உம்பன் புயல் கொண்டுவந்த சூறைக் காற்றும், பலத்த மழையும் மே 20ஆம் தேதி தன்னை சுற்றி ஏற்படுத்திய சேதங்களைக் கண்டு சபிதா சர்தார் அஞ்சவில்லை. “நாங்கள் மோசமான வானிலைக்கு பழகிவிட்டோம். எனக்கு பயமில்லை. கான்கிரீட் வீடுகளில் வசிப்பவர்கள் தான் அச்சப்பட வேண்டும்,“ என்கிறார் அவர்.

தெற்கு கொல்கத்தாவின் புகழ்மிக்க சந்தை பகுதியான கரியாஹாத் தெருக்களில் தான் கடந்த 40 ஆண்டுகளாக சபிதா வசித்து வருகிறார்.

மேற்குவங்கத்தின் தலைநகரில் அதிவேக சூறாவளி கரையைக் கடந்த நாளில் சபிதாவும் அவரைப் போன்ற வீடற்ற பெண்களும் கரியாஹத் மேம்பாலத்தின் அடியில், அவர்களின் மூன்று சக்கர வண்டியில் ஒன்றாக படுத்திருந்தனர். அப்படித் தான் அவர்களின் அன்றைய இரவு கழிந்தது. “நாங்கள் அங்கு படுத்திருந்தபோது உடைந்த கண்ணாடித் துண்டுகள் பறந்து வந்தன. மரங்கள் சாய்ந்தன. சாரல் காரணமாக நாங்கள் நனைந்துவிட்டோம். டாம்... டூம்... என பயங்கரமான சத்தங்களும் கேட்டன,” என்று நினைவுகூர்கிறார் சபிதா.

மேம்பாலத்திற்கு அடியிலுள்ள இடத்திற்கு அவர் முதல் நாள் தான் திரும்பியிருந்தார். “உம்பன் சூறாவளிக்கு முதல் நாள் தான் எனது மகன் வீட்டிலிருந்து வந்தேன். எனது பாத்திரங்கள், துணிகள் எங்கும் சிதறி கிடந்தன. யாரோ தூக்கி எறிந்தது போல கிடந்தது,” என்கிறார் 47 வயதாகும் சபிதா. டோல்லிகஞ்சில் உள்ள ஜல்தார் மாத் குடிசை பகுதியில் வாடகை அறையில் அவரது மகன் ராஜூ வசித்து வருகிறார். 27 வயதாகும் ராஜூ, அவருடைய 25 வயதாகும் மனைவி ரூபா, அவர்களின் குழந்தைகள், ரூபாவின் இளம் சகோதரி ஆகியோர் அங்கு வசிக்கின்றனர்.

மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு தொடங்கியது முதல், கரியாஹத் சாலையோரம் குடியிருப்போரை கொல்கத்தா காவல்துறையினர் வெளியேற்றியதால் அவர் ஜல்தார் மாத் சென்றார். அன்றிரவு மேம்பாலத்தின் கீழ் வசிக்கும் சபிதா உள்ளிட்டோரை காவல் அதிகாரிகள் அணுகினர். “கரோனா வைரஸ் காரணமாக சாலையோரம் வசிக்க கூடாது, வேறு வசிப்பிடத்திற்கு இப்போது செல்லுமாறு அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்,” என்றார். கொல்கத்தா மாநகராட்சி வார்டு எண் 85ல் உள்ள சமுதாயக் கூடத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

When Cyclone Amphan hit Kolkata on May 20, Sabita (on the left in the right image) huddled under the flyover with her daughter Mampi and grandson
PHOTO • Puja Bhattacharjee
When Cyclone Amphan hit Kolkata on May 20, Sabita (on the left in the right image) huddled under the flyover with her daughter Mampi and grandson
PHOTO • Puja Bhattacharjee

மே 20ஆம் தேதி உம்பன் சூறாவளி கொல்கத்தாவை தாக்கிய போது சபிதா (சிவப்பு நிற புடவை) மேம்பாலத்தின் கீழ் இருந்தார். பிறகு (வலது) தனது மகள் மாம்பி, பேரப்பிள்ளையுடன் அமர்ந்திருக்கிறார்

உம்பன் சூறாவளிக்கு சரியாக ஒரு மாதம் முன்பு ஏப்ரல் 20ஆம் தேதி, கரிஹாத்தின் நடைமேடையில் மர பெஞ்சில் சபிதா அமர்ந்திருந்தை நான் கண்டேன். ஏப்ரல் 15ஆம் தேதி தனது தங்குமிடத்தை விட்டு தனது மகனுடன் வசிக்கச் சென்றார். தனது உடைமைகளை தேடி வந்தார். நடைபாதையில் கடைபோடும் சில்லறை வியாபாரிகள் ஊரடங்கினால் முடங்கியுள்ளனர். சாலையோரம் வசிக்கும் சிலர் மட்டும் திரிந்து கொண்டிருந்தனர். “எனது பாத்திரங்கள், துணிகளை தேடி இங்கு வந்தேன். ஏதேனும் களவுப் போயிருக்கும் என பதற்றப்பட்டேன். ஆனால் எல்லாம் சரியா இருந்ததை கண்டு நிம்மதியடைந்தேன்,” என்றார்.

“அந்த இடம் எங்களுக்கு சரிப்படவில்லை,” என்றார் சபிதா. சமூகக் கூடத்தில் தற்காலிகமாக 100 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சொல்லும் அவர், “மற்றவர்களைவிட யாராவது உணவு கூடுதலாக பெற்றுவிட்டால் சண்டை வெடிக்கும். இது தினமும் நடக்கும். ஒரு கரண்டி சோறுக்கு கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொள்கின்றனர்.” உணவின் தரமும் மோசமாகிவிட்டது என்கிறார் அவர். “காரமான உணவுகளால் என் தொண்டை எரியத் தொடங்கிவிட்டது. தினமும் பூரியும், உருளைக் கிழங்கும் கொடுத்தனர்.” அது ஒரு அகதி முகாமைப் போன்ற சூழல். உணவுக்கு சண்டை ஒரு பக்கம் என்றால் பாதுகாவலர்கள் மோசமாக நடந்தனர். அங்குள்ள மக்களுக்கு போதிய குடிநீர், சோப் போன்றவை அளிக்கப்படவில்லை.

கரியாஹாத் நடைபாதையில் சபிதா ஏழு வயது முதல் வசித்து வருகிறார். தனது தாய் கனோன் ஹல்தர், மூன்று சகோதரிகள், மூன்று சகோதரர்களுடன் அவர் அங்கு வந்தார். “என் தந்தை வேலைக்காக வெளியூர் செல்வது வழக்கம். ஒருமுறை வேலைக்கு வெளியே சென்றவர் திரும்பவே இல்லை.” எனவே கானோனும் அவரது ஏழு குழந்தைகளும் கிராமத்திலிருந்து ரயிலேறி மேற்கு வங்கத்தின் (சபிதாவிற்கு பெயர் நினைவில் இல்லை) தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலிருந்து கொல்கத்தாவின் பல்லிகஞ்ச் நிலையத்திற்கு வந்தனர்.” என் தாய் கட்டுமானப் பணிகளில் தினக்கூலியாக இருந்தார். இப்போது அவருக்கு வயதாகிவிட்டது. அவர் இப்போது குப்பைகளை சேகரிக்கிறார் அல்லது பிச்சை எடுக்கிறார்,” என்கிறார் சபிதா.

பதின்ம பருவத்தில் சபிதாவும் குப்பைகளை சேகரித்து விற்று (பழைய இரும்பு கடைகளில் விற்பது) குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவர் இளம் வயதிலேயே தெருவோரத்தில் வசித்த ஷிபு சர்தாரை மணந்தார். அவருக்கு ராஜூ உட்பட ஐந்து பிள்ளைகள். கரியாஹத் சந்தையில் கடைகளுக்கு பொருட்களை இழுத்துச் செல்வது, மீன்களை வெட்டித் தருவது போன்றவற்றை ஷிபு செய்து வந்தார். டிபியால் கடந்த 2019ஆம் ஆண்டு அவர் இறந்தார். இப்போது அவர்களின் இரண்டு இளைய மகள்களும், மகனும் என்ஜிஓ நடத்தும் உறைவிடப் பள்ளியில் படிக்கின்றனர். அவர்களின் மூத்த மகளான 20 வயதாகும் மாம்பி, கணவனின் வன்முறையிலிருந்து தப்பிக்க தனது ஆண் குழந்தையுடன் பெரும்பாலும் சபிதாவுடன் வசிக்கிறார்.

2002ஆம் ஆண்டு கரியாஹாத் மேம்பாலம் கட்டப்பட்டபோது, சபிதா அவரது பெரிய குடும்பமான கனோன், சகோதரர், சகோதரி, அவர்களின் பிள்ளைகள், துணைகள் என அனைவரும் மேம்பாலத்தின் கீழே நடைபாதையில் குடிபெயர்ந்தனர். கோவிட்-19 பெருந்தொற்று பாதிக்கும் வரை அவர்கள் அங்கு வசித்தனர்.

PHOTO • Puja Bhattacharjee

மார்ச் 25ஆம் தேதி கரியாஹாத் நடைபாதையில் தங்கியிருந்த சபிதா அவரது தோழி உஷா தோலு (கீழ் இடது) உள்ளிட்டோரை -  கொல்கத்தா காவல்துறையினர் வெளியேற்றினர். சபிதா, உம்பன் புயலுக்கு முதல்நாள் மே19ஆம் தேதி தனது மகன் ராஜூ (கீழ் வலது) வீட்டிலிருந்து கரியாஹாத் திரும்பினார்

மார்ச் 25ஆம் தேதி சபிதா, கனோன், மாம்பி, அவளது மகன், சபிதாவின் சகோதரர், சகோதரர் மனைவி பிங்கி ஹல்தர், அவர்களின் பதின்ம பருவ மகள்கள் என அனைவரும் உறைவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டனர். சில நாட்களுக்குப் பிறகு, பிங்கியும், அவளது மகள்களும் அவர்களது முதலாளி கேட்டுக்கொண்டதால் விடுவிக்கப்பட்டனர். கரியாஹாத் ஏக்டாலியா பகுதியில் பிங்கி வீட்டு வேலை செய்து வருகிறார். அவர் வேலை செய்யும் வீடுகளில் உள்ள  முதியவர்வர்கள் தனியாக வீட்டுவேலைகள் செய்வதற்கு சிரமப்பட்டனர். “கரியாஹாத் காவல்நிலையத்தில் அவர் விண்ணப்பித்தார், எங்களை பார்த்து கொள்வதாக பொறுப்பேற்று எழுதி கொடுத்ததன் பேரில் எங்களை விடுவித்தனர்,” என்கிறார் பிங்கி.

ஏப்ரல் 15ஆம் தேதி பிங்கி தனது மாமியார் கனோனை அழைத்துச் செல்வதற்காக வந்தார். “அவரால் அந்த அகதிகள் முகாமில் இருக்க முடியவில்லை” என்றார் அவர். வசிப்பிடம் திரும்பியபோது அங்குள்ள காவலர்  காவல்நிலையத்தின் அனுமதி பெற வலியுறுத்தியதால் பிங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “எல்லோரிடமும் இதேபோன்ற அனுமதியை கேட்கிறீர்களா என்று மட்டும் தான் அவரிடம் நான் கேட்டேன். இதனால் கோபமடைந்த அவர் காவல்துறையினரை அழைத்துவிட்டார். என் மாமியாருக்காக காத்திருந்தபோது, ஒரு காவலர் வந்து தடியால் என்னை அடித்தார்,” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

கனோனும், சபிதாவும் அந்த நாளே முகாமிலிருந்து திரும்பினர். கரியாஹாத் மேம்பாலத்தின் அடியிலுள்ள வசிப்பிடத்திற்கு சபிதா திரும்பினார். அவரது தாய், 40 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு 24 பர்கனாசில் உள்ள மல்லிக்பூர் நகரத்தில் இருக்கும் சபிதாவின் சகோதரியின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

ஊரடங்கிற்கு முன் சபிதா வாரந்தோறும் ரூ. 250-300 வரை சம்பாதித்து வந்தார். வசிப்பிடத்தை விட்டுச் சென்ற பிறகு குப்பைகளை சேகரிக்க முடிவதில்லை, பழைய இரும்பு கடைகளும் திறக்கப்படுவதில்லை. வசிப்பிடத்தை விட்டுச் சென்றவர்கள் காவல்துறையினரின் தடியடிக்கு பயந்து ஓடி ஒளிந்துள்ளனர். எனவே சபிதா ஜல்தார் மாத்தில் உள்ள அவரது மகனின் குடும்பத்துடன் சென்றுவிட்டார்.

கரியாஹாத்தில் குப்பை சேகரிக்கும் உஷா தோலு பேசுகையில், “நான் காவல்துறையினரை ஏமாற்றிவிட்டேன். அடிவாங்கவோ, வைரஸ் தொற்று ஏற்படவோ நான் விரும்பவில்லை. உணவு நன்றாக இருக்கும் போது அங்கு சென்றுவிடுவேன்.” சமூகக் கூடத்தில் விடப்பட்டுள்ள தனது பதின்ம பருவ மகன், மகள்களுக்காக என்ஜிஓக்கள், பொதுமக்கள் அளிக்கும் உணவு, மளிகைப் பொருட்களை பெறுவதற்காக விதவையான உஷா வெளியே வந்துள்ளார்.

PHOTO • Puja Bhattacharjee

சபிதா (மேல் இடது, கீழ் வலது) தனது குடும்பத்திற்கு உணவளிக்கிறார். மேல் வலது: மேம்பாலத்தின் கீழ் வசிப்பதற்காக உஷா தோலு காவல்துறையினரை ஏமாற்றிவிட்டு வந்துள்ளார். கீழ் இடது: பிங்கி ஹல்தார் (இடது), சபிதாவின் உறவினரான கரியாஹாத்தில் வீட்டு வேலை செய்யும் பிங்கி ஹல்தார்.

ஜூன் 3ஆம் தேதி கரியாஹாத் நடைபாதையில் இருப்போரை வெளியேற்றியபோது 17 பேர் மட்டுமே இருந்தனர். சமூகக் கூடத்தை தூய்மைப்படுத்தும் ஒருவர் என்னிடம் பேசுகையில், அருகில் உள்ள குழாய் கிணற்றில் குடிநீர் எடுத்து வருவதாக கூறி பலரும் ஓடிவிடுகின்றனர் என்றார்.

கரியாஹாத் காவல்நிலைய சாலை அருகே மேம்பாலத்தின் அடியில் குடியிருக்கும் உஷாவும் தனது பழைய வசிப்பிடத்திற்கு திரும்பிவிட்டார். சமைத்துக் கொண்டிருந்தபோது இருமுறை காவலர் வந்து எங்களின் பானையை எட்டி உதைத்தார். சிலரால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மளிகைப் பொருட்களையும் அவர் எடுத்துச் சென்றார்.  உஷாவின் துணி, படுக்கைகள் வைக்கப்பட்டிருந்த மூன்று சக்கர வண்டியையும் அவர் எடுத்துச் சென்றார். “எங்களிடம் எங்கிருந்து வந்தோமோ அந்த வீட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள் என்றார். வீடு இருந்தால் நாங்கள் ஏன் நடைபாதையில் குடியிருக்கப் போகிறோம் என்று நாங்கள் அவரிடம் சொன்னோம்,” என்றார் உஷா.

ஏற்கனவே ஆறு உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு உணவளிக்க  மகன் ராஜூ போராடி வருவதால் உம்பன் புயலுக்கு முன்பே சபிதா திரும்பிவிட்டார். கரியாஹாத் காலணி கடையில் தினமும் ரூ.200 கூலிக்கு என் மகன் வேலை செய்து வந்தான். ஊரடங்கிற்கு பிறகு சம்பாதிக்க முயற்சித்தான். மலிவு விலையில் காய்கறிகளை வாங்குவதற்கு ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தைக்கு மிதிவண்டி ஓட்டிச் செல்கிறான். “என் மகனின் பள்ளி மூலம் [ஆசிரியர்களின் பங்களிப்பு] சில மளிகைப் பொருட்கள் கிடைத்தது. இப்போது சில நாட்களுக்கு சாதமும், உருளைக்கிழங்கும் சாப்பிடக் கிடைக்கிறது,” என்கிறார் ராஜூ. “எங்களுக்கு பிஸ்கட், தேநீர், பால், சமையல் எண்ணெய், மசாலாக்கள், என் இரண்டு வயது மகனுக்கு டயப்பர்கள் தேவைப்படுகின்றன. ஏதாவது திடீரென தேவைப்பட்டால் என்ன செய்வது? என கவலையாக உள்ளது. என்னிடம் வேறு பணம் இல்லை,” என்றார் அவர்.

சபிதா தனது மூன்று சக்கர வண்டியை பழ வியாபாரி ஒருவருக்கு தினமும் ரூ.70 வாடகைக்கு கொடுத்திருந்தார். ஆனால் அவர் ரூ. 50 மட்டுமே கொடுக்கிறார். “நாங்கள் சாப்பிட வேண்டுமே,” என்றார் அவர். மாம்பியும் அவளது எட்டு மாத குழந்தையும் இப்போதெல்லாம் சபிதாவுடன் தான் உள்ளனர். அனைவருக்கும் உணவளிக்க பணம் போதவில்லை. அருகில் உள்ள சுலப் குளியலறையை பயன்படுத்தவும் பணம் தேவைப்படுகிறது.

சில கடைகள் இப்போது திறந்திருப்பதால், கடந்த சில நாட்களாக சபிதா குப்பை காகிதங்கள் சேகரிக்க தொடங்கிவிட்டார். மூன்று சாக்கு பையில் சேர்த்தால் அவருக்கு ரூ.100-150 கிடைக்கிறது.

தெருக்களில் ஆபத்துகள், அச்சுறுத்தல்களுடன் வாழ்ந்து வருவதால் சபிதாவிற்கு புயல், நோய்தொற்று குறித்த அச்சமில்லை. “மரணம் எப்போதும் நிகழலாம் - தெருவில் நடக்கும்போது கூட கார் மோதலாம். மேம்பாலம் தான் எங்களை காக்கிறது,” என்கிறார் அவர். “புயலுக்குப் பிறகான காலையில், நான் மிச்சமிருந்த சாதத்தை சாப்பிட்டேன். புயல் ஓய்ந்ததும், எல்லாம் இயல்பாகிவிடும்.”

தமிழில்: சவிதா

Puja Bhattacharjee

Puja Bhattacharjee is a freelance journalist based in Kolkata. She reports on politics, public policy, health, science, art and culture.

Other stories by Puja Bhattacharjee
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha