். மாவட்டத்தில் இருக்கின்ற மூன்று மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 1.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் (2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி). இங்குள்ள பல வீடுகள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலை பொருட்களையே அவை சார்ந்துள்ளது. "குறைந்தது என் மகள் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது வயிறு நிரம்பும் படி சாப்பிடுகிறாள்", என்று கோவிந்த் கூறுகிறார்.

Yashwant Govind doing carpentry work
PHOTO • Parth M.N.
Meal being served to students at the school
PHOTO • Parth M.N.

யஸ்வந்த் கோவிந்த் தன் மகள் சாதிகா பள்ளியில் மதிய உணவு சாப்பிடுகிறாள் என்பதால் நிம்மதி அடைகிறார்; அதுவே காலையில் ஒரு குவளை தேநீருக்கு பிறகு அவள் உட்கொள்ளும் அந்நாளுக்கான முதல் முழு உணவு

சாதிகா கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படிக்கிறார். 2017 -18 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள 61,659 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சுமார் 4.6 மில்லியன் மாணவர்கள் படித்து வந்தனர்; (2007 - 08 ஆண்டில் கிட்டத்தட்ட 6 மில்லியனில் இருந்து இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது; இவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நான் ஜூன் 2018 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த கேள்வி மூலம் பெறப்பட்ட தகவல்கள்). கிராமபுற ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் தனியார் பள்ளிக் கூடத்திற்கு செல்ல வசதி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். (மேலும் காண்க: சில நேரங்களில் பள்ளியை போன்ற வேறு ஒரு இடம் இருப்பதில்லை )

ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் இந்த மதிய உணவு திட்டத்தின் மூலம் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தினசரி மதிய உணவை வழங்குகின்றனர். "ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 100 கிராம் சாதம் மற்றும் 20 கிராம் பருப்பினை பெற்றுக் கொள்ளலாம். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 150 கிராம் அரிசி மற்றும் 30 கிராம் பருப்பினை ஒரு நாளைக்கு உண்டு கொள்ளலாம்", என்று கூறுகிறார் ராம்தாஸ் சகுரே, அதே வேளையில் மதிய இடைவேளைக்கான மணியும் ஒலிக்கிறது. கோசாலியில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோலி மகாதேவா ஆதிவாசி கிராமமான  தோண்ட்மரியாச்சிமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சகுரே ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

மணி சத்தம் கேட்டு 6 முதல் 13 வயதான மாணவர்கள் ஸ்டீல் தட்டுகளை எடுத்து வெளியே இருந்த தண்ணீர் தொட்டியில் அதை கழுவி, பள்ளிக்கு எதிர்ப்புறம் உள்ள ஹனுமான் கோவிலில் மதிய உணவுக்காக ஒன்று கூடுகிறார்கள். அப்போது மதியம் 1:30 மணி அவர்கள் அவர்களது பங்கு அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை பெற வரிசையில் அமர்ந்து காத்திருக்கின்றனர். "(மாநில அரசு வழங்கிய) நிதிநிலை ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர் ஒருவருக்கான எரிபொருள், காய்கறி ஆகியவற்றுக்கான செலவு நாள் ஒன்றுக்கு 1.51 ரூபாய். அதுவே ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கானது 2.17 ரூபாய். அரசே அரிசி, உணவு தானியங்கள், எண்ணெய், உப்பு மற்றும் மசாலாப் பொருட்களை வழங்குகிறது", என்று சகுரே கூறுகிறார்.

The students at the Dhondmaryachimet ZP school wash their plates before eating their mid-day meal of rice and dal
PHOTO • Parth M.N.
The students at the Dhondmaryachimet ZP school wash their plates before eating their mid-day meal of rice and dal
PHOTO • Parth M.N.

தோண்ட்மரியாச்சிமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்கள் தங்களது மதிய உணவான அரிசி மற்றும் பருப்பினை சாப்பிடுவதற்கு முன்பு தட்டுகளைக் கழுவுகின்றனர்

பல பெற்றோர்களுக்கு அவர்களது குழந்தை பெறும் உணவில் என்ன இருக்கிறது என்பதை விட அவர்கள் உணவைப் பெறுகிறார்கள் என்பதே ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது. இருப்பினும் உணவு அவர்கள் வயிற்றை நிறைத்தாலும், அது ஊட்டச்சத்தானதாக இல்லை என்று புனேவை சேர்ந்த ஊட்டச்சத்து உரிமை திட்டமான சாதியுடன் இணைந்து பணியாற்றும் பொது சுகாதார மருத்துவரான டாக்டர் அபய் சுக்லா கூறுகிறார். "ஒரு வளரும் குழந்தைக்கான மதிய உணவு 500 கலோரிகளை கொண்டதாக இருக்க வேண்டும்", என்று அவர் கூறுகிறார். "ஆனால் 100 கிராம் அரிசி சமைத்த பின் 350 கலோரிகளை கொடுக்கும். மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு, தாதுக்கள், வைட்டமின்கள் ஆகியவை ஒரு முழு உணவின் ஐந்து அடிப்படை கூறுகளாகும், இவை அனைத்தும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் வழங்கப்படும் உணவில் இருப்பதில்லை. 1.51 ரூபாயில் நீங்கள் எதை வாங்க முடியும்?  அதை வைத்து ஒன்றும் வாங்க முடியாது. அந்த விலை எரிபொருளையும் உள்ளடக்கியிருக்கிறது, இவ்வளவு மலிவான விலையில் இப்போது எரிபொருள் கிடைப்பதில்லை. சில நேரங்களில் ஆசிரியர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டுமே காய்கறிகளை (பெரும்பாலும் உருளைக்கிழங்கு மட்டுமே) வழங்குகின்றனர், ஏனெனில் கொடுக்கப்பட்டிருக்கின்ற நிதியை வைத்து இவ்வாறு தான் சமாளிக்க முடியும் என்கின்றனர். குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடனே இருக்கின்றனர்", என்று கூறுகிறார்.

இதைத் தவிர அகமதுநகர் மாவட்டத்தின் அகோலா தாலுகாவின் வீர்காவுன் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆர்வலருமான பௌ சஸ்கார் கூறுகையில், நிர்வாகத்தால் வழங்கப்படும் அரிசி மற்றும் மசாலாக்கள் சில சமயங்களில் கலப்படத்துடன் இருக்கின்றன என்கிறார். "மசாலா பொருட்கள் குறைந்த தரம் வாய்ந்தவையாக வழங்கப்படுகின்றன. பல பள்ளிகளில் இதனை சேமித்து வைக்கவோ அல்லது உணவினைத் தயாரிக்க ஒரு உணவுக்கூடம் கூட இல்லை", என்று அவர் கூறுகிறார். "போதுமான கட்டமைப்புகள் இல்லை என்பது உணவு திறந்த வெளியிலேயே சமைக்கப்படுகிறது என்பதையே குறிக்கிறது அப்படி சமைப்பதால் உணவு அசுத்தமாக வாய்ப்புள்ளது. இந்தத் திட்டம் மிகவும் தேவையானது தான், ஆனால் அதனை இன்னும் நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்", என்று கூறுகிறார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு ஆர்வலர் பெற்ற தகவல்களை மேற்கோள் காட்டி ஹிந்துஸ்தான் டைம்ஸ் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி மகாராஷ்டிராவில் 504 மாணவர்கள் 5 ஆண்டுகளில் மதிய உணவுத் திட்டதில் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறுகிறது.

வீர்காவுன் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரான 44 வயதாகும் ராம் வக்சௌரே கூறுகையில், சில சமயங்களில் நல்ல விவசாயிகளிடம் பள்ளிக்கு தரமான காய்கறிகளை வழங்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர் என்கிறார். "அவர்களால் எப்போது கொடுக்க முடியுமோ அப்போது கொடுக்கிறார்கள்", என்று அவர் கூறுகிறார். "ஆனால் தரிசு நிலங்கள் உள்ள பகுதியில் இருக்கும் ஆசிரியர்கள் அதையும் செய்ய முடியாது", என்று கூறுகிறார். (மேலும் காண்க: 'நான் ஒரு ஆசிரியர் என்பதை போலவே உணரவில்லை').

Lakshmi Digha cooking outside her house
PHOTO • Parth M.N.
Mangala Burange with her son Sagar seated outside their house
PHOTO • Parth M.N.

இடது: லட்சுமி திகா கோசாலியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சமையல் மற்றும் சுத்தம் செய்கிறார், அவர் சில நேரங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கான பொருட்களுடன் தனது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட ரேஷன் பொருட்களையும் சேர்க்கிறார். வலது: இந்த வருடத்தின் மோசமான அறுவடை காரணமாக மங்களா புராஞ்சே, இந்த மதிய உணவுத் திட்டத்தை தனது மகன் சாகருக்கு கிடைத்த 'கூடுதல் பலனாக' காண்கிறார்

எனவே சில நேரங்களில் கோசாலியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருக்கும் 103 மாணவர்களுக்கும் அவர் சமைக்கும் உணவில் லட்சுமி திகா தனது குடும்பத்திற்கு பொதுவினியோக திட்டத்தில் கிடைக்கும் அரிசியைப் பயன்படுத்துகிறார். "நாங்கள் 'சமாளித்துக் கொள்வோம்'. ஆனால் சரியான நேரத்தில் அரிசி கிடைக்காத போது அது தான் ஒரே வழி", என்று அவர் பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கொட்டகையில் பெரிய பாத்திரத்தில் கிச்சடியை கிண்டியபடியே கூறுகிறார். "இந்த குழந்தைகளை பசியுடன் வைத்திருக்க எங்களால் முடியாது. இவர்களும் எங்களுடைய குழந்தையைப் போன்றவர்களே", என்று கூறுகிறார். ஊராட்சி ஒன்றியம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பள்ளிக்கு தேவையான தானியங்களை வழங்குகிறது, ஆனால் அது சில நேரங்களில் தாமதமாகும் என்று கூறுகிறார்.

திகாவின் நாள் காலை 6 மணிக்குத் துவங்கி மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிவடையும் போது முடிவடைகிறது. "மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன் நான் வளாகத்தை பெருக்கி விடுவேன், பின்னர் (அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து) தண்ணீர் எடுத்து வந்து நிரப்புவேன்", என்று அவர் கூறுகிறார். "நான் (நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொகதாவிலிருந்து) காய்கறிகளை வாங்கி வந்து, அவற்றை நறுக்கி உணவு தயாரிப்பேன். மதிய உணவு வழங்கிய பிறகு சுத்தம் செய்வேன். இதுவே நாள் முழுவதும் எடுக்கும்", என்று கூறுகிறார்.

எந்த ஒரு உதவியாளரும் இல்லாமல் தானே முழு வேலையையும் செய்வதால் திகாவிற்கு மாதம் ஒன்றுக்கு 1,500 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது, அவரது கணவர் தினசரி கூலி தொழிலாளியாக இருக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சமைப்பவர்களின் சம்பளம் மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய், மாதத்தில் 20 வேலை நாட்கள் வேலை ஒவ்வொன்றும் பத்து மணி நேரம் வரை நீடிக்கும் எனவே சமைப்பவர்கள் நாளொன்றுக்கு 50 ரூபாயை ஊதியமாகப் பெறுகின்றனர். இந்தத் தொகை 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து 1,500 ரூபாயாக அதிகரித்திருக்கிறது, அதுவும் ஆசிரியர்கள் மற்றும் மதிய உணவு சமைப்பவர்களின் நீண்ட கோரிக்கைக்கு பின்னர். "எனக்கு ஜனவரி மாதம் 12,000 ரூபாய் சம்பளமாக வந்தது” என்று திகா ஒரு புன்னகையுடன் கூறுகிறார். அவருக்கு எட்டு மாத சம்பளம் நிலுவையில் இருந்தது.

பால்கர் போன்ற ஒரு மாவட்டத்தில் விவசாய நிலங்கள் வறண்டு மற்றும் குறைந்த விளைச்சலையே தருகின்றன. இங்கு வசிப்பவர்கள் கிடைக்கின்ற பண்ணை வேலைகளில் ஈடுபடுகின்றனர் இதனால் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சமையல்காரர்களை தக்கவைத்துக் கொள்வது கடினமல்ல. இருப்பினும் அங்கு விவசாயம் நன்கு நடைபெறக் கூடிய பகுதிகளிலிருக்கும் ஆசிரியர்களுக்கு சமையல்காரர்கள் தக்கவைத்துக் கொள்வது ஒரு சவாலாக உள்ளது.

Alka Gore cooking at the ZP school
PHOTO • Parth M.N.
The children at the Ghosali school, as in all ZP schools, await the mid-day meal
PHOTO • Parth M.N.

இடது: அல்கா கோர் ஒரு விவசாயத் தொழிலாளியாக அதிக பணம் சம்பாதிக்க முடியும், ஆனால் அவர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சமைக்கிறார் காரணம் வறட்சியால் விவசாய வேலைகள் குறைந்துவிட்டது. வலது: அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இருப்பதைப் போல, கோசாலி பள்ளியில் உள்ள குழந்தைகளும் மதிய உணவுக்காக காத்திருக்கின்றனர்

அகமதுநகர் மாவட்டத்தில் செல்விகிரி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி பள்ளியின் தலைமை ஆசிரியரான அனில் மோகித் 2018 ஆம் ஆண்டு ஜூலையில் சில வாரங்களுக்கு மாணவர்களுக்கு உணவு சமைத்தார். "முன்னறிவிப்பின்றி சமையல்காரர் வேலையிலிருந்து வெளியேறிவிட்டார்", என்று அவர் கூறுகிறார். "மற்றொரு சமையல்காரரை கண்டுபிடிக்கும் வரை சமயலறைக்கு நானே பொறுப்பாக இருந்தேன்", என்கிறார். "அந்த சமயங்களில் குழந்தைகளுக்கு நான் சிறிது நேரம் தான் கற்பிக்க முடிந்தது. உணவைவிட அவர்களது படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க என்னால் முடியவில்லை", என்று கூறுகிறார். (மேலும் காண்க: மின்சாரம் தண்ணீர் கழிப்பறைகள் இல்லாமல் திணறும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் ).

செல்விகிரியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீர்காவுனில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தில் இருந்து 1,000 ரூபாயை வசூலித்து அங்கு வேலை பார்க்கும் இரண்டு சமையல்காரர்களுக்கு அவர்களது சம்பளத்தைவிட 500 ரூபாய் அதிகமாகக் கொடுக்கின்றனர். அங்கு வேலை பார்க்கும் சமையல்காரர்களில் ஒருவரான அல்கா கோர், ஒரு விவசாயக் கூலி தொழிலாளியாக நாளொன்றுக்கு 150 முதல் 200 ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். "வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே நான் வேலை செய்தாலும் கூட, பள்ளியில் பெறும் சம்பளத்தை விட அதிகமாக பெறுவேன்", என்று கூறுகிறார் அவர். ஆனால் வறட்சியின் காரணமாக விவசாய வேலைகள் குறைந்துள்ளதால் தான் இப்பள்ளியில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறுகிறார். "இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் எனது சம்பளத்தை தற்காலிகமாக உயர்த்தியதால் நான் இங்கு தொடர்ந்து வேலை செய்தேன். ஆனால் மழைக்காலம் வந்து, விதைப்புப் பருவம் துவங்கிய பின் இதனை நான் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். எனது முழு நாளையும் நான் பள்ளியிலேயே செலவிட வேண்டியிருப்பதால் பண்ணையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னுடைய ஆதரவில் தான் எனது மூன்று மகள்களும் இருக்கின்றனர்", என்று அவர் கூறுகிறார்.

மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மதிய உணவு திட்டத்தை சார்ந்து இருப்பதால் அதனை பற்றி குறை கூறுவதில்லை. "எங்களிடம் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது", என்று கூறுகிறார் மங்களா புராஞ்சே, அவரது 13 வயது மகன் சூரஜ், தோண்ட்மரியாச்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்து வருகிறார். "நாங்கள் எங்களது தேவைக்கான அரிசியை அறுவடை செய்கிறோம் ஆனால் விளைச்சல் நம்பகத்தன்மையற்றதாகிவிட்டது. இந்த ஆண்டு (2018) ஏற்பட்ட வறட்சியின் காரணமாக நாங்கள் வெறும் இரண்டு குவிண்டால் நெல்லை அறுவடை செய்தோம் . இத்தகைய சூழ்நிலையில் எங்களுக்கு என்ன கிடைத்தாலும் (மதிய உணவு) அது கூடுதல் பலனே", என்று கூறுகிறார்.

சாதிகாவை போல சூரஜும் காலையில் ஒரு குவளை தேநீருடன் தனது நாளை துவங்குகிறார். "அதையும், இரவு உணவையும் தான் வழக்கமாக நாங்கள் வீட்டில் எடுத்துக் கொள்வோம்", என்று அவர் கூறுகிறார். "இரவு உணவின் போது, முடிந்தவரை உணவு தானியங்களை நாங்கள் நீட்டிக்க வேண்டும் என்பதையே நினைவில் வைத்திருப்போம், அதுவும் குறிப்பாக அறுவடை குறைந்து இருக்கும் காலங்களில். எனவே, பள்ளியில் கொடுக்கப்படும் மதிய உணவை நான் எதிர்பார்த்து இருக்கிறேன்", என்று அவர் கூறுகிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose