அவருடைய சமூகத்திற்காக அவர் போராடுகிறார், ஆனால் அவர்களது நம்பிக்கைக்கு எதிராகவே. அவர்களது சுயமரியாதைக்காக போரிடுகிறார், ஆனால் அவர்களது தினசரி வேலைகளை எதிர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த வேலைகளை இல்லாமல் ஆக்க நினைக்கிறார் இவர். தங்கள் சமூகத்தைச் சார்ந்த மூத்தவர்களை விடுத்து இளைய தலைமுறையின் மீது கவனம் வைக்கிறார். கோமாஸ்பாளையத்தில் குழந்தைகளுக்காக இலவச ட்யூஷன் பயிற்சி மையம் நடத்திவரும் கல்பனாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 33 வயது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரையின் இருக்கும் இந்த மிகப் பழமையான குடிசைப்பகுதியில் இருக்கும் 230 வீடுகளுக்குள் சுமார் 700 குடும்பங்கள் தங்களைத் திணித்துக்கொண்டு வாழ்கிறார்கள். சுற்றுலாவுக்குப் பெயர்போன மதுரை நகரின் மையத்தில்தான் இந்த குடிசைப் பகுதியும் அமைந்திருக்கிறது.

துப்புரவுத் தொழிலாளர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் மற்றும் பராமரிப்பு வேலை செய்பவர்களின் குடும்பங்கள்தான் இங்கு பெரும்பாலும் வசிக்கின்றன. சமூக அடுக்கின் அடியில் இருக்கும் தலித்துகளில் கடைசியில் இருப்பவர்களான அருந்ததியர்கள்தான் இங்கு அதிகம் வாழ்கிறார்கள். தங்கள் வாழ்விலிருந்து துப்புரவுத் தொழிலை அகற்ற முடியும் என்னும் நம்பிக்கை இங்கிருக்கும் பெரியவர்களுக்கு இல்லை. “இதை மாற்றவே முடியாது என்றுதான் எங்கள் மக்கள் நினைக்கிறார்கள்” என்கிறார் கல்பனா. “இதைக் குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு அது பிடிப்பதில்லை. தவறான பாதையில் நான் கொண்டு செல்வதாக அவர்கள் நினைக்கிறார்கள்.”

அதனால் இளையவர்களின் மூளைக்குள் எண்ணங்களை விதைக்க முயற்சி செய்கிறார் கல்பனா. தனது சொந்த செலவில், 40 குழந்தைகளுக்கு ட்யூஷன் மையம் அமைத்து கற்பிக்கிறார். வாரத்தில் ஐந்து நாட்கள் நடக்கிறது இந்த ட்யூஷன் மையம். சில நேரங்களில் சனிக்கிழமைகளிலும் ட்யூஷன் உண்டு. கோமஸ்பாளையத்தில் இருக்கும் சமூகத் திடலில் அமைந்திருக்கும் ட்யூஷன் மையத்தில் தினமும் 5.30 முதல் 8.30 வரை ட்யூஷன் நடக்கிறது. ”உங்கள் பெற்றோர்கள் செய்யும் வேலையை நீங்கள் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்திக்கொண்டே” அவர்களுக்கு பாடம் கற்றுத் தருகிறார் கல்பனா. “மூன்று வருடமாக இந்த ட்யூஷன் மையத்தை நடத்துகிறேன்” என்று சொல்லும் கல்பனா, “நான் இருக்கும்வரை இதைச் செய்துகொண்டுதான் இருப்பேன் என்கிறார்”. 50 வருடங்களாக இருக்கும் இந்த குடிசைப்பகுதிக்கு மூன்று வருடங்களுக்கு முன்புதான் கான்க்ரீட் கட்டிடங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. “புத்தாக்கம் என்னும் பெயரில் நடக்கும் இந்த குடியிருப்புகளில் ஒன்றான சமுதாயக் கூடத்தை குழந்தைகளுக்கு கற்றுத் தருவதற்கு பயன்படுத்திக் கொள்கிறேன்.”

PHOTO • Krithika Srinivasan

சுகாதாரப் பணிகளை விடுவது முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள் என்று கூறும் கல்பனா, சவால்களைக் கடந்து பிறருக்கு உதவுகிறார்

கல்பனாவின் அம்மா இன்னும் சுகாதாரப் பணிகளுக்கு சென்றுகொண்டுதான் இருக்கிறார். “என்னுடைய அப்பா என் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். இனிமேல் இந்த வேலையைச் செய்யவேண்டாம் என்று என் அம்மாவிடம் சொன்னால் அவர் வருத்தப்படுகிறார். இந்த வேலையால்தான் இந்தக் குடும்பம் இயங்குவதாக நினைக்கிறார் என்னுடைய அம்மா. இந்த வேலையே சுயமரியாதையற்ற வேலை என்பது அவருக்கு இன்னும் புரியவில்லை. இந்தச் சாதியில் பிறந்துவிட்டதால் மட்டும்தான் இதைச் செய்கிறோம் என்பதை உணரவில்லை.”

மிகச் சிறிய, நெருக்குமளவுக்கு கூட்டம் இருக்கும் தன்னுடைய வீட்டில் இல்லாமல், இப்படி ட்யூஷன் மையத்தில் வந்து வீட்டுப்பாடத்தை எழுதுவது 14 வயது கெளசல்யாவுக்கு வசதியாக இருக்கிறது. “ட்யூஷனுக்கு போகத் தொடங்கிய நாளிலிருந்து, பள்ளியில் முதல் 10 ரேங்குக்குள் வந்துவிடுகிறேன்” என்கிறார் கெளசல்யா. கெளசல்யாவின் அப்பா ரமேஷ் மதுரையில் சுகாதாரப் பணியாளர். “நான் கஷ்டப்பட்டு படிக்கணும். இல்லன்னா சுயமரியாதை இல்லாம அப்பாவைப் போலவே மாதம் 6000 மட்டும் சம்பாதிக்கும் நிலைமை வரும். நான் என் அப்பாவ மதிக்கிறேன். எனக்கு எல்லாமே அவர் செய்றார். ஆனால், அவர் இந்த வேலையை விட்டு வரணும்னு நான் நினைக்கிறேன்” என்கிறார் கெளசல்யா.

இலக்கை அடைவதற்காக தன்னுடைய சொந்த பணத்தைச் செலவழிக்கிறார் கல்பனா. மதுரை நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் பிரிவில் சமுதாய ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் அவருக்கு ஒரு நாள் சம்பளம் 250 ரூபாய். “இது நிரந்தரமான வேலையல்ல. அதனால் லயோலா நிறுவனத்தில் பெண்களுக்கு தையல் கற்றுத்தந்து மாதம் 3000 ரூபாய் சம்பாதிக்கிறேன்.”

PHOTO • Krithika Srinivasan
PHOTO • Krithika Srinivasan

கோமஸ்பாளையம் (வலது) காலனியில், கல்பனாவின் வகுப்புகளுக்குச் (இடது) செல்லத் தொடங்கிய பிறகு நல்ல விதத்தில் கல்வி முன்னேறியதாகச் சொல்லும் 15 வயது கெளசல்யா, வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான பல விஷயங்களை எங்களுக்கு கற்றுத் தருகிறார்கள்’, என்கிறார்.

இந்த பணிகளுக்கு அப்பாற்பட்டு, காலையிலும் மாலையிலும் அரசுப் பள்ளிக் குழந்தைகளை அழைத்து சென்று மறுபடி வீட்டில் விடும் பள்ளி வேனில் உதவியாளர் வேலையும் செய்கிறார். இதன் மூலம் மாதம் 3000 வரை சம்பாதிக்கிறார். இதிலிருந்து, சமுதாயக் கூடத்திற்கு வரும் மின்கட்டணமான 500 ரூபாயை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தி வருகிறார். “நான் பணிபுரியும் நிறுவனத்தின் இயக்குநர் இதற்காக ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் அளிக்கிறார். இதில் இன்னும் கொஞ்சம் தொகையைச் சேர்த்து குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குகிறேன். சில நேரத்தில், பயணத்திற்கு அழைத்துச் செல்கிறேன். பேருந்து கட்டணத்திற்கு அவர்களுடைய பெற்றோர் செலவழிக்கிறார்கள். உணவு, பொம்மைகள், பூங்கா அல்லது சரணாலயத்திற்கான நுழைவுச் சீட்டு போன்ற செலவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன்”

40 குழந்தைகளும் இடைநிற்காமல் ட்யூஷனுக்கு தொடர்ந்து வருவதற்கான காரணமாக இருக்கிறது இது இருக்க கூடும். “மதுரையில் ஒரு உணவகத்தில் சுத்தம் செய்யும் பணியைச் செய்யும் அழகிரியின் மகளான 15 வயது அக்‌ஷயஸ்ரீ, ஒருநாள் நானும் கல்பனா அக்கா மாதிரி டீச்சர் ஆவேன்” என்கிறார். “பாடப்புத்தகங்கள் மட்டுமில்ல. வாழ்க்கையைச் சந்திக்கத் தேவையான பல விஷயங்களையும் எங்களுக்கு சொல்லித் தராங்க. இந்த ட்யூஷன் வரத் தொடங்கியதுல இருந்து நான் முதல் அல்லது இரண்டாவது ரேங்க்தான் வாங்குறேன்” என்கிறார் அவர்.

மதுரையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிற அரசு சாரா நிறுவனமான மகளிர் சக்தியின் நிறுவனரான குணா வின்செண்ட்தான் கல்பனாவின் இந்த முயற்சிக்கு உதவியிருக்கிறார். “சேரிகளில் இருந்தும், சாதிகளை விட்டும் பல கல்பனாக்களை விடுதலை செய்ய வேண்டும். சமுதாயமோ சாதியோ விதிக்கும் எல்லைகளில் இருந்து பலரும்  வெளிவராத நிலையில், கல்பனா அதைச் செய்திருக்கிறார். ஆனால், அவர் அத்துடன் நின்றுவிடவில்லை. பலரையும் அந்த எல்லைகளைக் கடந்து வெளியில் வருவதற்கு உதவிக்கொண்டிருக்கிறார்.”

என்றோ ஒரு நாள், அந்தக் குழந்தைகளில் ஒருவராவது தங்கள் கைகளில் திணிக்கப்படும் துடைப்பத்தையும், பக்கெட்டையும் தூக்கியெறிந்து துணிந்து எதிர்ப்பார்கள்.

கல்பனாவின் உண்மையான பெயர் பயன்படுத்தப்படவில்லை. அவரது முகத்தையும் அவருடைய வேண்டுகோளுக்கிணங்க மறைத்திருக்கிறோம்.

தமிழில்: குணவதி

Krithika Srinivasan

Krithika Srinivasan is a Chennai-based freelance journalist with a master’s degree in sociology. She is a trained shadow puppeteer.

Other stories by Krithika Srinivasan
Translator : Gunavathi

Gunavathi is a Chennai based journalist with special interest in women empowerment, rural issues and caste.

Other stories by Gunavathi