ஒரே கும்மிருட்டாக இருந்தது; ஆனால், அவரால் சூரிய உதயத்துக்காக காத்திருக்க முடியவில்லை. அப்போது ஜாமம் 2 மணி இருக்கும். அடுத்த மூன்று மணி நேரத்தில், அவரைத் தடுத்துநிறுத்துவதற்காக அங்கு போலீசார் வந்துவிடுவார்கள். கசருப்பு தனராஜுவும் அவருடைய இரண்டு சகாக்களும் சிறுதுநேரத்தில் போலீசின் தடுப்பு வரக்கூடிய இடத்தைக் கடந்துவிட்டார்கள். சிறிது நேரத்திற்குள் அவர்கள் கடலுக்குள் போய்விட்டனர்; விடுதலை அடைந்தவர்களாக உணர்ந்தனர்.

"ஆரம்பத்தில் போக நான் ரொம்பவும் பயந்தேன்." என்ற தனராஜு, ஏப்ரல் 10 அன்று தப்பித்ததைப் பற்றிச் சொல்கிறார்.  " இருக்கிற துணிவை எல்லாம் திரட்டவேண்டியிருந்தது. பணமும் தேவைப்பட்டது. வீட்டு வாடகை தரவேண்டுமே.” என்கிற தனராஜும்(44) அவரின் சகாக்களுமாக ஒரு முடிவோடு இருந்த மீனவர்கள் - வெளிப்புற மோட்டார் கொண்ட அவரின் சிறிய படகில் கடலுக்குள் சென்றனர். பொதுமுடக்கம் காரணமாக படகுத் துறையில் மீன்பிடித்தலோ அதுசார்ந்த வேறு செயல்பாடுகளோ கூடாதென தடைசெய்யப்பட்டன. ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணியளவில், விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தின் இரண்டு வாயில்களுக்கும் போலீசார் வந்துவிடுவார்கள். இங்குள்ள சந்தையில் பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் அனுமதி இல்லை.

சூரிய உதயத்துக்கு முன்னதாகவே 6 - 7 கிகி பங்காரு தீகா (சாதா கெண்டை) மீன்களுடன்  திரும்பினார், தனராஜு. “ சிறிது நேரத்தில் நடந்துவிட்டது.” என்றார். “கடைக்குத் திரும்பிய சில நிமிடங்களில் போலீசு அங்கு வந்துவிட்டது. அவர்கள் என்னைப் பிடித்திருந்தார்கள் என்றால், அடித்திருப்பார்கள். துணிச்சலான நேரத்தில், தப்பிப்பிழைப்பதற்கு நம்மால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்தாகவேண்டும். இன்று, நான் வீட்டு வாடகை தந்துவிடுவேன். ஆனால், நாளை எதுவும் நேரலாம். எனக்கு கோவிட் -19 நோய் தொற்றி பாதிப்பு வரவில்லை. ஆனால் இது எனக்கு பண பாதிப்பு ஏற்படுத்துகிறது.” என்கிறார், தனராஜு.

செங்கல்ராவ் பேட்டாவில் உள்ள டாக்டர் என்.டி.ஆர் கடற்கரைச் சாலையின் பின்னால் ஒரு குறுகிய தெருவில், ஒரு தற்காலிக கடையில், அவர் மீன்களை விற்றார். அந்தக் கடையானது, பழைய துருப்பிடித்த ரோமா மிதிவண்டியில் ஒரு பலகையை வைத்து அமைக்கப்பட்டு இருந்தது. போலீசின் பார்வையில் படாதபடி, கமுக்கமாக அவர் மீன் விற்றார். " முதன்மைச் சாலைக்கு மிதிவண்டியைக் கொண்டுசெல்ல எனக்கு விருப்பம்தான். ஆனால் போலீசுக்கு அஞ்சி போகவில்லை." என்கிறார் தனராஜு. வழக்கமாக ஒரு கிகி மீனை ரூ. 250-க்கு விற்கும் அவரால்,  100 ரூபாய்க்குதான் விற்கமுடிந்தது.

சாதாரண சூழலில் 6 -7 கிலோ கெண்டை மீன்களை தனராஜு விற்பாரேயானால் , அவருக்கு ரூ. 1,500 முதல் ரூ. 1,750வரை கிடைக்கும். அவருடைய மிதிவண்டி மீன்கடையானது, வாங்குவோரின் கவனத்தை ஈர்க்கவில்லை. பிடித்துவந்த மீன்களை அவர் இரண்டு நாள்களில் விற்கமுடியும். அதன் மூலம் கிட்டத்தட்ட 750 ரூபாய் கிடைக்கும். இவருக்கு மீன்களை அறுத்து சுத்தம்செய்து தரும் 46 வயது பப்புதேவியும் உதவியாக இருந்தார். ஒருவருக்கு மீனை அறுத்து சுத்தம்செய்து தந்தால் அவருக்கு வாங்குவோர் 10 - 20 ரூபாய் தருவார்கள். அவரும் தனராஜுவுடன் இதைச் செய்தார். வேறென்ன, பணத்துக்காக சவாலை எதிர்கொண்டார்.

Left: Kasarapu Dhanaraju sold the fish secretly, on a 'stall' on his old rusted cycle. Right: Pappu Devi, who cleans and cuts the fish, says, 'I think I will survive [this period]'
PHOTO • Amrutha Kosuru
Left: Kasarapu Dhanaraju sold the fish secretly, on a 'stall' on his old rusted cycle. Right: Pappu Devi, who cleans and cuts the fish, says, 'I think I will survive [this period]'
PHOTO • Amrutha Kosuru

இடது: கசரப்பு தனராஜு தன் பழைய துருப்பிடித்த மிதிவண்டியில் ஒரு தற்காலிகக் கடை போட்டு கமுக்கமாக மீன் விற்றார். வலது: மீனை அறுத்து, சுத்தம்செய்துதரும் பப்பு தேவி, 'நான்  இந்த முடக்கத்தில் பிழைத்துக்கொள்வேன் என்று நினைக்கிறேன்' என்கிறார்

படகுத்துறை முழுமையாகச் செயல்படும்போது, ​​பப்புதேவி ஒரு நாளைக்கு 200-250 ரூபாய் சம்பாதிப்பார். மீனை அறுத்து சுத்தம்செய்வதுதான் அவருக்கு இருந்த ஒரே வேலை. " இப்போது, ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் என நிலைமை மோசமாகிவிட்டது. ஜூன் மாதம்வரை பிழைத்தாக வேண்டுமே! வைரசின் தாக்கத்தைப் பார்த்தால் ஜூன் மாதத்தைத் தாண்டியும் போகக்கூடும்.” என்கிறார், பப்புதேவி. சொல்லிவிட்டு, ஒரு கணம் அமைதியாகிவிட்டு, தொடர்ந்தவர், “ நான் பிழைத்துவிடுவேனென நினைக்கிறேன்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார். இரு பிள்ளைகளின் தாயான இவர், தன் இணையரை இழந்தவர். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், மென்டடா தெகுசில் உள்ள இப்பலவலாசா கிராமத்தைச் சேர்ந்தவர்.

தேவி, தன் மகள்களை மார்ச் மாதத்தில் இப்பலவாலாசாவில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். " என் பெற்றோரை கவனித்துக் கொள்ளத்தான்... என்ன செய்ய? நான் இந்த மாதம் அங்கே போகவிருந்தேன். ஆனால் அது இப்போது சாத்தியமானதாகத் தெரியவில்லை.” என்கிறார், பப்புதேவி.

2020 ஏப்ரல் 2 நிலவரப்படி, மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது என தடைவிதிக்கப்பட்டது. பொதுவாக, மீன்கள் இனப்பெருக்கக் காலமெனக் கூறப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை ஆண்டுக்கு 61 நாள் மீன்பிடித் தடை உள்ளது. அதாவது, மீன்வளத்தைப் பாதுகாக்க இந்த காலகட்டத்தில் மோட்டார் பொருத்தப்பட்ட, இயந்திரப் படகுகளின் இயக்கம் தடைசெய்யப்படும். " மார்ச் 15 அன்று மீன்பிடியை நிறுத்திவிட்டேன். ஏனென்றால், வழக்கமான விலையில் பாதியளவோ அல்லது அதற்கும் குறைவாகவோதான் கிட்டத்தட்ட பதினைந்து நாள்களுக்கு மீன்களை விற்கமுடிந்தது. மார்ச் மாதத்தில் 5,000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது." என்கிறார், அதே செங்கல்ராவ் பேட்டா பகுதியைச் சேர்ந்த மீனவர் 55 வயது வாசுபல்லி அப்பராவ். பொதுவாக, இவர் மாதத்துக்கு ரூ. 10,000 - ரூ.15,000 சம்பாதிப்பார்.

"ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் அதாவது வருடாந்திரத் தடை தொடங்குவதற்கு முன்னதாக, நாங்கள் அதிக இலாபம் ஈட்டுவோம். ஏனெனில், அப்போது நிறைய பேர் மீன் வாங்குவார்கள். கடந்த ஆண்டு இனப்பெருக்கக் காலத்துக்கு முன்னர் 10-15 நாள்களில் 15,000 ரூபாய் சம்பாதித்தேன். ”என்று கூறுகிறார், அப்பாராவ், உற்சாகத்துடன்.

Left: The Fishing Harbour in Visakhapatnam (file photo). As of April 2, 2020, fishermen were officially not allowed to venture out to sea. Right: The police has been guarding the entrance to the jetty and fish market during the lockdown
PHOTO • Amrutha Kosuru
Left: The Fishing Harbour in Visakhapatnam (file photo). As of April 2, 2020, fishermen were officially not allowed to venture out to sea. Right: The police has been guarding the entrance to the jetty and fish market during the lockdown
PHOTO • Amrutha Kosuru

இடது: விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகம் (கோப்புப் படம்). ஏப்ரல் 2, 2020 நிலவரப்படி, மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. வலது: முடக்கத்தின்போது படகுத்துறை மற்றும் மீன் சந்தைக்கான நுழைவாயில்களை போலீசார் காவல்காத்துவருகின்றனர்

இந்த ஆண்டு, மார்ச் முதல் வாரத்தில், மீன்களின் விலை ஒரேயடியாகக் குறைந்துவிட்டது.  வஞ்சரம் மற்றும் வவ்வால் மீன்கள் வழக்கமாக கிலோவுக்கு ரூ.1,000-க்குப் போகும். இப்போதோ, ரூ. 400 - ரூ. 500 ஆகிவிட்டது. இதற்குக் காரணம், கொரோனா வைரசால் ஏற்படுத்தப்பட்ட பீதிதான் என்பது அப்பாராவின் கருத்து. " ஒரு ஆள் என்னிடம் வந்து, மீன்பிடிப்பதை நிறுத்தவேண்டும்; ஏனென்றால் சீனாவிலிருந்து மீன்கள் வைரசைக் கொண்டுவந்துவிடும் என்று சொன்னார்.”என்று எள்ளலுடன் சொன்னார், அப்பாராவ் . “நான் படித்தவன் அல்ல; ஆனால், இது உண்மையாக இருக்குமென நான் நினைக்கவில்லை." என்கிறார் அழுத்தமாக.

அரசாங்கம் அறிவித்த ஒருவருக்கு 5 கிகி அரிசி உள்பட்ட இலவச ரேசன் பொருள்களை வாங்கியிருந்தாலும், அப்பாராவுக்கு கஷ்டகாலமாகத்தான் இருக்கிறது. " எந்த ஆண்டிலும் இனப்பெருக்கக் காலம் அதிக கஷ்டமான காலம். ஆனால், அதற்கு சற்று முன்னைய காலத்தில் கொஞ்சம் இலாபம் எங்களுக்கு கிடைத்துவந்தது. இந்த முறை அப்படியாக இல்லை. எங்களுக்கு வருவாயே இல்லை, இலாபமும் இல்லை.” என்கிறார் அப்பாராவ்.

ஏப்ரல் 12 அன்று மீனவர்களுக்கு மட்டும் மூன்று நாள்கள் கடலுக்குள் செல்லும்வகையில் முடக்கத்தைத் தளர்த்தியது, மாநில அரசு. எப்படி இருந்தாலும் 72 மணி நேரம் முடிவடைந்ததும் 15ம் தேதி முதல் இனப்பெருக்கக் காலத் தடை தொடங்கிவிடும். அதற்கு முந்தைய இந்த மூன்று நாள் அனுமதியானது, மீனவர்களுக்கு ஒரு நிவாரணமாக அமைந்தது. ஆனால், “இது மிகவும் குறைவான நேரமே” என்கிற அப்பாராவ், ”முடக்கத்தால் வாடிக்கையாளர்களும் குறைந்துபோய் இருப்பார்கள்.” என அதிருப்தியோடு சொல்கிறார்.

செங்கல்ராவ் பேட்டாவில் உள்ள ஒரு குறுகிய தெருவானது, சிந்தபல்லி தத்தாராவுக்கும் பூர்வீகம் ஆகும். இங்கு தீப்பெட்டிகளை மாறிமாறி சேர்த்து வைத்ததைப் போல இருக்கும் குடியிருப்புகளில் ஒன்றுதான், அவருடைய குடியிருப்பு ஆகும். அவற்றில் ஒரு குறுகிய படிக்கட்டுவழியாகச் சென்றால் மங்கலான வெளிச்சம் உள்ள அவரின் தங்குமிடத்தை அடையலாம். 48 வயதான மீனவர் தத்தராவ், அதிகாலையில் எழுந்து, எளிதாகக் கடற்கரையைப்  பார்க்கக்கூடியவகையில் உள்ள அருகிலுள்ள இடத்துக்கு நடந்துசெல்கிறார். பப்புதேவியைப் போலவே, இவரும் முடக்கத்தின்போது தன்னால் செய்யமுடிந்த அளவுக்கு வேலைகளில் ஈடுபட்டார்; இவரும் விஜயநகரம் மாவட்டம், இப்பலவாலாசாவைச் சேர்ந்தவர்தான்.

Left: The three-day relaxation in the lockdown 'is too little time', says Vasupalle Apparao. Right: Trying to sell prawns amid the lockdown
PHOTO • Madhu Narava
Left: The three-day relaxation in the lockdown 'is too little time', says Vasupalle Apparao. Right: Trying to sell prawns amid the lockdown
PHOTO • Madhu Narava

இடது: முடக்கத்தில் மூன்று நாள் தளர்வு 'மிகக் குறைவான காலம்' என்கிறார் வசுபல்லி அப்பாராவ். வலது: முடக்கத்துக்கு இடையே இறால் விற்பனை முயற்சி

“கடலுக்குள் போகமுடியவில்லை; படகுத்துறைக்குப் போகமுடியவில்லை. மீன்களும் இல்லை.”என்று சோகத்துடன் சிரிக்கிறார். மீன்கள் மூலம் வந்த வருமானத்தையும் மனிதர் இழந்துநிற்கிறார். கடைசியாக மார்ச் 26 அன்று இவர் கடலுக்குச் சென்றிருந்தார். .

"மீன்களை பனிக்கட்டியில் பதப்படுத்தி வைத்திருந்தாலும் அந்த வாரத்தில் நிறைய மீன்கள் மீந்துபோயின." என்று தத்தராவ் கூறுகிறார். " அப்படிச் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. நாங்கள் நல்ல மீன்களைச் சாப்பிட்டோம்." என்கிறார், அவரின் இணையர் சத்யா.

வீட்டை நிர்வகித்துவரும் சத்யா, 42, தத்தராவ் பிடித்துவரும் மீன்களை விற்கவும் உதவுகிறார். பொதுமுடக்கத்திலிருந்து வீடு களைகட்டியபடி இருக்கிறது.“ பொதுவாக, நான் தனியாக இருப்பேன். என் மகனும் என் கணவரும் இப்போது வீட்டில் இருக்கிறார்கள். மதிய உணவோ இரவு உணவோ நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. பணப் பிரச்னை இருந்தாலும், எங்களுக்குள் ஒருவருக்கொருவர் நேரத்தைச் செலவிடுவது பிடித்திருக்கிறது." என்பவரின் முகம் மகிழ்ச்சியுடன் மலர்கிறது.

தத்தாராவைப் பொறுத்தவரை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படகு வாங்குவதற்காக அவர் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்பதிலேயே அவரின் மனம் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் சுறாவிடம் சிக்குவதைப் போல கடனுக்குள் மாட்டிக்கொள்ளக்கூடும் என அவர் நினைக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் எப்படியாவது கடனை அடைக்க முயற்சிக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம். "மூன்று நாள்கள் மீன்பிடி அனுமதியால் எந்த மாறுபாடும் இல்லை. பிடித்த மீன்களுக்கான விலை இப்போது மிகவும் குறைவாகிவிட்டது. மீனைப் பிடிப்பதைவிட அதை நல்ல விலைக்கு விற்பதுதான் கடினம்." என்று அவர் கூறுகிறார்.

“என் மகனைப் பற்றியும் கவலையாக இருக்கிறது. அவனுக்கு போன மாதம் வேலை போய்விட்டது. ”என்கிறார், தத்தாராவ். அவரின் மகனான 21 வயது சிந்தபல்லி தருண், பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் முடியும்வரை ஒரு தனியார் நிறுவனத்தில் பற்றவைப்பாளராகப் பணியாற்றினார். " நான் வேலை தேடிக் கொண்டிருந்தேன். அதற்குள், இந்த கொரோனா வைரஸ்..." எனப் பெருமூச்சு விட்டார், தருண்.

Left: Chinthapalle Thatharao, Tarun and Sathya (l-r) at their home in Chengal Rao Peta. Right: Chinthapalle Thatharao and Kurmana Apparao (l-r)
PHOTO • Amrutha Kosuru
Left: Chinthapalle Thatharao, Tarun and Sathya (l-r) at their home in Chengal Rao Peta. Right: Chinthapalle Thatharao and Kurmana Apparao (l-r)
PHOTO • Amrutha Kosuru

இடது: செங்கல் ராவ் பெட்டாவில் உள்ள தங்கள் வீட்டில் சிந்தபல்லி தத்தாராவ், தருண் மற்றும் சத்யா (இடமிருந்து வலம்). வலது: சிந்தபல்லி தத்தாராவ் மற்றும் வசுபல்லி அப்பராவ் (இடமிருந்து வலம்)

"நாங்கள் குடிசைவாசிகள். எங்களுக்கு தனிநபர் இடைவெளி சாத்தியமில்லை. இந்தப் பகுதியில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று என சோதனை முடிவு வரவில்லை. ஆனால் கடவுள் தடுத்தால் - சிலர் ஏதாவது செய்துவிட்டால், எங்களைப் பாதுகாப்பவர்கள் யாரும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.” என்கிறார் தத்தாராவ். " எந்த முகமூடியும் கைசுத்திகரிப்பானும் எங்களைக் காப்பாற்றிவிடமுடியாது." என்கிற அவருக்கு, அறுவைசிகிச்சைக்கான முகக்கவசம் இல்லை. அதற்குப் பதிலாக ஒரு கைக்குட்டையை முகத்தில் கட்டிக்கொண்டிருக்கிறார். சத்யா தன் சேலைத் தலைப்பால் முகத்தை மறைத்துக்கொள்கிறார்.

"மேற்கொண்டும் எங்களுக்கு சாதகம் இருப்பதாகத் தெரியவில்லை" என்கிறார், தத்தாராவ் செயற்கைப் புன்னகையுடன். " என்னையோ என் குடும்பத்தினரையோ வைரஸ் தொற்றுமானால் சிகிச்சைக்கான பணம் எங்களிடம் இல்லை." என்றும் அவர் கூறுகிறார். ”எங்களில் யாருக்கும் மருத்துவக் காப்பீடோ சேமிப்போ இல்லை. வாங்கிய கடன்தான் இருக்கிறது, திருப்பிச் செலுத்தல்; பசி இருக்கிறது, பொறுத்துக்கொள்ள!” என்கிறார், சத்யா.

விசாகப்பட்டினத்தின் மீன்பிடிச் சமூகத்தில் தத்தாராவ், சத்யா,  பப்புதேவி ஆகியோர் வேறு இடங்களிலிருந்து இங்கு குடிபெயர்ந்தவர்கள். முந்தைய ஆண்டுகளில் இனப்பெருக்கக் காலத்தின் இரண்டு மாதங்களில், அரிதாகத்தான் அவர்கள் தங்கள் ஊர்களுக்குப் போய்வருவார்கள். இப்போது, அவர்களுக்கு அந்த வாய்ப்புமே முற்றிலும் இல்லை.

“முன்னதாக, அந்த இரண்டு மாதங்களுக்கான வாடகையை நாங்கள் தரவில்லை. அதைத் தந்தாக வேண்டும். இனப்பெருக்கக் காலத்தில், மற்றவர்களின் தோட்டங்களில் சிறுசிறு வேலைகளுக்காக ஊருக்குப் போய்வருவோம். இதனால் எங்களுக்கு ஒரு நாளைக்கு 50 ரூபாய் கிடைக்கும்.” என்கிறார் தத்தராவ். பொதுவாக, பயிர்கள், தோட்ட விளைபொருள்கள் ஆகியவற்றை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதுதான் வேலையாக இருக்கும்.

"சில நேரங்களில் வேலையைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறேன்." எனச் சிரிக்கும் அவர், “மீனவர்களுக்கு வேறு எந்த தொழிலோ வியாபாரமோ தெரியாது. இப்போதைக்கு, ​​மீன் பெருக்கக் காலத்துக்குப் பிறகு இந்த வைரஸ் இருக்காது” என நம்புகிறார்.

புகைப்படங்களுக்கு, பிரஜசக்தி விசாகப்பட்டினம், செய்திக்குழுப் பொறுப்பாளர் மது நாரவாவுக்கு நன்றி.

தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்

Amrutha Kosuru

Amrutha Kosuru is a 2022 PARI Fellow. She is a graduate of the Asian College of Journalism and lives in Visakhapatnam.

Other stories by Amrutha Kosuru
Translator : R. R. Thamizhkanal

R. R. Thamizhkanal is a Chennai-based independent journalist and a translator focussing on issues related to public policies.

Other stories by R. R. Thamizhkanal