வயலில் விளையும் ஆமணக்கு செடிகளை பார்த்ததும் கொல்ஹாப்பூரி செருப்புகளை நினைவுகூருகிறார் நாராயண் கெயிக்வாட். 20 வருடங்களுக்கு முன் அவற்றை பயன்படுத்தினார். “கொல்ஹாப்பூரி செருப்புகளுக்கு ஆமணக்கு எண்ணெயை விடுவோம். அதிக நாள் செருப்பு உழைக்க அது உதவும்,” என்கிறார் 77 வயது விவசாயியான அவர், எண்ணெய்க்கும் அப்பகுதியின் பிரபலமான செருப்புக்கும் உள்ள தொடர்பை குறிப்பிட்டு.
கொல்ஹாப்பூரி செருப்புகளுக்காகதான் கொல்ஹாப்பூர் மாவட்டத்தில் பிரதானமாக ஆமணக்கு எண்ணெய் எடுக்கப்படுகிறது. எருமை அல்லது பசுவின் தோலால் செய்யப்படும் இந்த செருப்புகளுக்கு எண்ணெய் விடுவதன் மூலம், அவற்றின் வடிவத்தையும் மென்மையையும் காக்க முடியும். அதற்கு அதிகம் பயன்படும் எண்ணெய், ஆமணக்கு செடிகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான்.
இப்பகுதியின் பூர்விகப் பயிர் இல்லையென்றாலும், ஆமணக்கு பிரபலமான பயிராக கொல்ஹாப்பூரில் இருக்கிறது. பசிய இலைகளுடன் தடித்த தண்டு கொண்ட செடி, வருடம் முழுக்க வளரக் கூடியது. உலகளவில் அதிக ஆமணக்கு தயாரிக்கும் நாடு இந்தியாதான். 2021-22-ல் மட்டும் 16.5 லட்சம் டன் ஆமணக்கு விதை உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவில் அதிகமாக குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்தான் ஆமணக்கு தயாரிக்கப்படுகிறது.
”என் தந்தை 96 வயது வரை வாழ்ந்தார். ஒவ்வொரு வருடமும் அவர் ஆமணக்கு செடியை நட்டார்,” என்னும் நாராயணும் அந்தப் பாரம்பரியத்தை தொடர்கிறார். அவருடைய 3.25 ஏக்கர் நிலத்தில் வருடந்தோறும் ஆமணக்கு பயிர் விளைவித்து வருகிறார். அவருடைய குடும்பம், கடந்த 150 வருடங்களாக ஆமணக்கு விளைவித்து வருவதாக அவர் நம்புகிறார். “இந்த இயற்கை விதைகளை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக காக்கிறோம்,” என்கிறார் ஒரு செய்தித்தாளில் பாதுகாப்பாக அவர் சுற்றி வைத்திருக்கும் விதைகளை காட்டி. “என் மனைவியும் நானும்தான் இப்போது இவற்றை பாதுகாத்து வருகிறோம்.”
நாராயண் மற்றும் 66 வயது குசும், தாம் வளர்க்கும் ஆமணக்கு விதைகளிலிருந்து எண்ணெயும் எடுக்கின்றனர். பரவலாக எண்ணெய் ஆலைகள் பல இருந்தும், அவர்கள் தாமாகதான் அந்த வேலையை செய்கிறார்கள். “முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நாங்கள் எண்ணெய் எடுப்போம்,” என்கிறார் நாராயண்.
“நான் குழந்தையாக இருக்கும்போது கிட்டத்தட்ட எல்லா குடும்பமும் ஆமணக்கு வளர்த்து எண்ணெய் எடுக்கும். ஆனால் இங்குள்ள அனைவரும் ஆமணக்கு வளர்ப்பதை நிறுத்தி விட்டு கரும்பு வளர்க்கத் தொடங்கி விட்டனர்,” என்கிறார் குசும். ஆமணக்கு எண்ணெய் தயாரிக்கும் நுட்பத்தை அவருக்கு அவரது மாமியார் கற்றுக் கொடுத்தார்.
2000மாம் ஆண்டு வரை, கெயிக்வாட் குடும்பம், நூற்றுக்கும் மேற்பட்ட ஆமணக்கு செடிகளை நிலத்தில் வளர்த்தது. அந்த எண்ணிக்கை குறைந்து இப்போது வெறும் 15 செடிகள் மட்டும்தான் நிலத்தில் இருக்கிறது. கொல்ஹாப்பூரின் ஜம்பாலி கிராமத்தில் ஆமணக்கு விளைவிக்கும் மிகச் சில விவசாயிகளில் அவர்களும் அடக்கம். ஆமணக்கு காய் உற்பத்தி கொல்ஹாப்பூரில் சரிவை சந்தித்த பிறகு, “நான்கு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஆமணக்கு எண்ணெய் எடுக்கிறோம்,” என்கிறார் அவர்.
சமீப காலமாக சரிந்து போயிருக்கும் கொல்ஹாப்பூரி செருப்புகளின் விற்பனை ஆமணக்கு உற்பத்தியை அப்பகுதியில் கடுமையாக பாதித்திருக்கிறது. “கொல்ஹாப்பூரி செருப்புகளின் விலை அதிகம். குறைந்தபட்சம் 2000 ரூபாய் விலை இருக்கும்,” என விளக்குகிறார் நாராயண். எடையும் இரண்டு கிலோ இருக்கும். விவசாயிகளிடம் அவற்றின் பிரபலம் குறைந்துவிட்டது. ரப்பர் செருப்புகள் விலை மலிவாகவும் எடை குறைவாகவும் கிடைக்கிறது. “என் மகன்கள் பெரியளவில் கரும்புகள் விளைவிக்கத் தொடங்கி விட்டனர்,” என்கிறார் நாராயண், ஆமணக்கிலிருந்து மாறியதற்கான காரணத்தை விளக்கி.
10 வயதாக இருக்கும்போது முதன்முதலாக ஆமணக்கு எண்ணெய் எடுக்க நாராயணுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. “எல்லாவற்றையும் பெருக்கி, அவற்றை சேகரியுங்கள்,” என ஐந்து கிலோ ஆமணக்கு காய்கள் கிடக்கும் வயலை சுட்டிக்காட்டும்போது தாய் சொன்னதை நினைவுகூருகிறார் அவர். விதைத்த 3-4 மாதங்களில் ஆமணக்கு செடி காய்க்கத் தொடங்கும். சேகரிக்கப்படும் காய்கள் மூன்று நாட்களுக்கு வெயிலில் காய வைக்கப்படும்.
காய்ந்த காய்களிலிருந்து எண்ணெய் எடுக்கும் வேலை பெரும் உழைப்பை கோரக்கூடியது. “காய்ந்த ஆமணக்கு காய்கள் மீது ஏறி மிதித்து நசுக்குவோம். இது முட்களை நசுக்கி, விதைகளை தனியாக்கும்,” என விளக்குகிறார் நாராயண். பிறகு விதைகள், சுளி என்னும் மண் அடுப்பில் வைத்து வேக வைக்கப்படும்.
வெந்த பிறகு, எண்ணெய் எடுக்கப்பட விதைகள் தயாராகி விடும்.
தாய் காசாபாய் ஆமணக்கு விதை நசுக்க புதன்கிழமைகளில் நாராயண் உதவுவார். “ஞாயிறு தொடங்கி செவ்வாய்கிழமை வரை நாங்கள் வயலில் வேலை பார்ப்போம். பிறகு விளைச்சலை (காய்கறிகள் மற்றும் பயிர்) வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை அருகே உள்ள வாரச்சந்தைகளில் விற்போம்,” என நினைவுகூருகிறார். “புதன்கிழமைதான் எங்களுக்குக் கிடைக்கும் ஒரே நாள்.”
அறுபது வருடங்கள் கழித்து இப்போது கூட, கெயிக்வாட்கள் புதன்கிழமைகளில்தான் காய்கள் நசுக்குகின்றனர். அக்டோபரின் இந்த காலைப்பொழுதில் குசுமின் பக்கத்து வீட்டுக்காரரும் உறவினருமான வந்தனா மக்துமின் வீட்டில் இருவரும் உகால்-முசாலில் விதைகளை நசுக்குகின்றனர்.
உகால் - கருங்கற்களால் 6-8 அங்குல ஆழத்துடன் செய்யப்பட்டு கூடத்தின் தரையில் பொருத்தப்பட்டிருக்கும் உரல் ஆகும். தரையில் குசும் அமர்ந்து தேக்காலான முசாலை (உலக்கை) தூக்க உதவுவார். நின்று கொண்டிருக்கும் வந்தனா அதைக் கொண்டு ஆமணக்கு விதைகளை வேகமாக குத்தி நசுக்குவார்.
“மிக்ஸிகளெல்லாம் முன்பு கிடையாது,” என்கிறார் குசும், இக்கருவியின் பல கால பயன்பாட்டை விளக்கி.
வேலையைத் தொடங்கி முப்பது நிமிடங்களில், ஆமணக்கு எண்ணெய் துளிகள் உருவாவதை காட்டுகிறார். “ரப்பர் போன்ற படலம் உருவாகும்,” என விளக்குகிறார் அவர் கட்டை விரலில் ஒட்டியிருக்கும் கரியக் கலவையைக் காட்டி.
இரண்டு மணி நேரங்கள் குத்தி முடித்த பிறகு, கலவையை உகலிலிருந்து குசும் ஒரு பாத்திரத்தில் சேகரித்து, அதில் வெந்நீரை ஊற்றுகிறார். இரண்டு கிலோ நசுக்கப்பட்ட ஆமணக்கு விதைகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து லிட்டர் வெந்நீர் தேவைப்படும் என அவர் விளக்குகிறார். அடுப்பில் வைத்து கலவை இன்னும் காய வைக்கப்படும். எழும் புகையில் கண்களை திறந்து வைத்திருக்க சிரமப்படும் குசும், “இதற்கு நாங்கள் பழகி விட்டோம்,” என சொல்கிறார் இருமியபடி.
கலவை கொதிக்கத் தொடங்கியதும், என் சட்டையிலிருந்து ஒரு நூலை உருவி அதில் போடுகிறார் குசும். “இதை செய்யும்போது ஒரு வெளியாள் வீட்டுக்கு வந்தால், அவரின் துணியிலிருந்து ஒரு நூல் உருவி இதில் போடுவோம். இல்லையெனில், அவர்கள் எண்ணெயை திருடி விடுவார்கள்,” என விளக்குகிறார். “அது மூட நம்பிக்கை,” என வேகமாக சொல்லும் நாராயண், “அந்த காலத்தில், வெளியிலிருந்து வரும் எவரும் எண்ணெயை திருடி விடுவாரென நம்பப்பட்டது. அதனால்தான் அவர்கள் இந்த நூலை போட்டனர்,” என்கிறார்.
நீர் மற்றும் நசுக்கப்பட்ட ஆமணக்கு விதைகள் குழம்பை ஒரு பெரிய மரக்கரண்டியில் குசும் கலக்குகிறார். இரண்டு மணி நேரங்களில், எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கத் தொடங்கி விடுகிறது.
“எண்ணெயை நாங்கள் எப்போதும் விற்றதில்லை. இலவசமாகவே கொடுத்திருக்கிறோம்,” என சொல்லும் நாராயண், அருகாமை கிராமங்களிலிருந்து ஆமணக்கு எண்ணெய்க்காக அவர் குடும்பத்தை தேடி மக்கள் வந்த விதத்தை நினைவுகூருகிறார். “கடந்த நான்கு வருடங்களாக, எண்ணெய் வாங்க யாரும் வரவில்லை,” என்கிறார் குசும், எண்ணெயை வடிகட்டியபடி.
இந்த நாள் வரை, லாபத்துக்காக ஆமணக்கு எண்ணெயை விற்க கெயிக்வாட்கள் நினைத்ததே இல்லை.
ஆமணக்கு தயாரிப்பில் கிடைக்கும் வருமானம் பெரிதாக ஒன்றுமில்லை. “ஜெய்சிங்பூரிலிருந்து வரும் வியாபாரிகள், ஆமணக்கு காய்களை மலிவாக கிலோ 20-25 ரூபாய்க்கு வாங்குவார்கள்,” என்கிறார் குசும். தொழிற்சாலைகளில், பூச்சுக்கும், மெழுகுக்கும், இலகுவாக்கவும் ஆமணக்கு எண்ணெய் பயன்படுகிறது. சோப்களிலும் ஒப்பனை பொருட்களிலும் கூட அது பயன்படுத்தப்படுகிறது.
“எண்ணெய் எடுக்க மக்களுக்கு இப்போது நேரம் இருப்பதில்லை. தேவையெனில், நேரடியாக ஆமணக்கு எண்ணெயை சந்தையிலிருந்து வாங்கிக் கொள்கிறரகள்,” என்கிறார் குசும்.
இந்த காலக்கட்டத்தில், ஆமணக்கின் பல கால பலன்களை பாதுகாக்க கெயிக்வாடுகள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். “ஆமணக்கு இலையை தலையில் வைத்தால், மனம் அமைதியாக இருக்கும்,” என்கிறார் நாராயண். “ஒரு துளி ஆமணக்கு எண்ணெயை காலை உணவுக்கு முன் எடுத்தால், வயிற்றில் இருக்கும் பாக்டீரியாவை அது கொல்லும்.”
“ஆமணக்கு செடி, விவசாயியின் குடை,” என சொல்லும் அவர், நீரை ஏற்காத பளபளப்பான இலைகளை சுட்டிக் காட்டுகிறார். ஏப்ரலிலிருந்து செப்டம்பர் மாதம் வரை இருக்கும் நீண்ட மழைக்காலத்தில் இது உதவும். “நசுக்கப்பட்ட ஆமணக்கு விதைகள், நல்ல இயற்கை உரங்களும் கூட,” என்கிறார் நாராயண்.
பாரம்பரிய பயன்கள் பல இருந்தாலும், ஆமணக்கு செடிகள் கொல்ஹாப்பூரின் வயல்களிலிருந்து வேகமாக மறைந்து வருகின்றன.
கொல்ஹாப்பூரில் அதிகரித்து வரும் கரும்புப் பயிருக்கான தேவை, ஆமணக்கு எண்ணெயின் தேவையை குறைத்திருக்கிறது. மகாராஷ்டிரா அரசிதழின் தரவுகளின்படி, 1955-56-ல் 48,361 ஏக்கர் நிலத்தில் கரும்புகள் விளைவிக்கப்பட்டிருக்கின்றன. 2022-23-ல் 4.3 லட்சம் ஏக்கர் நிலத்தை கரும்பு விவசாயம் கடந்துவிட்டது.
“என்னுடைய குழந்தைகள் கூட, ஆமணக்கு வளர்க்கவும் எண்ணெய் எடுக்கவும் கற்றுக் கொள்ளவில்லை,” என்கிறார் நாராயண். “அவர்களுக்கு நேரமில்லை.” அவரின் மகன்களான 49 வயது மாருதி மற்றும் 47 வயது பகத் சிங் ஆகியோர் விவசாயம் பார்க்கின்றனர். கரும்பு உள்ளிட்ட பல பயிர்களை விளைவிக்கின்றனர். அவரின் மகளான 48 வயது மினாதாய், வீட்டை கவனித்துக் கொள்கிறார்.
எண்ணெய் எடுக்க செலுத்தும் உழைப்பின் சிரமங்களை குறித்து கேட்கையில், “எந்தப் பிரச்சினையும் இல்லை. அது எங்களுக்கு நல்ல உடற்பயிற்சியும் கூட,” என்கிறார் நாராயண்.
“செடிகளை பாதுகாக்க எனக்கு பிடிக்கும். எனவே வருடந்தோறும் நான் ஆமணக்கு செடியை வளர்க்கிறேன்,” என்கிறார் அவர் உறுதியுடன். ஆமணக்கு வளர்க்க செலுத்தும் உழைப்பில், எந்த பொருளாதார லாபத்தையும் கெயிக்வாடுகள் ஈட்டுவதில்லை. எனினும் அவர்கள் அந்த பாரம்பரியத்தை தொடர விரும்புகின்றனர்.
10 அடி உயர கரும்புகளுக்கு நடுவே, நாராயணும் குசுமும் மட்டும்தான் ஆமணக்கு செடிகளை வளர்க்கின்றனர்.
இக்கட்டுரை கிராமப்புற கலைஞர்கள் பற்றிய சங்கேத் ஜெயினின் தொடரை சேர்ந்தது. மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளை ஆதரவில் எழுதப்பட்டது.
தமிழில்: ராஜசங்கீதன்