“அனைவரும் பால்கனிகளிலும் மாடிகளிலும் உணவை வளர்க்கத் தொடங்கினால், நமக்கு தேவையான உணவு கிடைத்துவிடும்.”

கிராமப்புற இந்தியாவை பற்றிய புரிதலை கொடுக்கவென அழைக்கப்பட்டிருந்த நகர்ப்புற மாணவர்களின் வகுப்பறையில் நாங்கள் இருந்தோம். மாணவரின் பேச்சு அமைதியான வெடிகுண்டு போல் விழுந்தது. அதை அப்படியே விட்டுவிட முடியாது. ஏனெனில் சரிசெய்ய முடியாத அளவுக்கான பாதிப்பை அது ஏற்படுத்தவல்லது. வகுப்பறையில் இருந்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு ‘அனைவரும்’ என்கிற வார்த்தைக்கு தவறான அர்த்தத்தை அது கொடுத்துவிடும். எனவே அர்த்தப்பூர்வமான ஒரு கலந்துரையாடலை உருவாக்க நாங்கள் அதை பயன்படுத்தினோம். மாடி, பால்கனி அல்லது திறந்த வெளி எதுவும் இல்லாமல் வீடுகள் இருக்கிறதா?

PARI-ன் கல்விக்கிளை, ஒரே மாதிரியான சிந்தனைகளையும் பரந்துபட்ட எடுத்துக்காட்டுகளையும் நிராகரிப்பதற்கு இத்தகைய தருணங்களை கைப்பற்ற விரும்புகிறது. PARI கட்டுரைகளை கொண்டு நகர்ப்புற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றின் மாணவர்கள் கிராமப்புற மற்றும் விளிம்புநிலை சமூகங்களை ஆராய்ந்தறிந்து புரிந்து கொள்ள விரும்புகிறோம். அதே போல, கிராமப்புற மாணவர்கள் அவர்களின் சமூகங்களை பதிவு செய்து ஆவணமாக்கி, அவர்களின் வாழ்க்கைகளையும் உள்ளடக்கிய பாடநூல்களை தயாரிக்கும் வேலையில் உதவ விரும்புகிறோம். மரியா மோண்டெசரியை பொறுத்தவரை சமூகத்தை மாற்றி கட்டமைப்பது கல்வியை மாற்றி கட்டமைப்பதிலிருந்துதான் வரும். அப்போதுதான் நாட்டில் நிலவும் பலதரப்பட்ட யதார்த்தங்களை மாணவர்கள் கண்டு, கேட்டு, கற்று கொள்ள முடியும்.

நம் மாணவர்களை ‘உலகளாவிய குடிமக்களாக’ மாற்றுகிற அவசரத்தில் அவர்களின் சுற்றுப்புற யதார்த்தத்திலிருந்து அவர்கள் அந்நியப்படுத்தப்பட்டிருப்பதை ஆசிரியர்களாக எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. பெருநகரங்களை தாண்டி இந்தியா இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். பல இந்தியாக்களை புறக்கணிப்பதன் மூலமும் அவற்றுக்கான இடங்களை பாடத்திட்டத்தில் நிராகரிப்பதன் மூலமும், அவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்கிற கருத்தைதான் நாம் உருவாக்குகிறோம். PARI-ன் ஆசிரியர் மற்றும் நிறுவனர் பி.சாய்நாத் சொல்கிறார்: ‘இந்தியாவின் ஒரு முழு தலைமுறை சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக வளர்ந்து கொண்டிருக்கிறது.”

PHOTO • Shraddha Agarwal
Waiting outside the Communist Party of India (Marxist) office at Wada taluka's Kiravali Naka
PHOTO • Shraddha Agarwal

ஒரு நிலத்தில் ஒரு பெண் குனிந்து நடவு செய்யும் புகைப்படத்தை ஒரு மாணவரால் அடையாளம் காண முடியும். ஆனால் நாம் அந்த புகைப்படத்தை தாண்டி செல்ல முடியுமா? அவர் ஒரு விவசாயியா, குத்தகை விவசாயியா அல்லது விவசாயக் கூலியா? இந்த விவசாயிகள் சமைத்து, சுத்தப்படுத்தி, குழந்தைகள் வளர்த்து, கால்நடை வளர்த்து, இன்ன பிற வேலைகளும் செய்கின்றனர். இன்று அவர்கள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர்

தொடர்புபடுத்துதல், உட்கூறுகளின் இணைப்புகளை விளக்குதல் மற்றும் வகுப்பறைகளிலும் பாடத்திட்டங்களிலும் ஒரே மாதிரியான சிந்தனைகளை உடைத்தல் ஆகியவைதான் PARI கல்வி வழங்கும் போதனை முறையின் கரு. செய்திக் கட்டுரைகளை கொண்டு கிராமப்புற இந்தியா ஒன்றும் கொடுமையான ஏழ்மை நிறைந்த தனித்த பகுதி இல்லை என்பதை உணர்த்த விரும்புகிறோம். துடிப்பான, ஆர்வம் கொடுக்கக் கூடிய, அற்புதமான பல பாடங்களை நம் அனைவருக்கும் அளிக்கும் பன்மைத்தன்மை கொண்ட இடம் என புரிய வைக்க விரும்புகிறோம்.

குர்த் காஹ்ன் என்னும் கல்வியாளர் அனுபவப்பூர்வமான கல்வியை விளக்குகையில், “இளையோரை வெல்வதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. அறிவுறுத்துதல், கட்டாயப்படுத்துதல் மற்றும் கவருதல்,” என்கிறார். PARI கல்வியில் நாம், தர்க்கரீதியாக அறிவுறுத்தவும் உளப்பூர்வமாக கட்டாயப்படுத்தவும் நல்ல கதைசொல்லலில் வழி கவரவும் விரும்புகிறோம்.

வருமானம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும் இந்தியா போன்றவொரு நாட்டில் பலவித சமூக யதார்த்தங்களை பற்றி கலந்துரையாடுவது மிகவும் முக்கியமாகும். சமத்துவமின்மையின் உச்ச அளவுகளை நாம் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் முதல் பத்து சதவிகித இந்தியர்கள் தேசிய வருமானத்தின் 55 சதவிகிதத்தை கொண்டிருக்கிறார்கள்.

PHOTO • PARI Education Team

ஜார்கண்டின் நோவாமுண்டி ஒன்றியத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவரான அனில் சாம்பியா இந்த வரைபடத்தை உருவாக்கி இருக்கிறார். தன் சுற்றுப்புறத்தில் மாணவர்கள் ஆர்வம் கொள்வதற்காக அக்டோபர் 2020ல் கொடுக்கப்பட்ட வேலை, அவர்களின் கிராம வரைபடத்தை வரையும் வேலை

இளைய நகர்ப்புற இந்தியர்கள், எங்கு அவர்கள் வாழ்கிறார்கள் என்பதையும், யார் அவர்களின் உணவை விளைவிக்கிறார்கள் என்பதையும் எங்கிருந்து அவர்களுக்கான நீர் மற்றும் மின்சாரம் வருகிறது என்பதையும் அன்றாடம் அவர்கள் பயன்படுத்தும் சாலைகள் மற்றும் கட்டடங்களை கட்டியது யார் என்பதையும் பற்றி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இருக்கும் சுகாதார, கல்வி வசதிகளும் வாழ்க்கை தேர்வுகளும் ஏன் பிறருக்கு நேரவில்லை என்பதை அவர்கள் கண்டு கேள்வி கேட்க வேண்டும். ஆனால் நம் இளையோர் கேள்வி கேட்கத் தொடங்க, அதற்கு தேவையான கருவிகளை நாம் கொடுக்க வேண்டும். உதாரணமாக தகவல் மற்றும் பரிவு ஆகிய கருவிகளை.

ஒரு நிலத்தில் ஒரு பெண் குனிந்து நடவு செய்யும் புகைப்படத்தை ஒரு மாணவரால் அடையாளம் காண முடியும். ஆனால் நாம் அந்த புகைப்படத்தை தாண்டி சென்று அதில் அடங்கியிருக்கும் விஷயங்களை ஆலோசிக்க முடியுமா? அவர் ஒரு விவசாயியா, குத்தகை விவசாயியா அல்லது விவசாயக் கூலியா? இந்த விவசாயிகள் சமைத்து, சுத்தப்படுத்தி, குழந்தைகள் வளர்த்து, கால்நடை வளர்த்து, இன்ன பிற வேலைகளும் செய்கின்றனர். இன்று அவர்கள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர். நம் ஜனநாயக உரிமைகளில் தாக்கம் செலுத்தும் ஓர் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பாடத்திட்டம் இப்பிரச்சினைகளை புறக்கணிக்கிறது என்றில்லை. தேசிய கல்வி பாடத்திட்டத்தை மேலோட்டமாக பார்த்தால், ‘வறுமை’, ‘தேசிய வருமானம்’, ‘உழைப்பு’ போன்ற வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதை கண்டு திருப்தி அடைய முடியும். இந்த கருத்துகள் பாடநூல்களில் சொல்லப்பட்டு, அவை கற்பிக்கவும் படுகின்றன. ஆனால் நடைமுறையில் அது வேறு விதமாக இருக்கிறது. தேர்வு கேள்விகள் மதிப்பெண் எளிதாக எடுக்கும் முறையில் இருக்கின்றன. அறிவை பரிசோதிக்கும் வாய்ப்பை மிகக் குறைவாகவே அவை கொண்டிருக்கின்றன. பதினோறாம் வகுப்பு பாடத்திட்டம் தேர்வின் ஒரு பகுதியாக வறுமை ஒழிப்பு திட்டங்களை பற்றிய அறிக்கையை தயாரிக்கச் சொல்கிறது. எந்தவொரு 17 வயது மாணவரும் கூகுளில் அதை ஒரு நொடிக்குள் தேடி பல வறுமை ஒழிப்பு திட்டங்களை பட்டியலிட்டுவிட முடியும். ஆனால் வறுமை பற்றிய கல்வியாக அதை புரிந்து கொள்ள முடியுமா?

பள்ளிக்கூட பாடத்திட்டத்தை ஆராய்ந்து பார்த்ததில் வீட்டுப்பாடத்தை ஆர்வமூட்டும் விஷயமாக்கி, மாணவர்கள் அறிந்திராத மக்களை பற்றி கற்கும் வாய்ப்புகள் இருப்பதை கண்டறிந்தோம். பாடத்திட்டத்துக்குள் நுழைவது அவசியம். அதற்கு வெளியே இருந்து செயல்பட்டால், அது செயலிழந்துவிடும். கைவிடப்படவும் கூடும்.

முதல் PARI பள்ளி திட்டத்தை நாங்கள் ஒரு ஆசிரியர்களின் அறைக்குள்ளிருந்து பொருளாதார ஆசிரியர்களுடன் உரையாடி அனைவருக்கும் பொருந்தக் கூடிய பாடமாக எது இருக்கும் என ஆராய்ந்து வடிவமைத்தோம். ஆழ்ந்த கற்றல், மதிப்பெண்கள் பெறுதல் மற்றும் பாடத்திட்ட உள்ளடக்கும் யாவும் ஒன்றுபடுவது நோக்கமாக இருந்தது. எங்களின் முதல் பரிச்சயம், ஆகஸ்ட் 2018ல் ஒரு பள்ளி கிராமப்புற இந்தியாவின் பல்வேறு அம்சங்களை பெற்ற அழைத்திருந்தபோது நேர்ந்தது. என்னுடன் பணி புரியும் விசாகா ஜார்ஜ்ஜும் நானும் மொத்த பள்ளிக்கும் முன் காலை 8 மணிக்கு ஒரு புரொஜக்டர் மற்றும் இணைப்பு கிடைக்காத இணையத் தொடர்புடன் நின்று கொண்டிருந்தோம். ஜனநாயகத்தில் செய்தியின் பங்கு என்பதில் தொடங்கி, அகர்தாலாவின் மலைகளில் மூங்கில் தூக்கும் வேலை செய்யும் பிஸ்வாஸின் கதையை சொல்லத் தொடங்கினோம். எல்லா வகுப்புகளையும் தொடர்புபடுத்தி பல்வேறு நிலைகளை கடந்து பிஸ்வாஸின் கதையை அற்புதமாக எங்களால் சொல்ல முடிந்தது.

As expected, most students were not aware of migrants or had stereotypical images of them as homeless people, lazy and illiterate, or avaricious and untrustworthy. They were also quite sure that they could write this up in no time (Illustration: Antara Raman)
PHOTO • Satyaprakash Pandey

எதிர்பார்த்த மாதிரியே பல மாணவர்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களை பற்றி தெரியவில்லை. அல்லது அவர்களை வீடில்லா மக்களாகவும் சோம்பேறிகளாகவும் நம்பகத்தன்மை அற்றவர்களாகவும் கல்லாதவர்களாகவும் பேராசை நிறைந்தவர்களாகவும் பார்க்கும் போக்கு இருந்தது. மேலும் இதை சீக்கிரமே எழுதிட முடியுமெனவும் அவர்கள் நம்பினார்கள் (ஓவியம்:அந்த்ரா ராமன்)

விளிம்புநிலை சமூகங்களில் ஆரம்பக்கட்ட ஆய்வுகள் செய்ய மாணவர்களை அனுப்பும் பல்கலைக்கழகங்களிடம் நாங்கள் பேசத் தொடங்கினோம். கனமான பட்டப்படிப்பின் ஆய்வுகள் மெல்ல PARI கல்வியின் கட்டுரைகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன. கல்வி கற்றலுடன் கலைஞர்கள், விவசாயிகள், மேய்ப்பர்கள் போன்றோரின் வாழ்ந்த அனுபவங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. பள்ளி சுற்றுலாக்கள் களத்திலிருந்து செய்தி சேகரிக்கும் வாய்ப்புகளை வழங்கின. பெரிதாக தெரியாத தொழில்கள் மற்றும் வாழ்க்கைகளை ஆவணப்படுத்தும் வாய்ப்புகளும் நேர்ந்தன.

PARI செய்தியாளர்களாக வகுப்பறைகளில் பாடம் நடத்த செல்லும்போது, நமக்கு நேர்ந்த சம்பவங்களையும் உள்ளடக்கி கற்பிக்க முடிந்தது. வேறொருவரின் வாழ்க்கைகளை சொல்வதாக இல்லாமல் இன்னும் நம்பகத்தனமையை அதிகரிக்க முடிந்தது. 12 வயது குழந்தைகள் தொடங்கி இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் வரை அனைவரிடம் பேசுவதற்கு இது சிறந்த முறை என்பதை எங்களின் மூன்று வருட அனுபவத்தில் தெரிந்து கொண்டோம்.

ஆய்வுமாணவர் குறிப்பிட்டார்: “களத்தில் வேலை பார்ப்பது அவசியம். என்னுடைய முதல் முயற்சிகள் ஆய்வு கட்டுரைகள் போல் இருந்தன. அவற்றை எப்படி வாழ்க்கை கதைகளாக ஆவணப்படுத்துவது என்பதை PARI-யிடமிருந்து கற்றுக் கொண்டேன். எழுதுகையில் உங்களின் கருத்தை திணிக்காமல் கதை மாந்தரின் கதையை சொல்லவும் கற்றுக் கொள்ள முடிந்தது.” இதையும் இதை போல் பல்வற்றையும் ஒவ்வொரு மாணவரின் எழுத்துக்கும் பின் வரும் ஆசிரியர் குறிப்பில் பார்க்க முடியும். இந்த வாழ்க்கை அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் அதுவும் ஒரு பகுதியாக எங்களுக்கு இருக்கிறது.

“எங்களின் மாணவர்கள் சிறந்த சமூக விழிப்புணர்வில் வளர்ந்திருக்கிறார்கள்,” என எங்களுக்கான நேரம் முடிந்ததும் ஒரு பள்ளி ஆசிரியர் கூறினார். “இப்போதைய தேவை இதுதான்.”

PARI கல்விக் குழு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் எழுத்தையும் ஆராய்கிறது. அவற்றின் உண்மைத்தன்மையை பரிசோதிக்கிறது. இயல்பாக தெரிகிற விஷயங்களையும் தாண்டி மாணவர்கள் செல்ல அறிவுறுத்துகிறது. சுயமரியாதை, பாதுகாப்பு மற்றும் மதிப்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. மாணவர்கள் வெளியே சென்று கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்வதை நாங்கள் உறுதிபடுத்துகிறோம். காய்கறி மண்டி அல்லது களப்பயணம் பற்றி அவர்கள் எழுதும்போது அதை எப்படி தெளிவாக எழுதுவது என நாங்கள் காண்பிக்கிறோம். உள்ளூர் தரவுகளை பயன்படுத்தவும் கற்றுக் கொடுக்கிறொம். மக்கள்தொகை ஆவணத்தை கொண்டு அவர்களின் தகவல்களை சரிபார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், ஜனநாயகத்தில் அதன் அவசியம் என்ன என்பதையும் புரிந்து கொள்கிறார்கள். இவை எல்லாமும் சேர்ந்து கல்வியில் ‘உள்ளூர்மயம்’ என்பதற்கு புதிய அர்த்தத்தை வழங்குகிறது.

The Class 11 syllabus suggests that students can ‘prepare a report on poverty alleviation programmes’. Any enterprising 17-year-old will Google it in a second and list out the various programmes and schemes. But does that qualify as learning about poverty?
PHOTO • Namita Waikar

பதினோறாம் வகுப்பு பாடத்திட்டத்தின் ஒரு பகுதி, வறுமை ஒழிப்பு திட்டங்களை பற்றிய அறிக்கையை மாணவர்களை தயாரிக்கச் சொல்கிறது. எந்தவொரு 17 வயது மாணவரும் கூகுளில் அதை ஒரு நொடிக்குள் தேடி பல வறுமை ஒழிப்பு திட்டங்களை பட்டியலிட்டுவிட முடியும். ஆனால் வறுமை பற்றிய கல்வியாக அதை புரிந்து கொள்ள முடியுமா?

PARI கல்வியின் முதல் திட்டத்தின் தலைப்பு ‘புலம்பெயர்தலின் பொருளாதாரம்’. நகர்ப்புற பெங்களூருவுக்கு புலம்பெயர்ந்திருக்கும் மக்களிடம் கேட்டறிந்து ஆவணப்படுத்துவது மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் வேலை. நபரை அடையாளம் எப்படி காணுவது, அவரிடம் ஒப்புதல் எப்படி பெறுவது உள்ளிட்ட நெறிமுறைகள் (இணையதளத்தில் ‘ Write for PARI ’-ல் இருக்கிறது) கொண்ட பட்டியல் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

எதிர்பார்த்த மாதிரியே பல மாணவர்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களை பற்றி தெரியவில்லை. அல்லது அவர்களை வீடில்லா மக்களாகவும் சோம்பேறிகளாகவும் நம்பகத்தன்மை அற்றவர்களாகவும் கல்லாதவர்களாகவும் பேராசை நிறைந்தவர்களாகவும் பார்க்கும் போக்கு இருந்தது. மேலும் இதை சீக்கிரமே எழுதிட முடியுமெனவும் அவர்கள் நம்பினார்கள்.

நேர்காண அவர்கள் தொடங்கியதும் கட்டுமான தொழிலாளர்கள், காவலாளிகள், வீட்டு வேலை செய்பவர்கள், டாக்சி ஓட்டுநர்கள் போன்றோரின் வாழ்க்கை அவர்களை அதிர வைத்தது. காவலாளி, வண்ணார் போல் வேலைகளை சொல்லியோ அக்கா, அண்ணா என்ற பொதுப் பெயர்கள் வைத்தோ அவர்கள் அழைத்த மக்களுடன் அவர்களை இயங்க வைத்தோம்.

முழுப்பெயர்களையும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதையும் தெரிந்து கொள்வது இயல்பான மரியாதைக்குரிய விஷயம் என்றாலும் அது உரையாடல் வளர்வதற்கான வெளியை திறந்துவிட்டது. ராமு என்றழைக்கப்படும் ராம்சரண், பிகாரில் விளிம்புநிலை விவசாயிகளையும் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த மதுபனி கலையின் திறன்பெற்ற கலைஞர்களையும் கொண்ட பைகபிஷன்பூரை சேர்ந்தவர். அவர்களின் பார்வையில் அவர் வெறும் சமையற்காரராக தெரியவில்லை. குடும்ப கடன், குழந்தை தொழில், கல்விக்கனவுகள் மற்றும் குழந்தைகள் இருக்கும் வீட்டை விட்டு பல வருட காலம் தூரமாக இருப்பதில் விளைந்த தனிமை, முதிய வயதில் பெற்றோரை விட்டு வந்திருக்கும் வலி போன்றவற்றை அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

Students got to learn firsthand about issues such as family debt, child labour, dreams of education, and the loneliness and heartache of years spent away from home not seeing your children grow up or your parents in their old age
PHOTO • Satheesh L.

குடும்ப கடன், குழந்தை தொழில், கல்விக்கனவுகள் மற்றும் குழந்தைகள் இருக்கும் வீட்டை விட்டு பல வருட காலம் தூரமாக இருப்பதில் விளைந்த தனிமை, முதிய வயதில் பெற்றோரை விட்டு வந்திருக்கும் வலி போன்றவற்றை மாணவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்

அவர்களை சுற்றி மிக நெருக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மக்களை பற்றி எவ்வளவு குறைவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.  நேர்கண்டவரின் வயதில் இருந்த 18 வயது புல்லினா , பதினோறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவரின் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அசாமில் இருக்கும் வீட்டிலிருந்து புல்லினா பலமுறை கேரளா, கர்நாடகா  மற்றும் தமிழ்நாடு முதலிய பகுதிகளுக்கு வேலை தேடி பயணித்திருக்கிறார். பெற்றோர் இல்லாத அவர், தங்கையின் கல்விக்கும் மருத்துவ செலவுக்கும் பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த வாழ்க்கைகளை கேட்டதில் பல விஷயங்கள் மாறியதாக 17 வயது மாணவர்கள் எழுதியவை:

  • ”பிற வேலைகளை கூகுள் மற்றும் விக்கிப்பீடியா கொண்டு செய்துவிடலாம். ஆனால் PARI கல்வியின் வேலைகளுக்கு நாம் களத்துக்கு சென்று தகவல்களை சேகரிக்க வேண்டும். ஒரு கிராமப்புற புலம்பெயர் தொழிலாளியை நேர்காணல் செய்ததில், இந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றில் இருக்கும் பெரிய பிளவை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.”
  • ”வெறும் 5000 ரூபாய் அதிகமாக சம்பாதிக்க ஒரு மனிதனால் எப்படி பல்லாயிரம் கிலோமீட்டர் பயணிக்க முடிகிறது என்பதை என்னுடைய வேலையில் நான் தெரிந்து கொண்டேன். அது என்னை மிகவும் பாதித்தது.
  • ”...வருமானத்தில் ஏற்றத்தாழ்வு, பூகோள ரீதியாக நிலவும் சமத்துவமின்மை, அரசு சீர்திருத்தம் மற்றும் சமூக கொடுமைகள் யாவும் இப்போது எனக்கு புரிகிறது.

* * * *

உங்களுக்கு ஒரு கதை சொல்கிறோம். கிராமப்புற இந்தியாவுக்கு உங்களை கூட்டி செல்கிறோம். விளைந்திருக்கும் விதவிதமான பயிர்களை பாருங்கள். நாம் உண்ணும் உணவை விளைவிக்கும் ஆண்களையும் பெண்களையும் பாருங்கள். நமக்கான பாலை கொண்டு வந்து தரும் எருமை மேய்ப்பர்களை பாருங்கள். நமக்கு நீரும் மின்சாரமும் கொடுக்கும் ஆறுகள் மற்றும் அணைகள் ஆகியவற்றுக்கு அருகே வசிக்கும் மக்களை பாருங்கள். “என்னுடைய சமூகம் கொண்டிருக்கும் உரிமைகள் என்னவென்பதை அவர்களுக்கு விளக்கி, அதிகாரம் நிறைந்தவர்களை பார்த்து அவர்கள் பயப்படாமலிருக்க செய்வேன்,” என்கிறார் ஜமுனா. “பிச்சை எடுப்பதில் என் சமூகம் கொண்டிருக்கும் சார்பையும் குழந்தை திருமணத்தில் அவர்கள் கொண்டிருக்கும் பற்றையும் நான் மாற்ற விரும்புகிறேன். பிச்சை எடுத்தால் மட்டும்தான் உணவு கிடைக்கும் என்பதில்லை. கல்வியும் உணவு கொடுக்கும்.”

ஜார்கண்டை சேர்ந்த நிலமில்லா தொழிலாளியான சிபு லய்யாவின் மொட்டைமாடி தோட்டத்தை நாங்கள் உங்களுக்கு காட்ட முடியும். அல்லது உயரமான இடத்தில் ஆபத்தான சூழல்களில் கட்டப்படும் லே பேடம் நெடுஞ்சாலையில் பணிபுரியும் பேமா மற்றும் அவரை சுற்றி விளையாடும் 3 வயது குழந்தை ங்கோதுப் ஆகியோரை பற்றிய புகைப்படக் கட்டுரையை உங்களுக்கு காட்ட முடியும்.

PHOTO • Anjali Sukhlal Shinde

என்னுடைய சமூகம் கொண்டிருக்கும் உரிமைகள் என்னவென்பதை அவர்களுக்கு விளக்கி, அதிகாரம் நிறைந்தவர்களை பார்த்து அவர்கள் பயப்படாமலிருக்க செய்வேன்,’ என்கிறார் ஜமுனா. ‘பிச்சை எடுப்பதில் என் சமூகம் கொண்டிருக்கும் சார்பையும் குழந்தை திருமணத்தில் அவர்கள் கொண்டிருக்கும் பற்றையும் நான் மாற்ற விரும்புகிறேன்’

சில நேரங்களில் ஆசிரியர்களிடமிருந்து நாம் தொடங்க வேண்டும்.

“சாதியை பற்றி அதிகம் பேசாதீர்கள். நம் மாணவர்களுக்கு அது தெரியாது.”

“ஆனால் தொடர்ந்து நடக்கும் கொடுமைகளை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?”

‘ஆம். ஆனாலும் அவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம்.”

ஆசிரியர்களின் பாட நேரத்தை நம்மிடம் நம்பி கொடுக்க வைப்பது அத்தனை எளிது கிடையாது. உங்களின் நோக்கத்தை பற்றி அவர்கள் கொண்டிருக்கும் சந்தேகங்களையும் போக்க முடியாது. PARI லாபத்துக்காக இயங்கும் அமைப்பு கிடையாது என்பதும் நன்கொடைகளை கொண்டே அது இயங்குகிறது என்பதும் அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதும் நிச்சயமாக உதவுகிறது. எனினும் அதை சொல்லக் கூட கதவு திறந்திருக்க வேண்டும். ஆசிரியர்களையும் பங்கு பெறச் செய்து, இன்றைய காலத்தின் பிரச்சினைகளான சாதி, சமத்துவமின்மை, அநீதி முதலிய விஷயங்களை வகுப்பறைகளில் அவர்கள் பேசச் செய்ய வைப்பது பரந்த அளவிலான செல்வாக்கு செலுத்தும். பாடநூல்களை கடந்து யதார்த்தத்திலிருந்து உதாரணங்களை அவர்கள் கொடுக்க முடியும்.

ஒரு ஆசிரியர் எங்களுக்கு இப்படி எழுதினார்: “நானும் என் மாணவர்களும் பார்த்தும் கேட்டும் அறியாத ஓர் இந்தியாவை PARI எங்களுக்கு காட்டியது. சித்திரக் கலைஞர்களின் மை பட்ட விரல்களையும் குத்தாம்பள்ளி பருத்தி சேலையின் ஊடுபாவு நூலையும் நாங்கள் பார்த்தோம். மொழிகளும் அழியக்கூடியவை என்பதை அறிந்து கொண்டோம். பல சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாற்று பாடநூல்களில் இல்லையென்பதையும் தெரிந்து கொண்டோம்.

ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த நெருக்கடியை குழந்தைகள் படித்தனர். தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் காண்பிக்கப்பட்டதை காட்டிலும் அப்பிரச்சினையில் எத்தனை அதிகமான விஷயங்கள் இருக்கின்றன என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டனர்.”

இதைத்தான் நாங்கள் செய்கிறோம். மாணவர்கள் களத்தில் இறங்கி ஆய்வு செய்து பரிவு கொள்ள கற்றுக் கொடுக்கிறோம். ஓர் இளம் மாணவர் எழுதினார்: “PARI-யால் எங்களை சுற்றி இருக்கும் எளிய மக்களின் வாழ்க்கைகளை நாங்கள் அடையாளம் கண்டோம். நாங்கள் நிராகரிக்கும் மக்களின் வாழ்க்கைகளை தெரிந்து கொண்டோம். அவர்கள் மீது அதிகமாக பரிவு கொண்டோம்.”

PARI கல்விக்குழு , விசாகா ஜார்ஜ் (சமூகதள ஆசிரியர்), அதிதி சந்திரசேகர் (மூத்த உள்ளடக்க ஆசிரியர்) மற்றும் பிரிதி டேவிட் (கல்வி ஆசிரியர்) ஆகியோரை கொண்டிருக்கிறது.

இக்கட்டுரை (சற்றே மாறிய தலைப்புடன்) www.thethirdeyeportal.in தளத்தில் முதலில் பிரசுரமானது. பெண்ணிய சிந்தனை தளமான அத்தளம் பாலினம், தொழில்நுட்பம், கல்வி முதலிய பல விஷயங்களில் நிரந்தர் அறக்கட்டளையின் ( www.nirantar.net ) உதவியில் இயங்குகிறது.

தமிழில் : ராஜசங்கீதன்

Priti David

Priti David is a Journalist with the People’s Archive of Rural India, and Editor, PARI Education. She works with educators to bring rural issues into the classroom and curriculum, and with young people to document the issues of our times.

Other stories by Priti David
Illustration : Antara Raman

Antara Raman is an illustrator and website designer with an interest in social processes and mythological imagery. A graduate of the Srishti Institute of Art, Design and Technology, Bengaluru, she believes that the world of storytelling and illustration are symbiotic.

Other stories by Antara Raman
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan