பல்லவி கவிட் ஐந்து மாத கர்ப்பிணி. கட்டிலில் மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக வலி தாளாமல் நெளிந்து கொண்டிருந்தார். அவருடைய நாத்தனார் சப்னா கரெல் 45 வயதானவர். பல்லவியின் கருப்பை பெண்ணுறுப்பிலிருந்து வெளியே விழுந்தபோது அருகே இருந்தார். கருப்பையில் ஐந்து மாத உயிரற்ற சிசு இருந்தது. ரத்தமும் கசிவுகளும் தரையில் சொட்ட வலி தாங்க மாட்டாமல் பல்லவி நினைவிழந்தார்.

2019ம் ஆண்டின் ஜூலை 25ம் தேதி அதிகாலை 3 மணி. சத்புத மலைகளில் 55 பில் குடும்பங்கள் வாழும் ஹெங்க்லபாணி என்ற குக்கிராமத்திலிருந்த பல்லவியின் குடிசையை மழை அடித்துக் கொண்டிருந்தது. வடமேற்கு மகாராஷ்டிராவில் இருக்கும் நந்துர்பரின் மாவட்டத்தில் யாராலும் எளிதில் வந்தடைய முடியாத ஊர். கற்சாலைகள் கிடையாது. மொபைல் நெட்வொர்க் கிடைக்காது. “அவசர நிலைகள் நாம் அழைத்து வருவதில்லை. எப்போது வேண்டுமானாலும் அவை வரும்,” என்கிறார் பல்லவியின் கணவர் கிரிஷ் (எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). “மொபைல் நெட்வொர்க் கிடைக்காமல் நாங்கள் மருத்துவரையோ ஆம்புலன்ஸ்ஸையோ எப்படி அழைக்க முடியும்?”

“நான் மிகவும் பயந்து போய் விட்டேன்,” என்னும் 30 வயது கிரிஷ் “அவள் இறந்துவிடக் கூடாது என நினைத்தேன்” என நினைவுகூர்கிறார். அதிகாலை 4 மணி இருளிலும் மழையிலும் சில மூங்கில்கள் மற்றும் போர்வைகள் கொண்டு ஸ்ட்ரெச்சர் உருவாக்கியிருக்கிறார்கள். 105 கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் தட்கோனுக்கு பல்லவியை சேறும் சகதியும் நிறைந்த சத்புத மலைப் பாதைகளில் கிரிஷ்ஷும் பக்கத்து வீட்டுக்காரரும் சுமந்துச் சென்றனர்.

அக்ரனி தாலுகாவிலுள்ள டோரன்மல் கிராமப் பஞ்சாயத்தில் ஹெங்க்லபாணி கிராமம் இருக்கிறது. டோரன்மல் கிராம மருத்துவமனை பக்கம்தான். ஆனால் இரவு நேரத்தில் அங்கு செல்வது பாதுகாப்பு கிடையாது. வெறுங்கால்களில், கிரிஷ்ஷும் அவரின் அண்டை வீட்டுக்காரரும் சகதிப் பாதைகளில் தடுமாறிக் கொண்டு பிளாஸ்டிக் கவரால் போர்த்தப்பட்டிருந்த பல்லவியை கொண்டுச் சென்றார்கள். வலியில் முனகிக் கொண்டிருந்தார் பல்லவி.

டோரன்மல் கணவாய்ப்பாதையை அடையவே மூன்று மணி நேரங்களாக மலையேறிக் கொண்டிருந்தனர். “30 கிலோமீட்டர்கள் மேலே ஏற வேண்டும்,” என்கிறார் கிரிஷ். அங்கு 1000 ரூபாய்க்கு ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்து தட்கோன் கிராமத்துக்கு சென்றார்கள். ஐந்து மணி நேரப் பயணத்துக்கு பிறகு தட்கோனிலிருந்து ஒரு தனியார் மருத்துவமனையில் பல்லவியை சேர்த்திருக்கிறார்கள். அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்து ஒரு 10 கிலோமீட்டர்கள் செல்ல வேண்டும். “என் கண்ணில் பட்ட முதல் மருத்துவமனைக்கு அவளை கொண்டு சென்றேன். கட்டணம் அதிகமாக இருந்தது. ஆனால் என் பல்லவியின் உயிரையேனும் அவர்கள் காப்பாற்றினார்கள்,” என்கிறார். 3000 ரூபாய் கட்டணம் பெற்றிருக்கிறார் மருத்துவர். அடுத்த நாளே பல்லவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். “அதிக ரத்தம் வெளியேறியதில் அவள் இறந்து கூட போயிருப்பாள் என அவர் சொன்னார்” என கிரிஷ் நினைவுகூர்கிறார்.

In the dark and in pelting rain, Girish (also in the photo on the left is the ASHA worker), and a neighbour carried Pallavi on a makeshift stretcher up the slushy Satpuda hills
PHOTO • Zishaan A Latif
In the dark and in pelting rain, Girish (also in the photo on the left is the ASHA worker), and a neighbour carried Pallavi on a makeshift stretcher up the slushy Satpuda hills
PHOTO • Zishaan A Latif

இருளிலும் மழையிலும் அவசரத்துக்கு உருவாக்கிய ஸ்ட்ரெச்சரில், (இடது படத்தில் ASHA பணியாளர்) சேறும் சகதியும் நிறைந்த சத்புத மலைப் பாதைகளில் கிரிஷ்ஷும் பக்கத்து வீட்டுக்காரரும் பல்லவியை சுமந்துச் சென்றனர்

மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் அசவுகரியத்தையும் வலியையும் தினமும் அனுபவிக்கிறார் பல்லவி. “கனம் நிறைந்த பாத்திரத்தை தூக்கும்போதும் குனியும்போதும் என் பிறப்புறுப்பிலிருந்து கருப்பை நழுவி வெளியே வருகிறது,” என்கிறார் பல்லவி. 23 வயதான அவருக்கு குஷி என்ற ஒரு வயது மகள் இருக்கிறார். வீட்டிலேயே பிறந்தவர் அவர். ஹெங்க்லபாணி கிராமத்தில் இருக்கும் அடிப்படை சுகாதார பராமரிப்பு (ASHA) பணியாளர் பிரசவத்தில் உதவினார். ஆனால் இடம் மாறியிருக்கும் கருப்பைக்கு தகுந்த சிகிச்சை எடுக்காததால், குழந்தையைப் பேணுவதில் பல்லவிக்கு சிரமம் இருக்கிறது.

“குஷியை நான் குளிப்பாட்ட வேண்டும். பசியாற்ற வேண்டும். பலமுறை தூக்க வேண்டும். விளையாட வேண்டும்,” என்கிறார் பல்லவி. உடல் ரீதியான பல வேலைகள் இருப்பதால் சமயங்களின் வயிற்றில் எரிச்சல் ஏற்படுகிறது. நெஞ்சில் வலி வருகிறது. எழுவதும் அமருவதும் கடினமாக இருக்கிறது.”

வீட்டிலிருக்கும் இரண்டு மாடுகளை கிரிஷ் மேய்க்கச் சென்றதும் மலைக்கு கீழிருக்கும் ஓடையில் தினமும் தண்ணீர் எடுத்து வருவது பல்லவியின் வேலை. “இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும். எங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் ஒரே இடம் அதுதான்,” என்கிறார் அவர். ஏப்ரல்-மே மாதங்களில் அதுவும் வறண்டுவிட்டால், பல்லவியும் கிராமப்பெண்களும் இன்னும் மலைக்கு கீழ் இறங்க வேண்டும்.

தங்களுக்கு இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தில் பருவகாலங்களில் சோளம் பயிரிடுகிறார்கள். சரிவான பகுதி என்பதால் விளைச்சல் மிகக் குறைவாக இருக்கிறது என்கிறார் கிரிஷ். “நான்கு அல்லது ஐந்து குவிண்டால் (400-500 கிலோகிராம்) கிடைக்கும். அதில் 1-2 குவிண்டால்களை கிலோ 15 ரூபாய் என்கிற விலையில் டோரன்மால் மளிகைக் கடைகளில் விற்கிறேன்.” அறுவடைக்கு பிறகு கரும்புத் தோட்டங்களில் பணிபுரிய அருகே இருக்கும் குஜராத் மாநிலத்தின் நவ்சாரி மாவட்டத்துக்கு கிரிஷ் இடம்பெயர்வார்.  நாட்கூலியாக 250 ரூபாய் வருடத்தின் 150 நாட்களுக்கு கிடைத்துவிடுகிறது.

அடிக்கடி காய்ச்சல், கிறுகிறுப்பு வருகிறது. அவ்வப்போது மயங்கியும் விழுவதுண்டு. நிலத்திலும் வீட்டிலும் இருக்கும் வேலைகளில் 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜப்பி கிராமத்திலுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு நடந்து செல்ல பல்லவியிடம் சக்தி மிச்சமிருப்பதில்லை. ASHA பணியாளர் கொஞ்சம் மருந்துகள் கொடுத்ததாக சொல்கிறார். “நான் மருத்துவரிடம் செல்ல விரும்புகிறேன்… ஆனால் எப்படி முடியும்? உடலில் வலு இல்லை,” என்றும் சொல்கிறார். அத்தனை தூரத்தையும் இடம் மாறியிருக்கும் கருப்பையுடன் மலைப்பாதையில் நடந்து கடப்பது அவருக்கு இயலாத காரியம்.

'I have to bathe Khushi, feed her, lift her several times a day, play with her', says Pallavi Gavit. 'With a lot of physical activity, sometimes I have a burning sensation in my stomach, pain in the chest, and difficulty sitting and getting up'
PHOTO • Zishaan A Latif
'I have to bathe Khushi, feed her, lift her several times a day, play with her', says Pallavi Gavit. 'With a lot of physical activity, sometimes I have a burning sensation in my stomach, pain in the chest, and difficulty sitting and getting up'
PHOTO • Zishaan A Latif

குஷியை நான் குளிப்பாட்ட வேண்டும். பசியாற்ற வேண்டும். பலமுறை தூக்க வேண்டும். விளையாட வேண்டும்,” என்கிறார் பல்லவி கவிட். ’உடல் ரீதியான பல வேலைகள் இருப்பதால் சமயங்களின் வயிற்றில் எரிச்சல் ஏற்படுகிறது. நெஞ்சில் வலி வருகிறது. எழுவதும் அமருவதும் கடினமாக இருக்கிறது

டோரன்மல் கிராமப் பஞ்சாயத்தின் மக்கள்தொகை 20000. 14 கிராமங்களையும் 60 குக்கிராமங்களையும் உள்ளடக்கியது. மொத்த பேருக்கும் ஜப்பியில் ஒரு ஆரம்ப சுகாதார மையமும் ஆறு துணை மையங்களும் 30 படுக்கைகளை கொண்ட டோரன்மல் மருத்துவமனையும் இருக்கின்றன. டோர்ன்மலில் இருக்கும் மருத்துவமனையில்தான் ஆணுறை, கர்ப்பத் தடுப்பு மாத்திரை, கருத்தடை சிகிச்சை மற்றும் கர்ப்பத்தடை சாதனம் பொருத்தும் சிகிச்சை, பிரசவத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பு கிடைக்கும். குக்கிராமங்கள் அதிக தொலைவிலும் கடினமான நிலப்பரப்புகளிலும் இருப்பதால் பெரும்பாலான பெண்கள் வீட்டுப் பிரசவத்திலேயே குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றனர்.

“டோரன்மலில் கடினப் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு வாழும் பழங்குடிகள் மலைகளில் வாழ்பவர்கள். தண்ணீருக்காக ஒருநாளில் பலமுறை மலையேறி இறங்க வேண்டியிருக்கும். பிரசவகாலமும் விதிவிலக்கல்ல. குறைமாத பிரசவமும் கடினப் பிரசவங்களும் இதனால் நேர்கின்றன,” என்கிறார் ஜபியின் ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர். 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட மையத்தில் இரண்டு மருத்துவர்களும் இரண்டு செவிலியரும் ஒரு வார்டு உதவியாளரும் பணிபுரிகின்றனர். ஒரு நாளில் நான்கைந்து நோயாளிகள் வருகின்றனர். “அவர்களும் உடல்நலம் மிக மோசமாகும் நேரத்திலும் ஊர் மருத்துவரின் சிகிச்சை பலனளிக்காத போதும் மட்டுமே வருகிறார்கள்,” என்கிறார் அவர்.

ஏப்ரல் 2019லிருந்து மார்ச் 2020 வரை கருப்பை இடம் மாறிய ஐந்து நோயாளிகளை மருத்துவர் பார்த்திருக்கிறார். “அனைவருக்கும் 100 சதவிகித அறுவை சிகிச்சை மருத்துவம் தேவைப்படும். ஆகவே நந்துர்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அந்தளவுக்கு தீவிர மகப்பேறு பிரச்சினைகளை கவனிக்கும் வசதி இங்கு கிடையாது,” என்கிறார் அவர்.

அடிவயிற்றின் தசையும் தசைநாரும் வலிமை குறையும்போதும் இழுக்கப்படும்போதும் கருப்பையை தாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. கருப்பை இடமாற்றம் நிகழ்கிறது. “அடிவயிற்றில் பல தசைகளும் திசுக்களும் தசைநார்களும் கொண்டு இடம்பெற்றிக்கும் தசைப்பகுதியே கருப்பை ஆகும்,” என்கிறார் டாக்டர் கோமல் சவன். மும்பையின் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் சமூகக் கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர். “கர்ப்பம், பல குழந்தைகளை பெற்றெடுத்தது, நீண்ட நேரமெடுத்த மகப்பேறு, தவறான முறையில் மகப்பேறை கையாண்டது போன்ற காரணங்களால் கருப்பை இடம் மாறலாம்.” தீவிர நிலையில் இருப்பவர்கள் வலுவிழந்த அடிவயிற்று திசுக்களை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை கூட ஏற்படலாம். அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் வயதையும் நோயின் தீவிரத்தையும் கருத்தில் கொண்டு கருப்பை நீக்கப்படவும் செய்யலாம்.

2015ம் ஆண்டு Indian Journal of Medical Research -ல் ஒரு முக்கியமான ஆய்வு பிரசுரிக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் நாஷிக் மாவட்டத்திலுள்ள கிராமப் பெண்களிடம் 2006லிருந்து 2007ம் ஆண்டு வரை இருந்த தீவிர மகப்பேறு நோய்த்தன்மைகளை பற்றிய ஆய்வு. 136 பெண்களுக்கு தீவிர மகப்பேறு நோய்த்தன்மைகளும் பிறப்புறுப்பு செயலிழப்பும் (62 சதவிகிதம் பேருக்கு) இருப்பதாக ஆய்வு குறிப்பிட்டது. முதுமை மற்றும் உடல் பருமன் போன்றவற்றுடன், ”மகப்பேறு  நோய்களும் பிரசவங்களும் கூட ஊர் மருத்துவரால் கவனிக்கப்படுவதும் இடமாற்றத்துக்கு முக்கியமாக காரணமாக இருக்கிறது,” என அறிக்கை குறிப்பிடுகிறது.
Pallavi and Girish are agricultural labourers in Nandurbar; Pallavi's untreated uterine prolapse makes it hard for her to take care of their daughter
PHOTO • Zishaan A Latif
Pallavi and Girish are agricultural labourers in Nandurbar; Pallavi's untreated uterine prolapse makes it hard for her to take care of their daughter
PHOTO • Zishaan A Latif

பல்லவியும் கிரிஷ்ஷும் நந்துர்பரில் விவசாயக் கூலிகளாக இருக்கின்றனர். சிகிச்சை அளிக்கப்படாமல் இடம் மாறும் கருப்பை, குழந்தையை கவனித்துக் கொள்வதில் பல்லவிக்கு சிரமத்தை கொடுக்கிறது

நந்துர்பர் மருத்துவமனையில் பல்லவியின் கருப்பை இடமாற்ற சிக்கலுக்கு இலவச அறுவை சிகிச்சை கிடைக்குமென்றாலும் அவர்களிருக்கும் ஹெங்க்லபாணி கிராமத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் மருத்துவமனை இருக்கிறது. மூன்று மணி நேரத்துக்கு மலையேறி பிறகு ஒரு நான்கு மணி நேரம் பேருந்தில் பயணிக்க வேண்டும். “அமரும்போது வேறு ஏதோவொரு விஷயத்தின் மீது அமர்ந்திருப்பதை போலிருக்கிறது. வலிக்கவும் செய்கிறது,” என்கிறார் பல்லவி. “ஒரு இடத்தில் என்னால் அதிக நேரம் அமர முடியாது.” மாநில அரசுப் பேருந்து டோரன்மலில் இருந்து நண்பகல் 1 மணிக்கு ஒரே ஒரு முறை மட்டும்தான் வரும். “மருத்துவர்கள் இங்கு வர முடியாதா?” என கேட்கிறார் அவர்.

சாலை வழித் தொடர்பு இல்லாமல் டோரன்மலில் இருக்கும் நோயாளிகள், நடமாடும் மருத்துவ மையங்களை கூட அடைய முடிவதில்லை என்கிறார் மருத்துவர். தூரமாக இருக்கும் கிராமப்பகுதிகளில் மருத்துவம் வழங்குவதற்கான ஏற்பாடு, நடமாடும் மருத்துவ மையங்கள். அக்ரானி ஒன்றியத்தில் 31 கிராமங்களுக்கும் பல குக்கிராமங்களுக்கும் சாலை வசதி கிடையாது. மகாராஷ்டிரா அரசின் நவ்சஞ்சிவனி யோஜனா திட்டத்தில் உருவாக்கப்பட்ட நடமாடும் மருத்துவ மையங்கள், போக்குவரத்து இல்லாத பகுதிகளுக்கு சென்று பார்க்கவென ஒரு மருத்துவ அதிகாரியையும் ஒரு செவிலியரையும் கொண்டவை. மகாராஷ்ட்ராவின் பழங்குடி வளர்ச்சி துறையின் Annual Tribal Component Schemes என்கிற 2018-19 ஆண்டுக்கான அறிக்கையின்படி அக்ரானி தாலுகாவில் இரண்டு நடமாடும் மருத்துவ மையங்கள் இருக்கின்றன. ஆனால் அவை, பல்லவி வசிக்கும் கிராமம் போல் தூரமான பகுதிகளுக்கு செல்ல முடிவதில்லை.

ஜப்பியின் ஆரம்ப சுகாதார மையத்திலேயே, “மின்சாரம், நீர், ஊழியர்களுக்கான தங்குமிடம் என எதுவும் கிடையாது,” என்கிறார் அங்கு இருக்கும் மருத்துவர். “இது குறித்து சுகாதாரத்துறைக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கிறேன். ஒரு பிரயோஜனமும் இல்லை.” நந்துர்பரிலிருந்து ஜப்பிக்கு ஒவ்வொரு நாளும் சென்று வர சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு முடிவதில்லை. “அதனால்தான் நாங்கள் வார நாட்களில் வேலை பார்க்கிறோம். இரவு சுகாதாரத்துறை ஊழியர் வீட்டில் தங்கி விடுகிறோம். நந்துர்பரில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு வார இறுதியில்தான் செல்கிறோம்,” என்கிறார் மருத்துவர்.

இந்த நிலை, ஒவ்வொரு பகுதியிலும் பணிபுரியும் சுகாதாரத்துறை ஊழியரின் பங்கையும் முக்கியமாக்குகிறது. மருந்துகளுக்கு அவர்களிடமும் தட்டுப்பாடு இருக்கிறது. “கர்ப்பிணிப் பெண்களுக்கான இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகளும் பிரசவம் பார்ப்பதற்கான உபகரணங்களும் முகக்கவசங்களும் கையுறைகளும் கத்திரிக்கோல்களும் தொடர்ந்து கிடைப்பதில்லை,” என்கிறார் வித்யா நாயக் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). பத்து கிராமங்களில் பணிபுரியும் 10 ASHA ஊழியர்களின் பணியை மேற்பார்வையிடும் ஹெங்க்லாபாணியை சேர்ந்த தலைமை சுகாதாரத்துறை ஊழியர் அவர்.

சில ஆஷா (ASHA) ஊழியர்களுக்கு பிரசவம் பார்க்கும் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களும் கடினமான பிரசவங்களை பார்க்க முடியாது. ஒவ்வொரு மாதத்துக்கும், வீட்டிலேயே பாதுகாப்பின்றி பார்க்கப்படும் பிரசவங்களால் மூன்று குழந்தைகள் மரணங்களையும் ஒன்று அல்லது இரண்டு பிரசவ நேர மரணங்களையும் வித்யா பதிவு செய்கிறார். “எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம். பாதுகாப்பான பிரசவங்கள் பார்க்கச் செல்ல பாதுகாப்பான சாலைகள் வேண்டும்,” என்கிறார் அவர்.

“அன்றாடப் பணிகளே பெண்களுக்கு சவால் மிகுந்தவையாக இருக்கும் கடினமான பூகோளப் பகுதிகளில் பேறுகாலத்துக்கு முந்தைய பராமரிப்புக்கு, தகுதி பெற்ற மகளிர் நோய் மருத்துவர்கள் மிகவும் முக்கியம்,” என்கிறார் டாக்டர் சவான்.

With no road connectivity, patients in Toranmal have no access even to the mobile medical units that provide doorstep healthcare in remote regions
PHOTO • Zishaan A Latif
With no road connectivity, patients in Toranmal have no access even to the mobile medical units that provide doorstep healthcare in remote regions
PHOTO • Zishaan A Latif

சாலை வசதி இல்லாததால், வீட்டுக்கு வந்து மருத்துவ உதவி வழங்கும் நடமாடும் மருத்துவ மையங்களால் டோரன்மலில் இருக்கும் நோயாளிகளை அடைய முடிவதில்லை

இந்திய அரசின் கிராமப்புற சுகாதார புள்ளிவிவரங்களின் படி, 2018-19 ஆண்டில் மட்டும் மகாராஷ்டிராவின் சுகாதார மையங்களில் 1456 வல்லுநர்கள் தேவை. அறுவை சிகிச்சை நிபுணர், மகளிர் நோய் மருத்துவர், குழந்தைகள் நோய் மருத்துவர் மற்றும் பொது மருத்துவர் என ஒவ்வொரு மையத்துக்கும் நான்கு பேர் வேண்டும். ஆனால் 2019ம் ஆண்டின் மார்ச் மாதம் வரை வெறும் 485 பேர் மட்டும்தான் அவ்விடங்களை நிரப்பினர். கிட்டத்தட்ட 67 சதவிகிதமான 971 இடங்கள் இன்னும் காலியாக இருக்கின்றன.

தேசிய குடும்பங்களின் சுகாதார கணக்கெடுப்பு – 4 ( NFHS-4 , 2015-16) கொடுக்கும் தகவல் படி, நந்துர்பரின் 26.5 சதவிகித தாய்மார்கள் பேறுகாலத்துக்கு முந்தைய பராமரிப்பை முழுமையாக பெறுகின்றனர். 52.5 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கின்றனர். வீடுகளிலேயே பிரசவம் பார்த்த வெறும் 10.4 சதவிகிதம் பேர்தான் திறன் வாய்ந்த சுகாதாரத்துறை ஊழியர்களின் உதவி பெறுகின்றனர்.

பில் மற்றும் பவா ஆதிவாசி சமூகங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நந்துர்பர் மாவட்டம், மகாராஷ்டிராவின் 2012ம் ஆண்டின் மனித வளர்ச்சியில் பின் தங்கியிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு, பேறுகால சுகாதார குறைபாடு மற்றும் குழந்தைகளின் ஆரோக்கிய குறைபாடு காரணங்களாக இருக்கின்றன.

பல்லவி வீட்டிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் லெகாபானி குக்கிராமம் இருக்கிறது. இன்னொரு மலையில் இருக்கும் டோரன்மல் காட்டுக்குள் ஊர் இருக்கிறது. அங்கு இருட்டாக இருக்கும் குடிசைக்குள் சரிகா வசவே (உண்மை பெயரல்ல) புரச (Butea monosperma)  பூக்களை நீரில் போட்டு காய்ச்சிக் கொண்டிருந்தார். “என் மகளுக்கு காய்ச்சல். அவளை நான் இந்த நீரில் குளிப்பாட்டுவேன். அவளுக்கு சரியாகி விடும்,” என்கிறார் பில் சமூகத்தை சேர்ந்த 30 வயது சரிகா. ஆறு மாத கர்ப்பம் கொண்டிருக்கிறார். அடுப்புக்கு முன் அதிக நேரம் அமர்ந்திருப்பது அவருக்கு சிரமமாக இருக்கிறது. “என் கண்கள் எரிகின்றன. இந்த இடத்தில் ரொம்ப (அடிவயிற்றை சுட்டிக் காட்டுகிறார்) வலிக்கிறது. முதுகும் அதிகம் வலிக்கிறது,” என்கிறார் அவர்.

சோர்வுடனும் வலு குறைந்தும் இருக்கும் சரிகாவுக்கும் கருப்பை இடம் மாறியிருக்கிறது. ஆனாலும் அன்றாட வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் அடிவயிற்றுக்கு சிறிய அழுத்தம் கொடுக்கும்போதும் அவரின் கருப்பை இறங்கி பெண்ணுறுப்பு வழியாக விழுவது போல் நிற்கிறது.  “என்னுடைய சேலையின் முனையால் உள்ளே தள்ளுகிறேன். அது வலியை கொடுக்கிறது,” என மூச்சு வாங்கிக் கொண்டு முகத்தில் வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டும் சொல்கிறார். அடுப்பிலிருந்து புகை அடித்ததில் அவர் முகத்தை திருப்பிக் கொண்டார்.

இடம் மாறிய கருப்பையால் அவர் மூன்று வருடங்கள் பாதிப்பை அனுபவிக்கிறார். 2015ம் ஆண்டில் அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது பிரசவ வலி நள்ளிரவு 1 மணிக்கு ஏற்பட்டிருக்கிறது. அவருடைய அத்தை பிரசவம் பார்த்திருக்கிறார். அதற்கு ஆறு மணி நேரங்களுக்கு பிறகு சரிகாவின் கருப்பை பெண்ணுறுப்பிலிருந்து நழுவியிருக்கிறது. “யாரோ என்னுடலின் ஒரு பகுதியை உருவி எடுத்தது போல் உணர்ந்தேன்,” என அவர் நினைவுகூர்கிறார்.

PHOTO • Zishaan A Latif

ஆறு மாத கர்ப்பிணியான சரிகா வசவே புரசப் பூக்களை காய்ச்சிக் கொண்டிருக்கிறார் (கீழே வலது): ‘என் மகளுக்கு (ஐந்து வயது) காய்ச்சல். அவளை இதில் குளிப்பாட்டுவேன். அவள் சரியாகிவிடுவாள்

”சிகிச்சை அளிக்கப்படாத கருப்பை இடமாற்றம், சிறுநீர் தொற்று, உராய்வால் ரத்தக்கசிவு, தொற்று மற்றும் வலி போன்ற பல பிரச்சினைகளை அன்றாட வாழ்க்கையில் கொடுக்கிறது,” என்கிறார் டாக்டர் சவான். வயதாகும்போது நிலை இன்னும் மோசமாகும் என அவர் கூறுகிறார்.

இடம் மாறிய கருப்பை கொண்டிருக்கும் பெண்கள் கனமான பொருட்களை தூக்கும் வேலைகள் செய்ய வேண்டாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. நார்ச்சத்து கொண்ட உணவும் சத்து நிறைந்த உணவும் நிறைய தண்ணீரும் மலச்சிக்கலை தவிர்க்க உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு வேளை உணவும் ஒரு பானை நீரும் கிடைக்கவே சரிகா பெரும் போராட்டத்தை எதிர்கொள்கிறார். கர்ப்பமாக இருக்கிறாரோ இல்லையோ ஒவ்வொரு நாளும் எட்டு கிலோமீட்டர் அவர் நடந்து மலையிறங்கி அடிகுழாயில் தண்ணீர் பிடித்து வர வேண்டும். மீண்டும் மலை ஏற நிறைய நேரம் பிடிக்கும். மிகவும் கடினமாக இருக்கும். “தொடைகளோடு கருப்பை உராயும்போது எரிச்சல் எடுக்கிறது. சில நேரங்களில் ரத்தம் வருகிறது,” என்கிறார் அவர். வீட்டுக்கு வந்ததும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கருப்பையை உள்ளே தள்ளுகிறார்.

உடல்ரீதியான துன்பம் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான விளைவுகளும் இருக்கிறது. இடம் மாறிய கருப்பை தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும். கணவன் புறக்கணித்து சென்றுவிடுவான். சரிகாவுக்கும் அதுதான் நேர்ந்தது.

கருப்பை இடம் மாறியதும் சரிகாவின் கணவன், சஞ்சய் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) இன்னொரு திருமணம் செய்து கொண்டார். தட்கோனில் இருக்கும் ஓட்டல்களில் வேலை பார்க்கிறார். ஒரு மாதத்தில் நான்கைந்து நாட்களுக்கு வேலை இருக்கும். 300 ரூபாய் நாட்கூலி. “அவருடைய வருமானத்தை இரண்டாவது மனைவிக்கும் மகனுக்கும் செலவு செய்கிறார்,” என்கிறார் சரிகா. நிலத்தில் அவர் வேலை செய்வதில்லை. 2019ம் ஆண்டில் அவர்களின் ஒரு ஏக்கர் நிலத்தில் சரிகாவே ஒரு குவிண்டால் சோளத்தை விதைத்தார். “என்னுடைய கணவன் 50 கிலோவை அவரின் இரண்டாம் மனைவிக்கும் மகனுக்கு எடுத்துச் சென்று விட்டார். மிச்சத்தை நான் அரைத்து வைத்துக் கொண்டேன்.”

வருமானத்துக்கு வழியின்றி சரிகா ASHA ஊழியர்களையும் சில கிராமவாசிகளையும் சார்ந்திருக்கிறார். அரிசியையும் பருப்பையும் அவர்களிடம் பெற்றுக் கொள்கிறார். சில நேரங்களில் அவர் கடன் வாங்குகிறார். “ஜூன் மாதத்தில் (2019) உணவுப்பொருளும் விதைகளும் வாங்க ஒருவரிடமிருந்து நான் பெற்ற 800 ரூபாய் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

சில நேரங்களில் அவரின் கணவர் அவரை அடித்து உடலுறவுக்கு வற்புறுத்துகிறார். “என்னுடைய நிலை (இடம் மாறிய கருப்பை) அவருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டார். குடித்துவிட்டால் இங்கு வருவார். நான் வலியில் (உடலுறவின்போது) அழுவேன். பிறகு அவர் என்னை அடிப்பார்,” என்கிறார் அவர்.

With no steady source of income, Sarika often depends on the ASHA worker and some villagers to give her rice and dal
PHOTO • Zishaan A Latif
With no steady source of income, Sarika often depends on the ASHA worker and some villagers to give her rice and dal
PHOTO • Zishaan A Latif

நிலையான வருமானமின்றி சரிகா ASHA ஊழியர்களையும் கிராமவாசிகளையும் சார்ந்திருக்கிறார். அவர்களிடம் அரிசியும் பருப்பும் பெற்றுக் கொள்கிறார்

நான் அவரை சந்தித்தபோது ஒரு பானையில் சாதம் அடுப்புக்கு அருகே இருந்தது. அது மட்டும்தான் அவருக்கும் அவரின் ஐந்து வயது மகளான கருணாவுக்கும் அந்த நாளின் உணவு. “ஒரு கிலோ அரிசி மட்டும்தான் வீட்டில் இருக்கிறது,” என்கிறார் அவர். வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவருக்கான குடும்ப அட்டையில் வாங்கிய எட்டு கிலோ கோதுமை மற்றும் மூன்று கிலோ அரிசி ஆகியவற்றில் மிஞ்சியிருப்பது அது மட்டும்தான். மூன்று ஆடுகள் மட்டும்தான் அதிகப்படியான சத்துணவுக்கு அவருக்கிருக்கும் வழி. ”ஒரு கிளாஸ் பால் ஒவ்வொரு நாளும் ஆட்டிலிருந்து கிடைக்கிறது,” என்கிறார் அவர். அந்த பாலையும் மகளுக்கும் இரண்டு கிலோமீட்டர் தள்ளி தாயுடன் வசிக்கும் நான்கு வயது வளர்ப்பு மகன் சுதிருக்கும் சரி பாதியாக பிரித்துக் கொடுக்கிறார்.

டோரன்மலில் இருக்கும் மருத்துவமனை சரிகாவின் குடிசையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவு. துணை மருத்துவ மையம் ஐந்து கிலோமீட்டர் தொலைவு. செங்குத்தான பாதையில் ஏற வேண்டும். வாடகை ஜீப் எப்போதாவதுதான் வரும். வேறு வழியின்றி அவர் அந்த தூரத்துக்கு நடப்பார். “ரொம்ப தூரத்துக்கு நடக்க முடியாது. சீக்கிரமே எனக்கு மூச்சு வாங்க ஆரம்பித்துவிடும்,” என்கிறார். பேறுகாலத்துக்கு முந்தைய பராமரிப்புக்காக துணை மருத்துவ மையத்துக்கு சென்ற போது அவருக்கு அரிவாள்செல் சோகை இருப்பது கண்டறியப்பட்டது. ரத்தத்தில் இருக்கும் அணுக்களை பாதித்து ரத்தசோகை உருவாக்கும் குறைபாடு.

2016ம் ஆண்டில் கட்டப்பட்ட டோரன்மல் மருத்துவமனையில் 30 படுக்கைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் 30லிருந்து 50 புற நோயாளிகள் வருவதாக சொல்கிறார் மருத்துவ அதிகாரியாக இருக்கும் டாக்டர் சுகாஸ் பாட்டில். காய்ச்சல், சளி மற்றும் காயங்கள் போன்ற சிறு பிரச்சினைகளுக்காக வருகிறார்கள். சுற்றியிருக்கும் 25 கிராமங்களிலிருந்து மாதத்துக்கு ஒன்றிரண்டு பேர்தான் பிரசவத்துக்காக வருவார்கள். மருத்துவமனையில் இரண்டு மருத்துவ அதிகாரிகளும் ஏழு செவிலியரும் ஒரு பரிசோதனைக்க் கூடமும் (பரிசோதகர் கிடையாது) ஒரு பரிசோதனை உதவியாளரும் இருக்கிறார்கள். மகப்பேறு மற்றும் மகளிர் நோய்கள் பார்க்க மருத்துவர்கள் இல்லை. சரிகாவுக்கு இருப்பதை போன்ற தீவிர நிலைகளுக்கு சிகிச்சை கொடுக்கவென வல்லுனர் ஒருவரும் இல்லை.

“இடம் மாறிய கருப்பைக்கான சிகிச்சைக்காக யாரும் வருவதில்லை. அடிவயிற்றில் ரத்தக்கசிவு மற்றும் அரிவாள்செல் சோகை போன்ற பிரச்சினைகளுக்குதான் வருகிறார்கள். அப்படியான நோயாளிகள் வந்தாலும் சிகிச்சை கொடுப்பதற்கான வசதிகளோ நிபுணத்துவமோ எங்களிடம் இல்லை,” என்கிறார் டாக்டர் பாட்டில். 2016ம் ஆண்டிலிருந்து வேலை பார்க்கும் அவர் மருத்துவமனையின் ஊழியர் குடியிருப்பில் தங்கியிருக்கிறார்.

வசதிகளும் நிபுணத்துவமும் இருந்திருந்தாலும் இடம் மாறிய கருப்பை பற்றி மருத்துவரிடம் சரிகா சொல்லியிருக்க மாட்டார். “அவர் ஒரு ஆண் மருத்துவர். அவரிடம் போய் என் கருப்பை நழுவி விழுகிறது என எப்படி சொல்ல முடியும்?” எனக் கேட்கிறார்.

முகப்புப் படம்: பிரியங்கா பொரார் ஒரு நவீன ஊடகக் கலைஞர். தொழில்நுட்பங்களில் பல பரீட்சார்த்த முயற்சிகள் எடுத்து புது வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டுபிடிக்க முனைபவர். விளையாட்டின் வழியிலான கற்றல் முறைக்கான அனுபவங்களை வடிவமைக்கிறார். வெவ்வேறு ஊடகங்களை கையாண்டு பார்ப்பவர். பேனாவும் பேப்பரும் இருந்தால் வீட்டில் இருப்பது போல் உணர்பவர்.

புகைப்படங்கள்: சிஷான் ஏ. லத்தீஃப் மும்பையைச் சேர்ந்த ஒரு சுயாதீன புகைப்படக் கலைஞரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். அவருடைய படைப்புகள் பல கண்காட்சிகளிலும் தொகுப்புகளிலும் உலகெங்கும் பல பிரசுரங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. https://zishaanalatif.com/

இந்தியக் கிராமப்புறங்களில் இருக்கும் பதின்பருவ மற்றும் இளம்பெண்களின் நிலையை பதிவு செய்யும் PARI மற்றும் CounterMedia ட்ரஸ்ட்டின் தேசிய அளவிலான செயல்திட்டம் Population Foundation of India-வின் ஆதரவில் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைச் சூழலை அவர்களின் குரல்கள் மற்றும் அனுபவங்கள் வழியே அறிவதற்கான முன்னெடுப்பு ஆகும்.

இக்கட்டுரையை மீண்டும் பதிப்பிக்க விரும்பினால், [email protected] மற்றும் [email protected] மின்னஞ்சல்களில் தொடர்பு கொள்ளவும்.

தமிழில்: ராஜசங்கீதன்

Jyoti is a Senior Reporter at the People’s Archive of Rural India; she has previously worked with news channels like ‘Mi Marathi’ and ‘Maharashtra1’.

Other stories by Jyoti
Illustration : Priyanka Borar

Priyanka Borar is a new media artist experimenting with technology to discover new forms of meaning and expression. She likes to design experiences for learning and play. As much as she enjoys juggling with interactive media she feels at home with the traditional pen and paper.

Other stories by Priyanka Borar
Editor : Hutokshi Doctor
Series Editor : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan