போஜ்புரிக்கும் பங்க்ளாவுக்கும் இந்திக்கும் மாறி மாறி வாடிக்கையாளர்களை கையாளுகிறார் மீனா யாதவ். கொல்கத்தாவின் பல கலாசார மையமான லேக் மார்க்கெட்டில் வழி கேட்டு நிற்கும் புதியவர்களுடனும் நண்பர்களுடனும் கூட அவர் பேசுகிறார். “கொல்கத்தாவில் மொழி பிரச்சினை இல்லை,” என்கிறார் அவர், புலம்பெயர் தொழிலாளராக அன்றாடம் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசுகையில்.
“பிகாரி மக்கள் பிகாரில்தான் இருப்பார்கள் என சொல்வது சுலபம். கடினமான உழைப்பு எல்லாவற்றையும் செய்வது நாங்கள்தான். சுமை தூக்கிகள், நீர் தூக்கிகள், கூலிகள் அனைவரும் பிகாரிகள்தான். வங்காளிக்கான விருப்பத்துக்குரிய விஷயம் இது அல்ல. நியூ மார்க்கெட், ஹவுரா, சீல்தா போன்ற பகுதிகளுக்கு சென்று பாருங்கள். பிகாரிகள் கடினமான சுமைகள் தூக்குவதை பார்க்க முடியும். கடின உழைப்பு செலுத்தினாலும் அவர்களுக்கு போதுமான மரியாதை கிடைப்பதில்லை. பிகாரிகள் அனைவரையும் பாபு என அழைப்பார்கள். ஆனால் அவர்கள் கீழ்த்தரமாக பார்க்கப்படுகிறார்கள். மாம்பழத்தின் தசைப்பகுதி வங்காள பாபுக்களுக்கும் உள்ளிருக்கும் கொட்டை எங்களுக்கும் அளிக்கப்படுகிறது,” என்கிறார் அவர் ஒரு கணம் தாமதித்து.
மொழிகளுக்கு இடையிலும் அடையாள அரசியலுக்கும் ஊடாகவும் மீனா யாதவ் சாமர்த்தியமாக நகருகிறார்.
”சென்னையிலிருக்கும்போது (தொடர்பு கொள்ள) நாங்கள் சவால்களை சந்தித்தோம்,” எனத் தொடர்கிறார் அவர். “இந்தி அல்லது போஜ்புரி மொழிகளுக்கு அவர்கள் பதிலுறுவதில்லை. அவர்களோ எங்களுக்கு தெரியாத மொழியில் பேசுவார்கள். ஆனால் இங்கு அப்படியில்லை,” என்கிறார் மீனா. “ஒரு பிகாரி மொழி என எதுவும் இல்லை. வீட்டில் நாங்கள் 3-4 மொழிகள் பேசுவோம். சில நேரங்களில் போஜ்புரி, சில நேரங்களில் இந்தி, சில நேரங்களில் தர்பாங்கியா(மைதிலி), சில நேரங்களில் பங்க்ளா மொழிகளை பேசுகிறோம். ஆனால் தர்பாங்கியா பேசுகையில்தான் எங்களுக்கு வசதியாக இருக்கிறது,” என்கிறார் பிகாரின் சப்ராவை சேர்ந்த 45 வயது சோள வியாபாரி.
“நாங்கள் ஆரா மற்றும் சப்ரா போலியும் பயன்படுத்துவோம். எந்த பிரச்சினையும் இல்லை. எந்த மொழி பேச விரும்பினாலும் நாங்கள் அதில் பேசிக் கொள்வோம்,” என்கிறார் அவர், பல மொழி பேசும் ஆச்சரியப்படத்தக்க லாவகத்தில். எனினும் பல மொழிகள் பேசும் இயல்பு அவரின் தனித்திறன்களில் ஒன்று என ஏமாற்றிக் கொள்ள அவர் விரும்பவில்லை.


















