சுரேஷ் மெகெந்தலே, அவருக்குப் பிடித்த பேருந்து நிலையம் குறித்தக் கவலையில் இருக்கிறார். அவரில்லாதபோது நிலையம் சுத்தப்படுத்தப்பட்டிருக்காது. அவர் அன்புடன் பிஸ்கட்டுகள் போடும் நாய்க்குட்டிகளும் பசியோடிருக்கும். புனேவின் மல்ஷி தாலுகாவில் இருக்கும் பாடிலுள்ள பேருந்து நிலையத்தில் அவர் இருக்கக்கூடிய விசாரணை பூத் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடியிருக்கிறது. அங்கிருந்துதான் அவர் பாடில் வந்துச் செல்லும் மாநில அரசுப் பேருந்துகளின் போக்குவரத்தை ஒருங்கிணைப்பார்.

”பாட் சென்று 28 நாட்களாகிறது. எல்லாமும் (அங்கு) சரியாக இருக்குமென நம்புகிறேன்,” என்கிறார் 54 வயது மெகெந்தலே. அவரை நான் சந்தித்த நவம்பர் 26ம் தேதி, அவரது பேருந்து நிலையத்திலிருந்து 35 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் இருந்தார். நிலையத்தின் நுழைவாயிலில் இருந்த ஒரு கூடாரத்தில் மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்து வாரியத்தின் சக ஊழியர்களுடன் போராட்டத்தில் அவர் அமர்ந்திருந்தார். மாநிலம் முழுவதுமிருந்த போக்குவரத்து வாரிய ஊழியர்கள் இந்த வருட அக்டோபர் 27லிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலப் போக்குவரத்தின் பேருந்துகளில் பணிபுரியும் ஊழியர்களில் கிட்டத்தட்ட 250 நடத்துநர்களும் 200 ஓட்டுநர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றிருக்கின்றனர். “போக்குவரத்து ஊழியர்களின் தற்கொலையிலிருந்து போராட்டம் தொடங்கியது. 31 ஊழியர்கள் கடந்த வருடத்தில் தற்கொலை செய்து கொண்டனர்,” என விளக்குகிறார் மெகெந்தலே. அவரைச் சந்தித்த மூன்று நாட்களுக்குள் மேலும் இரண்டு ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். தாமதமாகும் ஊதியங்கள் போக்குவரத்து ஊழியர்களுக்குக் கஷ்டத்தை வழங்குகிறது. கோவிட் 19 பரவலுக்குப் பிறகு சூழல் இன்னும் மோசமாகியிருக்கிறது. சரக்குப் போக்குவரத்தைத் தாண்டி போக்குவரத்து வாரியத்துக்கும் எந்த வருமானமும் இல்லை.

Suresh Mehendale (in the striped t-shirt) with ST bus conductors on strike at Swargate bus depot in Pune. On his left are Anita Mankar, Meera Rajput, Vrundavani Dolare and Meena More.
PHOTO • Medha Kale
Workshop workers Rupali Kamble, Neelima Dhumal (centre) and Payal Chavan (right)
PHOTO • Medha Kale

இடது: ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நிறுத்துநர்களுடன் வேலைநிறுத்தம் செய்யும் சுரேஷ் மெகெந்தலே (கோடு போட்ட டி ஷர்ட்). அவரின் இடப்பக்கத்தில் அனிதா மங்கர், மீரா ராஜ்புத், வ்ருந்தாவனி தொலாரே, மீனா மற்றும் பலர். வலது: பணிமனை ஊழியர்கள் ருபாளி காம்ப்ளே, நீலிமா துமால்(நடுவே) மற்றும் பாயல் சவான் (வலது)

ஊழியர்களின் தற்கொலையை அடையாளப்படுத்த அக்டோபர் 27ம் தேதி போக்குவரத்து ஊழியர்களால் மும்பையில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் அடுத்த நாளே ஊதிய உயர்வு மற்றும் நிலுவைப் பணத்தைக் கொடுக்கக் கோரி மொத்த மாநிலத்தையும் பற்றியது. “இணைப்பையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்கிறார் மெகெந்தலே. மாநில அரசுடன் போக்குவரத்து வாரியத்தை இணைக்க வேண்டும் என்றக் கோரிக்கையைக் குறிப்பிடுகிறார் அவர். மாநில அரசின் ஊழியர்களுக்கு நிகராக நடத்தப்பட வேண்டும் என விரும்புகின்றனர் போக்குவரத்து ஊழியர்கள். அவர்களைப் போன்ற ஊதிய அளவும் பலன்களும் கோருகின்றனர்.

சாலைப் போக்குவரத்து வாரியச் சட்டத்தின்படி மகாராஷ்டிர அரசால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து வாரியம் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும். 250 நிலையங்களும் 588 நிறுத்தங்களும் 104,000 ஊழியர்களும் கொண்டு இயங்கும் வாரியம் , ‘ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு சாலை; ஒவ்வொரு சாலைக்கும் ஒரு பேருந்து’ என்கிற கொள்கையின்படி போக்குவரத்துச் சேவைகளை மாநிலம் முழுமைக்கும் வழங்குகிறது.

30 வயதுகளில் இருக்கும் வ்ருந்தாவனி தொலாரே, மீனா மோர் மற்றும் மீரா ராஜ்புட் ஆகியோர் ஊழியர்களின் கோரிக்கைகளை ஆதரிக்கின்றனர். ஸ்வர்கேட் நிலையத்தில் பணிபுரியும் 45 பெண் நடத்துநர்களில் அவர்களும் அடக்கம். இணைய வேண்டுமென்ற கோரிக்கை மட்டும்தான் அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என நம்புகிறார்கள். “13-14 மணி நேரங்களுக்கு வேலை பார்க்கிறோம். ஆனால் எட்டு மணி நேர ஊதியம்தான் பெறுகிறோம். எங்களின் புகார்களை கேட்பதற்கான அமைப்பு என எதுவுமில்லை,” என்கிறார் மீனா. “அக்டோபர் 28லிருந்து ஒரு பேருந்து கூட நிலையத்தை விட்டுக் கிளம்பவில்லை. இணைப்புக்கான கோரிக்கையை மாநில அரசு ஏற்கும் வரை நாங்கள் பின் வாங்கமாட்டோம்,” என்கிறார் அவர்.

“எல்லா 250 பேருந்து நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன. ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பணிமனை ஊழியர்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இருக்கின்றனர். ஒரு சில ஒப்பந்தத் தொழிலாளர்கள் மட்டும்தான் பங்குபெறவில்லை,” என்கிறார் 12 வருடங்களாக ஸ்வர்கேட் நிலையத்தில் நடத்துநராக பணிபுரியும் 34 வயது அனிதா அஷோக் மங்கர். அமராவதி மாவட்டத்தைச் பூர்விகமாகக் கொண்ட அனிதா மடல்வாடி ஃபட்டாவில் வசிக்கிறார். புனே - கொல்வன் வழித்தடத்தில் அவர் பணிபுரிகிறார்.

School children near Satesai walking to school to Paud, 10 kilometres away.
PHOTO • Medha Kale
Shivaji Borkar (second from the left) and others wait for a shared auto to take them to their onward destination from Paud
PHOTO • Medha Kale

இடது: சடேசாய்க்கு அருகே பள்ளிக்குழந்தைகள் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பாட் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர். வலது: ஷிவாஜி பொர்க்கரும் (இடதிலிருந்து இரண்டாமவர்)  பிறரும் ஷேர் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றனர்

ஆனால் மூத்த தொழிலாளர் தலைவரான பன்னாலால் சுரானா மகாராஷ்டிரா டைம்ஸ்ஸின் நேர்காணல் ஒன்றில் இணைப்புக்கான கோரிக்கை ஒரு தவறான யோசனை எனக் கூறியிருக்கிறார். மகாராஷ்டிராவின் மாநிலப் போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தில் தலைவராக 17 வருடங்கள் இருந்திருக்கிறார். ஊதிய உயர்வு கோரிக்கையை ஆதரித்ததாக சொல்கிறார் சுரானா. அரசு இலாகாக்களின் அனுமதிக்கு காத்திராமல் வேகமாகவும் சுதந்திரமாகவும் முடிவெடுப்பதற்காகத்தான் மாநில சாலைப் போக்குவரத்து வாரியம்  உருவாக்கப்பட்டது என்கிறார் அவர்.

போராடும் ஊழியர்களில் சிலர் போக்குவரத்து வாரியத்தின் ஊதியத்தில் சமத்துவம் இருக்க விரும்புகின்றனர். “சக ஆண் ஊழியர்களை விடக் குறைவாக ஊதியம் கொடுக்கப்படுகிறது. அதுவும் நேரத்துக்குக் கிடைப்பதில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க விரும்புகிறோம்,” என்கிறார் 24 வயது பாயல் சவான். அவரும் அவரது சக ஊழியர்களான ருபாளி காம்ப்ளே மற்றும் நீலிமா துமால் ஆகியோரும் மூன்று வருடங்களுக்கு முன் ஸ்வர்கேட் நிலையப் பணிமனையில் வேலை பார்க்கவென தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இயந்திர மற்றும் மின்சாரப் பணிகளில் உதவி செய்வதே அவர்களின் வேலை.

போக்குவரத்து வாரியத்தின் புனே பிரிவு, வேலை நிறுத்தத்தால் தினசரி 1.5 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திப்பதாக சொல்லப்படுகிறது. தனியார் குளிர்சாதன பேருந்துகள் அல்லாமல், அதன் 8,500 பேருந்துகளின் சேவை முடங்கியுள்ளது. தினசரிப் பயணம் செய்யும் 65,000 பயணிகளின் போக்குவரத்து பாதிப்படைந்திருக்கிறது.

பாட் பகுதியில் பாதிப்பு துலக்கமாக தெரிகிறது. இந்த நாட்களில் ஷிவாஜி பொர்க்கர் பாட் பகுதியிலிருந்து ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார். ஒவ்வொரு வாரமும் புனேவிலிருந்து ரிகே கிராமத்திலிருக்கும் அவரின் விவசாய நிலம் வரை 40 கிலோமீட்டர் பயணிக்கிறார்.  புனேவின் சந்தையிலிருந்து பாட் வரை புனே மகாநகர் பரிவாகன் மகாமண்டல் நிறுவனத்தால் இயக்கப்படும் போக்குவரத்து மட்டும்தான் அவர் தற்போது பயன்படுத்தும் ஒரே போக்குவரத்து ஆகும்.

Commuters have had to turn to other modes of transport from Pune city due to the ST strike across Maharashtra.
PHOTO • Medha Kale
The locked enquiry booth at Paud bus stand
PHOTO • Medha Kale

இடது: வேலைநிறுத்தத்தால் பயணிகள் வேறு போக்குவரத்து வழிகளுக்கு திரும்பியிருக்கின்றனர். வலது: பாட் பேருந்து நிலையத்தில் பூட்டியிருக்கும் விசாரணை பூத்

பொர்க்கரை நவம்பர் 27ம் தேதி சந்தித்தபோது அவரும் பிற ஐந்து பேரும் ஆட்டோவுக்காக ஒரு சிறு கடையில் காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ஆறு சீட்டுகள் கொண்ட வாகனத்தில் 14 பேர் வந்தால்தான் கிளம்ப முடியும். 8 பேர் நடுவில், 4 பேர் பின்னால், ஓட்டுநரின் இரு பக்கமும் இரண்டு பேர். "காத்திருப்பதைத் தவிர நாங்கள் என்ன செய்ய முடியும்?," எனக் கேட்கிறார் பொர்க்கர். "கிராமவாசிகளுக்கு மாநில அரசுப் பேருந்துச் சேவை உயிர் போல. ஒரு மாதமாகிவிட்டது. இன்னும் பேருந்து வரவில்லை." இரு மடங்குப் பேருந்துக் கட்டணத்தை ஆட்டோக்கள் வசூலிப்பதாகச் சொல்கிறார். அரசுப் பேருந்துகளில் முதியவர்களுக்கு அரைக் கட்டணம்தான்.

கொல்வன், ஜவன் மற்றும் டெலகோவன் ஆகியப் பகுதிகளுக்கு தினசரி ஐந்து பேருந்துகள் அனுப்பும் பாட் பேருந்து நிலையம் இப்போது ஆளரவமின்றி காணப்படுகிறது. நண்பர்களுக்காக அங்குக் காத்திருந்த மூன்று பெண்கள் என்னிடம் பேசினர். பெயர் வெளியிடப்படவும் படம் பிடிக்கப்படவும் அவர்கள் விரும்பவில்லை. "ஊரடங்குக்குப் பின் என் பெற்றோர் என்னை கல்லூரிக்கு அனுமதிக்கவில்லை. பயணத்துக்கு அதிக செலவாகிறது.  12ம் வகுப்பு வரை என்னிடம் பஸ் பாஸ் இருந்தது," என்கிறார் அவர்களில் ஒருவர். 12ம் வகுப்புக்குப் பிறகு அவர்கள் படிப்பை நிறுத்தி விட்டனர். மாணவிகளின் படிப்பு நிறுத்தப்பட போக்குவரத்துச் செலவுதான் பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது.

பாட் மற்றும் கொல்வன் ஆகிய இடங்களுக்கு இடையேயான 12 கிலோமீட்டர் தூரத்தில் நடந்தே பள்ளிக்குச் செல்லும் எட்டு மாணவர் குழுக்களை ஒரே நாளில் பார்த்தேன். சடேசாய் கிராமத்தில் பாட் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஒரு மாணவி சொல்கையில், "பள்ளிக்கு செல்ல (கோவிட் 19 ஊரடங்குக்கு பிறகு) நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் பேருந்துகள் இல்லை. நடக்க வேண்டியிருக்கிறது." 5-12ம் வகுப்பு மாணவிகளுக்கு அரசுப் போக்குவரத்து இலவச பஸ் பாஸ் வழங்கி இருக்கிறது. ஆனால் பேருந்துகள் இயங்கினால்தான் அது பயன்படும்.

"மக்களுக்குச் சேவை செய்கிறோம். ஏழைகளிலும் ஏழைகளுக்கு உதவுகிறோம். அவர்கள் சிரமம் புரிகிறது. எனினும் இதை விட்டுவிட முடியாது. மக்கள் புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது," என்கிறார் மெகெந்தலே. 27 வருடங்களாக மாநிலப் போக்குவரத்து வாரியத்தில் பணிபுரிகிறார். போக்குவரத்து அலுவலர் தேர்வில் 2020ம் ஆண்டு தேர்ச்சி பெற்றிருக்கிறார். பதவி உயர்வு கிடைக்கும் என நம்புகிறார். ஆனால் அது நடக்கப் பேருந்துகள் ஓடத் துவங்க வேண்டுமென அவர் தெரிந்து வைத்திருக்கிறார். தற்போதைய நிலையில் அவர் பார்த்துக் கொள்ளும் பேருந்து நிலையம் அவருக்காக காத்திருக்கிறது.

தமிழில் : ராஜசங்கீதன்

Medha Kale

Medha Kale is based in Pune and has worked in the field of women and health. She is the Translations Editor, Marathi, at the People’s Archive of Rural India.

Other stories by Medha Kale
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan