இந்த வருட தொடக்கத்திலிருந்து ரேஷன் அட்டை பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் தஸ்ரத் சிங். ஆனால் உமாரியா மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் அவரது விண்ணப்பம் இன்னும் நிலுவையில் உள்ளதாக கூறி வருகின்றனர்.

“ரூ. 1500 கட்டணம் செலுத்தினால் என்னுடைய படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர்கள் பரிந்துரை செய்தனர்.

ஆனால் நான் கட்டவில்லை.......”

தஸ்ரத், மத்தியபிரதேச உம்ரியா மாவட்டத்தின் பந்தோகார் தாலுகாவிலுள்ள கடாரியா கிராமத்தில் வசித்து வருகிறார். இங்கு விவசாய நிலத்திலும் மாதத்தின் சில நாட்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 ரூபாய்க்கும் வேலை செய்து வருகிறார். இவர் அவ்வப்போது உள்ளூர் கந்து வட்டிக்காரர்களிடம் பணத் தேவைக்கு கடன் வாங்குவார். இந்த ஊரடங்கு சமயத்தில் கூட 1,500 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

வறுமை கோட்டிலுள்ள குடும்பங்களுக்கு சாதாரன சமயத்திலேயே ரேஷன் அட்டை அவசியமானதாக இருக்கும் போது, ஊரடங்கு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இவர்களிடம் ரேஷன் அட்டை இல்லாததால், வேறு வழியின்றி உணவுப் பொருட்களை சந்தை விலைக்கு கடையில் வாங்குகிறார்கள். “விவசாயமே எங்களை ஓரளவிற்கு காப்பாற்றுகிறது” என கூறுகிறார் தஸ்ரத்தின் மனைவியான 25 வயது சரிதா சிங். இவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமாக 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கோதுமை, சோளம், சாமை, வரகு ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர்.

இதற்கிடையில், 40 வயதாகும் தஸ்ரத், ரேஷன் அட்டையைஎப்படியாவது பெற்று விட வேண்டும் என தொடர்ந்து முயற்சி

செய்து வருகிறார்.அவர் கூறுகையில், “இந்த வருடம் ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ரேஷன் அட்டை பெற வேண்டுமானால் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும் என என்னிடம் கூறினர்.”

கிராமத்திலிருந்து 70கிமீ தொலைவிலுள்ள மன்பூர் நகரத்தில் இருக்கும் லோக் சேவா கேந்த்ராவிற்கு தஸ்ரத் செல்ல வேண்டும் என பஞ்சாயத்து தலைவர் கூறியுள்ளார். அங்கு ஒருமுறை பேருந்தில் செல்லவே ரூ. 30 செலவாகும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மூன்று முறை என மொத்தம் நான்கு தடவை பேருந்தில் பயணம் செய்துள்ளார். மார்ச் 23ம் தேதி (மத்திய பிரதேசத்தில்) ஊரடங்கு தொடங்குவதற்கு முன், தனது கிராமத்திலிருந்து 30கிமீ தொலைவிலுள்ள பந்தோகார் நகரத்தில் இருக்கும் தாலுகா அலுவலகத்திற்கும் சென்று வந்துள்ளார். உங்கள் படிவத்தை இப்போது ஒன்றும் செய்ய முடியாது, தனியாக அடையாள அட்டை பெற்று வாருங்கள் என அங்கு அவரிடம் கூறி விட்டனர்.

தனியாக அடையாள அட்டை பெறுவதற்கு 40கிமீ தொலைவிலுள்ள கார்கெலி வட்டார அலுவலகத்திற்குச் செல்லுமாறு மன்பூர் கேந்திரா அதிகாரிகள் தஸ்ரத்திடம் கூறினர். “என்னுடைய பெயரில் தனியாக அடையாள அட்டை வேண்டும் என கூறினர். என்னுடைய அட்டையில் என் தம்பி உள்பட மற்ற குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர். அதனால் தனியாக அடையாள அட்டை பெற கார்கெலி சென்றேன்” எனக் கூறும் தஸ்ரத், 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

Dashrath Singh has been trying to get a family ration card since January, for himself, his wife Sarita and their daughter Narmada
PHOTO • Sampat Namdev
Dashrath Singh has been trying to get a family ration card since January, for himself, his wife Sarita and their daughter Narmada
PHOTO • Sampat Namdev

தனக்கும் தன் மனவி சரிதா மற்றும் தன் மகள் நர்மதாவிற்கும் ரேஷன் அட்டை பெறுவதற்காக ஜனவரி மாதத்திலிருந்து அவர் முயற்சி செய்து வருகிறார்

சமக்ரா ஐடி (சமக்ரா சமாஜிக் சுரக்ஷா திட்டம்) என பிரபலமாக அறியப்படும் அட்டையைத்தான் அவர் குறிப்பிடுகிறார். இது மத்திய பிரதேசத்துக்குரிய தனிப்பட்ட அடையாள எண். உணவு பாதுகாப்பு உரிமைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட கட்டணங்கள், உதவித்தொகைகள், ஓய்வூதியங்கள் மற்றும் இதர பலன்களை குடும்பங்களுக்கு அல்லது தனிநபருக்கு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் நோக்கத்தோடு 2012-ம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. குடும்பத்திற்கு எட்டு இலக்க சமக்ரா ஐடியும் தனிநபர் என்றால் ஒன்பது இலக்க ஐடியும் ஒதுக்கப்படும்.

ரேஷன் அட்டையை பெறுவதற்காக தஸ்ரத்தின் பல கட்ட பயணத்தையும் பயனற்ற முயற்சியையும் போக்க வந்ததுதான் மத்திய பிரதேச அரசாங்கம் கொண்டு வந்த லோக் சேவா உத்தரவாத சட்டம். அரசாங்க சேவைகளை வேகப்படுத்தவும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓய்வூதியங்கள் போன்றவற்றை பெறுவதில் முகவர்களின் பங்கை குறைக்கவும் 2010-ம் ஆண்டு இச்சட்டம் (மத்தியபிரதேச பொது சேவை உத்தரவாத சட்டம் எனவும் இது அழைக்கப்படுகிறது) கொண்டு வரப்பட்டது . குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவைகளை வழங்குவது, குறைகள் ஏதாவது இருந்தால் அதற்குரிய சிறப்பு அதிகாரிகளிடம் இ-மாவட்ட தளம் போன்ற தொழில்நுட்ப வழியில் விண்ணப்பிப்பது போன்றவற்றிற்கு இது வழிவகை செய்கிறது.

தொழில்நுட்ப மாற்றம் தஸ்ரத்திற்கும் சரி, கடாரியா கிராமத்தில் வசிக்கும் 480 பேருக்கும் சரி, எந்த வகையிலும் உதவி செய்யவில்லை. அவர்கள் இன்றும் குழப்பத்துடம் படிவத்தையும் அலுவலகங்களையும் துலாவிக் கொண்டிருக்கிறார்கள். “எங்கள் கிராமத்தில் சிறிய பெட்டி கடை மட்டுமே உள்ளது. அதன் உரிமையாளர் இணையதளம் உபயோகிக்க கட்டணம் வசூலிக்கிறார். அதனால் பெரிதாக அதை நாங்கள் நம்பியிருக்கவில்லை. அலுவலகத்திற்குச் சென்று படிவத்தை சமர்பிக்கவே நான் விரும்புவேன்” என கூறுகிறார் தஸ்ரத். அவருக்கும் மற்றவர்களுக்கும் மாவட்ட அலுவலகங்கள் அல்லது லோக் சேவா கேந்திராக்களே விண்ணப்பம் கொடுப்பதற்கான வழிகளாக இருக்கின்றன.

சமக்ரா அடையாள அட்டைக்கு, வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள், நிலமில்லா தொழிலாளர்கள் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு உள்பட 22 சமூக-பொருளாதார பிரிவினரை மத்தியபிரதேச அரசாங்கம் அடையாளப்படுத்தி இருந்தது. ஆனால் இந்த திட்டம்  ஊழலால் பலவீனப்பட்டுப் போயுள்ளதாக குற்றம் சுமத்துகிறார் போபாலைச் சேர்ந்த செயற்பாட்டாளரும் விகாஸ் சம்வாத் என்ற வழக்கறிஞர் குழுவின் இயக்குனருமான சச்சின் ஜெயின்.

எங்கள் கிராமத்தில் ஒரு பெட்டி கடை மட்டுமே உள்ளது.  அலுவலகத்திற்குச் சென்று படிவத்தை கொடுக்கவே நான் விரும்புவேன்

வீடியோ பார்க்க: ரேஷன் அட்டை பெறுவதற்காக தஸ்ரத் சிங்கின் நீண்ட பயணம்

“தகுதியில்லாத பல நபர்களும் பலன்களைப் பெற வரிசையில் நிற்கிறார்கள். ஒரு நபர், பட்டியல் சாதி மற்றும் நிலமற்ற தொழிலாளி என்று ஒரே சமயத்தில் இரு பிரிவுகளின் கீழ் வருகிறார். இதனால் வருடாந்திர புதுப்பிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மறு நகலாக்கத்தில் ஈடுபடுகிறார் சமக்ரா அலுவலர். இதன் காரணமாக குடும்பத்தினர் தனிப்பட்ட அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக” கூறுகிறார் ஜெயின்.

தஸ்ரத்தின் குடும்பத்திற்கு ஒன்றுபட்ட சமக்ரா அடையாள அட்டை 2012-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டிருந்தாலும், தனது சொந்த குடும்பத்திற்கு மற்றுமொரு தனிப்பட்ட அடையாள எண்ணை கார்கெலி வட்டார அலுவலகத்திலுள்ள லோக் சேவா கேந்திராவிலிருந்து வாங்கி வருமாறு அவரிடம் கூறியுள்ளனர். பிப்ரவரி 2020, இது நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, ரேஷன் அட்டை கிடைக்க வேண்டுமானால் ரூ. 1500 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என உமாரியாவில் உள்ள மாவட்ட லோக் சேவா கேந்திரா அதிகாரிகள் தஸ்ரத்திடம் கேட்டுள்ளனர். ( இந்தக் குற்றச்சாட்டை நிருபரால் உறுதி செய்ய முடியவில்லை. உமாரியா லோக் சேவா கேந்திராவின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தாலும் எந்த பதிலும் இல்லை. அலுவலகத்திற்கு அனுப்பபப்ட்ட மின்னஞ்சலுக்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை.)

“கட்டணத் தொகையை நான் செலுத்த மாட்டேன் அல்லது பிறகு செலுத்துவேன்” என இந்த நிருபரிடம் மே மாதம் கூறினார் தஸ்ரத். ஊரடங்கு காலத்தில் எந்தவித நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டமும் இல்லாததால் அடுத்த சில மாதங்களை எப்படி சமாளிக்கப் போகிறேன் என தெரியவில்லை என கவலைப்பட்டுக் கொண்டார்.

தஸ்ரத் மற்றும் சரிதா தம்பதியினருக்கு நர்மதா என்ற இரண்டு வயது மகள் இருக்கிறாள். தஸ்ரத்தின் தாயாரான 60 வயது ரம்பையும் அவர்களுடன்தான் வாழ்ந்து வருகிறார். நான் தையல் வேலை செய்வேன். அதன் மூலம் மாதத்திற்கு ரூ. 1000 கிடைக்கும். ஆனால் அதுவும் கிராமத்தின் திருமண சீசனைப் பொறுத்தே என்கிறார் சரிதா. மாதத்தின் சில நாட்களில் 100 ரூபாய் தினசரி கூலிக்காக இவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார். எங்கள் வயலில் விளைவிப்பதே எங்கள் சாப்பாட்டிற்கு போதுமானது. அதனால் சந்தையில் பொருட்களை விற்க மாட்டோம்” என்றார்.

Dashrath's 2.5 acres of land yields just enough produce to feed his family
PHOTO • Sampat Namdev

தஸ்ரத்தின் 2.5 ஏக்கர் நிலத்தில் விளைபவை அவரது குடும்பத்திற்குப் போதுமானதாக உள்ளது

உமாரியாவில் விவசாய மகசூல் பெரிதாக இல்லை. மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் 2013-ம் ஆண்டு அறிக்கையின் படி, உமாரியா மாவட்டம் கருங்கல், பாறைப்படிவங்கள் மற்றும் கிரானைட் கற்களால் சூழப்பட்டுள்ளது.  பின்தங்கிய பகுதிகளுக்கான நிதிக்கு தகுதியுடைய 24 மாவட்டங்களில் இதுவும் ஒன்று. குறைவான விவசாய மகசூல், மோசமான உள்கட்டமைப்பு, அதிகமான எஸ்சி-எஸ்டி மக்கள்தொகையினர், வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள் அதிகமாக வாழ்ந்து வருவது போன்ற காரணங்களால், 2007-ம் ஆண்டிலிருந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக இந்திய அரசிடமிருந்து அதிகமான நிதியை பெற்று வரும் 250 மாவட்டங்களில் உமாரியாவும் ஒன்று.

எனினும், உமாரியாவில் உள்ள கிராமங்கள் பெரிதாக மாற்றம் அடைந்தது போல் தெரியவில்லை.

மற்றொரு கடாரியா கிராமவாசியான தயான் சிங்கின் உணவு கூப்பனில் எழுத்துப் பிழை உள்ளதால் அவருக்கு குறைவான ரேஷன் பொருளே கிடைக்கிறது. சமக்ரா ஐடி-யை தொடங்கிய அடுத்த வருடமே உணவு கூப்பனோடு இணைந்த ஐடி என்னும் புதிய முறையை 2013ம் ஆண்டு கொண்டு வந்தது மத்தியபிரதேச அரசாங்கம். என்னிடம் ரேஷன் அட்டையே கிடையாது. ஏனென்றால் அதைப்பற்றி எதுவும் எனக்கு தெரியாது எனக் கூறுகிறார் தயான் சிங். 2011-ம் ஆண்டு ‘கர்மகாஜ்’ (உள்ளூரில் இப்படித்தான் அழைக்கப்படுகிறது) திட்டத்தின் கீழ் தனது பெயரை பதிவு செய்தேன் என நினைவு கூர்கிறார். மத்தியபிரதேசத்தின் கோண்ட் பழங்குடி இனாத்தைச் சேர்ந்த தயான் சிங், சனிர்மான் கர்மகார் மண்டல் திட்டத்தின் கீழ் மே 10, 2012-ம் ஆண்டு ரேஷன் அட்டையை அவர் பெற்றார்.

கர்மாகார் அட்டையில் தயான் சிங் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் – அவரது மனைவி பாஞ்சி பாய், 35, இரண்டு மகள்கள் குசும், 13 மற்றும் ராஜ்குமாரி, 3 - சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தயான் சிங் மற்றவர்களின் நிலத்திலும் வேலை செய்கிறார். இதன்மூலம் அவருக்கு தினசரி ரூ. 100 முதல் 200 வரை கிடைக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டுமான வேலை மாதத்தில் 10-12 நாள் மட்டுமே கிடைக்கிறது.

தஸ்ரத் போல், தயான் சிங்கின் குடும்பத்திற்கும் தங்கள் நிலத்தில் விளையும் வரகு, சாமை மகசூலே போதுமானதாக உள்ளது. ‘நாங்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகிறோம். ஆனாலும் ரேஷன் அட்டை கிடைத்தபாடில்லை. இரண்டு குழந்தைகளுக்கும் பள்ளியில் சத்துணவு கிடைத்தாலும் அது போதுமானதாக இல்லை’ என்கிறார் இல்லத்தரசியான பாஞ்சி பாய்.

A clerical error in the Dhyan Singh's food coupon has ensured he gets less rations
PHOTO • Sampat Namdev

தயான் சிங்கின் உணவு கூப்பனில் எழுத்துப் பிழை உள்ளதால் அவருக்கு குறைவான ரேஷன் பொருளே கிடைக்கிறது

மாணவர்களுக்கான உதவித்தொகை, குடும்ப ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு பலன்களை அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஒரே அட்டையின் மூலம் வழங்குவதற்காக 2003 -ம் ஆண்டு கர்மாகர் திட்டம் தொடங்கப்பட்டது. கார்மாகர் அட்டையை பெற்றதும் உங்களுக்கு கூப்பன் கிடைக்கும் என பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் கூறியதாக நினைவுகூர்கிறார் தயான் சிங். அவர் அட்டையை பெற்றிருந்தாலும் 2011-க்குப் பிறகான ஐந்து வருடங்களில் எந்த ரேஷன் பொருளும் அவருக்கு கிடக்கவில்லை. ஏனென்றால் உணவு கூப்பன் அவரது பெயரில் வழங்கப்படவில்லை. ஒருவழியாக 2016-ல் கூப்பனைப் பெற்றார்.

ஜூன் 22, 2016-ம் ஆண்டு கூப்பன் வழங்கப்பட்ட போது, பஞ்சி பாய் பெயர் விடுபட்டுப் போனது. தயான் சிங் மற்றும் அவரது இரு மகள்களின் பெயர்கள் மட்டுமே அதில் இருந்தன. தவறை திருத்த அவர் முயற்சித்தாலும், அவரது மனைவியின் பெயர் இன்னும் கூப்பனில் இடம்பெறவில்லை. இந்த உணவு கூப்பன் மூலம் குடும்பத்தில் நபர் ஒருவாருக்கு 5 கிலோ அரிசி, கோதுமை, உப்பு வழங்கப்படுகிறது. “இது எங்களுக்கு போதுமானதாக இல்லை. ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே நல்ல உணவை சாப்பிடுகிறோம். இப்படித்தான் நாங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்கிறார் தயான் சிங்.

மத்தியபிரதேச அரசாங்கம் தொகுத்த சமக்ரா தரவுகளின் படி, ஜூலை 16, 2020 வரை ரேஷன் அட்டைக்காக உமாரியா மாவட்டத்தில் பெறப்பட்ட 3,564 விண்ணப்பங்களில், மாநில உணவு வழங்கல் மாவட்ட விநியோக அலுவலர் மற்றும் இளநிலை விநியோக அலுவலரால் 69 விண்ணப்பத்திற்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உமாரியாவில் இன்னும் 3495 விண்ணப்பங்கள் சரி பார்க்காமல் உள்ளது. (சமக்ரா மிஷனின் இயக்குநர் அலுவலகத்திற்கு இந்த நிருபர் மின்னஞ்சல் அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.)

கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களும் ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என மார்ச் 26, 2020 அன்று மத்திய பிரதேச முதலமைச்சர் அறிவித்தார். எனினும், தற்காலிக நடவடிக்கைகளுக்குப் பதிலாக நீண்ட கால நோக்கில் திட்டங்கள் வகுப்பட வேண்டும் என செயற்பாட்டாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

இதற்கிடையில், தன்னுடைய நிலத்தில் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் தஸ்ரத் சிங். உள்ளூர் அரசியல்வாதிகளின் பின்னால் ஓட எனக்கு நேரமில்லை என்கிறார். இது விதை தூவும் காலம். இந்த முறை நல்ல விளைச்சல் கிடைக்கும் என அவர் நம்பிக் கொண்டிருக்கிறார். அப்போதுதான் ரேஷன் அட்டை இல்லாமல் அவரது குடும்பத்தால் சமாளிக்க முடியும்.

பல தகவல்களை தந்து உதவியர் சம்பத் நாம்தேவ். கடாரியா கிராமத்தின் சமூக செயற்பாட்டாளரான இவர், கிராமப்புற மத்தியபிரதேசத்தில் நிலவும் சத்துக் குறைபாட்டில் கவனம் செலுத்தும் அரசு சாரா அமைப்பான விகாஸ் சம்வாத்தோடு இணைந்து பணியாற்றுகிறார்.

தமிழில்: வி. கோபி மாவடிராஜா

Akanksha Kumar

Akanksha Kumar is a Delhi-based multimedia journalist with interests in rural affairs, human rights, minority related issues, gender and impact of government schemes. She received the Human Rights and Religious Freedom Journalism Award in 2022.

Other stories by Akanksha Kumar
Translator : V. Gopi Mavadiraja

V. Gopi Mavadiraja is a full time translator and freelance journalist, with special interest in stories and sports journalism.

Other stories by V. Gopi Mavadiraja