ஜாகீர் உசேனும், மகேஷ் குமார் சவுத்ரியும் பால்யக்கால நண்பர்கள். நாற்பது வயதிலும் அவர்கள் நெருக்கமாக உள்ளனர். ஜாகீர், அஜ்னா கிராமத்தில் வசிக்கிறார், மற்றும் பாகூரில் கட்டுமான ஒப்பந்ததாரராக பணிபுரிகிறார். மகேஷ், அதே நகரத்தில் ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார்.
“பகூர் [மாவட்டம்] மிகவும் அமைதியான இடம். இங்கு வாழும் மக்கள் இடையே நல்லிணக்கம் நிலவுகிறது,’’ என்கிறார் மகேஷ்.
"ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்ற வெளியாட்கள், தங்கள் வார்த்தைகளால் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள்," என்று ஜாகிர், தனது நண்பர் அருகில் அமர்ந்து கூறுகிறார்.
சந்தால் பர்கானாவின் ஒரு பகுதியான பாகூர், ஜார்க்கண்டின் கிழக்கு எல்லையில் உள்ளது. இவர்களுக்கு நவம்பர் 20, 2024 அன்று மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 81 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான கூட்டணி, பாஜகவை வீழ்த்தியது.
மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில், பாஜக வாக்காளர்களை கவருவதற்காக, அசாமின் முதலமைச்சரை அனுப்பியுள்ளது. பாஜக தலைவர்கள், முஸ்லீம் சமூகங்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டி, அவர்களை ‘வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள்’ என்று முத்திரை குத்தியுள்ளனர் பாஜக தலைவர்கள்.
“எனக்கு பக்கத்து வீட்டில் இந்துக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் என் வீட்டிற்கு வருகிறார்கள், நான் அவர்கள் வீட்டிற்குச் செல்கிறேன்," என்று கூறும் ஜாகீர், "தேர்தலின் போது மட்டும் தான், இவர்கள் இந்து-முஸ்லீம் பிரச்சினையை தூண்டுகிறார்கள். வேறு எப்படி அவர்கள் ஜெயிக்க முடியும்?”
2024 செப்டம்பரில் ஜாம்ஷத்பூரில் நடந்த பேரணியில், பிரதமர் நரேந்திர மோடி ஊடுருவல் பிரச்சினைகளுக்கு அரசியல் முக்கியத்துவம் கொடுத்தார். “சந்தால் பர்கானா [பகுதியில்], ஆதிவாசி மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஊடுருவல்காரர்கள், பஞ்சாயத்துகளில் பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர்,” என்று கூட்டத்தினரிடம் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும், தத்தம் உரைகளில், இதேபோல் பேசினர். பாஜகவின் தேர்தல் அறிக்கை , “ஜார்க்கண்டில் வங்கதேசத்தினரின் ஊடுருவலைத் தடுக்கவும், பழங்குடியின சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்,” என்று கூறுகிறது.
சமூக ஆர்வலர் அசோக் வர்மா, இந்த விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக பாஜக பயன்படுத்துவதாகக் சாடுகிறார். “இது வெறும் கதை. சந்தால் பர்கானாவில் வங்க தேசத்தினரின் ஊடுருவல் பற்றிய எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று அவர் கூறுகிறார். சோட்டா நாக்பூர் மற்றும் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டங்கள் , ஆதிவாசிகள் தங்கள் நிலத்தை விற்பதைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும் நில விற்பனையில் உள்ளூர்வாசிகள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர், வங்கதேசத்தினர் அல்ல என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
வங்க தேசத்தினரின் ஊடுருவல், ஜார்க்கண்டிலுள்ள சந்தால் பர்கானா பகுதியின் 'மக்கள்தொகை விவரங்களை' மாற்றுவதாக, பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் (NCST) சமீபத்திய அறிக்கையை பாஜக அரசியல்வாதிகள் மேற்கோள் காட்டுகின்றனர். NCST, உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தது, பின்னர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் பொது மக்களுக்கு பகிரப்படவில்லை.
அசோக் வர்மா, NCST-ஐ விசாரிக்கும், ஒரு சுயாதீன உண்மை-கண்டறியும் குழுவில் இருந்தார். இந்த தகவல்கள் ஆதாரமற்றவை என்கிறார். வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் அதிக இறப்பு விகிதங்கள் காரணமாக ஆதிவாசிகள் வெளியேறுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
பிரிவனையை ஏற்படுத்தும் முனைப்பில் ஊடகங்கள் செயல்படுகிறது. "அதை [டிவியை] அணைத்து விட்டாலே, நல்லிணக்கம் மீண்டும் திரும்பிவிடும். செய்தித்தாள்களை, பெரும்பாலும் படித்தவர்களே படிக்கிறார்கள். ஆனால் டிவியை அனைவரும் பார்க்கிறார்கள், ”என்று ஜாகிர் மேலும் கூறுகிறார்.
ஜாகீர் கூறுகையில், “இந்தத் தேர்தலில் பணவீக்கம்தான் முக்கியப் பிரச்சனையாக இருக்க வேண்டும். ஆட்டா [கோதுமை மாவு], சாவல் [அரிசி], டால் [பருப்பு], தேல் [எண்ணெய்]... அனைத்தின் விலையும் உயர்ந்துவிட்டது.”
ஜார்க்கண்ட் ஜனாதிகர் மகாசபாவின் உறுப்பினரான அசோக் கூறுகையில், “சந்தால் பர்கானாவில், முஸ்லிம்களும் ஆதிவாசிகளும் ஒரே மாதிரியான கலாச்சாரங்களையும், உணவுப் பழக்கங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள், பண்டிகைகளையும் ஒன்றாகக் கொண்டாடுகின்றனர். நீங்கள் உள்ளூர் ஆதிவாசி ஹாட் [சந்தைகளுக்கு] சென்றால், அங்கு இரு சமூகத்தினரையும் காணலாம்.
*****
முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை தினமான, ஜூன் 17, 2024 அன்று, கோபிநாத்பூரில், விலங்குகள் பலியிடப்பட்டதால், மதரீதியான பதற்றம் அதிகமாக இருந்தது. அஜானாவைப் போலவே, இந்த கிராமமும் பகூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கும் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாக வாழ்கின்றனர். அண்டை மாநிலமான மேற்கு வங்காளம், ஒரு குறுகிய பாசனக் கால்வாயின் அக்கரையில் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள, குறு தொழிலாளர்கள்.
கந்தைப்பூர் பஞ்சாயத்தில் உள்ள வார்டு எண் 11-க்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். நிலைமை சீரானது. ஆயினும் அடுத்த நாள் மீண்டும் பிரச்சனை வெடித்தது. “கூட்டத்தினர் கற்களை வீசினர்," என்று 100-200 போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதைப் பார்த்த உள்ளூர்வாசி சுதீர் கூறுகிறார். “எல்லா இடங்களிலும் புகை இருந்தது," என்றும் அவர் நினைவு கூருகிறார், "அவர்கள் மோட்டார் சைக்கிள்களுக்கும் போலீஸ் வாகனத்திற்கும் கூட தீ வைத்தனர்."
நோமிதா மண்டல் தனது மகளுடன் வீட்டில் இருந்தபோது, குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டது. “திடீரென்று எங்கள் வீட்டை நோக்கி கற்கள் வீசப்பட்டன. நாங்கள் உள்ளே ஓடினோம்,” என்று கூறுகிறார். அவர் கூறும் போது, அந்த பயத்தில் இருந்து அவர் மீளாதது தெரிந்தது.
அதற்குள், ஒரு கும்பல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, தாயையும் மகளையும் அடிக்க ஆரம்பித்துவிட்டனர். "அவர்கள் என்னை இங்கும், இங்கும் அடித்தார்கள்," என்று தன் இடுப்பையும், தோள்களையும் காட்டி கூறுகிறார் அந்த 16 வயது பெண். "இன்னும் வலிக்கிறது." அவர்கள், வீட்டை விட்டு தனியாக இருக்கும் சமையலறையை எரித்தனர் என்று அந்த இடத்தை சுட்டிக்காட்டுகிறார் நோமிதா.
உள்ளூர் காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் குமார் ஜா, இந்த சம்பவத்தின் தீவிரத்தை மறுக்கிறார். “சேதம் பெரிதாக இல்லை. ஒரு குடிசை எரிக்கப்பட்டு, சிறிய சேதங்கள் மட்டுமே உள்ளது. உயிர் சேதம் ஏதுமில்லை.”
32 வயது நோமிதா ஜார்க்கண்ட்டின் பகூர் மாவட்டத்தில் உள்ள கோபிநாத்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பரம்பரை பரம்பரையாக அப்பகுதியில் வாழும் பல குடும்பங்களில், இவர்களும் ஒருவர். "இது எங்கள் வீடு, எங்கள் நிலம்," என்று அவர் உறுதியாக கூறுகிறார்.
பகூர் மாவட்டத்திலுள்ள காந்தய்பூர் பஞ்சாயத்தின் ஒரு பகுதியான, கோபிநாத்பூர், பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் பகுதி என்று மாவட்ட கவுன்சில் உறுப்பினர் பிங்கி மண்டல் கூறுகிறார். நோமிதாவின் கணவரான தீபசந்தின் குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர். "முன்பு எப்போதும் இந்து-முஸ்லீம்கள் இடையில் பதற்றம் இருந்ததில்லை. ஆனால் பக்ரீத் சம்பவத்திற்குப் பிறகு, நிலைமை மோசமாகிவிட்டது," என்கிறார் 34 வயதான தீபசந்த். தாக்குதல் நடந்தபோது தனது மற்ற இரண்டு குழந்தைகளுடன் அவர் வெளியே இருந்தார்.
"யாரோ போலீஸை அழைத்திருந்தனர். இல்லையெனில் எங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று எங்களுக்கே தெரியாது," என்று நோமிதா கூறுகிறார். அதற்கு அடுத்த வாரம், அவரது மாமியார் வீட்டிலிருந்து ரூ.50,000 கடன் வாங்கி, தன் வீட்டில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் கம்பிகளை பொருத்தியுள்ளார். "அது இல்லாமல் நாங்கள் பாதுகாப்பாக உணர முடியாது,” என்கிறார் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரியும் தீபசந்த், "அன்று நான் வேலைக்குச் போகாமல் இருந்திருக்கலாம்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஹேமா மண்டல் தனது வராண்டாவில் டெண்டு இலைகளைக் கொண்டு பீடி சுற்றிக் கொண்டிருக்கிறார். "முன்பு இந்து-முஸ்லீம்கள் இடையில் பதற்றம் ஏதும் இல்லை. ஆனால் இப்போது ஒரு நிலையான பயம் நிலவுகிறது." கால்வாயில் நீர்மட்டம் வறண்டு குறையும்போது, "மீண்டும் சண்டை வரும்" என்று அவர் கூறுகிறார். வங்காளத்தைச் சேர்ந்த மக்கள், எல்லைக்கு அப்பால் இருந்து எச்சரித்து கத்துகிறார்கள். "மாலை ஆறு மணிக்குப் பிறகு, இந்த முழு சாலையும் அமைதியாகிவிடும்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
மோதலுக்கு மையமாக மாறிய கால்வாய், ஹேமாவின் வீட்டிற்கு செல்லும் சாலைக்கு இணையாக செல்கிறது. மதியம் அப்பகுதி வெறிச்சோடியும், மாலையில் தெருவிளக்குகள் எரியாததால் இருளிலும் மூழ்கி கிடக்கிறது.
கால்வாயைப் பற்றி குறிப்பிடுகையில், 27 வயது ரிஹான் ஷேக், “சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அக்கரையில் உள்ள [மேற்கு] வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். இங்குள்ள முஸ்லிம்கள் இந்துக்களுக்கு துணை நின்றார்கள்,” என்கிறார். ரிஹான் ஒரு குத்தகை விவசாயி. நெல், கோதுமை, கடுகு மற்றும் சோளம் ஆகியவற்றை பயிரிடுகிறார். ஏழு பேர் கொண்ட அவரது குடும்பத்திற்காக அவர் மட்டுமே சம்பாதிக்கிறார்.
“நாங்கள் பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். நாங்கள் வங்க தேசத்தினரா?” என பாஜக’வின் பேச்சை புறந்தள்ளி நம்மிடம் கேட்கிறார் அவர்.
தமிழில்: அகமது ஷ்யாம்