"எங்கள் குழந்தை கருப்பையில் இறந்துவிட்டதாக அவர்கள் கூறினார்கள். நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். பின்னர் அவர்கள் எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறி, எங்கு வேண்டுமானாலும் போக சொன்னார்கள். எனவே, எனது மருமகளை நகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்,”என்கிறார் சுகியா தேவி. பீகாரில் உள்ள வைஷாலி மாவட்ட தலைமையகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் (பி.எச்.சி) அவரும் அவரது மருமகள் குசுமும் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
பிறந்து ஒரு நாளே ஆன தனது உயிருள்ள பேத்தியை தனது கைகளில் வைத்திருக்கிறார் 62 வயதான விவசாயத் தொழிலாளி. அவர் ஆரம்ப சுகாதார மையத்தில் காலை 10 மணியளவில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக ஒரு வரிசையில் காத்திருக்கிறார்.
அவரது 28 வயதான மருமகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, சுகியா அவரை வைஷாலி ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் குழந்தை இறந்துவிட்டதாக ஓர் உதவியாளர் அவர்களிடம் சொன்னார். பீதியடைந்த அவரும், குசுமும் ஓர் ஆட்டோவில், சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு கிராமத்தில் (கிராமத்தின் பெயர் வெளியிட வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்) உள்ள தங்கள் வீட்டிற்கு திரும்பினர். "நாங்கள் எங்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்றோம், ஒரு மஹிலா மருத்துவரிடம் [மகப்பேறு மருத்துவர்] செல்ல ஒரு தனியார் வாகனமான, பொலிரோவை வாடகைக்கு எடுத்தோம். வாடகை கட்டணங்கள் குறித்து விசாரிப்பது பற்றிகூட நான் நினைக்கவில்லை. பிரசவம் குறித்து நான் மிகவும் கவலையுற்று இருந்தேன். அருகில் இருப்பவர்களின் உதவியுடன், எனது மருமகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டேன். நாங்கள் கிளினிக்கை நோக்கி செல்ல ஆரம்பித்தோம்."
அவர்கள் மருத்துவரை நோக்கி செல்லும் வழியில், ‘கருப்பையில் இறந்த’ குழந்தை காரில் உயிருடன் வந்தது.
"அவள் அங்கேயே வாகனத்தில் பிறந்தாள்", என்று சுகியா கூறுகிறார். ”அது மிகவும் சுமூகமாக நடந்தது,”, என்று அவர் கூறுகிறார். அவர்கள் ஏற்கனவே ஒரு சேலையை வைத்திருந்தனர், அவர்கள் அதை போர்வையாக பயன்படுத்தினர், உள்ளூர் மருத்துவ கடை உரிமையாளர் (அவர்களுடன் வந்தவர்) வாகனத்தில் சிறிது தண்ணீரை வைத்திருந்தார். சுகியா மேலும் கூறுகிறார், “ஆனால் இதற்கெல்லாம் இவ்வளவு நேரம் பிடித்தது…”.
அதற்கு பணம் செலவானது. ஒப்பீட்டளவில் குறுகிய தூரம் இருந்தபோதிலும், கார் உரிமையாளர் அந்த பயணத்திற்கு ரூ.3000 கட்டணமாகப் பெற்றார். மேலும் வாகனத்தை ஒருவர் சுத்தம் செய்ய ரூ.1000 வாங்கினார்.







