தேன்கூட்டில் தேன் எடுக்கும்போது பாம்பு இருக்கும். “தேன்கூட்டிற்குள் பாம்பு இருக்கும் போது தேனீக்கள் நம்மை [தேன் எடுப்பவரை பாதுகாக்க] தேன் எடுக்க அனுமதிக்காது, பாம்பும் நகர்ந்து சென்றுவிடும்,” என்கிறார் பிக்காபதிமுண்டு கிராமத்தின் கதே குட்டன். சுவை நிறைந்த தேன்கூட்டை கைகளால் எடுக்க தேன் சேகரிப்பாளர்கள் வருகின்றனர். “தேன் வேட்டைக்கு வருபவர்களை கடிக்க மாட்டேன் என்று “பாம்பு” தேனீக்களுக்கு சத்தியம் செய்துள்ளது.”
ஆனால் தேன் எடுப்பவர் பரிசுத்த மனம், உடலுடன் தேன் எடுக்க வரவேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு கதை.
கதேவைப் போன்று தில்தோஷ் குட்டனும் தேன் வேட்டையர் தான், அவரும் 35 தோடர்களை கொண்ட பிக்காபதிமுண்டு கிராமத்தைச் சேர்ந்தவர். எருமைகள் மேயும் புல்வெளியை ஒட்டியுள்ள ஷோலா வனத்தின் எஞ்சியுள்ள பகுதிகள் வழியாக அவர் நம்மை தனது மகனுடன் அழைத்துச் சென்றார். தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள் எனும் பழங்குடியினர் வசிக்கின்றனர். மேய்ப்பர் இனத்தைச் சேர்ந்த இவர்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக சைவ உணவு முறையை கடைபிடிக்கின்றனர். பூமி தாயை வணங்கும் நோக்கில் அவர்கள் செருப்பின்றி வெறும் கால்களில் நடக்கின்றனர்.
சிற்றோடையை கடந்து ஒரு சரிவில் ஏறிய பிறகு, ஒரு பெரிய மரத்தில் கவனிக்கப்படாத சிறிய துவாரத்தை தில்தோஷ் சுட்டிக்காட்டுகிறார். துவாரத்தின் பெரும்பகுதியை முலாம்பழ அளவிலான பாறை மறைக்கிறது, அதைச்சுற்றிலும் தேனீ கூட்டம் பறக்கின்றன. இவை ஆசியா முழுவதும் காணப்படும் ஆசிய தேனீ (அபிஸ் செரினா) எனப்படுகிறது. இவை எளிதில் பழக்கி தேனீ பெட்டிகளில் வளர்க்கக் கூடிய இனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன.
ஆனால் தோடர்கள் தேனீக்களின் இயற்கையான வாழ்விடங்களில் தேன் எடுக்கவே விரும்புகிறார்கள். நீலகிரியின் தேன் எடுக்கும் பிற பழங்குடியினர் போன்று தோடர்கள் காட்டுத்தேன் சேகரிக்கும் போது தீ மூட்டுவது, புகைப்போடுவது இல்லை. அவர்கள் தேன் கூட்டை கண்டவுடன் குன்றுகளில் திரியும் கரடிகள் வராமல் தடுக்க அதன் முன் கல் வைத்து மறைக்கின்றனர். தேன் எடுக்கச் செல்லும்போது, கல்லை அகற்றிவிட்டு தேன்கூட்டிற்கு அருகில் சென்று மெதுவாக ஊதிவிடுகிறார். இதில் தேனீக்கள் மெல்ல வெளியேறுவதால் எளிதில் தேனை எடுக்கிறார்.
தேனீக்கள் அவரை ஏன் கொட்டவில்லை? பரிசுத்த மனமும், உடலும் கொண்டவர்களை தேனீக்கள் ஒன்றும் செய்வதில்லை என தோடர்கள் நம்புகின்றனர்.
ஆனால் தேன் எடுக்க கற்கும் இளைஞர்கள் (தோடர் சமூகத்தில் ஆண்கள் மட்டுமே தேன் எடுக்கின்றனர்) சிலசமயம் தேனீக்களிடம் கொட்டு வாங்குகின்றனர். தில்தோஷ் கூறுகையில், “அவர்கள் [புதியவர்கள்] முதலில் அஞ்சுவார்கள், கொட்டுகள் கொஞ்சம் வாங்கிய பிறகு அவர்களுக்கு பழகிவிடும். பயமும் போய்விடும்.” அவரது 12 வயது மகனையும் தேனீக்கள் கொட்டியுள்ளதாக கூறுகிறார். அவர் மகனின் அருகில் சென்று தேனீ கொட்டிய பகுதியை உற்றுபார்க்கிறார். ஆனால் ஒன்றும் செய்வதில்லை.
தேன் வேட்டையர் ஒருவர் தேனீக்களால் கொட்டப்பட்ட கதையை கதே குட்டன் விளக்கினார் “அவர் ‘ஒழுக்கத்தை‘ கடைபிடிக்கவில்லை,” கோயிலுக்கு காப்பு கட்டிய நாட்களில் இச்சமூகத்தினர் வேலை செய்வதில்லை.
உருளும் மலைகளால் சூழப்பட்ட தனது கிராமத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து, பேசியபடி, கதே மூங்கிலின் நீண்ட கீற்றுகளை கவனமாக அகற்றி மென்மையாக்குகிறார். அவரைச் சுற்றி மூங்கில் சுருல்கள், சுள்ளிகள் தரையில் சிதறிக் கிடக்கின்றன. அவருடன் வேறு சிலரும் மூங்கிலை நெகிழ்வான கயிறுகளாக வடிவமைக்கின்றனர். தோடர்களின் தனித்துவமான நுட்பமான வடிவமைப்புகளை சால்வைகளில் பெண்கள் எம்பிராய்டரி செய்கிறார்கள். இந்த மூங்கில் கீற்றுகள் புதிய கோயில் கட்ட பயன்படுத்தப்படும்.
குறிஞ்சி மலர்கள் ஏராளமாக மலரும் போது பூந்தேனை தேனீ குடித்து சிறப்பு வகையான தேனை அடைகளில் சேகரிக்கின்றன. இந்த பூக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் (ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களில்). இவை குன்றுகளில் ஊதா நிறத்தை தரைவிரிக்கும். இதனால் தான் நீலகிரி அல்லது நீல மலைகள் என்றுப் பெயர்பெற்றது. ஆனால் இன்று சீசனில் கூட குறிஞ்சி குறைவாகவே மலர்வதாக அவர் கூறுகிறார். இதனால் இந்த சிறப்பு வகை தேனும் எளிதில் கிடைப்பதில்லை.
ஆண்டுதோறும் குறிஞ்சி மலர்களின் எண்ணிக்கை குறைவதால் தேன் கிடைப்பதும் குறைந்துவிட்டது என்கிறார் தில்தோஷ் குட்டன். இதற்கான எந்த காரணத்தையும் அவர் கூறவில்லை. காலநிலை மாற்றம், தமிழ்நாட்டில் உள்ள சோலைக்காடுகள், புல்வெளிகள் பண்ணைகளாக மாற்றப்பட்டது போன்ற காரணிகளால் குறைந்திருக்கலாம் என்று நாங்கள் ஊகிக்கிறோம்.
தோடர்கள் தேன் சேகரித்து தங்கள் வீட்டு பயன்பாட்டிற்கும், கிராமத்திற்குள் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றனர். எஞ்சியவற்றை மட்டும் அரிதாக விற்கின்றனர். கூடுதலாக தேன் இருப்பு இருந்தால் அல்லது சுற்றுலாப் பயணிகள் வந்தால் மட்டுமே விற்கின்றனர். கிலோ ரூ.500க்கு அவர்கள் தேன் விற்கின்றனர்.
தோடர் சமூகம் வாழ்வாதாரத்திற்கு வனத்தை நம்பினாலும், தற்சார்புடன் உள்ளனர். அவர்களின் முதன்மை உணவாக எருமைப்பால் உள்ளது. சில பயிர்களை விவசாயம் செய்கின்றனர். அவர்களின் குடிசைகள் வனப் பொருட்களால் கட்டப்பட்டுள்ளன. இப்போது பலரும் அரசு கட்டித் தரும் வீடுகளில் வசிக்கின்றனர். தேன் அவர்களின் கூடுதல் உணவு ஆதாரம். சிலர் கிராமத்திற்கு வெளியேச் சென்று வேலை செய்கின்றனர், சிலர் வெளியே செல்வதில்லை.
தேன் வேட்டையை அடுத்த தலைமுறையினர் தொடர்வார்கள் என தில்தோஷ் நம்பவில்லை. எனினும் மற்றவர்கள் நம்புகின்றனர். இந்த பாரம்பரியத்தை இளைஞர்கள் கட்டாயம் தொடர்வார்கள், இயற்கையுடன் இணைந்து வாழ்வார்கள் என கதே உறுதியுடன் நம்புகிறார். இவர்களில் யார் சரி என்பதை காலம் கூறட்டும்.
இந்த நேர்காணல்களை எடுக்க எனக்கு உதவிய கீஸ்டோன் அறக்கட்டளைக்கு, தேன் வேட்டையர்களை கண்டறிந்து, நேர்காணல்கள் அனைத்திலும் மொழிப்பெயர்த்து துணை புரிந்த சரவணன் ராஜன் ஆகியோருக்கு நன்றிகள்.
தமிழில்: சவிதா