அவரது பிரசவ வலி துவங்கியவுடன், 23 வயதான ரனோ சிங், அவரது கணவர் மற்றும் மாமியாருடன் மலையோரத்தில் உள்ள அவர்களின் சிறிய வீட்டிற்கு அவசர அவசரமாகச் சென்றனர். அது அதிகாலை 5 மணி, இருள் சூழ்ந்திருந்தது. அவர்களுக்கு முன்னால் கடக்க வேண்டிய 1.5 கிலோ மீட்டர் மலை இருந்தது. அது அவர்களை முக்கிய சாலைக்கு அழைத்துச்செல்லும். அங்கிருந்து அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த வண்டி காத்திருக்கும், அது அவர்களை தோராயமாக அவர்களது கிராமமான சிவாலியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்.
அவர்கள் டோலி ஏற்பாடு செய்ய முயற்சி செய்தார்கள். டோலி என்பது கர்ப்பிணி பெண்களை சுமந்து செல்லும் பல்லக்கு. அதில் பெண்களை வைத்து 4 மூலையையும் 4 பேர் சுமந்து செல்வார்கள். அவர்கள் முக்கிய சாலையில் பெண்களை இறக்கிவிடுவார்கள். எப்போதும் அங்கு காத்திருக்கும் வாகனம் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும். அது அதிகாலை நேரம் என்பதால் அவர்களுக்கு டோலி கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் நடக்கத்துவங்கிவிட்டார்கள்.
ரனோவால் பாதி தூரம் மட்டுமே ஏற முடிந்தது. “வலியால் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில், நாங்கள் பாதி தூரம் மட்டுமே கடந்திருந்தோம். அப்போதே நான் நடக்காமல் சாலையில் அமர்ந்துவிட்டேன். எனது கணவர் எனது பிரச்னையை உணர்ந்து, அருகில் இருந்த வீட்டிற்கு ஓடிச்சென்றார். அவர்கள் எங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள்தான், அந்த வீட்டிலிருந்த அத்தை 10 நிமிடத்தில் போர்வை மற்றும் தண்ணீருடன் வந்தார். அவர் மற்றும் எனது மாமியாரின் உதவியுடன், நான் பிரசவித்தேன். (ரனோவின் கணவருக்கு 34 வயதாகிறது. அவர் நியாயவிலைக்கடையில் உதவியாளராக உள்ளார். அவரின் மாத வருமானம் ரூ.8 ஆயிரம் ஆகும். அதை வைத்து அவர்களின் 3 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை கொண்ட குடும்ப செலவுகளை கவனித்துக்கொள்கின்றனர். அவரது கணவர் பெயரை குறிப்பிட ரனோ விரும்பவில்லை).
“எனது மகன் (ஜகத்), நாங்கள் முக்கிய சாலையை கடந்து சென்றுகொண்டிருக்கும் வழியிலேயே இந்த காட்டில் பிறந்தான்“ என்று பயமுறுத்தும் வகையில், மரங்கள் சூழ்ந்த குறுகலான மலைப்பாதையில் நடந்த, அவரது முதல் குழந்தை பிறப்பை நினைவுகூர்ந்து தொடர்ந்து பேசுகிறார். “இதுபோன்ற ஒரு குழந்தைபிறப்பை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது நினைத்தாலும், மயிர் கூச்செரியச்செய்யும் ஒன்றாக அது உள்ளது. ஆனால், எனது குழந்தை பாதுகாப்பாக வெளியே வந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது மதிப்பு மிக்க ஒன்று“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலை, ஜகத் பிறந்த உடனே ரனோ அவரது வீட்டிற்கு நடந்து திரும்பிச்சென்றுவிட்டார். அவரது மாமியார் 58 வயதான பிரதிமா சிங் குழந்தையை தூக்கிக்கொண்டார்.










