“நாங்கள் டெல்லி சென்று வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக அரசாங்கம் கூறிய நிலையில், இதுவரை எங்கள் கோரிக்கைகள் குறித்து எங்களிடம் பேச்சுவார்த்தை நிகழ்த்த யாரும் அழைக்கவில்லை,”என்று பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதான சரஞ்சித் கவுர் கூறுகிறார். அவர், தன் குடும்பத்தாருடன், தங்களின் இரண்டு ஏக்கர் நிலத்தில் கோதுமை, நெல் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக சில காய்கறிகளை பயிரிடுபவர். மேலும் கூறுகையில், "நாங்கள் அனைத்து விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் போராடுகிறோம்," என்கிறார்.
சிரஞ்சித், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ஷம்பு எல்லையில், தனது அண்டை வீட்டாரும் நண்பருமான குர்மீத் கவுருடன் அமர்ந்துள்ளார். சுட்டெரிக்கும் மதிய வெயிலையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. “அவர்கள் [அரசு] நாங்கள் டெல்லிக்கு செல்வதைத் தடுக்கின்றனர்,” என்கிறார் குர்மீத். ஹரியானா-பஞ்சாப் எல்லைகளிலும், பின்னர் டெல்லி-ஹரியானா எல்லைகளிலும், சாலைகளில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சுவர்கள், இரும்பு ஆணிகள் மற்றும் முள்வேலிகள் ஆகியவற்றைதான் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். மேலும் படிக்க: ‘ஷம்பு எல்லையில் சிறைபட்டதாக உணர்கிறேன்’
சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (MSP) உத்தரவாதம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தல், லக்கிம்பூர்-கேரி படுகொலைக்கான குற்றவாளிகளைக் கைது செய்தல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் மற்றும் 2020-2021 போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு என பல கோரிக்கைகளுடன் குழுமியிருக்கும் விவசாயிகள், ஒன்றிய அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறுகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தலைநகருக்கு அமைதிப் பேரணியைத் தொடங்கிய விவசாயிகளை, பிப்ரவரி 13 அன்று, கண்ணீர் புகை குண்டு, தண்ணீர் பீரங்கி, பெல்லட் துப்பாக்கிகளின் ரப்பர் தோட்டாக்கள் போன்றவற்றைக் கொண்டு ஹரியானா காவல்துறை தடுத்து நிறுத்தியது.
ஹரியானா மற்றும் பஞ்சாப் இடையேயான ஷம்பு எல்லையில் போராடுபவர்களில் சுரிந்தர் கவுரின் மகனும் ஒருவர். “ சாடே டே மொபைல், டெலிவிஷன் பந்த் ஹி நஹி ஹோந்தே. ஏசி தேக்தே ஹை நா சாரா தின் கோலே வஜ்தே, தடோ மன் விச் ஹவுல் ஜெயா பேண்ந்தா ஹை கி சாடே பச்சே தேய் வஜே நா. [நாள் முழுவதும் மொபைல் ஃபோன்கள் மற்றும் தொலைக்காட்சிகளை பார்த்த வண்ணம் உள்ளோம். கண்ணீர் புகை குண்டுகளும் தொடர்ந்து எறியப்படுவதால், எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்]," என்று அவர் கூறுகிறார்.
ஹரியானா-பஞ்சாபின் மற்றொரு எல்லையான கானவுரியில், பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இறந்த, 22 வயதான சுப்கரன் சிங்கின் நினைவுப் பேரணியில் பங்கேற்க, பிப்ரவரி 24, 2024 அன்று காலை, கோஜே மஜ்ரா கிராமத்தைச் சார்ந்த சுரிந்தர் கவுர் வந்திருந்தார்.
"நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக ( ஹக் ) போராடுகிறோம், எங்கள் உரிமைகள் நிறைவேற்றப்படும் வரை ஓய மாட்டோம்," என்று உறுதியேற்கும் 64 வயதான அவர், தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வந்துள்ளார்.
சுரிந்தர் கவுரின் ஆறு பேர் கொண்ட குடும்பம், கோதுமை மற்றும் நெல் பயிரிடும், ஃபதேகர் சாஹிப் மாவட்டத்தின் இரண்டு ஏக்கர் நிலத்தை மட்டுமே நம்பியுள்ளனர். ஐந்து பயிர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்தால் போதாது என்று அவர் கூறுகிறார். " மிட்டி தே பாவ் லாந்தே ஹை சடி ஃபசல் [அவர்கள் எங்கள் பயிர்களை அற்ப விலைக்கு வாங்குகிறார்கள்]," என்று அவர் தனது வயல்களிலும், அதைச் சுற்றியுள்ள வயல்களில் இருந்தும் விற்கப்படும், கடுகு போன்ற மற்ற பயிர்களைக் குறிப்பிடுகிறார்.
"எங்கள் போராட்டங்கள் அமைதியான முறையில் இருந்தபோதும், காவல்துறை ஏன் வன்முறையைக் கையாளுகின்றனர்?" என ஆரம்பத்திலிருந்து போராடும் தன் மகன்கள் குறித்த கவலையோடு கேட்கிறார், தேவிந்தர் கவுர். பஞ்சாபின் சாஹிப்சாதா அஜித் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள லந்த்ரான் கிராமத்தில் வசிக்கும் தேவிந்தர் கவுரும், தனது மருமகள்கள் மற்றும் 2, 7 மற்றும் 11 வயது பேரக்குழந்தைகள் என குடும்பத்துடன் வந்துள்ளார்.
“கோதுமை மற்றும் நெல் ஆகிய இரண்டு பயிர்களுக்கு மட்டுமே அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார விலையை வழங்குகிறது. மற்றபடி பிற பயிர்கள் நடும் நிலைக்கு நகரச் சொல்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் எவ்வாறு வேறு பயிருக்கு முயற்சிக்க முடியும்?” என கேட்கிறார் தேவிந்தர். "2022-2023 ஆம் ஆண்டுக்கான இந்திய உணவுக் கழகப் பரிந்துரைப்படி, ஒரு குவிண்டால் மக்காச்சோளத்தின் குறைந்தபட்ச ஆதார விலை, ரூ.1,962 ஆகும். ஆனால், நாங்கள் பயிரிடும் மக்காச்சோளத்தின் ஒரு குவிண்டால் ரூ.800 முதல் 900 ரூபாய்க்கு மட்டுமே வாங்கப்படுகிறது.”
தடுப்புச்சுவர்களிலிருந்து கிட்டத்தட்ட 200 மீட்டர் தொலைவில், தள்ளுவண்டியில் தற்காலிகமாக கட்டப்பட்ட மேடை மீதிருந்து உரையாற்றும் விவசாயத் தலைவர்கள், அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கின்றனர். மக்கள், நெடுஞ்சாலையில் விரிப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள். நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கு நிறுத்தி வைக்கப்படுள்ள ஆயிரக்கணக்கான டிராக்டர் தள்ளுவண்டிகள் பஞ்சாப் வரை நீளுகின்றன.
பஞ்சாபின் ராஜ்புராவைச் சேர்ந்த 44 வயதான விவசாயி, பரம்ப்ரீத் கவுர், பிப்ரவரி 24 முதல் ஷம்புவில்தான் இருக்கிறார். அமிர்தசரஸ் மற்றும் பதான்கோட் கிராமங்களில் இருந்து வந்துள்ள டிராக்டர் தள்ளுவண்டிகள் ஒவ்வொன்றிலும் நான்கு முதல் ஐந்து பெண்கள் வரை உள்ளனர். அவர்கள் நாள் முழுவதும் தங்கி செல்கின்றனர். மறுநாள், அடுத்த பெண்கள் குழு அங்கு வருகிறார்கள். போராட்டம் நடத்தும் இடத்தில் கழிப்பறை வசதி இல்லாததால், இரவு தங்கியிருந்து போராட முடியவில்லை எனக் கூறுகின்றனர். "குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் கண்டிப்பாக போராட்டதிற்கு ஆதரவளிக்க வர வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்தேன்," என்கிறார் பரம்ப்ரீத். அவரது 21 வயது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தானே தனது உறவினர்களுடன் வந்துள்ளார். அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான, 20 ஏக்கர் நிலத்தில் கோதுமை மற்றும் நெல் பயிரிட்டு வந்த இவர்கள், 2021-ல் அவரது கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பின், நிலத்தில் இருந்து எதுவும் சம்பாதிக்க முடிவதில்லை.
"அருகில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் ரசாயனக் கழிவுகளால் நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளதால், நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யவும் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை," என்று அவர் மேலும் கூறுகிறார்.
பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள பதேஹ்ரி கிராமத்தில், அமந்தீப் கவுர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 21 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவர்கள் பிரதானமாக அங்கு கோதுமை மற்றும் நெல் சாகுபடி செய்கிறார்கள். "பயிர்கள் எங்கள் வயல்களில் இருக்கும்போது அவற்றின் மதிப்பிற்கிணங்க பார்க்கப்படுவதில்லை. ஆனால், அவை எங்களிடம் இருந்து வாங்கப்பட்ட பிறகு, சந்தையில் இரண்டு மடங்கு விலைக்கு விற்கப்படுகின்றன.”
போராட்டம் குறித்து அவர் கூறுகையில், “போராளிகள் ஆயுதம் ஏதும் ஏந்தாமல் போராடினாலும், அரசாங்கம் தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. இத்தகைய இந்தியாவில் இருக்க அவசியம் என்ன இருக்கிறது. எனவே, இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இங்கு அதிக வேலை வாய்ப்புகள் இல்லை. இருக்கும் உரிமைகளை கோரும்போதும், இத்தகைய நடத்தைகளைதான் நாங்கள் சந்திக்கிறோம்."
தமிழில்: அஹமத் ஷ்யாம்