"நான் அழுத்தத்தில் இருக்கிறேன். கொஞ்சம் சம்பாதிப்பதற்கும் எனது குடும்பத்தை ஒன்றாக வைத்துக் கொள்வதற்கும் ஒவ்வொரு நாளும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்." மீன் விற்க தினமும் குறைந்தது 130 கிலோமீட்டர் பயணம் செய்யும் 40 வயது செந்தில் குமாரி,  கோவிட் -19 ஊரடங்கு காலப் போராட்டங்களை விளக்குகிறார். “எனது கடன்கள் அதிகரித்து வருகின்றன. எனது மகளுக்கு இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள என்னால் ஸ்மார்ட்போன் வாங்க முடியவில்லை. பிரச்சினைகளின் சுமை அதிகமாக இருக்கிறது” என்கிறார்.

செந்தில் குமாரி வசிக்கும் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமமான வானகிரியில், பல்வேறு வயதுகளில் சுமார் 400 பெண்கள் மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 1,100 பேர் கொண்ட மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். மீன் விற்பனையின் தன்மை மாறுபடும்: சிலர் கிராமத்தின் தெருக்களில் விற்க மீன் கூடைகளை தலையில் சுமந்து செல்கிறார்கள், மற்றவர்கள் ஆட்டோக்கள், வேன்கள் அல்லது பேருந்துகள் மூலம் அருகிலுள்ள கிராமங்களுக்குச் செல்கிறார்கள். மேலும் சிலர் மற்ற மாவட்டங்களுக்கு பேருந்துகளில் சென்று அங்குள்ள சந்தைகளில் மீன் விற்கிறார்கள்.

செந்தில் குமாரியைப் போலவே, பெரும்பாலான பெண்கள் தங்கள் சம்பாத்தியத்தில்தான் குடும்பத்தை நடத்துகிறார்கள். அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், தொற்றுநோய் அவர்கள் அனைவரையும் பாதித்துவிட்டது. குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே தனியார் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் நுண்கடன் நிறுவனங்களிடம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு, அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் - கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஒரு கடனை திருப்பிச் செலுத்த, அவர்கள் வேறு இடத்தில் கடன் வாங்குகிறார்கள். மேலும் அதிக வட்டிக் கட்டுகிறார்கள். 43 வயதான மீன் விற்பனையாளரான அமுதா கூறுகையில், "சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியவில்லை. வட்டி கூடிக் கொண்டே இருக்கிறது.”

பெண் மீன் விற்பனையாளர்களின் முதலீடு மற்றும் நிதித் தேவைகள் ஆகியவற்றை அரசுக் கொள்கை பொருட்படுத்துவதில்லை. ஆண்களின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதால், மீனவர்கள் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் கூட மீன் விற்கத் தொடங்கியுள்ளனர். இதனால் மீன் விலையும், போக்குவரத்து செலவும் அதிகரித்து, வருமானம் குறைந்துள்ளது. முன்னதாக அவர்கள் நாளொன்றுக்கு 200-300 ரூபாய் வருமானம் ஈட்டினர். இப்போது நூறு ரூபாய்க்கு மேல் கிடைப்பதில்லை. சில சமயங்களில் நஷ்டம் கூட ஏற்படுகிறது.

வாழ்க்கை கடினமானது. இருப்பினும் அவர்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து இயங்குகிறார்கள். துறைமுகத்திற்குச் செல்ல சீக்கிரம் விழித்தெழுகிறார்கள். மீன் வாங்குகிறார்கள். அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள். ஆனாலும் தங்களின் திறமைக்கேற்ப மீன் விற்கிறார்கள்.

காணொளி: ‘மீன் விற்க என்னால் செல்ல முடியவில்லை’

தமிழில் : ராஜசங்கீதன்

Nitya Rao

Nitya Rao is Professor, Gender and Development, University of East Anglia, Norwich, UK. She has worked extensively as a researcher, teacher and advocate in the field of women’s rights, employment and education for over three decades.

Other stories by Nitya Rao
Alessandra Silver

Alessandra Silver is an Italian-born filmmaker based in Auroville, Puducherry, who has received several awards for her film production and photo reportage in Africa.

Other stories by Alessandra Silver
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan