“படிப்பதற்கு எனக்கு பொறுமை இல்லை,” என்கிறார் பார்த்தா பிரதிம் பருவா. மஜுலியின் கராமுருக்கு, நவம்பர் மாத மதியப்பொழுது ஒன்றில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். “படித்து வேலை பெற முடியாதென எனக்கு தெரியும்,” என்கிறார் அவர். கராமுரின் சாரு சத்திரத்தில் இயங்கும் இளம் கயான்-பயான் களில் 16 வயதான அவரும் ஒருவர்.
சத்ரிய பண்பாட்டின் முக்கியமான அம்சமான கயான்-பயான், அஸ்ஸாமின் (வைணவ மட) சத்திரங்களில் பிரதானமாக நடக்கும் மதம் சார்ந்த நாட்டுப்புற கலை ஆகும். சிங்கிகளுடன் பாடும் பாடகர்கள் கயான்கள் எனப்படுகின்றனர். கோல் மேளங்களையும் புல்லாங்குழலையும் வாசிக்கும் வாத்தியக்காரர்கள் பயான் என அழைக்கப்படுகிறார்கள். மஜுலியில் கயானோ பயானோ வேலை அல்ல; அந்த மக்கள் பெருமையுடன் கடைப்படிக்கும் பாரம்பரியமும் அவர்களின் அடையாளத்தின் ஒரு பகுதியும் ஆகும்.
“பள்ளிக்கு பிறகு எனக்கு வேலை கிடைக்கவில்லை எனில், என் விதியில் அது இல்லை எனில், நான் என்ன செய்ய முடியும்?” என இயல்பாக கேட்கிறார் பார்த்தா. 12ம் வகுப்பு தேர்வுக்கு பிறகு அவர் இசையை கற்க விரும்புகிறார். அவரின் அக்கா ஏற்கனவே உத்தரப்பிரதேச கிராமம் ஒன்றில் இசை ஆசிரியையாக இருக்கிறார்.
“என் பெற்றோரும் கவுஹாத்தியில் இசைப்பள்ளியில் சேருவதற்கான யோசனைக்கு ஆதரவாக இருந்தன,” என்கிறார் அவர். “அந்த ஆதரவு மிகவும் முக்கியம். அது இல்லாமல், எப்படி நான் இசை கற்க முடியும்?” அரிசியும் விறகும் விற்கும் சிறு கடையின் உரிமையாளரான அவரின் தந்தை, யோசனைக்கு ஒப்புக் கொண்டாலும் அம்மாவுக்கு சந்தோஷம் இல்லை. தூரமாய் சென்று பார்த்தா படிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை.
நிகழ்ச்சியின்போது பார்த்தா வெண்ணிற குர்தாக்களையும் வேட்டிகளையும் தலைப்பாகையும் அணிவார். செலெங் என சொல்லப்படும் துணியையும் உடலைச் சுற்றி கட்டிக் கொள்வார். பங்குபெறுபவர்கள் மொட்டாமொனி மணிகளும் சந்தன திலகமும் நெற்றியில் அணிவார்கள்.
நிகழ்ச்சியில் பங்கெடுத்து நான் நேர்காணல் செய்த பல இளைய கலைஞர்களில் பார்த்தாவும் ஒருவர். மேடையின் பின்புறம் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஒருவருக்கொருவர் பாகை அணியவும் செலெங்கில் பின் குத்தியும் உதவுகின்றனர்.
பத்து வயது மூத்த மனாஷ் தத்தா குழுவின் பயானாக இருக்கிறார். சமீபத்தில் குவஹாத்தியின் தொலைக்காட்சி ஒன்றில் ஜூனியர் படத்தொகுப்பாளராக பணிபுரிய தொடங்கியிருக்கிறார்.
ஒன்பது வயதில் அவர், மாமா மற்றும் பிற மூத்தவர்களுடன் கற்கத் தொடங்கினார். “சத்ரிய சூழலில் நாங்கள் பிறந்ததால், இளம் வயதிலிருந்தே பார்த்து பார்த்து கற்கத் தொடங்கினோம்,” என்னும் அவர், கோல் மேளவாசிப்பில் சங்கீத் விஷாரத் தேர்வில், மெட்ரிகுலேஷன் தேர்ச்சிக்கு முன்பே தேர்ச்சி அடைந்தார்.
கயான் - பயான் அவரது குடும்பத்தில் அங்கமாக இருக்கிறது. அவரது மாமாவான இந்திரநீல் தத்தா, கராமுர் சாரு சத்ராவின் பண்பாட்டு வாழ்க்கையில் முக்கியமான ஆளுமை. “அவருக்கு இப்போது 85 வயது. ஆனால் யாரேனும் கோல் வாசித்தால், ஆடுவதை அவரால் கட்டுப்படுத்த முடியாது.”
தாளம், ராகம், முத்திரையை பொறுத்து வெவ்வேறு சத்திரங்களில் நிகழ்த்தப்படும் கயான் - பயான்களின் தன்மை மாறும். துரா அத்தகையவொரு வகை. கராமுர் சாரு சத்திரத்துக்கும் கராமுர் போர் சத்திரத்துக்கும் உரியது. ஜூன் - ஜூலை மாதங்களில் வழக்கமாக வரும் அஸ்ஸாமிய மாதமான அகரில் நடக்கும் வருடாந்திர விழாவான போர்க்ஸ்பா நாளில் அவை நிகழ்த்தப்படுகின்றன. பர்பெதியாவின் பர்பெதா சாத்ரா மற்றும் கமலாபாரியாவின் கமலாபாரி சாத்ரா ஆகியவை மஜுலியில் வழங்கப்படும் வகைகள். மஜுலியிலிருக்கும் பெரும்பாலான சத்திரங்கள் கமலாபாரியா வடிவத்தை பின்பற்றுகின்றன. கலந்து கொள்பவர்கள் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் இருந்து வருவார்கள்.
கயான் - பயானுக்கு பிறகு சூத்ரதாரி ந்ருத்யா, பாவோனா (பாரம்பரிய நாட்டுப்புற நாடகம்) தொடங்குவதற்கு முன் நிகழ்த்தப்படும். “இவை இல்லாமல் பாவோனா நிறைவடையாது,” என்கிறார் மனாஷ். “பாவோனாவின் உள்ளடக்கத்தை சூத்ரதார் விளக்கி கதையின் கருவை விவரிக்கிறார். இந்த நாட்களில் சூத்ரதாரி எங்களின் தாய்மொழியான அஸ்ஸாமிய மொழியிலும் நிகழ்த்தப்படும். ஆனால் மூலமொழி ப்ரஜவலி.”
‘வேறு மக்கள் கற்க வேண்டுமெனில் நீண்ட காலம் பிடிக்கும். நாங்கள் இச்சூழலிலேயே பிறந்ததாலும் இக்கலையை கண்டு வளர்ந்ததாலும், எங்களுக்கு எளிதாக வந்துவிடும்’
*****
மூன்று வயதிலிருந்து குழந்தைகள் சத்திரத்தில், கலையை கற்க தொடங்குவார்கள். அத்தகைய தொடக்கம், மஜூலியின் பெரிய விழாவான ராஸின்போது நடக்கும். பயிற்சி கூடங்களுக்கு குழந்தைகள் பெற்றோருடன் வருவார்கள். வாசிக்க: ராஸ் மகா உற்சவமும் மஜூலியின் சத்திரங்களும்
குழுவின் இன்னொரு உறுப்பினரும் பயானுமான 19 வயது சுபாஷிஷ் போராவுக்கும், இப்பயணம் 4ம் வகுப்பு படிக்கும்போது தொடங்கியது. மனாஷின் உறவினரான சுபாஷிஷும் மாமாக்களை பார்த்துதான் கற்றுக் கொண்டார். போர்பயான் அவருக்கு மாமா. திறமையான பயான்களுக்கு பட்டத்தை சத்திரம் வழங்கும்.
ராஸ் விழாவில் அவர் நடனமாடியிருந்தாலும் கிருஷ்ண கடவுளின் பாத்திரத்தை குழந்தை பருவத்திலேயே நடித்திருந்தபோதும் சுபாஷிஷ் கோல் வாசிக்க இசைப்பள்ளியில் 10 சிறுவர் சிறுமியுடன் கற்றுக் கொண்டார். ஸ்ரீ ஸ்ரீ பிதாம்பர்தேவ் சாங்ஸ்க்ரிதிக் மகாவித்யாலயா பள்ளி 1979ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இயங்கிய காலமும் உண்டு, மூடப்பட்ட காலமும் உண்டு. ஆசிரியர்கள் இல்லாததால் 2015ம் ஆண்டில் மீண்டும் அது மூடப்பட்டது.
19 வயது பிரியாப்ரத் ஹசாரிகா மற்றும் 27 பிற மாணவர்களுடன் சுபாஷிஷ், மனாஷுக்கு கிரோத் தத்தாவின் கயான் - பயான் வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தார். அவை 2021-ல் தொடங்கப்பட்டன. மகாவித்யாலயா மூடப்படும் வரை மூன்று வருடங்களுக்கு கோல் வாசிக்க பிரியாப்ரத் அங்கு கற்றுக் கொண்டார்.
“இன்னொரு வருடம் கற்க முடிந்திருந்தால், கடைசிக் கட்டமான விஷாரத்தை எட்டியிருப்பேன்,” என்கிறார் அவர். “பள்ளி தொடர்ந்து இருக்குமென நினைத்தேன்.”
கயான் மற்றும் பயான் கற்க பாரம்பரியமான பாடத்திட்டம் என்னவென்பதை அவர் தொடர்ந்து விளக்குகிறார். உள்ளங்கைகளை தட்டி மாணவர்கள் முதலில் தாளங்களை கற்பார்கள். ந்ருத்யோ மற்றும் கோல் ஆகியவற்றின் அடிப்படையும் தொடக்கக் கட்டத்தில் கற்று கொடுக்கப்படும். மாணவர்கள் மதி அகோராவும் கற்பார்கள்.
“மதி அகோரா எங்களின் உடலியல் பண்பாடு. உடற்பயிற்சி போன்றது,” என விளக்குகிறார் மனாஷ். “அதை ஒருவர் செய்துவிட்டால், உடலின் 206 எலும்புகளும் நன்றாக இயங்கும்.” இன்னும் பல வகை அகோராக்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் செய்கையை வைத்து பெயரிடப்பட்டிருக்கின்றன - மொரை பனி கொவா,கச்சை பனி கொவா, டெல்டுபி போன்றவை.
அடுத்தக் கட்டத்தில் மாணவர்கள் கற்க விரும்பும் பாணிக்கு ஏற்ப குழுவாக்கப்படுவார்கள். சிலர் ந்ருத்யோ கற்பார்கள். சிலர் கோலும் சிலர் போர்கீத்தும் கற்பார்கள். கயான்களாக விரும்புபவர்கள் இக்கட்டத்தில் தாளம் கற்றுக் கொள்வார்கள்.
“பிற மக்கள் இவற்றை கற்க விரும்பினால், நிறைய நேரம் பிடிக்கும்,” என்கிறார் மனாஷ். “இச்சூழலில் நாங்கள் பிறந்து (கலையை) பார்த்து வளர்ந்தவர்கள் எங்களால் எளிதாக கற்றுவிட முடியும். இச்சூழலில் சேராதவர்கள் கற்க பல வருடங்கள் பிடிக்கும்.”
கயான் - பயான் புகழ் சமீப வருடங்களில் உயர்ந்திருக்கிறது. சத்திரங்களில் மட்டும் நடந்து கொண்டிருந்த இக்கலை இப்போது அஸ்ஸாமின் கிராமங்களிலும் நடக்கிறது. எனினும் கயான்களையும் பயான்களையும் கற்போரின் எண்ணிக்கை குறைந்து கொண்டுதான் வருகிறது. மஜூலியிலிருந்து இளம் தலைமுறை நல்ல வாய்ப்புகள் தேடி புலம்பெயருகிறது.
“இது எல்லாம் அழிந்து விடுமென்கிற அச்சம் வரத்தான் செய்கிறது,” பிரியாப்ரத் சொல்கிறார்.
சங்கரதேவாவின் பெரும்பாலான இசைக்கோர்வைகள், அவரின் வாழ்நாளிலேயே அழிந்துவிட்டன. தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வருவது அதில் மிகக் கொஞ்சம்தான். ஆனால் பாரம்பரிய தொடர்ச்சியை உறுதியாக நம்புகிறார் மனாஷ்.
“தலைமுறை தலைமுறையாக மாறி வருவது கூட நின்று போகும். ஆனால் சங்கரதேவாவின் படைப்புகள் அழியாது. அவர் எங்களுக்குள் தொடர்ந்து வாழ்வார்,” என்கிறார் அவர். “மஜுலியில் நான் பிறந்தது முக்கியமான அம்சம். (இந்த பாரம்பரியம்) மஜுலியில் உயிருடன் இருக்கிறது. தொடர்ந்து இருக்கும். அதை நான் நிச்சயமாக சொல்ல முடியும்.”
இக்கட்டுரை மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையின் (MMF) மானியப்பணி துணையுடன் எழுதப்பட்டது.
தமிழில்: ராஜசங்கீதன்