பொலமரசெட்டி பத்மஜாவை 2007-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொடுக்கும் போது வரதட்சணையாக 250 கிராம் தங்கத்தை அவரது குடும்பத்தினர் கொடுத்தனர். “என் கணவர் எல்லாவற்றையும் செலவழித்தப் பிறகு என்னையும் கை கழுவி விட்டார்” என்கிறார் 31 வயதான பத்மஜா. இப்போது வாட்ச் பழுது பார்த்து தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
பத்மஜாவின் கணவர் குடித்து குடித்தே அத்தனை நகைகளையும் விற்று தீர்த்துவிட்டார். “எனக்கும் என் குடும்பத்திற்கும், குறிப்பாக என் குழந்தைகளுக்கும் ஏதாவது நான் ஏற்பாடு செய்தாக வேண்டும்” எனக் கூறுகிறார் பத்மஜா. 2018-ம் ஆண்டு குடும்பத்தை விட்டு தன் கணவர் பிரிந்துச் சென்றதும் கைக்கடிகாரங்களை பழுது பார்க்க தொடங்கினார் பத்மஜா. ஆந்திரபிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் வாட்ச் பழுது பார்க்கும் ஒரே பெண் இவராகத்தான் இருக்கக்கூடும்.
அன்றிலிருந்து சிறிய வாட்ச் கடையில் ஆறாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்திற்கு வேலைப் பார்த்து வருகிறார். ஆனால் கொரோனா கால ஊரடங்கு தொடங்கியதிலிருந்து அவரது வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் தன்னுடைய சம்பளத்தில் பாதித் தொகையையே பெற்றார். ஏப்ரல், மே மாதங்களில் அதுவும் இல்லை.
“எப்படியோ எனது சேமிப்பிலிருந்து மே மாதம் வரை வாடகை கொடுத்து சமாளித்துவிட்டேன். என் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப முடியும் என நம்புகிறேன். என்னை விட (பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்) அவர்கள் அதிகமாக படிக்க வேண்டும்” எனக் கூறும் பத்மஜா, தனது மகன்கள் அமன், 13 மற்றும் ராஜேஷ், 10 ஆகியோரோடு கஞ்சரப்பாளம் பகுதியில் வசித்து வருகிறார்.
தனது பெற்றோர்கள் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பத்மஜாவின் வருமானமே ஆதரவாக இருக்கிறது. எந்த வேலைக்கும் செல்லாத அவரது கணவரால் ஒரு பயனும் இல்லை. “இப்போதும் பணம் இல்லாத சமயத்தில் இங்கு வருவார்” எனக் கூறும் பத்மஜா, அவர் வீட்டிற்கு வரும்போதெல்லாம் தங்க அனுமதிக்கிறார்.
“கைக்கடிகாரம் பழுது பார்க்க கற்றுக்கொண்டது எதிர்பாராத விதமாக எடுத்த முடிவு. என் கணவர் பிரிந்துச் சென்றதும், எல்லாம் இழந்துவிட்டது போல் உணர்ந்தேன். நான் சாதுவானவள். எனக்கென்று ஒரு சில நண்பர்களே இருந்தனர். என் நண்பர் ஒருவர் சொல்லாதவரை வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன்” என நினைவு கூர்கிறார் பத்மஜா. அவருடைய நண்பரின் சகோதரர் எம்.டி. முஸ்தஃபா பழுது பார்க்கும் வேலையை பத்மஜாவிற்குக் கற்றுக் கொடுத்தார். விசாகப்பட்டினத்தின் பரபரப்பான ஜகதாம்பா ஜங்ஷன் பகுதியில் அவருக்குச் சொந்தமாக வாட்ச் கடை உள்ளது. அப்பகுதியில்தான் பத்மஜாவும் வேலைப் பார்க்கிறார். ஆறு மாதத்திற்குள் பழுது பார்ப்பதில் உள்ள நெளிவு சுளிவுகளை நன்றாகக் கற்றுக் கொண்டார் பத்மஜா.










