லாரிகளில் ஒருவர் பயணிப்பது கிராமப்புறங்களில் சாதாரணமாக நடக்கும் விஷயம். பொருட்களை இறக்கிவிட்டு காலியாக திரும்பும் லாரிகளின் ஓட்டுநர்களுக்கு வருமானம் ஈட்டி தரும் விஷயமும் கூட. யார் வேண்டுமானாலும் அச்சேவையை பயன்படுத்த முடியும். சில நேரங்களில் வாரச் சந்தை முடிந்து வீட்டுக்கு திரும்பும் கூட்டத்துக்கு நடுவே வாகனத்தில் இடம்பிடிப்பது சிரமாமான காரியமாகவும் இருக்கும். கிராமப்புற இந்தியாவில் முதலாளி கவனிக்காத போது ஒவ்வொரு லாரி ஓட்டுநரும் ஒரு வாடகை போக்குவரத்து வழங்குபவராக இயங்குகிறார். போக்குவரத்து கிட்டாத பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வாங்கிக் கொண்டு அவர் அச்சேவையை வழங்குகிறார்.

இது ஒடிசாவின் கொராபுட்டில் இருக்கும் நெடுஞ்சாலைக்கு அருகே இருக்கும் ஒரு கிராமம். இரவு கவியத் தொடங்கியதும் மக்கள் வீட்டுக்கு செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தனர். இத்தகைய சூழல்களில் எத்தனை பேர் வாகனத்தில் ஏறுகிறார்கள் என கவனிக்க முடியாது. ஓட்டுநருக்கு மட்டும் ஓரளவுக்கு தெரியும். ஏனெனில் அவர்தான் ஒவ்வொருவரிடமிருந்தும் கட்டணம் வசூலிப்பார்.  ஆனால் அவருக்கும் உறுதியாக தெரியாது. ஏனெனில் வெவ்வேறு குழுக்களுக்கு வெவ்வேறு கட்டணங்களை அவர் வசூலிப்பார். கோழிகள் கொண்டு வருவோருக்கு ஒரு வகையிலும் ஆடுகளுடன் வருவோருக்கு ஒரு வகையிலும் தலைச்சுமைகளோடு வருவோருக்கு ஒரு வகையிலும் கட்டணம் விதிப்பார். திரும்ப வரும் வாடிக்கையாளர்களுக்கும் முதியோருக்கும் ஓரளவுக்கு கட்டணத்தை அவர் குறைக்கவும் செய்வார். பிரதான நெடுஞ்சாலையில் பரிச்சயப்பட்ட இடங்களில் பயணிகளை இறக்கி விடுவார். அங்கிருந்து அவர்கள் நடந்து சென்று இருளுக்குள் மறைந்து காடுகளுக்குள் புகுந்து வீடுகளை அடைவார்கள்.

30 கிலோமீட்டர் வரை பயணித்து பலர் சந்தைக்கு வந்திருந்தனர். அவர்களின் வீடுகள் நெடுஞ்சாலையிலிருந்து தூரத்தில் இருக்கிறது. இரண்டிலிருந்து ஐந்து ரூபாய் வரையிலான செலவில் அவர்களால் 20 கிலோமீட்டர் வரை, இடம் மற்றும் சிரமம் ஆகியவற்றுக்கேற்ப பயணிக்க முடியும். கட்டணங்கள் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் சிறிதளவு மாறுபடும். தேவை, அவசரம், பேரம் முதலிய விஷயங்களை சார்ந்து அது மாறும். இந்த பாணியில் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்த எனக்கு அவரை ஒப்புக் கொள்ளச் செய்வதில் ஒரு பிரச்சினை இருந்தது. ஓட்டுநர் அருகே இல்லாமல், பின்னால் வரும் மக்கள் கூட்டத்தினுடனோ அல்லது வாகனத்தின் மேற்புறத்தில் அமர்ந்தோ வர நான் விரும்பினேன்.

PHOTO • P. Sainath

வாகன ஓட்டுநருக்கு என்னுடைய பிடிவாதம் புரியவில்லை. “என்னிடம் இஷ்டீரியோ இருக்கு சார். ஓட்டுநர் அறையில் கேசட்டுகள் போட்டு பாட்டு கேட்க முடியும். பயணித்துக் கொண்டே நீங்கள் கேட்கலாம்,” என்றார். இசையின் சிறந்த தொகுப்பு இருந்தது. வேறு என்ன வேண்டும்? அதுபோல் பலமுறை நான் பயணித்திருக்கிறேன். மிகவும் பிடிக்கும். ஆனால் இங்கு நோக்கம் என்னவென்றால், அவரின் வாகனத்தில் வரும் கிராமவாசிகளின் அன்றைய நாள் சந்தை அனுபவம் எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்வதாக இருந்தது. எனவே நான் அவரிடம் கெஞ்சினேன். வெளிச்சம் குறைவதற்கு முன்னால் அவர்களை புகைப்படம் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். வீட்டுக்கு செல்லும் அவர்களிடம் நான் பேச வேண்டியிருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அவர் ஒப்புக் கொண்டார். ஆனாலும் ஒரு வகை ஏமாற்றம் அவரிடம் தென்பட்டது. மெட்ரோ இந்தியாவின், ‘ஜெண்டீல்’ நாகரிக உலகத்தை சேர்ந்தவன் போல் தோற்றமளிக்கும் ஒருவன் எப்படி இப்படி முட்டாளாக இருக்க முடியும் என்கிற கேள்வியும் அவர் முகத்தில் தென்பட்டது.

ஆனாலும் அவர் வாகனத்துக்கு பின் ஏற எனக்கு உதவினார். உள்ளிருந்தும் பல கைகள் என்னை பிடித்து வரவேற்றன. சந்தையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த அவர்களிடமும் அவர்கள் வளர்க்கும் ஆடு, கோழி முதலியவற்றிடமும் அன்புக்கு குறைவில்லை. அரவணைத்துக் கொண்டனர். அற்புதமான பல உரையாடல்கள் நடந்தன. எனினும் இருள் கவிவதற்கு முன் ஒன்றிரண்டு புகைப்படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இக்கட்டுரையின் சிறிய பகுதி செப்டம்பர் 22, 1995-ல் இந்து பிசினஸ் லைனில் பிரசுரிக்கப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan