அவருக்கு எழுதப் படிக்கத் தெரிந்த ஒரே விஷயம் தனது பெயர் மட்டுமே. கோ-பூஹ்-லீ என அவர் தேவநாகரியில் பெருமையுடன் கவனமாக எழுதுகிறார். பிறகு சத்தமாக சிரிக்கிறார்.
நான்கு குழந்தைகளுக்குத் தாயான 38 வயதாகும் கோப்லி கமேதி, பெண்கள் மனதில் நினைத்துவிட்டால் எதையும் செய்து விடுவார்கள் என்கிறார்.
உதய்பூர் மாவட்டத்தின் கோகுண்டா வட்டாரம், கர்தா கிராமத்தில் உள்ள இந்த குடியிருப்பில் சுமார் 30 வீடுகள் உள்ளன. அச்சமூகத்தின் பிற பெண்களின் உதவியோடு நான்கு குழந்தைகளையும் கோப்லி வீட்டிலேயே பெற்றெடுத்தவர். அவரது நான்காவது குழந்தையான மூன்றாவது மகளைப் பெற்ற பிறகு கருத்தடை சாதனம் பொருத்திக் கொள்ள முதன்முறையாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
“என் குடும்பம் முழுமைபெற்று விட்டதாக இப்போது தான் முதன்முறையாக உணர்கிறேன்,” என்கிறார் அவர். கோகுண்டா சமூக சுகாதார மையத்திலிருந்து (CHC) வரும் சுகாதாரப் பணியாளர் ஒருவர், மேற்கொண்டு கர்ப்பமடைவதை தடுக்கும் “அறுவை சிகிச்சை” குறித்து அவரிடம் கூறியிருந்தார். அதுவும் இலவசமாக. கிராம மக்களுக்காக அரசு நடத்தும் கிராமப்புற மருத்துவமனைகளான 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs) வழியாகச் செயல்படும் CHCக்கு அவர் நேரடியாக செல்ல வேண்டியதுதான் மிச்சம்.
இதுபற்றி வீட்டில் கணவரிடம் பலமுறை பேசியும் அவர் கண்டு கொள்ளவில்லை. தனது கடைசி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதெல்லாம் யோசித்து, பல மாதங்களாக மனதைத் திடப்படுத்திக் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளார்.













