ஒரு மதிய வேளையில் நட்சுர் கட்காரிவாடி ஊரில் உள்ள கோயிலுக்கு சில கார்கள் வந்தன. விஷ்ணு வாக்மாரே வெளியே எட்டிப் பார்த்தார். பிறகு கட்காரி மொழியில் ஏதோ சொன்னார். 15 ஆண்களும் பெண்களும் கொண்ட ஒரு குழு வெளியே சென்று வந்தவர்களை வரவேற்றது.

"வேலைக்கு ஆட்கள் எடுக்க அவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் பேரம் பேசுவதற்கு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களால் (காண்ட்ராக்டர்களால்) ஏமாற்றப்படுவதை எங்களின் மக்கள் உணரவில்லை. அவர்கள் எங்களை சுரண்டுகிறார்கள். ஆனாலும் நாங்கள் அவர்களுக்காக சென்று வேலை பார்க்கிறோம். நான் செல்வதில்லை," என்கிறார் 21 வயதாகும் விஷ்ணு. அவர் பக்கத்து கிராமங்களிலிருந்து கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்கிறார்.

மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள சுதாகத் ஒன்றியத்தின் நட்சுர் பஞ்சாயத்தில் இருக்கும் கிராமம் நட்சுர் கட்காரிவாடி. இங்கு இருக்கும் 360 கட்காரி ஆதிவாசி மக்களில் பெரும்பாலானோர் ஒவ்வொரு தீபாவளி போதும் இடம் பெயர்கிறார்கள். ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் சிப்லன், அமராவதி போன்ற இடங்களில் இருக்கும் சூளைகளில் அவர்கள் வேலை பார்க்கிறார்கள். ஜூன் மாதம் தொடங்கியதும் தங்களின் கிராமங்களுக்கு திரும்புகிறார்கள். கருவேல மரங்களில் இருந்து கரி தயாரிக்கிறார்கள்.  பெரிய உணவகங்களில் தந்தூரி அடுப்புகளிலும் பார்பிக்யூ அடுப்புகளிலும் அந்த கரி பயன்படுத்தப்படுகிறது.

தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மகாராஷ்டிராவின் உள்ளே இருக்கும் சூளைகளை அடைய மட்டும் 18 மணி நேரங்கள் ஆகின்றன. பிற மாநிலங்களை அடைய 38 மணி நேரங்களாவது ஆகின்றன. செல்லும் இடங்களில் உள்ள திறந்தவெளிகளில் வைக்கோல், மூங்கில், கரும்பு சக்கை போன்றவற்றை பயன்படுத்தி எளிமையான குடியிருப்புகளை அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். மின்சாரமும் கழிப்பறை இல்லாமல் எப்போதும் பாம்புகளுக்கு மிருகங்களுக்கும் பயந்துகொண்டே அவர்கள் அங்கு வாழ்க்கையை கழிக்கிறார்கள்.
Group of People standing
PHOTO • Karishma V.

பல கட்காரி ஆதிவாசிகள் செங்கல் சூளைகளில் வேலை பார்க்கிறார்கள் அல்லது பெரிய உணவகங்களில் இருக்கும் பார்பிக்யூ மற்றும் தந்தூர் அடுப்புகளில் பயன்படுத்துவதற்கான நிலக்கரியை கருவேல மரத்திலிருந்து தயாரிக்கும் சூளைகளில் வேலை பார்க்கிறார்கள்

கருவேல மரங்கள் காடுகளில் இருக்கின்றன. அவற்றின் உரிமையாளர்கள் உள்ளூரில் வசிப்பவர்கள். உரிமையாளர்களுடன் கான்ட்ராக்டர்கள் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள். கருவேல மரங்களுக்கு பதிலாக தோட்டம் அமைக்கும் வகையில் நிலத்தை சமன்படுத்தி தரவேண்டும் என்பதே ஒப்பந்தம். பணியாளர்கள் கருவேல மரங்களை வெட்டுவார்கள். செங்கல்சூளை அமைப்பார்கள். அதில் மண்ணை கொட்டுவார்கள். அதில் கருவேல மரத்தை வேக வைப்பார்கள். பிறகு அந்த கரியை அவர்கள் லாரிகளின் நிரப்ப வேண்டும். மரங்கள் எல்லாம் அகற்றப்பட்ட பிறகு அவர்கள் நிலத்தை சுத்தப்படுத்தி நடவுக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொடுப்பார்கள்.

"கான்ட்ராக்டர்கள் முன்பணமாக 20 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை பணம் கொடுத்து விடுவார்கள்," என்கிறார் 36 வயதாகும் சந்தீப் பவார். அதே பஞ்சாயத்தில் இருக்கும் தனாலே கட்காரிவாடி கிராமத்தில் அவர் வசிக்கிறார். "நிலம் இருக்கும் பகுதி, வேலைகள் மற்றும் பேரம் ஆகியவற்றை பொறுத்தே தொகை முடிவாகும். இந்த அளவுக்கு பணம் முன்பே கிடைப்பது எங்களுடைய மக்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. குடும்பத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் இருக்கும் பட்சத்தில் காண்ட்ராக்டர்கள் 80 ஆயிரம் ரூபாய் வரை குடும்பத்திற்கு கொடுத்து விடுகிறார்கள்.

சூளைகளில் ஒரு ஜோடி என்பது ஒரு உழைப்பு பகுதியாக கணக்கெடுக்கப்படுகிறது. பிற குடும்ப உறுப்பினர்கள் சாக்குகளை தூக்குவது போன்ற பிற வேலைகள் செய்ய உதவுகிறார்கள். இது வேலையை வேகமாக்குகிறது. ஆனால் அவர்களுக்கு தனி ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு குடும்பத்தின் உணவுக்கும் 400 ரூபாயை ஒவ்வொரு வாரமும் காண்ட்ராக்டர்கள் கொடுத்துவிடுகிறார்கள். அதாவது ஏழு மாதங்களுக்கு 12000 ரூபாய். இந்தப் பணமும் ஊதியத்தின் ஒரு பகுதியாகவே தரப்படுகிறது. அதற்கும் சேர்த்துத்தான் ஜோடி வேலை பார்த்து தீர்க்க வேண்டும்.

ஓய்வே இல்லாத வேலை. காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நீளும். வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும்தான் விடுமுறை. அதுவும் அருகே இருக்கும் சந்தைகளுக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்குவதற்காக. புனே மாவட்டத்தில் இருக்கும் கேத் தாலுகாவின் ஒரு பகுதியில் வேலை பார்க்கும் சஷிகாந்த் வாக்மாரே, "இன்று மகர சங்கராந்தி. ஆனால் காலையில் இருந்து தொடர்ச்சியாக நாங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் லாரிகளில் கட்டையையோ கரியையோ ஏற்ற நடுநிசி வரை ஆகி விடுகிறது," என்கிறார்.

ஓய்வில்லாத வேலை. காலை 7 மணி தொடங்கி இரவு 9 மணி வரை நீளும். "இன்று மகரசங்கராந்தி. ஆனால் காலையிலிருந்து நாங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் நாங்கள் லாரிகளில் கட்டைகளையோ கரியையோ நடுநிசி வரை ஏற்ற வேண்டியதிருக்கும்," என்கிறார் சஷிகாந்த் வாக்மாரே. அவர் கேத் தாலுகாவிலுள்ள சூளையில் பணிபுரிபவர்

ஒவ்வொரு பணிக்காலம் முடியும் போதும் கான்ட்ராக்டர்கள் நிரப்பப்பட்ட சாக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு ஊதியத்தை கணக்கிடுகிறார்கள்.  அதில் கொடுத்த முன்பணத்தை கழித்து விடுகிறார்கள். மங்கேஷ் ராத்தோட் ஒரு காண்ட்ராக்டர். 240 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அகமத் நகர் டவுனில் வசிக்கும் அவர் அன்று கிராமத்துக்கு வந்திருந்தபோது பேசினார். "ஒவ்வொரு சாக்கிலும் 25 கிலோ கரி இருக்கும். நாங்கள் ஒவ்வொரு தொழிலாளருக்கும் (ஒரு ஜோடி) 120 ரூபாய் ஒவ்வொரு நிரப்பப்பட்ட சாக்குக்கும் கொடுக்கிறோம்," என்றார்.

அமராவதி மாவட்டத்தின் தார்யாபூர் தாலுகா சூளைகளில் இருக்கும் நவ்நாத் சவன் என்ற காண்ட்ராக்டர் ஒவ்வொரு சாக்குக்குமான விலையைத்தான் கூலியாக கொடுப்பதாக சொல்கிறார். 2018 ஆம் ஆண்டில் நட்சூர் கட்காரிவாடியிலிருந்து 36 குடும்பங்கள் தர்யாப்பூரில் இருக்கும் சூளைகளுக்கு இடம்பெயர்ந்தன. " அவர்களுக்கு நாங்கள் முன் பணம் கொடுக்கிறோம். ஒவ்வொரு சாக்கு கரி தயாரிப்பதற்கும் ஒரு குடும்பத்திற்கு 120 ரூபாய் கொடுக்கிறோம். அவர்கள் எங்களுடைய முன் பணத்தை திரும்பக் கொடுக்கும் வரை எங்களிடம்தான் வேலை பார்க்க வேண்டும். ஒருவேளை அவர்கள் அதிகமான சாக்குகளுக்கு உற்பத்தி செய்து விட்டால் உணவுக்கென கொடுத்த தொகையை கழித்துவிட்டு ஒரு சாக்குக்கான தொகையை சற்று அதிகரித்துக் கொடுப்போம்."

ஒரு பணிக்காலத்தின் போது ஒரு தொழிலாளர் குடும்பம் ஆயிரம் சாக்குகள் நிரப்பி விட முடியும். கிட்டதட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 500 சாக்குகளை நிரப்ப முடியும். 60 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும்(அதாவது முன் பணத்தையும் உணவு பொருளுக்கான பணத்தையும் கழித்து). ஆனால் வழக்கமாக பணிக்காலம் முடிந்த பிறகு குடும்பத்திற்கு அதிகப்பணம் என எதுவும் கிடைக்காது. நட்சூர் கட்காரிவாடி மற்றும் தனாலே கட்காரிவாடியில் நான் சந்தித்த 40 குடும்பங்களில் எந்த குடும்பமும் அதிகரிக்கப்பட்ட கூலி என பணிக்கால முடிவில் எந்த பணமும் பெற்றிருக்கவில்லை.  500 லிருந்து 700 சாக்குகளை அவர்கள் ஒவ்வொரு பணிக்காலத்திலும் உற்பத்தி செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எவருக்கும் அதிகப்படியான பணம் என பணிக்காலம் முடியும்போது எதுவும் கொடுக்கப்படவில்லை.

கருவேல மர சூளையில் வேலை பார்க்கும் 32 வயதாகும் சங்கீதா வாக்மாரே, "நாங்கள் திருமணத்துக்காக ரூபாய் 70 ஆயிரத்தை முன்பணமாக பெற்றிருந்தோம். அதையும் உணவுப் பொருட்களுக்கு என வாங்கிய பணத்தையும் அடைப்பதற்காக நாங்கள் வேலை பார்க்க வேண்டியிருந்தது," என்றார். அதாவது கிட்டத்தட்ட 700 சாக்குகளுக்கான 82 ஆயிரம் ரூபாய் பணத்துக்கு வேலை பார்த்திருக்க வேண்டும். ஆனால் அவரும் அவர் கணவரும் ஆயிரம் சாக்குகளை அந்த பணிக்காலத்தில் உற்பத்தி செய்திருந்தனர் .அந்தக் கணக்கை அவரிடம் காட்டி மீதமுள்ள 300 சாக்குகளுக்கான 38 ஆயிரம் ரூபாயை கான்ட்ராக்டரிடமிருந்து பெற்றாரா என கேட்டேன். அவர் சிரித்தபடி, "அவர் எங்களுக்கு ஒரு டேப் ரெக்கார்டரும் இரண்டு தங்க நாணயங்களும் கொடுத்தார்," என சொன்னார். ஆனால் அவற்றின் மதிப்பு வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டும்தான்.

Woman in front of television
PHOTO • Karishma V.

38 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக ஒரு டேப் ரெக்கார்டரையும் இரண்டு தங்க நாணயங்களையும் சங்கீதா வாக்மேருக்கும் அவருடைய கணவருக்கும் காண்ட்ராக்டர் கொடுத்திருக்கிறார்

"30 ஆயிரம் ரூபாய் நீங்கள் முன்பணம் பெற்றிருந்தால் கான்ட்ராக்டர் உங்களுடைய கடன் முடிந்துவிட்டது என்று சொல்லும் வரை நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை ஒரு குடும்பம் வெறும் 200 சாக்குகள்தான் ஒரு பணிக் காலத்தில் செய்து முடிக்கிறது என்றால் அடுத்த வருடத்திலும் அவர்கள் திரும்ப வந்து எந்த கூலியும் பெறாமல் கடனை அடைக்க வேலை பார்த்துக் கொடுக்க வேண்டும்," என்கிறார் 79 வயதாகும் பாபு ஹிலாம். குக்கிராமங்களில் மதிப்பு பெற்றிருக்கும் முதியவர் அவர்.

சூளைகளின் அருகே தங்கி வேலை பார்க்கும் காலத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். உணவுப் பற்றாக்குறையும் இருக்கும். கட்காரிகள் தங்களுடைய குக்கிராமங்களுக்கு திரும்பும்போது அவர்களின் குழந்தைகள் ஆரோக்கிய குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். சில மாவட்டங்களில் அங்கன்வாடிகள் முட்டைகளையும் கடலை பர்பியும் கொடுக்கின்றன. ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை ஒவ்வொரு வருடமும் கர்ப்பிணிகளுக்கும் பால் சுரக்கும் தாய்களுக்கும் இரண்டிலிருந்து ஆறு வயது வரை குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன.

தனாலேவில் இருக்கும் ராய்கட் ஜில்லா பரிஷத் பள்ளியின் தலைமை ஆசிரியரான பாபு மகதிக் சொல்லும்போது, "எங்களிடம் 40 குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களில் 20 பேர் கட்காரி குடும்பங்களில் இருந்து வருபவர்கள். அக்டோபர் மாதத்திற்கு பிறகு இந்த குழந்தைகள் வேறு மாநிலங்களுக்கு அவர்களின் பெற்றோர்களுடன் இடம் பெறுவார்கள். பிறகு ஜூன் மாதத்தில் திரும்பிவிடுவார்கள். இந்த மாதங்களில் அவர்கள் வேறு பள்ளிக்கூடங்களில் சேர்வதில்லை. திரும்ப வந்த பிறகு அரசின் தேர்ச்சி மறுப்பு கொள்கையின்படி அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி அடைய வைக்கப்படுகிறார்கள். ஒன்பதாம் வகுப்பு அடையும் போது அவர்களுக்கு வெறும் ஆரம்பகட்ட கல்வி மட்டுமே தெரிந்திருக்கிறது. பெரும்பாலானவர்கள் ஒன்பதாம் வகுப்பிலேயே தேங்கி படிப்பை நிறுத்திவிடுகிறார்கள்," என்கிறார்.

தனாலேவில் இருக்கும் பல கட்காரி அல்லாத குடும்பங்கள் சொந்தமாக நிலங்களை வைத்திருக்கின்றனர். அங்கு முளைப்பயிர்களையும் பயறு வகைகளையும் பருவகாலத்திற்கு பிறகு பயிரிடுகின்றனர். சிலர் அன்றாடக் கூலிக்காக பக்கத்திலிருக்கும் தாலுகாக்களில் வேலை தேடுகின்றனர். பலரின் குடும்ப உறுப்பினர்கள் டவுன்களிலும் நகரங்களிலும் வேலை பார்க்கின்றனர்.

"30 ஆயிரம் ரூபாய் நீங்கள் முன்பணம் பெற்றிருந்தால் கான்ட்ராக்டர் உங்களுடைய கடன் முடிந்துவிட்டது என்று சொல்லும் வரை நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை ஒரு குடும்பம் வெறும் 200 சாக்குகள்தான் ஒரு பணிக் காலத்தில் செய்து முடிக்கிறது என்றால் அடுத்த வருடத்திலும் அவர்கள் திரும்ப வந்து எந்த கூலியும் பெறாமல் கடனை அடைக்க வேலை பார்த்துக் கொடுக்க வேண்டும்," என்கிறார் 79 வயதாகும் பாபு ஹிலாம். குக்கிராமங்களில் மதிப்பு பெற்றிருக்கும் முதியவர் அவர்

ரூபாயும் நாட்கூலியாக கொடுக்கப்படுகிறது. "ஆனால் இங்கு விவசாயம் குறிப்பிட்ட காலம் வரை மட்டும்தான். பருவகாலத்துக்கு பிறகு நெல் அறுவடை முடிந்தபின் ஊருக்குள் வேலை இருக்காது. எங்களில் பெரும்பாலானோருக்கு நிலங்கள் கிடையாது. அதனால்தான் மழைக்காலத்திற்கு பிறகு எங்களின் மக்கள் இடம்பெயர்கிறார்கள்," என்கிறார் சந்தீப்.

கட்காரிகள் இடம்பெயர்வதால் அவர்களுக்கான ஆவணங்களை பெறுவது தள்ளிப் போகிறது. பல சாதிச் சான்றிதழ்கள் தாசில்தார் அலுவலகங்களில் தூங்குகின்றன. கிராமவாசிகள் பலர் சான்றிதழுக்கு விண்ணப்பித்து விட்டு இடம்பெயர்ந்து விடுகிறார்கள். சான்றிதழ் சரிபார்ப்புக்கு வீட்டுக்கு வரும்போது  இருப்பதில்லை. சாதிச் சான்றிதழ் என்பது மாவட்டத்தின் மாஜிஸ்திரேட்டால் வழங்கப்படும் முக்கியமான ஆவணம். குறிப்பாக பட்டியல் பழங்குடிகளுக்கு அரசின் திட்டங்களும் உதவிகளும் கிடைப்பதற்கு தேவையான ஆவணம். முக்கியமான கணக்கெடுப்புகள் எடுக்கப்படும்போது கூட கட்காரிகள் வீடுகளில் இருப்பதில்லை. அதனால் அவர்கள் எந்த கணக்கிலும் வருவதுமில்லை.

கிராமத்தில் வேலைவாய்ப்புகள் குறைவுதான். ஆனால் மொத்த குடும்பத்துக்கும் தேவையான அளவு கூட இல்லாத தொகைக்காக 7 மாதங்கள் கிராமத்தை விட்டு வெளியேறியிருப்பது சரிதானா? "நெருக்கடியான நேரத்திலும் அவசரகாலத்திலும் தொழிலாளர்களுக்கு தேவையான பணத்தை முன்பணமாக சூளை கான்ட்ராக்டர்கள் கொடுத்து விடுகின்றனர். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA) ஒரு நாளைக்கு அதிகமான பணத்தை (ரூ.201) ஊதியமாகக் கொடுக்கிறது. ஆனால் அந்த பணம் ஆறு மாதத்துக்கு பிறகுதான் வங்கிக் கணக்கில் வந்து சேரும். சில பேருக்கு 2015லிருந்து இப்போது வரை பணம் வந்து சேரவில்லை," என்கிறார் விஷ்ணு. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கான ஒன்றிய அளவிலான கணக்கெடுப்பு பணியில் இருப்பவர்.

வன உரிமைச்சட்டம் இந்த பகுதிகளில் சரியாக அமல்படுத்தப்பட்டால் உதவியாக இருக்கும். நட்சுரின் மொத்த 5100 ஹெக்டேர்களில் 3500 ஹெக்டேர்கள் காடுதான். ஆனால் இங்கு இருக்கும் பெரும்பாலான கட்காரிகளுக்கு விவசாயம் பார்க்க நிலம் கிடையாது. வன உரிமைச் சட்டம் அவர்களுக்கு தனிப்பட்ட அல்லது சமூக ரீதியான உரிமையை காட்டின் மீது கொடுக்கமுடியும். அவற்றைக் கொண்டு சிறிய அளவில் விளைச்சலையும் செய்துகொள்ளலாம். காட்டில் விளையக் கூடியவற்றை சேகரித்தும் கொள்ளலாம். "எங்களில் பல பேர் வன அதிகாரிகள் விரட்டிவிடும் வரை காடுகளிலேயே விவசாயம் பார்த்திருக்கிறோம்," என்கிறார் சந்தீப். "இப்போது சில பேருக்கு காட்டு நிலம் எழுதி கொடுக்கப்படுகிறது. அவர்கள் இனி இடம்பெயர  வேண்டியிருக்காது."
Man walking
PHOTO • Karishma V.
Man sitting
PHOTO • Karishma V.

இடப்பக்கம்: சூளைகளை தவிர்ப்பதற்காக குழுவாக கிராமத்திலேயே ஒரு சூளை தொடங்க அரசு திட்டத்தில் சேர்ந்து இருக்கிறார் சந்தீப் பவார். வலப்பக்கம்: அண்டை கிராமங்களில் இருந்து கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்கிறார் விஷ்ணு வாக்மாரே

சந்தீப் 2009 ஆம் ஆண்டில் ஒரு கரிச்சூளையில் ஒரே ஒரு பணிக்காலம் வேலை பார்த்தார். அதற்குப் பிறகு கிராமத்தை விட்டுச் சென்று அப்படியான சூழலில் மீண்டும் வேலை பார்த்து விடக்கூடாது என்று முடிவெடுத்தார். அவருக்கு வாய்ப்பு இருந்தது. அவரின் தந்தை ஹரி பவாருக்கு 33 குந்தாக்கள் (40 குந்தாக்கள் என்பது ஒரு ஏக்கர்) நிலம் வன உரிமைச் சட்டத்தின்படி ஒதுக்கப்பட்டு இருந்தது.  அவரின் குடும்பம் நெல், தானியங்கள், காய்கறிகள் மற்றும் மலர்கள் போன்றவற்றை ஒரு பெரிய நிலத்தில் விளைவிக்கின்றனர். அந்த நிலத்திற்கான உரிமை அவர்களிடம் இல்லை. மேலும் அது காட்டுக்குள் இருக்கிறது.

65 குடும்பங்கள் வசிக்கும் தனாலே கட்காரிவாடி கிராமத்தில் மூன்றே மூன்று குடும்பங்களுக்கும் மட்டும்தான் வன உரிமைச் சட்டத்தின்படி காட்டின் மீது தனி உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. பலருக்கு ஆவணங்கள் இல்லாததால் அந்த சலுகையை பெற முடியவில்லை. மேலும் சட்ட முறைமைகளில் விழிப்புணர்வு இல்லாததாலும் அடைய முடியவில்லை.

பழங்குடிகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தின் அலுவலகம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பென் தாலுகாவில்தான் இருக்கிறது. ஆதிவாசிகளுக்கான நிதியும் திட்டங்களும் அங்கிருந்தே இயக்கப்படுகிறது. குறிப்பாக எளிதில் பாதிப்படையக் கூடிய கட்காரி போன்ற பழங்குடிகளுக்கென உருவாக்கப்பட்ட வாய்ப்புகள் அவை. 10 பேர் கொண்ட குழு செங்கல்சூளை அமைப்பதற்காக மூன்று லட்ச ரூபாய் மானியத்தை உள்ளடக்கிய திட்டங்கள் அவை. "வெளியே சென்று வேறு செங்கல் சூளைகளில் வேலை செய்வதற்கு பதிலாக எங்களுக்கு என்று சொந்தமாக சூளை இப்போது இருக்கிறது," என்கிறார் சந்தீப். அவரும் 9 பேரும் சேர்ந்து சூளை நடத்துகிறார்கள். அதில் வரும் லாபத்தை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். மார்ச் மாதத்தில் இருந்து அக்டோபர் வரை எட்டு மாதங்கள் வேலை பார்ப்பதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 ஆயிரம் ரூபாய் மாதத்துக்கு கிடைக்கிறது. ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை சிலர் விவசாய வேலைகள் செய்வதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் பல கட்காரிகளுக்கு சூளை திட்டத்தைப் பற்றி தெரியாது. சந்தீப்பின் வெற்றிக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில் இரண்டு விண்ணப்பங்கள் நட்சூர் கட்காரிவாடியில் இருந்தும் இன்னொரு கட்காரி குக்கிராமத்தில் இருந்தும் அனுப்பப்பட்டிருக்கின்றன.

சுற்றுலாத் துறையும் சில வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. சுதாகத் தாலுகாவிலுள்ள பாலி டவுன் அஷ்ட விநாயகர்களில் ஒரு விநாயகருக்கு பெயர் பெற்றது. மேலும் வரலாற்று ரீதியான கோட்டைகளும் குகைகளும் அங்கு இருக்கின்றன. நட்சூர்தான் அந்த இடங்களுக்கு செல்வதற்கான நுழைவாயில். "நாங்கள் இடம்பெயர்வதில்லை ஏனெனில் எங்களுக்கு பண்ணை வீட்டு உரிமையாளர்கள் வேலைகள் தருகிறார்கள். ஊதியம் குறைவுதான் (ஆண்களுக்கு 200 ரூபாயும் பெண்களுக்கு 150 ரூபாய்). குறைந்தபட்சம் நாங்கள் பக்கத்திலேயே வாழ முடிகிறது.  தேவை ஏற்பட்டால் எங்களுக்கு முன்பணமும் கொடுக்கிறார்கள்," என்கிறார் 50 வயதாகும் பிவா பவார். நட்சூர் பஞ்சாயத்தில் உள்ள பகிரம்பட ஆதிவாசிவாடியை சேர்ந்தவர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த 12 குடும்பங்கள் அருகே உள்ள கிராமங்களிலிருந்து கட்காரிகள் இடம்பெயரும் காலத்தில் கூட இடம்பெயர்வது இல்லை. "எங்களிடம் விட்டால் நாங்கள் நிச்சயமாக எந்த காலத்திலும் எங்கள் கிராமத்தைப் விட்டு இடம் பெயர மாட்டோம்," என்கிறார் ஒருவர்.

தமிழில்: ராஜசங்கீதன்
Karishma V.

Karishma V. has been working as a Chief Minister’s Rural Development Fellow in Raigad district since April 2017. Her areas of interest are tribal development and women’s empowerment.

Other stories by Karishma V.
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan