வாழ்க்கை முழுக்க
இரவு பகல் பாராமல் இந்த படகுக்கு
கரை கண்ணில் படாமல் துடுப்பு போட்டுக் கொண்டிக்கிறேன்
அந்தளவுக்கு பெரிய கடல்
பிறகு அந்த புயல்கள்
எதுவும் நான் மறுகரையை
அடைவேன் என்பதற்கான அறிகுறி இல்லை
ஆனால் முடியாது
இந்த துடுப்புகளை கைவிட என்னால் முடியாது

அவர் நம்பிக்கையை விடவும் இல்லை. இறுதிக்கட்டத்தில் நுரையீரல் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது கூட போராடிக் கொண்டிருந்தார்.

அதிக வலி. சுவாசிக்க சிரமப்பட்டார். மூட்டுகள் வலித்தன. ரத்தசோகை, எடை குறைதல் போன்ற பிரச்சினைகள் இருந்தன. அதிக நேரம் அமர்ந்திருந்தால் சோர்வடைகிறார். ஆனாலும் மருத்துவமனையில் எங்களை சந்தித்து, வாழ்க்கை மற்றும் கவிதை பற்றி பேச, வஜேசிங் பார்கி ஒப்புக் கொண்டார்.

ஆதார் அட்டைத் தரவின்படி அவர் பிறந்தது 1963-ல். அப்போதிலிருந்து வாழ்க்கையில் அவருக்கு இனிமை இருந்ததில்லை. தகோதின் இதாவா கிராமத்தின் ஏழ்மையான பில் பழங்குடி சமூகத்தில் பிறந்தார்.

சிஸ்கா பாய் மற்றும் சதுரா பென்னுக்கு மூத்த மகனாக பிறந்து வளர்ந்த மொத்த அனுபவங்களையும் திரும்பத் திரும்ப ஒற்றை வார்த்தை சொல்லி உணர்த்துகிறார், “பசி… பசி.” சற்று நேரம் அமைதி. மனதுக்குள் தோன்றும்  பால்யகால காட்சிகளை அழிக்க முடியாமல், ஒடுங்கிய கண்களை தேய்த்துக் கொண்டு, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறார். “உணவுக்கு தேவையான பணம் எப்போதுமே வீட்டில் இருந்ததில்லை.”

வாழ்க்கை ஓய்ந்தாலும்
இந்த அன்றாடச் சக்கரம் ஓயாது.
ரொட்டியின் சுற்றளவு
பூமியின் சுற்றளவை விட
மிகவும் பெரியது.
பசியில் வாடுபவர்களுக்கு
மட்டும்தான் தெரியும்
ஒரு ரொட்டியின் அருமையும்
அது எங்கெல்லாம் உங்களை இட்டுச் செல்லும் என்பதும்.

தீவிர நோய் தடுப்பு சிகிச்சை பெற்று வரும் தஹோதின் கைசார் மருத்துவ மையத்தின் படுக்கையிலிருந்து கொண்டு வஜெசிங் தன் கவிதைகளை எங்களுக்கு சொல்கிறார்

பழங்குடி கவிஞர் சொல்லும் கவிதைகளை கேளுங்கள்

“சொல்லக் கூடாதுதான். ஆனால் நாங்கள் பெருமைப்படத் தக்க பெற்றோர் எங்களுக்கு இருக்கல்லை,” என்கிறார் வஜேசிங். ஏற்கனவே சுருங்கியிருக்கும் அவரின் உடற்கூடு ஆழ்ந்த கோபம் மற்றும் அவமானத்தின் கனத்தால் இன்னும் அதிகமாக சுருங்கிப் போகிறது. “இது போல் சொல்லக் கூடாது என தெரியும். ஆனாலும் அறியாமல் வந்துவிட்டது.” தஹோதின் கைசார் மருத்துவ மையத்திலுள்ள சிறு அறையின் மூலையில் ஒரு தகர ஸ்டூலில் அமர்ந்திருக்கும் அவரின் 85 வயது தாய்க்கு, கேட்கும் திறன் குறைவு. “என்னுடைய பெற்றோர் படும் சிரமத்தை மட்டும்தான் நான் பார்த்தேன். தந்தையும் தாயும் நிலங்களில் விவசாயத் தொழிலாளர்களாக வேலை பார்த்தனர்.” அவரின் இரு சகோதரிகளும் நான்கு சகோதரர்களும் பெற்றோரும் கிராமத்தில் ஒரு மண் வீட்டின் சிறு அறைக்குள் வாழ்ந்தனர். இதாவாவை விட்டு, வேலை தேடி அகமதாபாத்துக்கு வந்தபோது கூட வஜேசிங், தால்தேஜ் சாலிலிருந்த ஒரு சிறு வாடகை அறையில்தான் வாழ்ந்தார். அவரின் நெருங்கிய நண்பர்கள் கூட அதிகம் வராத வீடு அது.

நின்றால்
தலை இடிக்கும்
கால் நீட்டினால்
சுவர் இடிக்கும்
எப்படியோ வாழ்க்கையை
முடங்கி வாழ்ந்து முடித்து விட்டேன்
வெகுவாக எனக்கு உதவியது
தாயின் கருவறையில்
சுருண்டு கிடந்த பழக்கம்

வறுமை வஜேசிங்குக்கு மட்டும் நேரவில்லை; கவிஞரின் குடும்பம் வாழும் பகுதியில் அந்த வறுமை வழக்கமான விஷயம்தான். தஹோத் மாவட்டத்தில் வாழும் 74 சதவிகித மக்கள்தொகை பட்டியல் பழங்குடியினர். அவர்களில் 90 சதவிகிதம் பேர் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். சிறு அளவிலான மனைகளும் நிலங்களின் குறைந்த உற்பத்தியும், வறண்ட நிலையும் பஞ்சமும் போதுமான வருமானம் கிடைக்காததற்கான காரணங்களாக இருக்கின்றன. அப்பகுதியின் வறுமையும், சமீபத்திய பன்முகத்தன்மை வறுமை கணக்கெடுப்பின்படி, மாநிலத்திலேயே அதிகமாக 38.27 சதவிகித அளவில் இருக்கிறது.

“கடுமையாக உழைத்திருக்கிறேன். வீட்டில் வேலை பார்த்திருக்கிறேன். எப்படியோ அவர்கள் சாப்பிட வருமானம் ஈட்டியிருக்கிறேன்,” என்கிறார் வஜேசிங்கின் தாய் சதுராபென்.  பெரும்பாலும் சோளக் கஞ்சி சாப்பிட்டுதான் பிழைத்திருக்கிறார்கள். சமயத்தில் பள்ளிக்கு அவர்கள் பசியோடும் போயிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டதாக சொல்கிறார் அவர்.

குஜராத்தின் விளிம்பு நிலை சமூகங்களின் குரல்களை பிரதிபலிக்கவென இயங்கும் நிர்தார் பத்திரிகையின் 2009ம் ஆண்டு இதழ் ஒன்றுக்காக தன் சரிதையை இரு பகுதிகளாக அவர் எழுதினார். ஜோகோ தாமோரும் அவரின் குடும்பமும் பட்டினி கிடந்து சிறுவர்களுக்கு உணவு கொடுத்திருக்கின்றனர். ஒருமுறை ஐந்து பேராக பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது மழை பெய்யத்தொடங்கி, ஜோகோவின் வீட்டில் அடைக்கலம் தேட வேண்டிய சூழலை விவரிக்கும் போது வஜேசிங், “பதார்வோ எப்போதும் எங்களுக்கு பட்டினி மாதம்தான்,” என்கிறார். இந்து மதத்தின் விக்ரம் சாம்வாத் நாட்காட்டியின்படி பதார்வோ என்பது 11ம் மாதம் ஆகும். வழக்கமான நாட்காட்டியில் செப்டம்பர் மாதத்தின் போது அது வரும்.

“வீட்டில் சேமித்து வைத்திருக்கும் தானியம் தீர்ந்து போகும். வயலில் போட்ட தானியமும் விளைந்திருக்காது. எனவே வயல் பசுமையாக இருந்தும் பட்டினி கிடக்க வேண்டியதே எங்களின் விதியாக இருந்தது. சில வீடுகளில் மட்டும்தான் இந்த மாதங்களில் அடுப்பு ஒரு நாளைக்கு இரு வேளை எரியும். முந்தைய வருடம் பஞ்சமென்றால், பல குடும்பங்கள் வேக வைத்த அல்லது வறுக்கப்பட்ட இலுப்பையில்தான் பிழைப்பார்கள். கடும் வறுமை எங்களின் சமூகத்துக்கான சாபக்கேடு.”

Left: The poet’s house in his village Itawa, Dahod.
PHOTO • Umesh Solanki
Right: The poet in Kaizar Medical Nursing Home with his mother.
PHOTO • Umesh Solanki

இடது: தஹோதின் இதாவா கிராமத்திலுள்ள கவிஞரின் வீடு. வலது: கைசார் மருத்துவ மையத்தில் தாயுடன் கவிஞர்

ஆனால் தற்கால தலைமுறை போலல்லாமல், அந்த காலத்திலிருந்து மக்கள் பசியால் இறந்து கூடப் போவார்களே தவிர, வீட்டையும் கிராமங்களையும் விட்டு, கேதாவுக்கும் பரோடாவுக்கும் அகமதாபாத்துக்கும் வேலை தேடி புலம்பெயர மாட்டார்கள். கல்விக்கு அச்சமூகத்தில் பெரிய மதிப்பில்லை. “விலங்குகளை மேய்க்க நாங்கள் செல்வதும் பள்ளிக்கு செல்வதும் ஒன்றுதான். எங்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் கூட, குழந்தைகளுக்கு எழுதப் படிக்க தெரிந்தால் மட்டும் போதும் என்றுதான் நினைத்தார்கள். அவ்வளவுதான். அதைத் தாண்டி படித்து உலகையே ஆள வேண்டுமென யார் ஆசைப்படப் போகிறார்!”

ஆனால் வஜேசிங்குக்கும் வித்தியாசமான கனவுகளும் இருந்தன. மரங்களுடன் பறக்க வேண்டும், பறவைகளுடன் பேச வேண்டும், தேவதைகளின் இறக்கைகளில் அமர்ந்து கடல் கடந்து செல்ல வேண்டும்.  அவருக்கு சில நம்பிக்கைகள் கூட இருந்தன. தாத்தா சொன்ன கதைகளில் வருவது போல துயரங்களிலிருந்து தெய்வங்கள் அவரைக் காப்பாற்றுவதும் உண்மை ஜெயித்து பொய்கள் தோற்பதும் கடவுளை காண்பதும் போன்ற நம்பிக்கைகள். ஆனால் வாழ்க்கை முற்றிலும் வேறாக இருந்தது.

ஆனாலும்
ஏதேனும் ஓர் அற்புதம் நேரும்
என பால்யகாலத்தில் தாத்தா ஊன்றிய
விதைகள் உறுதியாக இருந்தன.
ஏதேனும் ஓர் அற்புதம் நேரும்
நம்பிக்கையில்தான் இந்த
கொடும் வாழ்க்கையின் அன்றாடத்தை
இன்றைய தினத்தைக் கூட
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

இந்த நம்பிக்கையைக் கொண்டுதான், கல்விக்கான போராட்டத்தை அவர் வாழ்க்கை முழுக்க தொடர்ந்தார். ஒருமுறை எதிர்பாராதவிதமாக கிடைத்த வாய்ப்பை கொண்டு, கல்வியை உத்வேகத்துடன் கற்கத் தொடங்கினார். பள்ளிக்கு செல்ல ஆறேழு கிலோமீட்டர் நடப்பதும் விடுதியில் தங்க வேண்டியதும் பசியுடன் தூங்கும் நிலையும், வீடு வீடாக உணவுக்கு அலைவதும் பள்ளி முதல்வருக்கு சாராய பாட்டில் வாங்கிக் கொடுக்க வேண்டிய தேவையும் கூட அவரின் முயற்சிக்கு தடையாகவில்லை. கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இல்லை என்பதோ தஹோதுக்கு செல்ல போக்குவரத்து இல்லாததோ தஹோதில் வாடகை கட்ட பணம் இல்லாததோ கூட அவரை நிறுத்தவில்லை. செலவுகளுக்கு கட்டுமான வேலை செய்தும், இரவுகளை ரயில் பிளாட்பாரங்களில் கழித்தும், பசியுடன் தூங்கியெழுந்தும் பொது குளியலறைகளை பயன்படுத்தித் தயாராகியும்தான் அவர் தேர்வுக்கே சென்றார்.

வாழ்க்கையில் தோல்வியுறக் கூடாது என்கிற தீர்மானத்தில் இருந்தார் வஜேசிங்:

வாழுதலின்போது
அடிக்கடி தலை கிறுகிறுக்கும்
இதயம் ஒரு துடிப்பை தொலைக்கும்
மயங்கி விழுவேன்
ஆனால் ஒவ்வொருமுறையும்
உள்ளிருந்து எழும்
வாழ்க்கைக்கான யத்தனம்
மீண்டும் என்னை எழுப்பி நிறுத்தும்
மீண்டும் மீண்டும் வாழ வைக்கும்

அவரின் விருப்பத்துக்குகந்த கல்வி, நவ்ஜீவன் கல்லூரியில் குஜராத்தி மொழி இளங்கலை படிக்க சேர்ந்தபோதுதான் அவருக்கு தொடங்கியது. இளங்கலை முடித்து முதுகலைக்கு பதிவு செய்தார். ஆனால் முதுகலையின் முதல் வருடத்திலேயே, பி.எட் படிக்க விரும்பி, முதுகலைப் படிப்பை நிறுத்தினார். அவருக்கு பணம் தேவைப்பட்டது.  ஆசிரியராக விரும்பினார். பி.எட். முடித்த சமயத்தில் ஒரு சண்டையில் வஜேசிங் சிக்கி, தோட்டா அவரின் தாடையையும் கழுத்தையும் உரசிச் சென்றது. வாழ்க்கையே தலைகீழானது. அவரின் குரல் பாதிப்பை அடைந்தது. ஏழு வருட சிகிச்சை, 14 அறுவை சிகிச்சைகள், அளவுகடந்த கடன் ஆகியவற்றை தாண்டியும் மீளவே முடியவில்லை.

Born in a poor Adivasi family, Vajesinh lived a life of struggle, his battle with lung cancer in the last two years being the latest.
PHOTO • Umesh Solanki
Born in a poor Adivasi family, Vajesinh lived a life of struggle, his battle with lung cancer in the last two years being the latest.
PHOTO • Umesh Solanki

ஏழ்மையான பழங்குடி குடும்பத்தில் பிறந்த வஜேசிங் போராட்டமான வாழ்க்கை வாழ்ந்தார். நுரையீரல் புற்று நோயுடனான போராட்டம்தான் அவரின் சமீபத்திய போராட்டம்

அது வலியை இரட்டிப்பாக்கியது. சமூகத்தில் குரலில்லாத பழங்குடியாக பிறந்தது முதல் அடி.சொந்தமாக இருக்கும் குரலும் சேதமடைந்தது இரண்டாம் அடி. ஆசிரியராகும் விருப்பத்தை கைவிட்டுவிட்டு வேலை பார்க்கத் தொடங்கினார். சர்தார் படேல் சமூகப் பொருளாதார ஆய்வு நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியில் சேர்ந்து பின் எழுத்துப் பரிசோதகராக மாறினார். இந்த வேலையில்தான் மொழி மீதான தன் காதலை மீண்டும் வஜேசிங் கண்டடைந்தார். இருபது வருடங்களுக்கும் மேலாக எழுதப்பட்ட பல எழுத்துகளை வாசிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

அவரின் அவதானிப்பு என்ன?

”மொழியைப் பற்றி என்ன நினைக்கிறேனென வெளிப்படையாக சொல்கிறேன்,” என சொல்லத் தொடங்குகிறார். “குஜராத்தி மொழியின் கற்றறிந்த வர்க்கம் மொழியை பொருட்படுத்துவதில்லை. வார்த்தைகள் பயன்பாடு பற்றி கவிஞர்கள் கவலைப்படுவதில்லை. பெரும்பாலானோர் கஜல்கள்தான் எழுதுகின்றனர். உணர்வுதான் அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. வார்த்தைகள் வெறுமனே இருந்தால் போதுமானதாக இருக்கிறது.” வார்த்தைகளின் அடுக்கு, அவற்றின் வெளிப்பாடு போன்றவற்றை பற்றிய இந்த நுட்பமான புரிதல்களோடு வஜேசிங் எழுதிய கவிதைகளின் இரண்டு தொகுப்புகள்தாம் வெகுஜன இலக்கியத்தால் அங்கீகரிக்கப்படாமலும் ஆதரிக்கப்படாமலும் இருக்கிறது.

ஏன் தன்னை ஒரு கவிஞராக அவர் கருதவில்லை எனக் கேட்டபோது, “முதலில் தொடர்ந்து எழுத வேண்டும்,” எனக் காரணம் சொல்கிறார். “ஒன்றிரண்டு கவிதைகளை மட்டும் நான் எழுதினால், யார் பொருட்படுத்துவார்? இந்த இரண்டு தொகுப்புகளும் சமீபத்தியவை. புகழுக்காக நான் எழுதவில்லை. தொடர்ந்து என்னால் எழுதவும் முடியாது. தீவிரமாகவும் நான் எழுதவில்லை. பசி எங்களின் வாழ்க்கைகளோடு பின்னி பிணைந்திருந்த காரணத்தால் நான் எழுதினேன். அது இயல்பான வெளிப்பாடு.” முழு உரையாடலிலும் தன்னடக்கத்தோடுதான் பேசினார். பழிசொல்லவோ பழைய காயங்களை திரும்பிப் பார்க்கவோ தனக்கான இடத்தை உறுதி செய்யவோ அவர் விரும்பவில்லை.

சூரியனோடு சேர்ந்து
வாழ்க்கை முழுக்க
எரிந்து கொண்டிருக்கும் எங்களின்
வெளிச்சத்தை சிலர் நிச்சயமாக
எடுத்துக் கொள்கின்றனர்
ஆனாலும் எதுவும்
ஒளி பெற்றதாக தெரியவில்லை.

பாரபட்சமும் அவரை குறைத்து மதிப்பிட்டதும் அலட்சியமும் அவரின் தொழில் வாழ்க்கைக்கு, எழுத்துப் பரிசோதகர் அடையாளத்தை மட்டுமே கொடுத்திருக்கிறது. ஒரு ஊடக நிறுவனத்தின் நுழைவுத் தேர்வில் முதல்  நிலையில் தேர்ச்சி பெற்றும் கூட, மூன்றாம் நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட குறைவான ஊதியம் கொண்ட பணி வழங்கப்பட்டது. வஜேசிங் கலக்கம் கொண்டார். அத்தகைய முடிவுக்கு பின் இருக்கும் கொள்கை பற்றி கேள்வி கேட்டார். முடிவில் அந்த வேலையை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

Ocean deep as to drown this world, and these poems are paper boats'.
PHOTO • Umesh Solanki

’உலகை மூழ்கடிக்கும் ஆழம் கொண்ட பெருங்கடலில், என் கவிதைகள் காகிதப் படகுகள்’

அகமதாபாத்தில் பல ஊடக நிறுவனங்களில் சிறு ஒப்பந்த பணிகளில் குறைந்த ஊதியத்துக்காக அவர் பணிபுரிந்தார். வஜேசிங்கை முதன்முறையாக சந்தித்தபோது கிரித் பர்மார், அபியானுக்கு எழுதிக் கொண்டிருந்தார். “2008ம் ஆண்டில் நான் அபியானில் சேர்ந்தபோது வஜேசிங் சம்பவ் மீடியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அதிகாரப்பூர்வமாக அவர் ஓர் எழுத்துப் பரிசோதகர். ஆனால் ஒரு கட்டுரையைக் கொடுத்தால் அதை சரிபார்த்து திருத்திக் கொடுக்கவும் அவருக்கு தெரியுமென நாங்கள் அறிந்து கொண்டோம். உள்ளடக்கத்துக்கென ஒரு வடிவத்தை கொடுக்கும் வகையில் அதை திருத்துவார். மொழியில் அவரின் லாவகம் அற்புதமானது. ஆனால் அவருக்கென சரியான வாய்ப்பு என்பது அமையவே இல்லை,” என்கிறார்.

சம்பவில் அவர் மாதத்துக்கு 6,000 ரூபாய் வரைதான் வருமானம் ஈட்டினார். அதைக் கொண்டு அவரால் குடும்பத்தையோ சகோதரசகோதரிகளின் கல்வியையோ பார்த்துக் கொள்ள முடியவில்லை. அகமதாபாத்தில் பிழைப்பு ஓட்டவும் முடியவில்லை. இமேஜ் பப்ளிகேஷன்ஸிலிருந்து தற்காலிக வேலைகளை அவர் எடுத்து செய்தார். அலுவலத்தில் பல நாட்கள் பணி புரிந்த பிறகு, வீட்டிலிருந்து வேலை பார்த்தார்.

“தந்தையின் மறைவுக்கு பிறகு அவர்தான் எங்களுக்கு தந்தையாக இருந்தார்,” என்கிறார் அவரின் தம்பியான 37 வயது முகேஷ் பார்கி. “கஷ்டமான நேரங்களில் கூட வஜேசிங் என் கல்விக்கான செலவுகளை செய்திருக்கிறார். தால்தெஜில் ஓர் உடைந்த சிறு அறையில் அவர் இருந்தது நினைவிலிருக்கிறது. அறையின் தகரக் கூரைகளின் மேல் நாய்கள் ஓடும் சத்தம் இரவு முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கும். அவர் ஈட்டிய 5000-6000 ரூபாய் வருமானத்தில், தன்னை கவனித்துக் கொள்ளக் கூட அவரால் முடியாது. ஆனால் எங்களின் கல்விக்கு செலவு செய்வதற்காக பிற வேலைகளையும் அவர் செய்தார். என்னால் அதை மறக்க முடியாது.”

கடந்த ஐந்தாறு வருடங்களாக எழுத்து பரிசோதனை சேவைகளை தரும் அகமதாபாத்தின் ஒரு தனியார் நிறுவனத்தில் அவர் பணிபுரிந்தார். “வாழ்க்கையின் பெரும்பகுதி நான் ஒப்பந்த வேலைதான் செய்தேன். சமீபத்தில் சிக்னெட் இன்ஃபோடெக்கில் பணிபுரிந்தேன். காந்திஜியின் நவஜீவன் ப்ரஸ்ஸுக்கு அவர்களுடன் ஒப்பந்தம் இருக்கிறது. எனவே அவர்கள் பதிப்புக்கும் புத்தகத்தில் நான் பணிபுரிய நேரிட்டது. நவஜீவனுக்கு முன்னால் நான் பிற பதிப்பகங்களில் பணிபுரிந்தேன்,” என்கிறார் வஜேசிங். “ஆனால் குஜராத்தில் நிரந்தர வேலை பார்க்கும் ஒரு எழுத்து பரிசோதர் கூட இல்லை.”

நண்பரும் எழுத்தாளருமான கிரித் பர்மாருடன் பேசுகையில் , “குஜராத்தி மொழியில் நல்ல எழுத்து பரிசோதகர்களை கண்டுபிடிக்க முடியாததற்குக் காரணம் குறைந்த ஊதியம்தான். எழுத்து பரிசோதகன்தான் ஒரு மொழிக்கான காவலன். அத்தகைய பணியை எப்படி மதிக்காமல் இருக்க முடிகிறது? நாங்கள் அருகிவரும் இனமாகிக் கொண்டிருக்கிறோம். யாருக்கு இதனால் நஷ்டம்? குஜராத்தி மொழிக்குதான்.” குஜராத்தியின் ஊடக நிறுவனங்களில் இருக்கும் துயர நிலையை வஜேசிங் பார்த்திருக்கிறார். அவர்கள் மொழியை மதிப்பதில்லை. எழுதவும் வாசிக்கவும் முடிகிற எவரையும் எழுத்துப் பரிசோதகராக்கி விடுகிறார்கள்.

“எழுத்துப் பரிசோதகருக்கு அறிவோ திறமையோ படைப்பாற்றலோ கிடையாது என இலக்கிய உலகில் இருக்கும் நம்பிக்கை மிகவும் தவறானது,” என்கிறார் வஜேசிங். அவர் குஜராத்தி மொழியின் காவலனாக இருந்தார். “குஜராத் வித்யாபீடம் சர்த், அகராதியில் சேர்ப்பதற்கென 5,000 புதிய வார்த்தைகளை கொண்ட ஒரு கையேட்டை ஜொடானி கோஷ் (பிரபலமான அகராதி) பதிப்புடன் வெளியிட்டது,” என நினைவுகூருகிறார் கிரித் பாய். “அதில் கொடுமையான தவறுகள் இருந்தன. எழுத்துப் பிழைகள் மட்டுமல்லாது, தகவல் பிழைகளும் விவரப்பிழைகளும் கூட இருந்தன. வஜேசிங் சிரமம் பார்க்காது அவை எல்லாவற்றையும் குறிப்பெடுத்து, அதற்கான பொறுப்பேற்கும்படி வாதிட்டார். அத்தகைய வேலையை போன்ற ஒரு வேலையை இன்று குஜராத்தில் செய்யத்தக்க ஒருவரை நான் பார்க்கவில்லை. 6,7,8 மாநில பாடத்திட்ட புத்தகங்களில் இருந்த தவறுகளை பற்றி கூட அவர் எழுதினார்.”

Vajesinh's relatives in mourning
PHOTO • Umesh Solanki

இரங்கல் கூட்டத்தில் வஜேசிங்கின் உறவினர்கள்

Vajesinh's youngest brother, Mukesh Bhai Pargi on the left and his mother Chatura Ben Pargi on the right
PHOTO • Umesh Solanki
Vajesinh's youngest brother, Mukesh Bhai Pargi on the left and his mother Chatura Ben Pargi on the right
PHOTO • Umesh Solanki

வஜேசிங்கின் தம்பி முகேஷ் பாய் பார்கி இடது பக்கத்திலும் தாய் சதுரா பென் பார்கி வலப்பக்கத்திலும்

அத்தனை திறமைகளை கொண்டிருந்தாலும், இந்த உலகம் வாழ்வதற்கு சிக்கலான இடமாகவே வஜேசிங்குக்கு தொடர்ந்தது. எனினும் அவர் நம்பிக்கை மற்றும் மீட்சி பற்றி எழுதினார். சொந்த வாய்ப்புகளை கொண்டுதான் அவர் வாழ வேண்டியிருந்தது. கடவுள் நம்பிக்கையை அவர் விட்டு பல காலமாகிவிட்டது.

ஒரு கையில் பசியோடும்
ஒரு கையில் உழைப்போடும்
நான் பிறந்தேன்
உன்னை வழிபடுவதற்கான
மூன்றாம் கையை எங்கே பெறுவதென
சொல் பகவானே?

வஜேசிங்கின் வாழ்க்கையில் கடவுளுக்கு பதில் கவிதை இருந்தது. அவர் இரு கவிதை தொகுப்புகளை வெளியிட்டார். ஆகியானு அஜ்வாலுன் (மின்மினிக்களின் வெளிச்சம்) 2019-லும் ஜகால்னா மோதி (பனித்துளிகளின் முத்துகள்) 2022-லும் இன்னும் சில கவிதைகளை அவரின் தாய்மொழியான பஞ்சாமஹலி பிலி யிலும் வெளியிட்டார்.

அநியாயமும் சுரண்டலும் பாரபட்சமும் வறுமையும் நிறைந்த வாழ்க்கையை கொண்ட அவரின் கவிதைகளில் கோபமோ கசப்புணர்வோ வெளிப்பட்டதில்லை. எந்த புகாரையும் அவை கொண்டதில்லை. “எங்கு நான் புகார் செய்ய முடியும்? சமூகத்திடமா? சமூகத்திடம் புகார் செய்தால், அந்த புகார்கள் நம் கழுத்தில் சுற்றிக் கொள்ளும்,” என்கிறார் அவர்.

கவிதைகளின் வழியாக தனிப்பட்ட சூழல்களை தாண்டி எழுந்து மனித நிலையின் உண்மையுடன் தொடர்பு கொள்ளும் சாத்தியத்தை வஜேசிங் கண்டறிந்தார். அவரைப் பொறுத்தவரை தற்கால பழங்குடி மற்றும் தலித் இலக்கியத்தில் ஆழம் இல்லை. “சில தலித் இலக்கியங்களை நான் படித்தேன். மானுடத் தொடர்பு பெருமளவில் இல்லாமலிருப்பதை கண்டேன். அவை யாவும் நம் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை பற்றிதான் பேசின. ஆனால் அங்கிருந்து நாம் எங்கே செல்ல வேண்டும்? பழங்குடியினரின் குரல்கள் இப்போதுதான் வரத் தொடங்கியிருக்கின்றன. அவையும் அவர்தம் வாழ்க்கைகளை பற்றிதான் அதிகம் பேசுகின்றன. பெரிய கேள்விகள் எழவே இல்லை,” என்கிறார் அவர்.

தஹோதை சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான பிரவீன் பாய் ஜாதவ் சொல்கையில், “சிறுவனாக நான் பல புத்தகங்களை வாசித்து வளர்ந்தேன். எங்களின் சமூகத்திலிருந்தும் பகுதியிலிருந்தும் ஏன் கவிஞர்கள் வரவில்லை என யோசித்திருக்கிறேன். 2008ம் ஆண்டில்தான் ஒரு தொகுப்பில் நான் வஜேசிங்கின் பெயரை அறிந்தேன். அவரை கண்டுபிடிக்க எனக்கு நான்கு வருடங்கள் பிடித்தது. என்னை அவர் சந்திக்க வைப்பதற்கும் நேரம் பிடித்தது. அவர் முஷைராக்களுக்கான கவிஞர் இல்லை. அவரின் கவிதைகள் விளிம்பு நிலை வாழ்க்கைகளையும் எங்களின் வலியையும் பேசின.

கல்லூரி வருடங்களில் கவிதை எழுதத் தொடங்கினார் வஜேசிங். முறையான பயிற்சிக்கு நேரம் இருக்கவில்லை. “நாள் முழுக்க எனக்கு கவிதைகள் ஊறிக் கொண்டே இருக்கும்,” என விளக்குகிறார். “என்னுடய சுயத்தின் ஓய்வற்ற வெளிப்பாடு அவை. சில நேரங்களில் வெளிப்படும் வாய்ப்பை உருவாக்கி வெளியாகிவிடும். இன்னும் பல வெளிப்படாமலேயே இருக்கின்றன. ஒரு நீண்ட பணியை என் மனதுக்குள் எப்போதும் நான் வைத்திருக்க மாட்டேன். அதனால்தான் நான் பின்பற்றிய முறையை தேர்ந்தெடுத்தேன். இன்னும் பல கவிதைகள் எழுதப்படாமலே இருக்கின்றன.”

கடந்த இரண்டு வருடங்களாக தொடரும், உயிருக்கு ஆபத்தான நுரையீரல் புற்றுநோய் எழுதப்படாத கவிதைகளை இன்னும் அதிகமாக்கியிருக்கின்றன. ஆனால் வஜேசிங்கின் வாழ்க்கையோடு அவரின் சாதனைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, எத்தனை விஷயங்கள் எழுதப்படாமல் இருக்கின்றன என்பதை உணர முடியும். அவர் பிடித்து வைத்திருந்த ‘படபடக்கும் மின்மினிகளின் வெளிச்சம்’ அவருக்கு மட்டுமானது கிடையாது. அவரின் சமூகத்துக்குமானது. ஆனால் எழுதப்படாமல் இருக்கிறது. சிப்பியின்றி அவரின் கைக்குள் பூத்த ‘பனித்துளிகளின் முத்துகள்’ பற்றியும் எழுதப்படாமல் இருக்கிறது. குரூரமான இரக்கமற்ற உலகில் பரிவை கொண்டிருந்த குரலின் அதிசயமான தன்மைகள் இன்னும் எழுதப்படாமல் இருக்கின்றன. நம் மொழியின் அற்புதமான கவிஞர்களின் பட்டியலில் வஜேசிங் பார்கி என்ற பெயர் இன்னும் எழுதப்படாமல் இருக்கிறது.

One of the finest proofreaders, and rather unappreciated Gujarati poets, Vajesinh fought his battles with life bravely and singlehandedly.
PHOTO • Umesh Solanki

சிறந்த எழுத்துப் பரிசோதகரும் கொண்டாடப்படாத குஜராத்தி கவிஞருமான வஜேசிங் தன்னுடைய வாழ்க்கைப் போராட்டங்களை வீரத்துடன் ஒற்றையாய் நின்று எதிர்கொண்டார்

ஆனால் புரட்சிக்கான கவிஞராக வஜேசிங் என்றுமே இருந்ததில்லை. அவரைப் பொறுத்தவரை, வார்த்தைகள் தீப்பொறிகள் கூட அல்ல.

பலமாக காற்று வீசப்போகும்
தருணத்துக்காக காத்துக் கொண்டு இங்கு கிடக்கிறேன்

வெறும் சாம்பல் குவியலாக
நான் இருந்தால் என்ன
நான் நெருப்பு இல்லை
ஒரு புல்லை கூட என்னால் எரிக்க முடியாது
ஆனால் அவர்களின் கண்களில் நிச்சயமாக நான் படுவேன்
எரிச்சலூட்டுவேன்
அவர்களில் ஒருவரேனும்
சிவக்கும் வரை கண் கசக்க செய்ய என்னால் முடியும்

இப்போது 70 கவிதைகள் பதிப்பிக்கப்படாமல் இருக்கின்றன. நம் கண்களுக்கும் மனங்களுக்கும் அதிகம் எரிச்சல் கொடுக்கத்தக்கவை. நாமும் பலமான காற்றுக்காகதான் காத்துக் கொண்டிருக்கிறோம்.

ஜூலாடி*

குழந்தையாக இருந்தபோது
அப்பா ஒரு ஜூலாடி வாங்கிக் கொடுத்தார்
ஒருமுறை துவைத்ததும் சுருங்கி விட்டது
நிறம் போனது
நூல் தளர்ந்து போனது
எனக்கு பிடிக்கவில்லை
தூக்கிப் போட்டேன்
அந்த ஜூலாடி உடுத்த விருப்பமில்லை.
அம்மா தலையில் தடவிக் கொடுத்து
சமாதானமாக பேசினார்,
“கிழியும் வரை உடுத்திக் கொள், கண்ணே
பிறகு புதியதை வாங்கிக் கொள்ளலாம், சரியா?”
நான் வெறுத்த ஜூலாடி போல் தொங்குகிறது
இன்று என் உடல்.
எங்கும் சுருக்கங்கள்
உருகிக் கொண்டிருக்கும் மூட்டுகள்
சுவாசித்தால் நடுக்கம்
என் மனம் தூக்கியெறிய சொல்கிறது
இந்த உடல் எனக்கு வேண்டாம்!
உடற்கூட்டை உதிர்க்க முடிவெடுக்கையில்
அம்மாவின் இனிமையான பேச்சு நினைவுக்கு வருகிறது
“கிழியும் வரை, உடுத்திக் கொள் கண்ணே
போன பிறகு…

அவரின் பிரசுரிக்கப்படாத குஜராத்தி கவிதையின் மொழிபெயர்ப்பு
*ஜூலாடி என்பது பழங்குடி சமூகக் குழந்தைகளால் உடுத்தப்படும் பூத்தையல் போட்ட பாரம்பரிய மேற்சட்டை


வஜேசிங் பார்கி மறைவதற்கு சில நாட்களுக்கு முன் நம்மிடம் பேசிக் கொண்டிருந்த வஜேசிங் பார்கிக்கு எழுத்தாளர் நன்றி தெரிவிக்கிறார். இக்கட்டுரைக்கு உதவிய முகேஷ் பார்கிக்கும் கவிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான கஞ்சி படேலுக்கும் நிர்தாரின் ஆசிரியர் உமேஷ் சொலாங்கிக்கும், வஜேசிங்கின் நண்பர் மற்றும் எழுத்தாளரான க்ரித் பர்மாருக்கும் கலாலியவாட் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சதீஷ் பர்மாருக்கும் நன்றிகள்.

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எல்லா கவிதைகளும் குஜராத்தி மொழியில் வஜேசிங் பார்கியால் எழுதப்பட்டவை. ஆங்கிலத்தில் பிரதிஷ்தா பாண்டியாவால் மொழிபெயர்க்கப்பட்டவை

தமிழில்: ராஜசங்கீதன்

Pratishtha Pandya

কবি এবং অনুবাদক প্রতিষ্ঠা পান্ডিয়া গুজরাতি ও ইংরেজি ভাষায় লেখালেখি করেন। বর্তমানে তিনি লেখক এবং অনুবাদক হিসেবে পারি-র সঙ্গে যুক্ত।

Other stories by Pratishtha Pandya
Photos and Video : Umesh Solanki

সাংবাদিকতায় স্নাতকোত্তর উমেশ সোলাঙ্কি আহমেদাবাদ-নিবাসী ফটোগ্রাফার, তথ্যচিত্র নির্মাতা এবং লেখক। পথেপ্রান্তরে ঘুরে বেড়ানোই তাঁর নেশা। এ অবধি তিনটি কাব্য-সংকলন, একটি ছান্দিক উপন্যাস, একখানা উপন্যাস ও একটি ক্রিয়েটিভ নন-ফিকশন সংকলন প্রকাশ করেছেন তিনি।

Other stories by Umesh Solanki
Editor : P. Sainath

পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।

Other stories by পি. সাইনাথ
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan