“குந்தர் நாயக் வீட்டில் இருக்கிறாரா?” பக்கத்து வீட்டின் முற்றத்தில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த பெண்மணியிடம் கேட்டேன்.
“யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” கேள்விகள் வந்து விழுந்தன.
நான் காரியாரைச் சேர்ந்த ஒரு பத்திரிகை நிருபர். இதற்கு முன் குந்தரைப் பற்றி பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். இப்போது அவர் எப்படியிருக்கிறார் என்று தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று விளக்கமளித்தேன்.
அவர் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, “நீங்கள் தாகூர்ஜி தானே?“ என்று கேட்டார். ஆமாம் என்றேன், இத்தனை வருடங்கள் கழித்தும் என்னை அடையாளம் கண்டுபிடித்துவிட்டாரே என்ற சந்தோஷத்தில்.
நான் 1996 – 97 ஆண்டுகளில் பல முறை ஒடிசாவின் போலாங்கிர் (பலாங்கிர் என்றும் எழுதப்படும்) மாவட்டத்தில் பாங்கோமுண்டா பிளாக்கில் உள்ள பர்லாபஹேலி கிராமத்திற்குச் சென்றிருக்கிறேன். இப்போது இருபது வருடங்கள் கழித்து மீண்டும் வந்திருக்கிறேன்.
1996 ஆம் ஆண்டு மேற்கு ஒடிசாவின் போலாங்கிர், நுவாபாடா மற்றும் பிற மாவட்டங்களில் உருவான கடுமையான வறட்சி காரணமாக பஞ்சமும் பட்டினியும் நிலவியது. இதனால் இங்கிருந்து மக்கள் வெளியேறத் துவங்கினார்கள். பலர் ஆந்திராவின் செங்கல் சூளைகளுக்கு கூலித் தொழிலாளர்களாக புலம் பெயர்ந்தனர். வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இப்பிரதேசங்களில் இது போன்ற நிகழ்வுகள் புதிது அல்ல. இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வரும் வறட்சி இத்தகைய நிலைமைகளை உருவாக்கிவிடும்.
ஒரு விவசாயக் கூலித் தொழிலாளியின் 32 வயது இளம் விதவையான கமேலா என்கிற பால்மதி நாயக் பர்லாபஹேலி கிராமத்தில் வசிக்கும் சுமார் 300 பேரில் ஒருவர். இவரது கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டிருந்தார். கடனை அடைப்பதற்காக தங்களுக்கு சொந்தமான ஒரு சிறிய நிலத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் கமேலா. பிறகு தினக்கூலியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வறட்சிக்குப் பிறகு கிராமத்தில் கூலி வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவரும் அவரது ஆறு வயது மகன் குந்தரும் பட்டினியால் வாடினர். கமேலா இறப்பதற்கு முன் அவர்களது நிலைமையைக் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தகவல் அளித்ததாக கிராமவாசிகள் கூறினர். ஆனால் அதிகாரிகளின் தரப்பிலிருந்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
செப்டம்பர் 6, 1996 அன்று, சுமார் 15 நாட்கள் பட்டினியால் வாடிய பிறகு கமேலா இறந்து போகிறார். அவர் இறந்து பல மணி நேரங்கள் கழித்துதான் அவரது சடலத்திற்கு அருகே அழுது கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் அவரது மகனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பார்க்கின்றனர்.
இந்த பட்டினிச் சாவு மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்த என்னுடைய கட்டுரைகள் அக்டோபர் 1996 இல் தைனிக் பாஸ்கரில் வெளிவந்தது. அதன்பிறகு உள்ளூர் சமூக சேவகர்கள் மற்றும் சில எதிர்கட்சித் தலைவர்கள் கிராமத்திற்கு சென்று பிரச்சனையை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர். மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களும் வந்து பார்த்துவிட்டு இது பட்டினிச் சாவுதான் என்று ஊர்ஜிதப்படுத்தினர். அரசியல் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அனைவரும் கிராமத்திற்கு வரிசையாக வருகையளித்தனர். அப்போதைய பிரதமர் திரு ஹெச். டி. தேவேகௌடா அவர்களும் கூட வறட்சியினால் பாதித்த இடங்களைப் பார்வையிட வரும்போது இங்கேயும் வருகைதர திட்டமிருந்தது. ஆனால் அவர் வரவில்லை.
வேலைவாய்ப்புதான் தங்களுக்கு மிக முக்கியமான தேவையென்று பார்வையிட வந்த அலுவலர்களிடம் கிராமவாசிகள் கூறினார்கள். தங்கள் தரப்பை அவர்கள் வலியுறுத்தியபோது, இந்தப் பிரச்சனையை வைத்து அரசியல் செய்தாலோ அல்லது போராட்டத்தை தீவிரப்படுத்தினாலோ அவர்கள் கிராமத்திற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் சொற்ப நலன்களும் (குடும்ப நல அட்டை போன்றவை) கூட கிடைக்காமல் போய்விடும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்ததாக கிராமவாசிகள் கூறினர்.
தனது அம்மாவின் மறைவிற்குப் பிறகு சிறுவன் குந்தர் மிகவும் பலவீனமாக இருந்தான். உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள் அவனை 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரியார் மிஷன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அவனுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பெருமூளை மலேரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனது உடல்நிலை மிக மோசமாக இருந்தாலும் உயிர் பிழைத்துக் கொண்டான்.
உடல்நிலை தேறியதும் அவன் மீண்டும் கிராமத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டான். அவனது கதையை எழுதுவதற்காக தேசிய ஊடகங்கள் அங்கே வந்தன. மாவட்ட நிர்வாகம் அவனுக்கு 5000 ரூபாய் கொடுத்தது. 3000 ரூபாய் வைப்பு நிதி. 2000 ரூபாய் சேமிப்பு. அத்துடன் தங்கள் பொறுப்பு முடிந்ததென்று அவர்கள் கைகழுவிவிட்டனர்.
19 வருடங்களாக, குந்தர் எப்படி இருப்பான் அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்ற கேள்விகள் என் மனதில் இருந்துகொண்டேயிருந்தது.
கமேலாவின் கணவருக்கு மூத்த மனைவியின் மூலமாக ஒரு மகன் இருந்தார். சுஷில் என்று பெயர். கமேலா இறந்த சமயத்தில், சுஷிலுக்கு 20 வயது இருக்கும். காரியார்-பவானிபட்னா சாலையில் ஒரு சாலை கட்டுமான பணியிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
குந்தர் இப்போது பர்லாபஹேலியிலிருந்து ஐந்து கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கும் துக்லா கிராமத்தில் உள்ள பப்பு அரிசிமில்லில் வேலை செய்வதாக அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி கூறினார். அவரது மாமியார் வீடு துக்லாவில் தான் இருக்கிறது என்றும் குந்தருக்கு இப்போது இரண்டு மாத குழந்தை இருப்பதாகவும் கூறினார். அவரது அண்ணன் (அப்பாவின் முதல் மனைவியின் மகன் சுஷில்) அருகில் உள்ள வயலில் கூலி வேலை செய்வதாகக் கூறினார்.
வயல்வரப்பு வழியாக மோட்டார்சைக்கிளை ஒட்டிச்சென்று, சுஷில் தனது முதலாளிக்காக உழுது கொண்டிருந்த வயலைக் கண்டுபிடித்துவிட்டேன். அவரது மூன்று மகள்களும், ஒரு மகனும் அருகிலிருந்தனர். குந்தரின் அம்மா மரணமடைந்த சமயம் நான் சுஷிலை சந்தித்தபோது அவருக்கு திருமணமாகியிருக்கவில்லை. இப்போது சுஷிலுக்கு 40 வயது. அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நான் எழுதியிருக்கும் கட்டுரைகளைக் குறித்து கூறியபோது அவருக்கு ஞாபகம் வந்தது.
சுஷிலுக்கு ஒரு நாளைக்கு 130 ரூபாய் என்ற கணக்கில் கிடைக்கும் ரூபாய் 4000 மாத வருமானத்தில் தான் மொத்த குடும்பமும் வாழ்கிறது. குழந்தைகளில் சிலர் ஆடை அணிந்திருந்தனர், சிலருக்கு இல்லை. அவர்களது வறுமை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.
நான் குந்தரைப் பார்க்க துக்லா சென்றேன். அங்கே பப்பு அரிசி மில்லில் முதலாளி பப்புவை சந்தித்தேன். குந்தர் தனது கிராமத்திற்கு சென்றிருப்பதாக அவர் கூறினார். பிறகு நான் குந்தரின் மாமியார் வீட்டிற்குச் சென்றேன். அங்கே மகன் சுபமை கையில் வைத்துக் கொண்டிருந்த குந்தரின் மனைவி ரஷ்மிதாவை சந்தித்தேன். தனது கணவர் பர்லாபஹேலியில் உள்ள வீட்டை சுத்தம் செய்ய சென்றிருப்பதாகவும், சென்று நெடுநேரம் ஆகிவிட்டதாகவும் கூறினார்.
நான் மீண்டும் பர்லாபஹேலிக்குச் சென்றேன். குந்தர் வீட்டில்தான் இருந்தார். சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார். அந்த ஆறு வயது சிறுவன் இப்போது ஒரு இளம் வாலிபன், கணவர் மற்றும் அப்பா ஆகிவிட்டிருந்தார். ஆனாலும் அவரிடம் இன்னும் ஒரு களங்கமற்ற தன்மையிருந்தது. மேலும் தனது சிறுவயது பலவீனம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றிலிருந்து அவர் முழுமையாக மீளவில்லை.
மண் மற்றும் ஓடு கொண்டு கட்டப்பட்டிருந்த அந்த வீடு இன்றும் அப்படியேதான் இருந்தது. குந்தரின் குடும்பம் ஒரு அறையிலும் சுஷிலின் குடும்பம் இன்னொரு அறையிலும் வசித்தனர். மனைவியின் பிரசவத்திற்காக மாமியார் வீட்டில் இருந்ததாகவும் கூடிய விரைவில் பர்லாபஹேலிக்கு திரும்பிவிடுவோம் என்றும் குந்தர் சொன்னார்.
கடந்த காலத்தை பற்றிய விஷயங்கள் எவ்வளவு ஞாபகம் இருக்கிறது என்று குந்தரிடம் கேட்டேன்.
“எனது பெற்றோர் பசி காரணமாக எப்போதும் உடல்நலமில்லாமல் இருந்தார்கள் என்பது ஞாபகமிருக்கிறது,” என்றார் அவர். “அம்மாவுக்கு காய்ச்சல் இருந்தது. பல நாட்கள் பட்டினியாகக் கிடந்து கடைசியில் இறந்துவிட்டார்.”
ஆஸ்பத்திரியில் குந்தர் இருந்து திரும்பி வந்த பிறகு, எனது கட்டுரைகளின் தாக்கத்தின் காரணமாக, நிர்வாகம் அவருக்கு ஆதிவாசி சிறுவர்களுக்கான ஒரு உள்ளூர் ஆசிரம விடுதிப் பள்ளியில் தங்கிப் படிக்க இடம் வாங்கிக் கொடுத்தது.
“நான் இரண்டாவது அல்லது மூன்றாவது வரைதான் படித்தேன்.” குந்தர் கூறினார். “கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது எனக்கு சாப்பிட உணவு கிடைக்காது. அதனால் அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆடு மாடுகளை மேய்த்து அவர்கள் தரும் உணவை சாப்பிட்டுக்கொள்வேன். அதன்பின் நான் பள்ளிக்கு திரும்பிச் செல்லவில்லை. பிறகு துக்லாவில் ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கே எனக்கு சாப்பாடும் ஒரு நாளைக்கு 50 ரூபாயும் கொடுத்தார்கள். ஒருமுறை நானும் எனது நண்பர்கள் இரண்டு மூன்று பேரும் மஹாசமுந்தில் ஒரு செங்கல் சூளையில் வேலைக்குச் சென்றோம். மூன்று நான்கு மாதங்கள் வேலை செய்தோம். ஆனால் செங்கல் சூளையின் முதலாளி சம்பளம் கொடுக்காமல் எங்களை அடித்து விரட்டிவிட்டார். நாங்கள் திரும்பி வந்து மீண்டும் கிராமத்தில் உள்ளவர்களின் ஆடு மாடுகளை மேய்க்க ஆரம்பித்தோம்.”
அவரது அண்ணனும் அண்ணியும் அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். “நான் ஒரு ஏழை. என்று வருமானம் வருகிறதோ அன்று தான் சாப்பாடு. அதனால் திருமண கொண்டாட்டங்கள் எதுவுமில்லாமல் எனது மனைவியை வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டேன்.”
துக்லாவில் பப்பு அரிசி மில்லில் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள், நான் கேட்டேன்.
“எனக்கு அங்கே அரிசி மூட்டைகளைத் தைக்கும் வேலை. ஒரு நாளைக்கு 80 ரூபாய் கூலி கிடைக்கும்,” என அவர் சொன்னார். “அரிசி மூட்டை தூக்குபவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 130 கிடைக்கும். ஆனால் இந்த வெயிலில் என்னால் பாரம் சுமக்க முடியாது. அதனால்தான் மூட்டை தைக்கிறேன்.”
குந்தரிடம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான அட்டை இல்லை. ஆனால் அந்த்யோதயா அட்டை இருக்கிறது. அதில் அவருக்கு மாதம் 35 கிலோ அரிசி கிடைக்கும்.
உங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பீர்களா எனக் கேட்டேன்.
“நான் ஒரு ஏழை. என்னால் முடிந்தவரை அவர்களைப் படிக்க வைப்பேன். எங்களுக்கு சாப்பிடுவதற்கு போதுமான உணவு இல்லாததால், எனது மனைவியால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. அதனால் அமுல் பால் வாங்க வேண்டியதிருக்கிறது. அதற்கே பாதி வருமானம் போய்விடுகிறது.”
கடந்த மாதம் மீண்டும் ஒருமுறை நான் அவரது கிராமத்திற்கு போனபோது, குந்தர் செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக ஆந்திரா சென்றிருந்தார். அவர்களது மொத்த குடும்பமுமே சூளையில்தான் இருந்தது, வேலை செய்து மைத்துனியின் திருமண செலவிற்கு காசு சேர்ப்பதற்காக. ஒவ்வொருவரும் வாங்கியிருந்த 18000 ரூபாய் முன்பணத்திற்காக அவர்கள் மிகக் கடினமாக வேலை செய்ய வேண்டியதிருந்தது. ஆனால் அது முடிந்து அவர்கள் பர்லாபஹேலிக்கு திரும்பி வந்த பிறகு, இடைவிடாத உடல்நலக்குறைவு மற்றும் அதற்கான மருத்துவ செலவுகளே அவர்கள் திருமணத்திற்காக சேர்த்துவைத்த தொகையிலிருந்து ஒரு பெரிய பகுதியை எடுத்துக்கொண்டது.
சில நாட்கள் கழித்து, குந்தர் மீண்டும் சூளைக்கு சென்றுவிட்டார். அவர் இப்போது அங்கே லோடராக வேலை செய்கிறார். செங்கல்களை அடுத்த பயணத்திற்காக டிராக்டர்களில் அடுக்கி வைக்கும் வேலை.
பத்தொன்பது வருடங்களுக்கு முன் தனது அம்மாவைக் காவு வாங்கி தன்னையும் வாழ்நாள் முழுவதும் பலவீனமாக்கிய அந்தப் பசியின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க இன்றும் அந்த இளைஞனும் அவன் குடும்பமும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இக்கட்டுரையின் ஒரு பிரதி ஆகஸ்ட் 14, 2016-ல் அமர் உஜாலாவில் பிரசுரிக்கப்பட்டது. பாரிக்காக இந்தியிலிருந்து ருச்சி வர்ஷ்னேயா மொழிபெயர்த்தார்.
தமிழில்: சுபாஷிணி அண்ணாமலை