மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் நகரின் விளிம்பில் உள்ளது சிகல்தானா கிராமம். அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான பணமில்லாப் பொருளாதாரம் நனவாகியிருக்கிறது. ஆம், ஊரில் ஒருவரிடமும் பணமே இல்லை! வங்கிகள், ஏ.டி.எம்.-கள் எதிலும் பணம் இல்லை. அங்கு வரிசையில் விரக்தியுடன் நின்றிருக்கும் மக்களிடம் கண்டிப்பாகப் பணம் இல்லை. அவ்வளவு ஏன், வங்கிப் பாதுகாப்பிற்காக வெளியே வேனில் அமர்ந்துக்கொண்டிருக்கும் காவல்துறையினரிடமும் பணம் இல்லை.

ஆனால் கவலை வேண்டாம். பணம் இல்லாவிட்டால் என்ன? அவர்களின் விரலில்தான் மிக விரைவில் மை வைக்கப்படுமே?

சரி, மக்கள்தான் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள், வங்கி ஊழியர்கள் என்ன செய்கிறார்கள், என்று அவுரங்காபாத் நகரின் ஷாகஞ்ச் பகுதியில் உள்ள ஐதராபாத் ஸ்டேட் வங்கிக்குள் நுழைகிறோம். கையில் பணம் இல்லாமல் ஏழைகளாக நிற்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க, நிலைமையை சமாளிக்க முடியாமல் ஊழியர்கள் தடுமாறுகிறார்கள். அங்கும் சரி, அந்த நகரில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் சரி, அழிப்பதற்காக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பழைய 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளைத்தான் மீண்டும் புழக்கத்தில் விடுகிறார்கள். ரிசர்வ் வங்கிக்கே இது தெரியும். இதுபற்றி வாய் திறக்காமல் இருப்பதன்மூலம் தன் தவறை அது ஒப்புக்கொள்கிறது.


02-DSC_1696-AR-The-Cashless-Economy-of-Chikalthana.jpg

அவுரங்காபாத் நகரின் ஷாகஞ்ச் பகுதி. நீண்டுக்கொண்டே செல்லும் வரிசை. குறைந்துக்கொண்டே வரும் பொறுமை


“எங்களால் என்னதான் செய்ய முடியும்?”, என்று வங்கியில் பணிபுரிவோர் கேட்கிறார்கள். “மக்களுக்கு இப்பொழுது குறைந்த மதிப்பு  ரூபாய் நோட்டுகள்தான் தேவை. அவர்களின் வேலை, பணப் பரிமாற்றம், அனைத்தும் நின்று போயிருக்கிறது”. நாம் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் வெளியே வரிசை ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமாக நீண்டிருக்கிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு! அந்த வரிசையில் நின்றுக்கொண்டிருக்கும் ஒருவர் எங்களைப் பத்திரிகையாளர் என்று அடையாளம் கண்டுக்கொண்டு எங்களிடம் வருகிறார். தன் பெயர் ஜாவீத் ஹயத் கான் என்றும் தான் ஒரு சிறு வியாபாரி என்றும் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு, எங்களிடம் ஒரு பத்திரிகையை நீட்டுகிறார். அவர் மகள் ரஷீதா காடூனின் திருமண பத்திரிகை அது.

“என் வங்கிக் கணக்கில் உள்ள மொத்தப் பணமே 27,000 ரூபாய்தான். இன்னும் மூன்று வாரத்தில் என் மகளின் திருமணம் நடக்க இருக்கிறது, எனவே அதிலிருந்து 10,000 ரூபாயை மட்டும் கொடுங்கள் என்றுதான் கேட்கிறேன். ஆனால் 10,000 ரூபாய் பெற எனக்கு அனுமதி இல்லை”, என்கிறார். நேற்றுதான் அவர் 10,000 ரூபாய் எடுத்திருந்ததால், இன்றும் 10,000 ரூபாய் தர வங்கி மறுத்துவிட்டது. இன்றும் அவரால் 10,000 ரூபாய் பணம் எடுக்க முடியும், ஆனால் இவருக்கு இப்படிப் பணம் கொடுத்துக்கொண்டிருந்தால் நீண்ட வரிசையில் நிற்கும் மக்களுக்கு எங்கிருந்து பணம் கொடுப்பது, என்று வங்கி நினைக்கிறது. சிறிது சிறிதாகப் பணம் கொடுத்தால் அனைவருக்கும் சிறிதாவது பணம் கிடைக்குமே என்ற நம்பிக்கையில் வங்கி ஊழியர்கள் இருக்கிறார்கள். வரிசையில் நிற்கும் இருவர் அவருக்கு உதவ முயல்கிறார்கள். “தன் மகளின் திருமணத்திற்காக நிலையான வைப்புக் கணக்கு ஒன்றைத் துவக்கியிருந்தார் ஜாவீத். அந்தக் கணக்கை மூடினால் வரும் பணத்தைத்தான் ஜாவீத் கேட்கிறார்”, என்று அவர்கள் விளக்குகிறார்கள்.


03-thumb_IMG_1543_1024-2-PS-The Cashless-Economy of Chikalthana.jpg

ஜாவீத் ஹயத் கானுக்கு அவசரமாகப் பணம் எடுத்தே ஆக வேண்டும். ரஷீதாவின் திருமணத்திற்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கின்றன


பல எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அதிகாரப்பூர்வ அறிக்கைகள் ஏற்கனவே சொன்னதுபோல் பெரும்பான்மையான கறுப்புப் பணம் தங்கமாகவும், பினாமி நில ஒப்பந்தமாகவும், வெளிநாட்டுப் பணமாகவும்தான் இருக்கின்றன. நாம் நினைப்பதுபோல் பழைய பெட்டிகளில் நோட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டு எல்லாம் இல்லை. இதை 2012-ம் ஆண்டிலேயே மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை சமாளிப்பது பற்றிய அறிக்கையில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையின் 14-ம் பக்கத்தில், இதற்கு முன்பு இரண்டு முறை 1946 மற்றும் 1978-ல் நடந்த பண ஒழிப்பு நடவடிக்கைகள் “படுதோல்வியே அடைந்தன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது (Part II, 9.1). இப்படி இரண்டு முறை படுதோல்வி அடைந்த ஒன்றைத்தான் பா.ஜ.க. அரசு மீண்டும் அமல்படுத்தியிருக்கிறது. ஆனால் சில செய்தித் தொகுப்பாளர்களும் தொலைக்காட்சிக் கோமாளிகளும், ‘கறுப்புப் பணத்தின் மீதான மோடியின் அறுவை சிகிச்சை’, என்று இதற்குப் பெயர் வேறு சூட்டியிருக்கிறார்கள். நம்பவே முடியாதபடி முட்டாள்தனமான ஒரு திட்டம்; கிராமங்களில்  கடும் துயரத்தைப் பரப்பி வரும் திட்டம்; இதற்கு இப்படி ஒரு பெயர். கிராமப் பொருளாதாரத்தின் இதயத்தில்தான் அறுவை சிகிச்சை  நடந்திருக்கிறது, வேறெங்கும் இல்லை.

இந்த ‘அறுவை சிகிச்சை' காரணமாக 2-3 நாட்கள் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என்று நிதியமைச்சரும் அவர் கட்சியில் சிலரும் கருத்துத் தெரிவித்தார்கள். 2-3 நாட்கள் அடுத்த அறிக்கையில் 2-3 வாரங்கள் ஆனது. இதன்பிறகு மூத்த அறுவை சிகிச்சை நிபுணரான நரேந்திர மோடி, நோயாளி பூரண குணமடைய 50 நாட்கள் தேவைப்படும் என்றார். ஆக இந்த சிகிச்சை 2017-ம் ஆண்டிலும் தொடரும் என்று முடிவாகியிருக்கிறது. இதற்கு மத்தியில் நீண்ட வரிசையில் நின்றபடி எத்தனை பேர் இறந்து போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இறப்பின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடிதான் இருக்கிறது.

“நாசிக் மாவட்டத்தின் லசல்கோன் நகரில் விவசாயிகளிடம் போதிய பணமில்லாததால் அங்குள்ள வெங்காயச் சந்தையை மூடிவிட்டார்கள்”, என்கிறார் ‘அதுநிக் கிசான்’ என்ற வாரப் பத்திரிகையின் ஆசிரியர் நிஷிகந்த் பலேராவ். “விதர்பாவிலும் மாரத்வாடாவிலும் பருத்தியின் குவின்டல் விலை 40 சதவீதம் வரை கீழே இறங்கியிருக்கிறது”. அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கும் வியாபாரத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், விற்பனை மொத்தமாக நின்றுபோயிருக்கிறது. “யாரிடமும் பணமில்லை. உற்பத்தியாளர்கள், இடைத்தரகர்கள், வாடிக்கையாளர்கள், எல்லோரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்”, என்கிறார் ‘டெலிகிராஃப்’ பத்திரிகையின் நாக்பூர் கிளை பத்திரிகையாளர் ஜெய்தீப் ஹார்டிகர். “கிராம வங்கிக் கிளைகளில் காசோலையைத் தந்து பணம் பெறுவது நல்ல நாளிலேயே குதிரைக் கொம்பான காரியம். தற்போதைய நிலையில் அதை நினைத்துப் பார்த்தால் கொடுமையாக இருக்கிறது.”

இதனால் மிக மிக சொற்பமான விவசாயிகளே காசோலைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். வரிசையில் நின்று பணத்தை எடுக்கவே தாமதமானால் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது? இதில் நிறைய பேருக்கு வங்கிக் கணக்கு வேறு செயலில் இல்லை.

இந்த மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான பொதுத்துறை வங்கிக்கு நாடெங்கும் 975 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. இதில் 549 இயந்திரங்களில் பணமே இல்லை, வெறும் பெருமூச்சு சத்தம்தான் வெளியே வருகிறது. இப்படிப் பெருமூச்சு விடும் இயந்திரங்கள் கிராமப்புறங்களில்தான் பெரும்பாலும் உள்ளன. “கிராமப்புறங்களே கடனில்தான் ஓடுகின்றன, பணமெல்லாம் அங்கு ஒரு பொருட்டா?”, என்று புரிதலற்ற விளக்கம் வேறு இந்த சிக்கலுக்குக் காரணமாக முன்வைக்கப்படுகிறது. அதுவா உண்மை? அங்கு பணம்தானே எல்லாம்!

கீழ்மட்ட அளவில் பணத்தில் மூலமாகத்தான் அனைத்துப் பரிமாற்றங்களும் நடைபெறுகின்றன. இதன் வீரியம் தெரியாமல் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தால் சிறிய கிராமப்புற வங்கிகளின் ஊழியர்கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்திற்குள் சிறிய ரூபாய் நோட்டுகள் வரவில்லை என்றால் சட்டம் ஒழுக்கு சீர்குலையும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள். இன்னும் சிலர் ஏற்கனவேயே அது போன்ற நிலை வந்துவிட்டது என்றும் இனி பணம் வந்தாலும் நிலைமையை சமாளிக்க முடியாது என்றும் சொல்கிறார்கள்.

அவுரங்காபாத்தில் வேறு ஒரு வரிசை. அங்கு நின்றிருக்கும் கட்டுமான மேற்பார்வையாளரான பர்வேஸ் பைத்தன், விரைவில் தன் வேலையாட்கள் வன்முறையில் இறங்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறார். “ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட வேலைக்கே அவர்களுக்கு இன்னும் கூலி தரப்படவில்லை. என்னாலும் பணத்தை வெளியே எடுக்க முடியவில்லை.”, என்று செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார். சிகல்தானா கிராமத்தின் ராய்ஸ் அக்தர் கான், “என்னைப்போன்ற இளம் தாய்மார்களால் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியவில்லை. நாளாக நாளாக நிலைமை கடினமாகிக்கொண்டே வருகிறது. அப்படியே உணவு கிடைத்தாலும் அந்த உணவுக்கான பணம் வரிசையில் நாள் முழுக்க நின்றால்தான் வருகிறது. குழந்தைகள் மணிக்கணக்கில் பசியில் வாடுகிறார்கள்.”, என்கிறார் வேதனையுடன்.

இந்த வரிசையிலுள்ள பெரும்பாலான பெண்களின் வீட்டில் 2-4 நாட்களுக்குத்தான் பொருட்கள் இருக்கின்றன. “அதற்குள் இந்த பணப் பிரச்னை தீர்ந்துவிட வேண்டும். ஒரு வேளை தீராவிட்டால்?”, இந்த எண்ணமே அவர்களைப் பதற வைக்கிறது. பாவம், நிச்சயமாக இன்னும் 2-4 நாட்களுக்குள் நிலைமை சரியாகாது.

விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வோர், ஓய்வூதியம் பெறுவோர், சிறு வணிகர், என அனைவரும் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். கடை முதலாளிகள் கடன் வாங்கித்தான் கூலி கொடுக்கப் போகிறார்கள். சிலருக்கு உணவு வாங்கக்கூட பணம் இல்லையே என்ற சோகம். ஐதராபாத் ஸ்டேட் வங்கியின் ஸ்டேஷன் சாலை கிளையின் ஊழியர் ஒருவர், “நாளாக நாளாக வரிசை குறைவதாகத் தெரியவில்லை. நீண்டுக்கொண்டேதான் செல்கிறது”, என்கிறார். அங்கு மக்களிடையே கோபம் கூடிக்கொண்டே இருக்கிறது, அவர்களை சமாளிக்க சில ஊழியர்கள் முயன்றுக்கொண்டிருக்கிறார்கள். வாடிக்கையாளரின் அடையாளத்தை சரிபார்க்கவும் பிற தகவல்களை சேகரிக்கவும் உருவாக்கப்பட்ட மென்பொருள் ஒன்றை சுட்டிக்காட்டி, அதில் உள்ள குறைபாடைச் சொல்கிறார் ஒரு ஊழியர்.

எட்டு 500 ரூபாய் நோட்டுகளையோ நான்கு 1,000 ரூபாய் நோட்டுகளையோ வங்கியிடம் கொடுத்து மக்கள் இரண்டு 2,000 நோட்டுகளைப் பெற்றுச் செல்லலாம். இந்தப் பரிமாற்றத்தை ஒருவர் ஒருமுறை மட்டுமே செய்யவேண்டும். “அடுத்த நாள் மீண்டும் அவர் பணத்தை மாற்ற முயன்றால் அடையாளத்தின் மூலம் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இதில் உள்ள ஓட்டை என்னவென்றால், அடுத்த நாள் அவர் வேறொரு அடையாள அட்டையைப் பயன்படுத்தினால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. அதாவது முதல் நாள் ஆதார் அட்டையைக் காட்டி பணம் வாங்கி, அடுத்த நாள் பாஸ்போர்ட் அட்டையைக் காட்டி, அதற்கடுத்த நாள் PAN அட்டையைக் காட்டி, இப்படி மீண்டும் மீண்டும்  கண்ணில் மண்ணைத்தூவி பணத்தை எடுக்க முடியும்”, என்கிறார்.


04-thumb_IMG_1538_1024-2-PS-The Cashless-Economy of Chikalthana.jpg

ஐதராபாத் ஸ்டேட் வங்கியின் ஷாகஞ்ச் கிளையில் வெறுப்படைந்த நிலையில் சூழ்ந்திருக்கும் பொதுமக்கள். வெளியே கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசை


இதை மிகச் சிலரே செய்திருக்கிறார்கள். பல பேருக்கு இந்த ஓட்டை இருப்பது பற்றித் தெரியாது. ஆனால் இதற்கு அரசின் எதிர்வினை பைத்தியக்காரத்தனமானது. வாக்களித்த பின் செய்வது போல், பணத்தை மாற்றிய பின் விரலில் அழியாத மையால் குறிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். சில மாநிலங்களில் இடைத்தேர்தல் வரவிருக்கிறதால், குழப்பம் வரக்கூடாது என்று இடது கை விரலில் குறிக்கிறார்கள்.

“அரசாங்கம் என்ன உத்தரவு போட்டால் என்ன? பெரும்பாலான மருத்துவனைகளும் மருந்தகங்களும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ஏற்கப் போவதில்லை”, என்று குறைபட்டுக்கொள்கிறார் சிறு ஒப்பந்ததாரரான ஆர்.பாட்டில். அந்த ஸ்டேஷன் சாலை வரிசையில் அவருக்குப் பின்னால் நின்றுக்கொண்டிருக்கும் தச்சரான சையது மொடக், உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தன் உறவினரை சேர்க்க ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்துக்கொண்டிருக்கிறார். “எல்லா இடங்களிலும் அனுமதி மறுக்கிறார்கள். அந்த இரண்டு 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தாலும் சில்லறை இல்லை என்று அவற்றை ஏற்க மறுக்கிறார்கள்”, என்கிறார் களைப்புடன்.

இதற்கிடையில் அனைவரின் கண்களும் நாசிக்கில்தான் உள்ளன. அங்கிருந்துதானே புதிய ரூபாய் நோட்டுகள் இந்தியா முழுக்க செல்ல வேண்டும்? இதுவரை கிராமப்புறங்களில் யாரும் அவற்றைப் பெறவில்லை. ஆனால் அவற்றின் வரவை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். எங்களோடு இங்கு தொடர்ந்து இருங்கள்.

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'.

Other stories by P. Sainath