விவசாயத் தொழிலாளர்கள் நிலத்தில் வேலை பார்க்கின்றனர். அல்லது உப்பளத் தொழிலாளர்களோ சில அகழாய்வு தொழிலாளர்களோ படகுகளில் உள்ள மீனவர்களோ வேலை பார்க்கும்போது பாடுவது என்பது ஆச்சரியமான விஷயம் கிடையாது. பாரம்பரிய பண்பாடுகளில், கடும் உழைப்பை கோரும் வேலைகள் அந்த வேலைகள் அல்லது வேலை வடிவங்கள் குறித்த பாடல்களையும் கொண்டிருக்கும். தொழில்சார் நாட்டுப்புற பாடல்கள் எல்லா பண்பாடுகளிலும் உண்டு. சில நேரங்களில், ஒன்றாக வேலை பார்க்க கூட்டுணர்வை தூண்டும் வகையில் பாடப்படுகின்றன. சில நேரங்களில் அலுப்பையும் சோர்வையும் அவர்கள் பாடுகின்றனர்.
170 மீட்டர் நீளம் கொண்ட கச்ச் வளைகுடா, ஓடைகளும் முகத்துவாரங்களும் மண் படலங்களும் கொண்ட அலைகளிலான பகுதி. எண்ணற்ற கடல்சார் உயிர்கள் இனவிருத்தி செய்யும் பெரும் பன்மையச் சூழல் அது. கடலோரப் பகுதியில் வாழ்வோர் பலருக்கும் மீன்பிடித் தொழில் பாரம்பரியத் தொழிலாக இருக்கிறது. இங்கு வழங்கப்படும் பாடல், கடலோர வளர்ச்சிப் பணிகளால் அழிந்து வரும் மீனவ வாழ்வாதாரங்களை பற்றி பாடுகிறது.
கச்ச் மீனவ சங்க உறுப்பினர்கள், கல்வியாளர்கள் போன்ற பலரும் இந்த வளர்ச்சிப் பணிகள் ஏற்படுத்தும் சேதங்களை பற்றி பேசியிருக்கின்றனர். முந்த்ரா அனல் மின் நிலையம் (டாடா) மற்றும் முந்த்ரா மின்சாரத் திட்டம் (அதானி குழுமம்) ஆகியவற்றால் கடலின் பன்மையச் சூழல் வேகமாக சரிந்து வருவதாகவும் அதன் விளைவாக மீனவ சமூகங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இங்கு எளிய மொழியில் வழங்கப்பட்டிருக்கும் பாடல், இந்த சவால்களை குறித்தும் பேசுகிறது.
முந்த்ரா தாலுகாவில் மீனவராக இருக்கும் ஜுமா வகேர் இப்பாடலை அழகாக பாடியுள்ளார். முதன்மை பாடகராக அவரும் ஹோ ஜமாலோ (ஏ மீனவ மக்களே) என பாடும் கோரஸ் குழுவினரும் இப்பாடலை வழங்குகின்றனர். பாடலின் மெல்லிசை, வேகமாக மாறி வரும் கச்சின் கடலோரங்களுக்கு நம்மை அழைத்து செல்கிறது.
કરછી
હો જમાલો રાણે રાણા હો જમાલો (2), હી આય જમાલો લોધીયન જો,
હો જમાલો,જાની જમાલો,
હલો જારી ખણી ધરીયા લોધીયું, હો જમાલો
જમાલો રાણે રાણા હો જમાલો,હી આય જમાલો લોધીયન જો.
હો જમાલો જાની જમાલો, હો જમાલો
હલો જારી ખણી હોડીએ મેં વીયું.
જમાલો રાણે રાણા હો જમાલો,હી આય જમાલો લોધીયન જો.
હો જમાલો જાની જમાલો,
હલો લોધી ભાવર મછી મારીયું, હો જમાલો
જમાલો રાણે રાણા હો જમાલો,હી આય જમાલો લોધીયન જો.
હો જમાલો જાની જમાલો,
હલો મછી મારે બચા પિંઢજા પારીયું, હો જમાલો
જમાલો રાણે રાણા હો જમાલો, હી આય જમાલો લોધીયન જો.
હો જમાલો જાની જમાલો,
હલો પાંજો કંઠો પાં ભચાઈયું, હો જમાલો
જમાલો રાણે રાણા હો જમાલો, હી આય જમાલો લોધીયન જો.(૨)
தமிழ்
வாருங்கள் கடல் ராசாக்களே.
நாமெல்லாம் ஒன்றிணைவோம் வாருங்கள்
ஆமாம், இந்த மீனவர் குழுவினரே ஒன்றிணைவோம்.
வலைகளை எடுத்து கடலுக்கு செல்வோம் மீனவர்களே
இந்த குழுவின் மீனவர்கள் நாம் ஒன்றிணைவோம்.
வாருங்கள்! வாருங்கள் சகோதரர்களே!
வலைகளை எடுத்துக் கொண்டு படகுகளுக்கு செல்வோம்.
நாம் ஒன்றிணைவோம் மீனவச் சகோதர்களே.
வாருங்கள் பெரும் வேட்டைக்கு செல்வோம்.
நாம் ஒன்றிணைவோம் மீனவச் சகோதர்களே.
வாருங்கள், மீன் பிடிக்க செல்வோம், குழந்தைகளை பராமரிக்க வேண்டும்
நாம் ஒன்றிணைவோம் மீனவச் சகோதர்களே.
வாருங்கள், வாருங்கள், நாம்தான் நம் துறைமுகங்களை காக்க வேண்டும்.
நாம் ஒன்றிணைவோம் மீனவச் சகோதர்களே.
பாடல் வகை : பாரம்பரிய நாட்டுப்புற பாடல்
தொகுப்பு : நிலம், இடங்கள் மற்றும் மக்கள் பாடல்கள்
பாடல் : 13
பாடல் தலைப்பு : ஜமாலோ ரானே ரானா ஹோ ஜமாலோ
இசையமைப்பாளர் : தேவால் மேத்தா
பாடகர் : முந்த்ரா தாலுகாவின் பத்ரேசார் கிராமத்தை சேர்ந்த ஜுமா வகேர்
இசைக்கருவிகள் : மேளம், ஹார்மோனியம், பாஞ்சோ
பதிவு செய்யப்பட்ட வருடம் : 2012, KMVS ஸ்டுடியோ
சூர்வானி என்கிற ரேடியோவால் பதிவு செய்யப்பட்ட இந்த 341 பாடல்கள், பாரிக்கு கட்ச்ச் மகிளா விகாஸ் சங்காதன் (KMVS) மூலமாக கிடைத்தது. மேலதிகமான பாடல்களுக்கு: கட்ச்சி நாட்டுப்புற பாடல்களின் பெட்டகம்
ப்ரீத்தி சோனி, KMVS-ன் செயலாளர் அருணா தொலாகியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அமத் சமேஜா ஆகியோருக்கும் குஜராத்தி மொழிபெயர்ப்பு செய்த பார்தி பென் கோருக்கும் நன்றி
தமிழில்: ராஜசங்கீதன்