பேரரச படுக்கையறைகளை  அந்த அதிர்வுகள் சென்றடைவதற்குள் காலம் கடந்திருந்தது.  உடைந்த கோட்டைகளை சரிப்படுத்துவதற்கான காலம் கடந்திருந்தது. ஆளுகைகளை, கொடிகளை உயர்த்திப்பிடிப்பதற்கான காலம் கடந்திருந்தது.

பேரரசு எங்கிலும் பள்ளங்கள் பெருமையுடன் கிடந்தன. அப்போதுதான் வெட்டப்பட்ட கோதுமை தண்டுகளை போல அந்த பள்ளங்களிலிருந்து வாசம் கிளம்பின, பட்டினியில் வாடும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது நமது பேரரசருக்கு இருந்த வெறுப்பைக் காட்டிலும் தீவிரமான வாசம். அவரது விரிந்த மார்பை விட பரந்த வாசம். அது அரண்மனையை நோக்கிச் சென்ற எல்லா சாலைகளிலும், சந்தைகளிலும், அவரது புனித கோசாலைகளின் சுவர்களிலும் வீசியது. காலம் கடந்திருந்தது.

செல்லப்பிராணிகளான அண்டங்காக்கைகளை அவிழ்த்துவிட்டு, பொது மக்கள் இடையில் அவை ஓடியும் கதறியும் சென்றபடி இந்த அதிர்வுகள் வெறும் தொல்லை என்றும் காற்றில் பறந்துவிடும் தூசு என்றும் அறிவிப்பதற்குள் காலம் கடந்திருந்தது. ஊர்வலமாக செல்லும் பாதங்களை வெறுக்கச் சொல்லி மக்களிடம் சொல்வதற்குள் காலம் கடந்திருந்தது. வெடித்திருந்த, வெயிலில் கருகியிருந்த அந்த பாதங்கள், சிம்மாசனத்தை எப்படி ஆட்டிப்பார்த்தன! அவரது பேரரச ஆட்சி இன்னும் ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் என்பதை பரப்புரை செய்வதற்கான காலம் கடந்திருந்தது. வெறும் மண்ணை, விண்ணை முட்டும் சோளக்கதிர்களாக மாற்றும் அந்த வளமான கைகள்.

ஆனால் யாருடையவை அந்த போராடும் கைகள்? அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். மூன்றில் ஒரு பகுதி மக்கள் அடிமை சங்கிலிகளை அணிந்திருந்தவர்கள். நான்கில் ஒரு பங்கு மக்கள் மற்றவர்களை விட வயதானவர்கள். சிலர் வர்ணமயமான வானவில் நிறங்களில் உடுத்தியிருந்தார்கள். சிலர், சிவப்பு வர்ணம் அணிந்திருந்தார்கள். மற்றும் சிலர் கொஞ்சம் மஞ்சளை சூடியிருந்தார்கள். மற்றவர்களோ கந்தலை உடுத்தியிருந்தார்கள். பேரரசரின் மில்லியன் டாலர் உடைகளை விட  மாண்பு வாய்ந்த கந்தல் உடைகள் அவை. ஊர்வலமாகச் சென்று கொண்டே, சிரித்துக்கொண்டே, பாடிக்கொண்டே, கொண்டாடிக்கொண்டே மரணத்தை எதிர்த்து நின்ற மாயத்தோற்றங்கள் அவை, போர் ஈட்டிகளும் துப்பாக்கிகளும் கொல்ல முயன்று தோற்ற ஏர்முனைகள் அவை.

இதயம் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் துளை மட்டும் இருந்த இடத்தை அந்த அதிர்வுகள் சென்றடைந்த போது, காலம் கடந்திருந்தது.

கவிதையை பிரதிஷ்தா பாண்டியா வாசிப்பதை கேளுங்கள்

விவசாயிகளுக்கு

1)

கந்தலாடை பொம்மை விவசாயிகள், ஏன் சிரிக்கிறீர்கள்?
“எனது ரவை பாய்ந்த கண்கள்
சரியான பதிலை சொல்லும்”

பகுஜன் விவசாயிகள், நீங்கள் ஏன் ரத்தம் சிந்துகிறீர்கள்?
“எனது தோல் பாவம்.
எனது பசி, நீதி.”

2)

கவசம் அணிந்த பெண்களே! எப்படி ஊர்வலமாகச் செல்கிறீர்கள்?
“பலகோடி பேர் பார்க்க
சூரியனுடனும் அரிவாளுடனும்”

பணமில்லாத விவசாயிகளே, எப்படி பெருமூச்சு விடுகிறீர்கள்?
“கை நிறைய கோதுமை போல
வைசாகி திருவிழா கதிர் போல”

3)

சிவப்பு, சிவப்பு விவசாயிகளே, எப்படி சுவாசிக்கிறீர்கள்?
“ஒரு புயலின் நடுவில்,
அதன் கீழிருக்கும் உலோகிரியின் பொருட்டு.”

களிமண் விவசாயிகளே, எங்கே ஓடுகிறீர்கள்?
“கடந்து செல்லும் சூரியனின் கீழ்
ஒரு பாடலை நோக்கியும் சுத்தியலை நோக்கியும்”

4)

நிலமற்ற விவசாயிகளே, எப்போது கனவு காண்கிறீர்கள்?
“உங்களது மோசமான அரசை
ஒரு மழைத்துளி எரிக்கும் போது”

வீட்டு நினைவில் வாடும் வீரர்களே, நீங்கள் எப்போது விதைக்கிறீர்கள்?
“காகங்களின் மேல் விழும்
உழுமுனைகளை செய்வது போல”

5)

ஆதிவாசி விவசாயிகளே, நீங்கள் என்ன பாடுவீர்கள்?
“கண்ணுக்கு கண், மற்றும் மன்னர் தோற்கட்டும்”

நள்ளிரவு விவசாயிகளே, நீங்கள் எதை இழுக்கிறீர்கள்?
“பேரரசுகள் வீழும்
எங்கள் அனாதை நிலங்களை”


சொற்களஞ்சியம்

உலோகிரி : பனிக்காலம் முடிவுறுவதை குறிப்பிடும் ஒரு பஞ்சாப் திருவிழா

வைசாகி : பஞ்சாபிலும், வட இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் கொண்டாடப்படும் வசந்தகால அறுவடை திருவிழா.

இந்த முயற்சிக்கு குறிப்பிடத்தக்க உழைப்பை நல்கிய ஸ்மிதா கதோருக்கு நன்றி.


தமிழில்: கவிதா முரளிதரன்

Poems and Text : Joshua Bodhinetra

Joshua Bodhinetra is the Content Manager of PARIBhasha, the Indian languages programme at People's Archive of Rural India (PARI). He has an MPhil in Comparative Literature from Jadavpur University, Kolkata and is a multilingual poet, translator, art critic and social activist.

Other stories by Joshua Bodhinetra
Paintings : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Translator : Kavitha Muralidharan

Kavitha Muralidharan is a Chennai-based independent journalist and translator. She was earlier the editor of 'India Today' (Tamil) and prior to that headed the reporting section of 'The Hindu' (Tamil). She is a PARI volunteer.

Other stories by Kavitha Muralidharan