"எனக்கு விளைநிலங்கள் இல்லை, எனது மூதாதையர்களுக்கும் இல்லை", என்று கமல்ஜீத் கவூர் கூறுகிறார். "ஆனால் என்னால் இயன்றளவு சிறிய உதவிகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நான் இங்கு வந்துள்ளேன், ஏனெனில் நான் அவ்வாறு செய்யாவிட்டால் என் குழந்தைகளின் தட்டுகளில் எதையாவது வைப்பதற்கு நான் பெருநிறுவன பேராசைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நான் அஞ்சுகிறேன்", என்று கூறுகிறார்.
35 வயதாகும் கமல்ஜீத் பஞ்சாபின் லூதியானா நகரை சேர்ந்த ஆசிரியர், அவர் மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து சிங்குவில் இரண்டு தையல் இயந்திரங்களை இயக்கி வருகிறார். அவர்கள் மூன்று நாட்கள் சுழற்சி முறையில் அங்கு வருகின்றனர் மேலும் சட்டைகளில் பொத்தான்கள் வைத்துத் தருவது போராடும் விவசாயிகளின் கிழிந்த சல்வார் காமீஸை தைத்து தருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 200 பேர் அவர்களது ஸ்டாலுக்கு வந்து செல்கின்றனர்.
சிங்குவில் இத்தகைய சேவைகள் பல வடிவங்களில் தாராளமாக கிடைக்கிறது - இவை அனைத்தும் போராடுபவர்களுக்கு எங்களது ஒருமைப்பாட்டை தெரிவிக்கின்றது.
சேவை செய்பவர்களில் இர்ஷாத் (முழு பெயர் கிடைக்கவில்லை) சிங்கு எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டுலி தொழிற் பகுதியில் உள்ள டிடிஐ மாலுக்கு வெளியே உள்ள குறுகிய முக்கில் ஒரு சீக்கிய போராட்டக்காரருக்கு தலையில் தீவிரமாக மசாஜ் செய்கிறார். இன்னும் பலர் தங்களது முறைக்காக காத்திருக்கின்றனர். இர்ஷாத் குருக்ஷேத்திரத்தைச் சேர்ந்த ஒரு சிகை திருத்தும் கலைஞர் அவர் இங்கு சகோதரத்துவ உணர்வுக்காக வந்திருப்பதாக கூறுகிறார்.
மேலும் இந்த வழியில், தனது மினி டிரக்குக்கு வெளியே அமர்ந்திருக்கிறார் சர்தார் குர்மிக் சிங், பஞ்சாபிலிருந்து சிங்கு வரை வண்டிகளில் நெரிசலான நீண்ட நேர பயணத்திற்குப் பின் அவர்களது வலிக்கும் தசைகளை தளர்த்த இலவச மசாஜ் கோரி அவரைச் சுற்றி பலர் நின்று கொண்டிருக்கின்றனர். அவர் ஏன் இங்கு உதவ வந்திருக்கிறார் என்பது பற்றி கூறுகையில், "அவர்கள் இப்போது பல வகையான வலிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்", என்று தெரிவித்தார்.
சண்டிகரை சேர்ந்த மருத்துவரான சுரீந்தர் குமாரைப் பொருத்தவரை மற்ற மருத்துவர்களுடன் சேர்ந்து அவர் சிங்குவில் மருத்துவ முகாம் நடத்தி தனது சேவையை வழங்கி வருகிறார். போராட்டக் களத்தில் உள்ள பல மருத்துவ முகாம்களில் இதுவும் ஒன்றாகும் சில முகாம்களில் உள்ள மருத்துவர்கள் கொல்கத்தா அல்லது ஹைதராபாத் என்று தூர மாநிலங்களில் இருந்து கூட வந்திருக்கின்றனர். "பலர் திறந்த சாலைகளில் தங்கியிருக்கின்றனர் நாளுக்கு நாள் இந்த கடும் குளிரால் பாதிக்கப்படும் வயதானவர்களை கவனிப்பதன் மூலம் - பட்டம் பெறும் போது நாங்கள் எடுத்த உறுதிமொழியை கடைபிடிக்க முயற்சிக்கிறோம்", என்று சுரீந்தர் கூறுகிறார்.![Kamaljit Kaur, a teacher from Ludhiana, and her colleagues have brought two sewing machines to Singhu, and fix for free missing shirt-buttons or tears in salwar-kameez outfits of the protesting farmers – as their form of solidarity](/media/images/06-DSC_1937_00192-JM.max-1400x1120.jpg)
கமல்ஜீத் கவூர், பஞ்சாபின் லூதியானா நகரை சேர்ந்த ஆசிரியர், அவர் மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து சிங்குவில் இரண்டு தையல் இயந்திரங்களை இயக்கி வருகிறார், சட்டைகளில் பொத்தான்கள் வைத்துத் தருவது போராடும் விவசாயிகளின் கிழிந்த சல்வார் காமீஸை தைத்து தருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்
மன உறுதியை உயர்த்த உதவுவதற்காக லூதியானாவைச் சேர்ந்த சத்பால் சிங் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு திறந்த லாரியில் பொருத்தப்பட்ட ஒரு பெரிய கரும்பு நசுக்கும் இயந்திரத்தை சிங்குவிற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த இயந்திரம் சாதாரணமாக சர்க்கரை ஆலையில் பயன்படுத்தப்படுவது - இங்கு போராட்ட களத்தில் சத்பால் அந்த வழியில் செல்பவர்களுக்கு கரும்பு சாறை பிழிந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். லூதியானா மாவட்டத்திலுள்ள தங்களது கிராமமான அலிவாலில் நன்கொடையாக வழங்கப்பட்ட கரும்பினை அவர்கள் பயன்படுத்துகின்றனர், நாளொன்றுக்கு சுமார் ஒரு லாரி கரும்பு பயன்படுத்தப்படுகிறது.
குண்டுலியில் உள்ள அதே மாலின் புல்வெளியில் பத்தின்டாவைச் சேர்ந்த நிஹாங் அமன்தீப் சிங் ஒரு கருப்பு நிற குதிரையைக் குளிப்பாட்டி கொண்டே, பஞ்சாபின் விவசாய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக சிங்குவில் இருப்பதாகக் கூறுகிறார். மாலுக்கு அருகிலுள்ள லங்கருக்கு வருபவர்கள் அனைவருக்கும் உணவு வழங்குவதைத் தவிர அமன்தீப் மற்றும் பிறர் (அவர்கள் அனைவரும் சீக்கிய போர் வீரர் மரபைச் சேர்ந்த நிஹாங்குகள்) தில்லி போலீசாரால் தடுப்புகளாக பயன்படுத்தப்பட்ட கொள்கலன்களின் நிழலில் அமைக்கப்பட்ட கூடாரங்களுக்கு அருகில் ஒவ்வொரு மாலையும் கீர்த்தனைகளில் ஈடுபடுகின்றனர்.
பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் மற்றும் அமிர்தசரசை சேர்ந்தவரான குர்வேஜ் சிங், மற்ற மாணவர்களுடன் சேர்ந்து சிங்குவில் முகாமிட்டுள்ள விவசாயிகளிடையே, இரு வார செய்திமடலான ட்ராலி டைம்ஸை விநியோகிக்கின்றனர். அவர்கள் துணி மற்றும் பிளாஸ்டிக் தாளுடன் ஒரு பரந்த பரப்பில் பேப்பர் மற்றும் பேனா வைத்து யாரும் உள்ளே வந்து சுவரொட்டிகளுக்கான கோஷங்கள் எழுத வாய்ப்பு வழங்குகின்றனர், இந்த சுவரொட்டிகள் கண்காட்சி எப்போதும் அங்கேயே இருக்கிறது, மேலும் அவர்கள் இலவசமாக நூலகத்தையும் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களும் சிங்குவில் ஒரு இலவச நூலகத்தை நடத்துகின்றனர் மேலும் அவர்களும் சுவரொட்டிகள் தயாரிக்கின்றனர் (மேலே உள்ள அட்டைப் படத்தைப் பார்க்கவும்).
இரவு நேரங்களில் சிங்கு எல்லையிலிருந்து குண்டுலிக்கு திரும்பிச் செல்லும்போது பல்வேறு குழுக்கள் நெருப்பினைச் சுற்றி ஒன்றாக அமர்ந்திருக்கும் இடங்களில் நாங்கள் பலமுறை நின்று செல்கிறோம்.
அந்த சாலையில் உள்ள கூடாரத்தில் உள்ள பாபா குர்பால் சிங்கையும் நாங்கள் சந்தித்து, அவர் எப்போதும் தயாராக வைத்திருக்கும் தேனீர் கோப்பைகளை பெறுகிறோம். 86 வயதாகும் பாபா குர்பால், பாட்டியாலாவுக்கு அருகிலுள்ள கான்பூர் கோண்டியா குருத்வாராவினைச் சேர்ந்த துறவி மற்றும் கிரந்தி ஆவார். அவர் ஒரு கற்றறிந்த மனிதர் மேலும் அவர் சீக்கிய அடையாள அடிப்படையிலான அரசியல் குறித்த வரலாற்றையும், விவசாயிகளின் இந்த எதிர்ப்பு எவ்வாறு அந்த வரம்புகளை மீறி அது இந்தியா முழுவதுக்கும் பொது நலனுக்கான இயக்கமாக மாறியது என்பது பற்றியும் விளக்குகிறார்.
பாபா குர்பால் ஏன் தனது வயதான தோழர்களுடன் சேர்ந்து சிங்குவில் சேவை செய்கிறார், அனைவருக்கும் ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் தேநீர் பரிமாறுகிறார் என்று அவரிடம் கேட்டேன். இரவில் அந்த நெருப்பின் புகையினை பார்த்தபடி அவர், "இது நன்மை மற்றும் தீமைக்கு இடையேயான நேரடி மோதல், இது நாம் அனைவரும் வெளியே வந்து ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தருணம். இது தான் குருக்ஷேத்திரப் போரிலும் நடந்தது", என்று பதில் கூறினார்.
![](/media/images/02-DSC_1723_00110-JM.width-1440.jpg)
குருக்ஷேத்திரத்தைச் சேர்ந்த ஒரு வயதானவர் தனது நாளின் பெரும்பகுதியை மேத்தி பராத்தாக்கள் தயாரிப்பதற்காக செலவிடுகிறார். சிங்குவில் உள்ள பல லங்கர்கள் தானியங்கி ரொட்டி தயாரிக்கும் இயந்திரங்களை பயன்படுத்துகின்றன (அதில் சில ஒரு மணி நேரத்தில் 2000 ரொட்டிகள் கூட உற்பத்தி செய்யும்) - அவரே ஒரு ரொட்டி தயாரிக்கும் இயந்திரமாக மாறி தனது சேவையை வழங்குகிறார்
![](/media/images/03-DSC_2252_00033-JM.width-1440.jpg)
சத்பால் சிங் (வலது பக்கம் அமர்ந்து, கரும்புச் சாற்றில் உப்பு தூவிக் கொண்டிருக்கிறார் )மற்றும் அவரது நண்பர்கள் ஒரு திறந்த லாரியில் பொருத்தப்பட்ட ஒரு பெரிய கரும்பு நசுக்கும் இயந்திரத்தை சிங்குவிற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த இயந்திரம் சாதாரணமாக சர்க்கரை ஆலையில் பயன்படுத்தப்படுவது - இங்கு போராட்ட களத்தில் சத்பால் அந்த வழியில் செல்பவர்களுக்கு கரும்பு சாறை பிழிந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்
![](/media/images/04-DSC_2726_00203-JM.width-1440.jpg)
சீக்கிய விவசாயிகள் தங்கள் தலைப்பாகை கட்டிக் கொள்ளவும், மற்றவர்கள் பயன்படுத்தவும் ஒரு லாரியின் பக்கவாட்டில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த லாரியில் பல் துலக்குவதற்கு பிரஸ், பசை, சோப்பு மற்றும் கை கழுவுவதற்கான பொருட்களை நாள் முழுவதும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்
![](/media/images/05-DSC_1603_00080-JM.width-1440.jpg)
ஹரியானாவில் உள்ள ஒரு கிராமம் சிங்குவுக்கு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட ஒரு லாரியை அனுப்பியுள்ளது இந்த லாரியின் பக்கவாட்டில் சார்ஜிங் பாயிண்டுகள் தொங்க விடப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் இந்த சார்ஜிங் தளங்களில் தான் வந்து தங்களது தொலைபேசியினை சார்ஜ் செய்து கொள்கின்றனர்
![](/media/images/07-DSC_1908_00181-JM.width-1440.jpg)
பஞ்சாபின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்த குகர்னா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் செருப்பு தைக்கும் தொழிலாளரை பணிக்கு அமர்த்தி உள்ளனர் மேலும் அவர் போராட்ட களத்தில் உள்ள விவசாயிகளின் செருப்புகளை தைத்து உதவி வருகிறார்
![](/media/images/08-DSC_1892_00173-JM.width-1440.jpg)
திறந்த நெடுஞ்சாலையில் பல வாரங்களாக முகாமிட்டு இருந்தாலும் கூட துணிகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்காகப் பல தன்னார்வலர்கள் இலவச சலவை சேவையை செய்து வருகின்றனர். ஒரு அடைப்புக்குள் அரை டஜன் சலவை இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன அங்கு யார் வேண்டுமானாலும் வந்து தன்னார்வலர்களை துணி துவைத்து தரும்படி கேட்கலாம்
![](/media/images/09-DSC_1867_00164-JM.width-1440.jpg)
அமன்தீப் சிங் நிஹாங் தனது குதிரையை குளிப்பாட்டி, மாலை கீர்த்தனைக்கு தயார் செய்கிறார். சொற்பொழிவுகள் மற்றும் பிற மத நடவடிக்கைகளை தவிர சிங்குவில் முகாமிட்டுள்ள நிஹாங்குகளின் ஒரு குழு அங்கு வருபவர்களுக்கு லங்கரில் உணவுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது
![](/media/images/10-DSC_1911_00182-JM.width-1440.jpg)
ஜலந்தரைச் சேர்ந்த ஆசிரியையான பல்ஜிந்தர் கவூர், எண்ணற்ற மெத்தைகள், போர்வைகள், தலையணைகள் நிறைந்த ஒரு பெரிய மூடப்பட்ட இடத்தை கவனித்து வருகிறார்; சிங்குவில் ஒரு அல்லது இரண்டு இரவு தங்க முடிவு செய்யும் போராட்டக்காரர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் ஒரே மாதிரியாக தங்குமிடம் வழங்குவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
![](/media/images/11-DSC_2853_00255-JM.width-1440.jpg)
பகத்சிங் சொசைட்டி நண்பர்கள் போராட்டக்காரர்களுக்காக வெளியிடப்பட்ட செய்திமடலான ட்ராலி டைம்ஸை விநியோகிக்கின்றனர். மேலும் அவர்கள் இலவச நூலகம் மற்றும் சுவரொட்டி கண்காட்சி நடத்தி வருகின்றனர் மேலும் ஒவ்வொரு மாலையும் ஒரு விவாத அமர்வை ஏற்பாடு செய்கின்றனர்
![](/media/images/12-DSC_1920_00184-JM.width-1440.jpg)
பஞ்சாபில் இருந்து ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சிங்குவில் ஒரு பெட்ரோல் பம்ப் வளாகத்தில் 100 தற்காலிக கூடாரங்களை அமைத்து போராட்டக்காரர்களை தங்க வைப்பதற்கும், குளிர்ந்த இரவுகளில் அவர்களை கதகதப்பாக வைப்பதற்கும் ஏற்படுத்தியிருக்கின்றனர்; அதனை கூடார நகரம் என்று அவர்கள் அழைக்கின்றனர்
![](/media/images/13-DSC_1994_00211-JM.width-1440.jpg)
சண்டிகரை சேர்ந்த மருத்துவரான சுரீந்தர் குமாரைப் பொருத்தவரை மற்ற மருத்துவர்களுடன் சேர்ந்து அவர் சிங்குவில் மருத்துவ முகாம் நடத்தி தனது சேவையை வழங்கி வருகிறார். போராட்டக் களத்தில் உள்ள பல மருத்துவ முகாம்களில் இதுவும் ஒன்றாகும் - சிலர் போராட்டக் களத்தில் 30க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்
![](/media/images/14-DSC_2214_00019-JM.width-1440.jpg)
சர்தார் குர்மீத் சிங் ஒரு ஹக்கீம், சுயமாக எலும்பு முறிவு மற்றும் தசைப்பிடிப்பை சரி செய்பவர், டிராக்டரில் நீண்ட தூரம் பயணம் செய்து சோர்வுடனும் வலியுடனும் இருக்கும் போராட்டக்காரர்களுக்கு மசாஜ் செய்கிறார்
![](/media/images/15-DSC_2011_00219-JM.width-1440.jpg)
சிங்குவில் ஒரு 'தலைப்பாகை லங்கர்', ஒரு தலைப்பாகை பயன்படுத்துபவர் புதிய தலைப்பாகையைக் கட்டிக் கொள்ளலாம், தலைப்பாகை கட்டாதவர்களும் இந்த இடத்திற்குச் சென்று தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த தலைப்பாகை கட்டிக் கொள்கின்றனர்
![](/media/images/16-DSC_1450_00038-JM.width-1440.jpg)
86 வயதாகும் பாபா குர்பால், பாட்டியாலாவுக்கு அருகிலுள்ள கான்பூர் கோண்டியா குருத்வாராவினைச் சேர்ந்த கிரந்தி ஆவார். அவர் ஒரு கற்றறிந்த மனிதர் மேலும் அவர் சீக்கிய அடையாள அடிப்படையிலான அரசியல் குறித்த வரலாற்றையும், விவசாயிகளின் இந்த எதிர்ப்பு எவ்வாறு அந்த வரம்புகளை மீறி அது இந்தியா முழுவதுக்கும் பொது நலனுக்கான இயக்கமாக மாறியது என்பது பற்றியும் விளக்குகிறார். 'இது நன்மை மற்றும் தீமைக்கு இடையேயான நேரடி மோதல், இது நாம் அனைவரும் வெளியே வந்து ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தருணம்', என்று கூறுகிறார்
தமிழில்: சோனியா போஸ்