சித்தரஞ்சன் ரே, மேற்கு வங்கத்தின் கடாங் கிராமத்தில் இருந்து 2015 ஆம் ஆண்டு, தனது 28 வயதில், நல்ல ஊதியம் பெற வேண்டும் என்று கேரளாவிற்குப் புறப்பட்டார். அம்மாநிலம் முழுவதும் உள்ள பல இடங்களில் கொத்தனார் ஆக பணியாற்றி, சிறிது பணத்தை மிச்சப் படுத்தினார். பிறகு தனது சொந்த ஊருக்குத் திரும்பி எட்டு பைகா நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார். அவர் இதற்கு முன்னரே தனது குடும்பத்தின் விவசாய நிலத்தில் பணியாற்றி இருக்கிறார், தவிர சொந்தமாக உருளைக் கிழங்கை பயிரிடுவதில் தனது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க விரும்பினார்.

"அந்த நிலம் முதன் முறையாக பயிரிடப்பட்டது, எனவே அது அதிக கடின உழைப்பையும் மற்றும் அதிக முதலீடுகளையும் கோரியது", என்று 50களின் முற்பகுதியில் இருக்கும் விவசாயியான அவரது மாமா உத்தம் ரே கூறினார். ஒரு நல்ல அறுவடையின் மூலம் அவர் லாபம் ஈட்டுவர் என்ற நம்பிக்கையில் சித்தரஞ்சன் உள்ளூர் கடன்காரர்களிடமிருந்தும், வங்கியிடமிருந்தும், "மிக அதிக வட்டி விகிதத்தில்" கடன்களை பெற்றார். காலப்போக்கில் அது மொத்தம் 5 லட்சம் ரூபாயாக உயர்ந்தது என்று உத்தம் கூறினார். ஆனால், 2017 ஆம் ஆண்டில் பலத்த மழைக்குப் பிறகு நிலத்தில் நீர் தேங்கி நின்றது. பயிரும் அழிந்தது. இழப்பை எதிர் கொள்ள முடியாமல் 30 வயதான சித்தரஞ்சன் அந்த ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதியன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்க ஆர்வமாக இருந்தனர் என்று ஜல்பைகுரி மாவட்டத்தின் தூப்குரி வட்டத்திலுள்ள அதே கிராமத்தைச் சேர்ந்த, ஐந்து பைகா (1 பைகா என்பது 0.33 ஏக்கர் நிலம் ஆகும்) நிலத்தில் உருளைக் கிழங்கு, நெல் மற்றும் சணல் பயிரிடும் விவசாயியான சிந்தாமோகன் ராய் கூறுகிறார். "அவர் வங்கிக் கடன் பெற தகுதியற்றவர் என்பதால் அவரது சார்பில் அவரது தந்தை கடன் எடுத்துக் கொடுத்தார்". அவரது மகன் இறந்த பிறகு 60 வயதான அவரது தந்தை கடனுடன் போராடி வருகிறார், இறந்த இளைஞனின் தாயாரோ நோய்வாய்பட்டு இருக்கிறார்.

சிந்தாமோகன் குடும்பத்திலும் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். "எனது சகோதரர் ஒரு சாதாரண மனிதர் அவரால் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை அதனால் 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி அன்று பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்", என்று அவர் கூறுகிறார். அவரது சகோதரர் கங்காதருக்கு வயது 51.

"அவர் தனக்குச் சொந்தமான ஐந்து பைகா நிலத்தில் உருளைக் கிழங்கை பயிரிட்டு வந்தார்", என்று 54 வயதாகும் சிந்தாமோகன் கூறுகிறார். "அவர் (வங்கிகளிடம் இருந்தும், தனியார் கடன் கொடுப்பவர்களிடமிருந்தும், உள்ளீட்டு விற்பனையாளர்களிடம் இருந்தும்) கடன் வாங்கி இருந்தார். கடந்த சில பருவ காலங்களில் தொடர்ச்சியான இழப்புகளைச் சந்தித்தார், அந்த நிலைமை அவரால் சமாளிக்க முடியாத அளவுக்கு இருந்தது...", என்று கூறுகிறார் அவர்.

கங்காதரின் நிலத்தின் பெரும்பகுதி தனியார் கடன் கொடுப்பவர்களிடம் அடமானத்தில் இருக்கிறது. அவரது மொத்த கடன் சுமார் 5 லட்சம் ரூபாய். அவரது மனைவி ஒரு இல்லத்தரசி, அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள், மூத்த பெண் கல்லூரியில் படித்து வருகிறார். சகோதரர்களாகிய நாங்களும் கங்காதரின் புகுந்த வீட்டுக்காரர்களும் அவர்களை எப்படியாவது அதிலிருந்து வெளியே கொண்டு வர முயற்சிக்கிறோம்", என்று சிந்தாமோகன் கூறுகிறார்.

Uttam Roy at the rally
PHOTO • Smita Khator
Chintamohan Roy at the rally
PHOTO • Smita Khator

இடது: உத்தம் ரேயின் மருமகன் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வலது: சிந்தாமோகன் ராயின் சகோதரர் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் இருவருமே உருளைக் கிழங்கு விவசாயிகள்

ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று புழுக்கமான மதிய வேளையில் மத்திய கொல்கத்தாவின் ராணி ராஷ்மோனி சாலையில் (AIKS - AIAWU) அகில இந்திய கிசான் சபா - அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்த பேரணியில் சிந்தாமோகன் மற்றும் உத்தம் ஆகியோரை சந்தித்தேன். விவசாயத்தின் அழுத்தத்தால் தங்கள் குடும்பத்தில் ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டதை அனுபவித்த 43 பேர்  கொண்ட குழுவில் அவர்கள் இருவரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் ஜல்பைகுரி, மால்தா, புர்பா பார்தாமன், பஸ்சிம் பார்தாமன், பஸ்சிம் மேதினிபூர், புர்பா மேதினிபூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இந்தப் பேரணியில் சுமார் 20,000 பேர் பங்கு பெற்றதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

அவர்களின் கோரிக்கைகளில்: விவசாய தற்கொலைகளுக்கான இழப்பீடு, திருத்தப்பட்ட ஊதியங்கள், நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் வயதான விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவையும் அடங்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் AIKS (அதன் சொந்த கள ஆய்வுகளின் அடிப்படையில்) 2011 ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தில் 217 விவசாயத் தற்கொலைகள் நடந்துள்ளன என்று கூறியிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் உருளைக் கிழங்கு விவசாயிகள் தான். 2015 ஆம் ஆண்டு இதர நாளிதழ்களுடன் பிசினஸ் ஸ்டாண்டர்ட் இதழில் வெளியான அறிக்கை ஒன்று மேற்கு வங்கத்தில்  உருளைக் கிழங்கு விவசாயம் செய்யும் விவசாயிகளின் தற்கொலைகளை பற்றி பேசியது. இருப்பினும், மேற்கு வங்கத்தில் விவசாயத் தற்கொலைகள் எதுவும் நடைபெறவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் மேற்கோள் காட்டியுள்ளன. 2015 ஆம் ஆண்டு மத்திய குற்றப் பதிவு அணையம் (NCRB) விவசாய தற்கொலைகளை  பற்றிய தகவல்களை அதன் தரவுகளில் வெளியிடுவதை நிறுத்துவதற்கு முன்பே,  2011 ஆம் ஆண்டே  மேற்கு வங்கம்  விவசாய தற்கொலைகளைப் பற்றிய தகவல்களை NCRB க்கு வழங்குவதை நிறுத்திவிட்டது.

ஆனால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று நடந்த பேரணி மேற்கு வங்கத்தில் உருளைக் கிழங்கு விவசாயிகள் கடும் சிக்கலில் உள்ளனர் என்பதை தெளிவுப்படுத்தியது - மோசமான அறுவடையால் பாதிக்கப்பட்டோ அல்லது அதிகப்படியான விளைச்சலால் சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு பாதிக்கப்பட்டோ அவர்கள் இருக்கின்றனர். உத்திரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் உருளைக் கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யும் இரண்டாவது மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கிறது. மத்திய அரசின் விவசாய அமைச்சகத்தின் தோட்டக்கலை புள்ளி விவரப் பிரிவின் தரவு மேற்கு வங்கத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2013 - 14 முதல் 2017 - 18 வரை) உருளைக் கிழங்கு உற்பத்தி சராசரியாக 10.6 மில்லியன் டன்களாக இருந்தது அல்லது நாட்டின் மொத்த உருளைக் கிழங்கு உற்பத்தியில் கிட்டத்தட்ட 23 சதவிகிதம் உற்பத்தி செய்யப்பட்டது என்று குறிப்பிடுகிறது. அதுவே 2018 - 19 ஆம் ஆண்டில் மாநிலத்தில் உருளைக் கிழங்கு அறுவடை 12.8 மில்லியன் டன்னாகவோ அல்லது இந்தியாவின் மொத்த உருளைக் கிழங்கு உற்பத்தியில் 24.31 சதவீதமாகவோ இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேல் பிற மாநிலங்களுக்கு விற்க அனுப்பப்பட்ட பின்னரும் (மீதமுள்ளவை மேற்கு வங்கத்தில்  பயன்படுத்தப்படுகிறது) உற்பத்தி சில நேரங்களில் தேவைக்கும் அதிகமாகவே இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று மேற்கு வங்க அரசாங்கத்தின் வேளாண் சந்தைப்படுத்தும் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்த ஆண்டு நம் மாநிலத்தில் உருளைக் கிழங்கின் அதிகப்படியான மகசூல் மற்றும் பிற உருளைக் கிழங்கு உற்பத்தி செய்யும் மாநிலங்களிலும் நல்ல உருளைக் கிழங்கு விளைச்சல் கிடைத்திருப்பதை பற்றிய தகவல்கள் கிடைத்திருப்பதால் உருளைக் கிழங்கை சந்தைப்படுத்துவதில் ஒரு தேக்கம் ஏற்பட்டு இருக்கிறது, இதன் விளைவாக உருளைக் கிழங்கின் சந்தை விலை கடுமையாக குறைந்து இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. தற்போதைய சந்தை விலை, உற்பத்தி செலவைக் காட்டிலும் மிகக் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் மார்ச் மாதத்தில் மொத்த அறுவடைக்குப் பிறகு இந்த சந்தை விலைகள் மேலும் குறையக்கூடும், இதனால் விவசாயிகள் கடும் அழுத்தத்திற்கு ஆளாவார்கள்", என்று கூறியிருக்கிறது.

PHOTO • Smita Khator

ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று மத்திய கொல்கத்தாவில் உள்ள ராணி ராஷ்மோனி சாலையில் நடந்த பேரணியில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன, அதில் ஒரு சில பதாகைகள்: விவசாய தற்கொலைக்கு ஆளானவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, கிராமங்களில் 200 நாள் வேலை மற்றும் 375 ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றைக் கோரியது

இந்த நிலைமையை சரி செய்வதற்காக அதே அறிவிப்பில் (குவிண்டால் ஒன்றுக்கு 550 ரூபாய்) என்ற "அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கொள்முதல் விலையில்", உருளைக்கிழங்கு நேரடியாக கொள்முதல் செய்யப்படும், இது 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இது, "குளிர் சேமிப்பு கிடங்கில் சேமிக்க தயாராக இருக்கும் உருளைக் கிழங்கிற்காக விவசாயிகளுக்கு இந்த விலை வழங்கப்படும்", என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

இருப்பினும், மேற்குவங்கத்தில் அது உற்பத்தி செய்யும் மில்லியன் கணக்கான உருளைக் கிழங்குகளை சேமிக்கப் போதுமான குளிர் சேமிப்பு வசதிகள் இல்லை. தேசிய தோட்டக்கலை வாரியத்தால் (வேளாண் துறையின் கீழ்) நியமிக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் மாநிலத்தில்  (2017 ஆம் ஆண்டு டிசம்பர் வரை) மொத்தம் 5.9 மில்லியன் மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கக் குளிர் சேமிப்பு வசதிகள் இருந்தன. மேலும் 2017 - 18 ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில்  12.7 மில்லியன் டன் உருளைக் கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டது.

"மார்ச் மாதத்தில் உருளைக் கிழங்கு அறுவடை செய்யப்படும் போது குளிர் சேமிப்பு கிடங்குகள் ஒரு தலைக்கு சேமிக்கக்கூடிய அளவுகள் மற்றும் தேதியை விளம்பரப் படுத்துகின்றன", என்று சிந்தாமோகன் கூறுகிறார். "நாங்கள் அதற்கு முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும். சந்தையில் விலை அதிகமாக இருக்கும் போது நாங்கள் உருளைக் கிழங்கை சந்தையிலேயே விற்று விடுவோம். மீதமுள்ள உருளைக்கிழங்குகள் வயலிலேயே அழுகிவிடும்", என்று கூறுகிறார்.

இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் கூட விவசாயிகள் இதே போன்ற சூழ்நிலையை எதிர் கொண்டு இருக்கின்றனர், என்று கொல்கத்தாவில் நடந்த பேரணியில் பங்கு பெற்ற, தங்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை தற்கொலையில் இழந்து வாடும் மக்கள் சிலர் கூறினர். எனது கணவர் (திலீப்) ஒரு மூட்டைக்கு வெறும் 200 ரூபாய் தான் பெற்றார் (அந்த ஆண்டு உற்பத்தி விலை என்பது 550 - 590 ரூபாய் வரை ஒரு குவிண்டாலுக்கு கணக்கிடப்பட்டு இருந்தது, 2015 ஆம் ஆண்டில்). உருளைக் கிழங்கைப் பயிர் இடுவதற்காக அவர் மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தார் என்று பஸ்சிம் மேதினிபூரில் உள்ள கார்பேட்டா - I வட்டத்திலுள்ள அம்போகா கிராமத்தைச் சேர்ந்த ஜோத்ஸ்னா மொண்டல் கூறுகிறார். அவருக்கு வேறு கடன்களும் இருந்தன. கடன் கொடுத்தவர்கள், நில உரிமையாளர், மின்சார வினியோகத்துறை மற்றும் வங்கியிடமிருந்து அவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. அந்த நாள் - 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி, கடன் கொடுத்தவர் அவரை அவமதிப்பாகப் பேசிவிட்டார், அவர் நாங்கள் வயலில் உருளைக் கிழங்கை சேமித்து வைக்கும் குடிசையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்", என்று கூறினார்.

Jyotsna Mondal at the rally
PHOTO • Smita Khator
Family members of farmers and farm labourers that committed suicide at the rally
PHOTO • Smita Khator

இடது: 2015 ஆம் ஆண்டு, ஜோத்ஸ்னா மொண்டலின் கணவர் வயலில் அவர்களது குடும்பம் உருளைக் கிழங்கை சேமித்து வைக்கும் குடிசையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வலது: மேற்கு வங்கத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள்

விதையின் விலையும் அதிகரித்து விட்டது, என்கிறார் சிந்தாமோகன். கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் (உருளைக் கிழங்கு) விதைகளை ஒரு கிலோ 50 ரூபாய்க்கு வாங்குகிறோம். அதற்கு முன்பு நாங்கள் அவற்றை கிலோ ஒன்றுக்கு 35 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தோம். இந்த விஷயங்களில் எல்லாம் அரசாங்கம் தலையிடுவது இல்லை, குறைந்தபட்சம் எங்கள் பகுதியில் தலையிடவில்லை", என்று அவர் கூறுகிறார்.

'குறைந்தபட்ச கொள்முதல் விலை', அறிவிக்கப்பட்ட போதிலும் "ஒரு உருளைக் கிழங்கு கூட தரையில் இருந்து நகரவில்லை", என்று சிந்தாமோகன் கூறுகிறார். "இந்தப் பருவம் சற்றும் வித்தியாசமாக இருக்காது, எங்களுக்கு எப்படியும் பெரும் இழப்பு ஏற்படும்", என்று அவர் நம்புகிறார். விவசாயிகளோ, வர்த்தகர்களோ யாருமே பணம் சம்பாதிக்க முடியாது", என்கிறார்.

ஆனால் அதிக உற்பத்தி செய்யப்படும் என்ற ஆபத்து இருக்கும் போது உருளைக் கிழங்கை ஏன் பயிரிட வேண்டும்? "நான் நெல் மற்றும் சணல் ஆகியவற்றையும் பயிர் இடுகிறேன்", என்று அவர் கூறுகிறார். சணல் ஒரு கடினமான பயிர் அது நிறைய உழைப்பைக் கோரும். உருளைக்கிழங்கு ஒப்பீட்டளவில் எளிதானது மற்றும் மீள் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது, ஒருமுறை பயிரிட்டால் வாரத்துக்கு இரண்டு முறை கொஞ்சம் நீர்ப்பாசனம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்தால், பயிர் தயாராகிவிடும்", என்று அவர் கூறுகிறார்.

கொல்கத்தா பேரணியில் பங்கு பெற்ற குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தொடர்ச்சியாக - இந்த இறப்புகள் யாவுமே விவசாயம் தொடர்பான தற்கொலைகள் என்று அங்கீகரிக்கப்படவில்லை என்றும், இதே போன்ற பிரச்சனைகளையும் மற்றும் பிற பிரச்சனைகளையும் பற்றிதான் பேசினர். கணவரை இழந்த பெண்களுக்கான ஓய்வூதியத்தை கூட யாரும் பெறவில்லை. பெரும்பாலானவை தற்கொலை என்று நிரூபிப்பதற்கான காகித வேலைகளில் மாட்டிக் கொண்டிருக்கிறது. யாரும் பயிர் காப்பீட்டையும் பெறவில்லை.

“எனக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு நயா பைசா கூட கிடைக்கவில்லை, எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதைக் கூட அவர்கள் அங்கீகரிக்கவில்லை! எனக்கு கணவரை இழந்த பெண்களுக்கான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை", என்று கூறுகிறார் ஜோத்ஸ்னா. "எனது கணவரின் விவசாய கடன் இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை. அவரது கடனை நான் திருப்பி செழுதிக் கொண்டு இருக்கிறேன். நான் அவர்களின் (கடன்காரர்களின்) பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கு பந்தான் வங்கியில் இருந்து (80,000 ரூபாய்) கடன் வாங்க வேண்டி இருந்தது. இப்போது வாரத்திற்கு 1,000 ரூபாய் திருப்பிச் செலுத்திக் கொண்டு இருக்கிறேன்", என்று கூறி அவர் உடைந்து அழுகிறார். "எங்களுக்கு எங்கும் யாரும் இல்லை. தயவு செய்து எங்களைப் போன்ற மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று வந்து பாருங்கள். எனது (இளைய) மகனும் நானும் வயலில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 150 ரூபாய்க்காக வேலை செய்கிறோம். இதில் எப்படி நாங்கள் வாழ்வது மற்றும் கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது?", என்று கேட்கிறார்.

அட்டைப் படம்: சியாமல் மஜும்தார்.

தமிழில்: சோனியா போஸ்

Smita Khator

Smita Khator is the Chief Translations Editor, PARIBhasha, the Indian languages programme of People's Archive of Rural India, (PARI). Translation, language and archives have been her areas of work. She writes on women's issues and labour.

Other stories by Smita Khator
Editor : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose